Saturday, January 05, 2008

செவியில் விழுந்தவை

முதலமைச்சர் கருணாநிதி உத்தரவு - தமிழகத்தில் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.223 கோடி செலவில் சாலைகள்&பாலங்கள் அமைக்க முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பது:-

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள (அரசியல்வாதிகளின்) கிராமச் சாலைகளைச் சீரமைத்து மக்களின் (கழகக் கண்மணிகளின்) போக்குவரத்திற்கு வசதியாக மேம்படுத்துவதில் தமிழக அரசு மிகுந்த முன்னுரிமை வழங்கித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

ரூ.145 கோடி மதிப்பீட்டில் 219 கிராமச் சாலைப் பணிகளும், அவற்றினிடையே உள்ள 32 பாலப் பணிகளும், ரூ.41 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கிராமப்புறங்களில் பேருந்துகள் செல்லும் 64 சாலைகளும், அவற்றில் உள்ள 11 பாலப் பணிகளும், ரூ.36 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் குடியிருப்புகளை இணைக்கும் 75 சாலைப் பணிகளும், அவற்றில் உள்ள 6 பாலப் பணிகளும், ஆக பல்வேறு மாவட்டங்களிலும் மொத்தம் 910 கி.மீ. நீளத்திற்கு 358 ஊராட்சி சாலைகளையும், ஊராட்சி ஒன்றியச் சாலைகளையும், 49 பாலப் பணிகளையும் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.222 கோடியே 75 லட்சம் செலவில் நிறைவேற்றிடவும், இப்பணிகளை விரைவாக நிறைவேற்றி முடித்திடவும் 4-ந் தேதி (நேற்று) அனுமதி வழங்கி முதல்-அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

குறிப்பில் கண்டவாறு திட்டங்கள் நிறைவேற்றப்படுமா?
ரூ.222 கோடியே 75 லட்சத்தில் ஆதாயம் போக திட்டத்திற்கு எவ்வளவு போய்ச்சேரும்?
அதில் கொடுக்கவேண்டியதைக் கொடுத்த பிறகு நமக்கு எவ்வளவு கிடைக்கும்?
- முடிதிருத்தகத்தில் காத்துக் கிடந்தபோது செவியில் விழுந்தவை.

Tuesday, January 01, 2008

85.சோதியாதி யாகிநின்ற சுத்தமும்

சிவவாக்கியர்
***************
85.சோதியாதி யாகிநின்ற சுத்தமும் பலித்துவந்து

போதியாத போதகத்தை வோதுகின்ற பூரணா
வீதியாக வோடிவந்து விண்ணடியி னூடுபோய்
ஆதிநாத னாதனென் றனந்தகால முள்ளதே.

அஞ்ஞான இருளை எரித்து சுத்த சுயம்புவாகிய, ஆதி சோதியாகிய பரிபூரணனே! யாரும் உபதேசிக்காத உபதேசத்தை(அறிவு) எப்பொழுதும் ஓதிக்கொண்டிருப்பவனே! என் உடலினுள்ளே ஓடிக்கொண்டுள்ள நாடிகளாம் வீதி வீதியாக அலைந்து ஓடிவந்து தலை என்னும் ஆகாயத்தில்(ஆ+காயம்) உள்ளே போய் ஆதி நாதனாகிய உன்னைக் காண இன்னும் கோடான கோடி காலம் உள்ளதே!

84.பருகியோடி உம்முளே பறந்து

சிவவாக்கியர்
***************
84.பருகியோடி உம்முளே பறந்துவந்த வெளிதனை

நிரவியே நினைந்து பார்க்கில் நின்மலம் அதாகுமே
உருகியோடி எங்குமா யோடும்சோதி தன்னுள்ளே
கருதுவீர் உமக்கு நல்ல காரணம் அதாகுமே.

மூச்சுக் காற்றைப் பருகி, ஞானம் பழகி வரும்போது நம்முள்ளே பறந்துவந்த ஆகயவெளியில் நிலைத்து, நினைந்து கூர்ந்து நோக்கில் உன் மலங்களாகிய பாவங்கள் அழியும். உருகிய நெய்போல் எங்குமாய் ஓடிக் கலந்துள்ள சோதி தன்னுள்ளும் உள்ளது. அப்படியுள்ள அருட்பெரும் சோதிக்குள் கலக்கவேண்டும் எனக் கருதி உள்நோக்கிச் செல்வதே உங்களுக்கு நல்ல வழியாகும்.

83.கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த

சிவவாக்கியர்
****************
83.கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்

ஞானமுற்ற நெஞ்சகத்தில் வல்லதேது மில்லையே
ஊனமற்ற சோதியோடு உணர்வு சேர்ந்தடக்கினால்
தேனகத்தின் ஊறல்போல் தெளிந்ததே சிவாயமே.

கானம்=சோலை
ஊறல்=சாறு

ஞானம் விளைந்து முற்றிய மனதுடன் உள்ள ஞானிகளிடத்தே, பூங்காவாகிய சோலை இல்லாத வறட்டுக் காட்டினிலே தீப்பிடித்து வெந்தபின் மிஞ்சும் சாம்பல்போல் மாயையாகிய ஆசை(இச்சைகள்) எரிந்து சாம்பலாகிவிடும். எவ்விதக் களங்கமும் அற்ற அருட்பெருஞ்சோதியுடன் தன் உணர்வுகளை ஒன்றிக் கலந்து சலனமற்று இருப்போருக்கு சிவன் தேன்கூட்டின் சாறாம் தெளிந்த தேன்போல் விளங்குவார்.

82.படுகின்ற உம்பருக்குள் ஆடுபாதம்

சிவவாக்கியர்
**************
82.படுகின்ற உம்பருக்குள் ஆடுபாதம் உன்னியே

பழுதிலாத தர்மகூட்ட மிட்டஎங்கள் பரமனே
நீடுசெம்பொன்னம் பலத்துள் ஆடுகின்ற அப்பனே
நீலகண்ட காளகண்ட நித்யகல் லியாணனே.

உம்பர்=ஆகாயம்
படுகின்ற=கூர்மயான
ஆடுபாதம்=கண்கள்
உன்னி=சலனமின்றி நினைவில் நின்று

சிதாகாயமான தலைக்குள் கூர்மையான கண்பார்வையால் சலனமின்றி நினைவில் நின்றால், செம்பொன்னாலாகிய ஆலயத்தில் ஆடிக்கொண்டுள்ள அப்பனாம் நீலகண்டனாம் காளகண்டனாம் நித்திய கலியாணனாம் சீவனை உணரலாம்.

81.மாடுகன்று செல்வமு மனைவிமைந்தர்

சிவவாக்கியர்
***************
81.மாடுகன்று செல்வமு மனைவிமைந்தர் மகிழவே

மாடமாளி கைப்புறத்தில் வாழுகின்ற நாளிலே
ஓடிவந்து காலதூதர் சடுதியாக மோதவே
உடல்கிடந் துயிர்கழன்ற வுண்மைகண்டு முணர்கிலீர்.

மாடு, அதன் கன்றுகள், செல்வம், மனைவி, குழந்தைகள் ஆகியவைகளுடன் மாட மாளிகையிலே வாழுகின்ற காலத்தில், கால தூதனாம் எமன் வெகுவேகமாக ஓடிவந்து கணப்போதில் மோதும்போது உடல் கீழே கிடக்கும்; உயிர் பறக்கும். அது கண்டபின்னும் மற்றவர்கள்(கண்டுகொண்டிருப்பவர்கள்) நிலையாமை என்னும் உண்மையை உணர மறுக்கின்றனரே!

80.ஒக்கவந்து மாதுடன் செறிந்திட

சிவவாக்கியர்
**************
80.ஒக்கவந்து மாதுடன் செறிந்திடத்தி லழகிய

ஒருவராகி யிருவராகி யிளமைபெற்ற வூரிலே

அக்கணிந்து கொன்றைசூடு மம்பலத்தி லாடுவார்

அஞ்செழுத்தை யோதிடி னனேகபாவ மகலுமே.


அக்கு = உருத்திராக்கம்
அம்பலம் = தில்லையம்பலம், கோயில்
அஞ்செழுத்து - நமசிவய
இளமை = உன்மத்தம்

ஒன்றுபோல் செறிந்த இடத்தில் அழகிய உமையொடு சேர்ந்து ஒன்றாகி, உமையொருபாகனாக ஒருவராகவும், தனித்தனியாக அம்மையாகவும், அப்பனாகவும் உன்மத்தங்கொண்ட ஊரிலே(மனதிலே), உருத்திராக்கம் அணிந்து கொன்றைமலர் சூடிய பெருமான் மனக்கோவிலில் ஆடுகிறார். அவருக்குறிய "நமசிவய" என்னும் திருவைந்தெழுத்தை ஓதினால் பாவங்கள் அனைத்தும் அகலுமே!

79.மிக்க செல்வநீ படைத்த விறகுமேவி

சிவவாக்கியர்
**************
79.மிக்க செல்வநீ படைத்த விறகுமேவிப் பாவிகாள்

விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவ தறிகிலீர்

மக்கள்பெண்டிர் சுற்றமென்று மாயைகாணு மிவையெலாம்

மறலிவந் தழைத்தபோது வந்துகூட லாகுமோ?


மறலி = எமன்

எவ்வளவு மிகுதியாகச் செல்வம் படைத்தவனாயிருந்தாலும், இறந்தபின் விறகில் வைத்துக் கொளுத்தி விடுவார்கள்;பிறகு வெந்தபின் சாம்பல் ஒன்றே மீதி. மாடு, மனை,மக்கள், சுற்றம் ஆகிய பந்த பாசம் தருபவை எல்லாம் எமன் வந்து அழைக்கும்போது துணை வருவார்களோ? மாட்டார்கள்.

"வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ" எனக் கண்ணதாசன் எழுதியதை இங்கு நினைவு கூறுதல் பொருத்தமானதே.

78.மண்கலங் கவிழ்ந்தபோது வைத்து

சிவவாக்கியர்
**************
78.மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத் தடுக்குவார்

வெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்

நங்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்

எண்கலந்து நின்றமாய மென்னமாய மீசனே!


வீட்டில் உள்ள மட்பாண்டம் உடைந்தால், அது எதுக்காகிலும் பயன்படுமென மூலையில் வைப்பர். வெங்கலத்தினால் செய்த பாண்டம் உடைந்தால், உருக்கி வேறு செய்து கொள்ளலாம் என காத்து வைப்பார்கள். நங்கலனாகிய(நம்+கலன்) உடலிலிருந்து உயிர் பிரிந்தால் பிணம் நாறுமென தூக்கிப் போட்டுவிடுவார்கள். ஆக, நம் உடலானது, மட்பாண்டம், வெண்கலப் பாண்டம் ஆகியவற்றின் மதிப்புக்கூட பெறாது. இவ்வாறு மதிப்பில்லா இவ்வுடலில் நீங்கள் உயிராய்க் கலந்து நின்ற மாயம் என்னவோ?

77.மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது

சிவவாக்கியர்
***************
77.மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது ரைக்கவும்

எண்ணிலாத கோடிதேவ ரென்னதுன்ன தென்னவும்

கண்ணிலே மணியிருக்க கண்மறைத்த வாறுபோல்

எண்ணில்கோடி தேவரு மிதன்கணால் விழிப்பதே!


மண்ணிலே பிறந்து, மனிதர்களால் உருவாக்கப்பட்டு இருக்கும் எண்ணற்ற கோடி தேவர்களுள் இவர் என்னவர், அவர் உன்னவர் என வழக்குகள் பல உரைத்து சண்டையிட்டு வீண்பொழுது போக்கும் மக்களே! நீங்கள் எல்லோரும் கண்ணிலே கருமணி இருக்கக் கண்தெரியாத குருடர்களே. அந்தக் கண்களின்மூலம் எண்ணற்ற கோடி தேவரும் தங்களின் கபாலத்திற்குள் சென்று உயிர்நாடியாம் பரிபூரணத்தை அறிந்துகொண்டிருக்கும்போது, நீங்கள் மட்டும் விழித்துக்கொண்டிருத்தல் அழகோ?

76.கருக்குழியி லாசையாய்க் காதலுற்று

சிவவாக்கியர்
***************
76.கருக்குழியி லாசையாய்க் காதலுற்று நிற்கிறீர்

குருக்கிடுக்கு மேழைகள் குலாவுகின்ற பாவிகாள்

திருத்திருத்தி மெய்யினாற் சிவந்த வஞ்செழுத்தையும்

உருக்கழிக்கு மும்மை யுமுணர்ந்துணர்ந்து கொள்ளுமே.


குருக்கு=இக்கிரி பிரமதண்டுச் செடி, வடலி முதலியன படர்ந்த தோப்பு
இடுக்கு = இடவெளி, சந்து
மேழி, மேழை = செம்மறி ஆடு
திரு = மேன்மை
திருத்தி=பூரணம்

செடிகள் படர்ந்துள்ள தோப்பின் சந்துக்குள் செம்மறி ஆடுகள்போல் அலைந்து திரியும் பாவிகளே! அந்த ஆடுகளைப்போல் யோனியாசைகொண்டு அதிலே அழிவு காணப்போகிறீர்கள். அழலைப்(தீ)போல சிவந்த அஞ்செழுத்தாலான மேன்மை பெற்ற இவ்வுடலால் பூரணமாக அவ்வஞ்செழுத்தையும் திருத்தமாக ஓதி உய்யும்(வாழும்) வழி காணுங்கள். இவ்வழி சென்று, உங்களின் உருவாகிய உடல் அழியுமுன்னமேயே மும்மையாகிய(மூன்றாயிருக்கும் தன்மை) மும்மலங்களையும் அறிந்து ஒதுக்கி, உங்களையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

75.இருவரங்க மும்பொருந்தி யென்புருகி

சிவவாக்கியர்
****************
75.இருவரங்க மும்பொருந்தி யென்புருகி நோக்கிலீர்

உருவரங்க மாகிநின்ற வுண்மையொன்றை யோர்கிலீர்

கருவரங்க மாகிநின்ற கற்பனை கடந்துபின்

திருவரங்க மென்றுநீர் தெளிந்திருக்க வல்லீரே!


இருவரங்கமாகிய சூரிய சந்திர கலைகளை ஒன்றுசேர்த்து, எலும்பு உருக தியானித்து, உள்ளே நுழையத் தெரியவில்லை. உடல் உருவே அரங்கமாகி அதனுள்ளே இருக்கும் உண்மையை(உள்+மெய்) ஆராய்ந்து அறிந்து தெளியமாட்டீர்கள். கருத்து உருவற்றது. அந்தக் கற்பனை அரங்கைக் கடந்து சென்று கருத்தாகிய முகுளமாம் திருமால் பள்ளிகொண்டுள்ள திருவரங்கமெனத் தெளிவு கொள்ளமாட்டேன் என்கிறீர்களே!

74.அறிவிலே பிறந்திருந் தாகமங்க

சிவவாக்கியர்
**************
74.அறிவிலே பிறந்திருந் தாகமங்க ளோதுறீர்

நெறியிலே மயங்குகின்ற நேர்மையொன் றறிகிலீர்

உறியிலே தயிரிருக்க வூர்புகுந்து வெண்ணைதேடும்

அறிவிலாத மாந்தரோ டணுகுமாற தெங்ஙனே.


நெறி=வழி

"அறிவுப் பிறப்பெடுத்துள்ளேன்" எனக் கூறி அறிவுபூர்வமாய்ச் சிந்தித்து ஆகமங்கள் அனைத்தையும் ஓதுகின்ற மனிதர்களே! அறிவுப் பிறப்பெடுத்தோர் செல்லும் வழி எது என அறிந்திடாது, மயங்கி, எது நேர்வழி என அறிகிலீர்.
நம் வீட்டு உறியிலேயே தயிர் இருக்க, ஊரிலுள்ள எல்லா வீடுகளிலும் சென்று வெண்ணையைத் தேடும் அறிவற்றவர்களாகிய உங்களுக்கு எப்படி விளக்குவேன்?

நம் உடலிலேயே தயிர் உள்ளது; அதைக் கடைந்தால் வெண்ணை கிடைத்துவிடும். கடையும் வழி என்ன? என்பதைக் காணுங்கள். இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடத்திலே தேடிப் பயனென்ன?

73.ஆத்துமா வனாதியோ வாத்துமா

சிவவாக்கியர்
**************
73.ஆத்துமா வனாதியோ வாத்துமா வனாதியோ

பூத்திருந்த ஐம்பொறி புலன்களு மனாதியோ

தாக்கமிக்க நூல்களுஞ் சதாசிவ மனாதியோ

வீக்கவந்த யோகிகாள் விரித்துரைக்க வேணுமே.


அனாதி = ஆதியில்லாமை, இறைவன், சிவன்
வீக்க = கட்ட, பூரிக்க, மிக

நம்முடலில் ஓடும் ஆத்துமா(சீவாத்துமா) அனாதியோ?
பரமாத்துமாவான இறைவன் அனாதியோ?
நம்முடலில் பூத்திருந்த ஐம்புலன்களும் அனாதியா?
ஞானம் புகட்டும் சாற்றிறங்கள் அனாதியா?
இறுதியில் சதாசிவமான அனாதியே அனாதியா?
உயிர் மூச்சைக் கட்ட வந்த யோகிகளே, இவற்றை விளக்கமாக உரைக்கவேண்டுமே!

72.உருவமல்ல வெளியுமல்ல வொன்றை

சிவவாக்கியர்
****************
72.உருவமல்ல வெளியுமல்ல வொன்றைமேவி நின்றதல்ல

மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல வற்றதல்ல

பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல

அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே.


வற்றதல்ல=அற்றதல்ல

இறைவன் உருவமாக உள்ளான் என்பதில்லை; அவன் உருவற்று சிதாகாயப் பெருவெளியிலும் இருக்கிறான். அவன் ஒன்றினை அணுகியும், அணுகாமலும் உள்ளான். அருகிலும் உள்ளான்; தொலைவிலுமுள்ளான்.

இறைவனை வணங்காது இறைத் தன்மைக்கு புறம்பாய் இருப்போர் இறைவனிடமிருந்து வெகு தொலைவில் உள்ளனர். தொழுபவர்க்கோ அவர்தம் உள்ளத்தின் (அருகில் அல்ல) உள்ளே வசிக்கிறான். அப்படிப்பட்ட தன்மை உடைய திருவடிக் கழல்கள் வெற்றி உடையதாகுக.

கூடவுமில்லை; குறையவும் இல்லை. பெரியதல்ல; சிறியதல்ல; எதுவுமில்லை. பேசும் ஆவியாக மட்டும் இருப்பதில்லை. இந்த தத்துவத்தை யாரால் காணமுடியும். அந்த வல்லபமிருப்பின் இறைவன் கைவசமாவான்.

திருவாசகம்

*************

"ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க."


இறைவன் மூலப் பொருளாயிருக்கும்போது ஒன்று. அதுவே பரிபூரணம்.
பூரணம் என்பது உட்பொருளுக்கு உட்பொருளாம். பரிபூரணம் அளவிட முடியாதது; நிறையிட முடியாதது. பூரணத்திற்குப் பூரணமே அளவு. அதற்கு அதே மட்டு. அதற்கு அதுவே நிறை. கால எல்லை இல்லாதது. முடிவில்லாதது.இறைவனாகவேயிருந்து, இறைவனிலிருந்து வெளியானவை சிருஷ்டிகள்.

இறை சிருட்டிக்குப்பின்னும், முன்னிருந்தது போன்றே இப்போதுமிருக்கும்.
அகண்டகாரமாய்ப் பரிபூரணமாய் விரிந்து நிறைந்து தனக்குத் தானே காட்சியாய் மற்றவை என இல்லாததாய் மறைந்தும் மறையாததாய் அசையாததாய் துணை இல்லாததாய் தனித்துவமாய் ஒன்றாய் இடைவெளி இல்லாமல் எங்குமாய்ப் பேதமின்றிப் பிரிவின்றிக் கலந்து உறைந்த ஒன்று.. இதற்கு முன்னும் இதுவேதான் இருந்தது. வேறொன்றும் இருக்கவில்லை. இல்லை, இல்லை, இல்லையே. இதுவே நித்தியம். இதுவே சத்தியம்.

நித்திய சத்தியமென்பது, என்றும் நிலைத்து நிற்பது. அதற்கு அன்றும், இன்றும், என்றுமே அழிவும் இல்லை. மாற்றமும் இல்லை, குறைவதும் இல்லை, கூடுவதும் இல்லை. எல்லாம் பரி பூரணம்.

71.சிவாயவென்ற வக்கரஞ் சிவனிருக்கு

சிவவாக்கியர்
**************
71.சிவாயவென்ற வக்கரஞ் சிவனிருக்கு மக்கரம்

உபாயமென்று நம்புதற்கு உண்மையான வக்கரம்

கபாடமற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை

உபாயமிட் டழைக்குமே சிவாயவஞ் செழுத்துமே.


சிவனுக்கு மூலமந்திரம் "சிவயநம".

இந்த ஐந்தெழுக்களே இறையை உணர வழி(உபாயம்).இவ்வைந்தெழுத்து மந்திரத்தால்தான், தந்திரமாக(உபாயம்) கபாலத்தில் கதவு இல்லாத வாயிலைக்கடந்து செல்லும் வாயுவைச் சரியான பாதையில் திருப்ப இயலும்.

70.அம்பத்தொன்றி லக்கர மடங்கலோ

சிவவாக்கியர்

**************

70.அம்பத்தொன்றி லக்கர மடங்கலோ ரெழுத்துளே
விண்பரந்த மந்திரம் வேதநான்கு மொன்றலோ

விண்பரந்த மூலவஞ் செழுத்துளே முளைத்ததே

அங்கலிங்க பீடமா யமர்ந்ததே சிவாயமே.


ஐம்பத்தியொரு எழுத்தும் ஓர் எழுத்தாகிய "ஓம்"க்குள் அடக்கம். அஞ்செழுத்து மந்திரமாம் "சிவயநம"விலிருந்துதான் வேதம் நான்கும், அத்துடன் விண்வெளியில் பரந்துள்ள மந்திரங்கள் அனைத்தும் வெளிவந்தன. சிவயநம என்பது நம் உடலாகிய அங்கமே. இந்த அங்கபீடத்தினுள் சிவாயமே அடக்கம்.

திருமூலர்:


"ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைந்தும்
ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்
சோதி எழுத்தின் நிலையிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள்ளீரே."


சோதி எழுத்து, நாதவெழுத்து = சிகாரம்.

மந்திரங்களுக்கெல்லாம் முதலில் ஓதப்பெறும் ஓங்காரத்துடன் மற்ற பதினைந்து உயிர் எழுத்துக்களையும் கூட்ட மொத்த உயிரெழுத்து பதினாறு. மெய்யெழுத்து முப்பத்தி ஐந்து. ஆக மொத்தம் 16 = 35 = 51.(செந்தமிழ்க் காலத்துக்கு முந்திய நிலை இஃதாம்.)

சோதி எழுத்து சிகாரம். உடல் அகத்தே உள்ள ஆதார நிலைகள் ஆறு. இந்நிலைக் களங்களில் பரவெளி எழுத்தாகிய ஓம் என ஒலித்து உணர்க.

மூலாதாரம் முதல் புருவநடு வரையுள்ள ஆறு ஆதரத்தானத்துக்கும் முறையே ஓம் யநமசிவ, நமசிவய, சிவயநம, வயநமசி, சிவய சிவ, சிவசிவ எனும் பீசங்கள் உரித்தாகும்.

திருமூலர் ஞானோபதேசம்:

"அஞ்சில் நகார மதிலிரு காலுமாய்

வஞ்சக மான வயிறும காரமாய்

நெஞ்சிற் சிகாரமாய் நேர்கழுத் தின்முகம்

வஞ்சொல் வகாரமாய் வலது நெற்றியே"


தெட்சணாமூர்த்தி சுத்த ஞானம்:


"ஐந்தான வெழுத்துத்தான் விபரங்கேளு

அப்பனே பிருதிவிக்கு நங்கென்றோர்சொல்

சந்தையதா யப்புவுக்கு மங்கென்றோர்சொல்

சாதகமாய் தேயுவிலே சிங்கென்றோர்சொல்
விந்தையதாய் வாயுவுக்கு வங்கென்றோர்சொல்
விளங்கிநின்ற வாகாயம் யங்கென்றோர்சொல்

சிந்தையிலிவ் வகைதெளிந்து சென்றாயானால்

சிதம்பரமுங் காணமுத்தி சித்தியாமே."

69.இருக்கவேணு மென்றபோ திருக்கலா

சிவவாக்கியர்
***************
69.இருக்கவேணு மென்றபோ திருக்கலா மிருக்குமோ

மரிக்கவேணு மென்றலோ மண்ணுளே படைத்தனர்

சுருக்கமற்ற தம்பிரான் சொன்னவஞ் செழுத்தையும்

மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தெனப் பதங்கெடீர்.


மண்ணில் இருக்கவேண்டுமென எண்ணியபோது (இருக்கலாம்)வாழ்ந்தீர்கள். இருக்கவேண்டுமோ? இல்லை; இறக்கவேண்டுமோ? என்று எண்ணும் நிலை வருவதற்காகத்தானே மண்ணினால் படைத்தான். ஆகவே, இருக்கும் காலத்துள்ளே, தம்பிரானாம் குரு சொன்ன படிக்கு அஞ்செழுத்து மந்திரமாம் "நமசிவய" வை, மருந்தைப் பதங்கெடுமுன் உண்ணுவதைப்போல, இறக்குமுன்னரே ஓதி உணருங்கள்.

68.மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த

சிவவாக்கியர்
***************
68.மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாடிநாடி யும்முளே நாழிகை யிருந்தபின்
பாலனாகி வாழலாம் பறந்துபோக யாக்கையும்

ஆலமுண்ட கண்டராணை யம்மையாணை யுண்மையே.


மூலநாடியாம் அக்கினியில் முளைத்து எழுந்து ஒளிவீசும் சோதியை நம் இட, பிங்கலை நாடியின் உதவியால் நாடி நமக்குள்ளே ஒரு நாழிகை காலம் அதனுடன் ஒன்றி சலனமிற்றி இருந்தால், முதுமை குறையும்; ஒரு வாலிபனின் சக்தி கிட்டிடும். இந்த சடல உடல் இருக்கும்போதே, சூக்கும உடலால் பறந்து அடுத்த சிந்தனைத் தளத்துக்குச் செல்லும் வலிமையும் கிட்டும். இது ஆலகால விடமுண்ட கண்டத்தை உடைய திருநீலகண்டன் மீது ஆணை; அம்மையாம் வாலாம்பிகை மீது ஆணை. இது உண்மையே!

67.உழலுவாச லுக்கிரங்கி யூசலாடு

சிவவாக்கியர்
***************
67.உழலுவாச லுக்கிரங்கி யூசலாடு மூமைகாள்

உழலும்வாச லைத்திறந்து வுண்மைசேர வெண்ணிலீர்

உழலும்வாச லைத்திறந்து வுண்மைநீ ருணர்ந்தபின்

உழலும்வாச லுள்ளிருந்த வுண்மைதானு மாவீரே.


கிரங்கி = மயங்கி
உண்மை = அறிவு, உள்மெய்
உழலும் = சுழலும்

காம இன்பத்திற்காக உள்ள வாயிலுக்காக ஏங்கி மயங்கி மனதை ஊஞ்சல்போல் அலைபாயவிடும் ஊமைகளே! சுழன்றுகொண்டுள்ள வெட்ர்டாத சக்கரமாம் கண்களைத் திறந்து உள் மெய்க்குள்ளே செல்ல எண்ணமாட்டீர்கள். அப்படி அந்த வாயிலைத் திறந்து உள்ளே சென்று அறிவை நீங்கள் உணர்ந்தபின்பு, அந்த அறிவோடு ஒன்றுசேர்ந்து தானும் அறிவாக மாறிவிடுவீர்களே. இங்கு அறிவு என்பது பூரணமாகிய இறை.

66.ஈன்றவாச லுக்கிறங்கி யெண்ணிறந்து

சிவவாக்கியர்
**************
66.ஈன்றவாச லுக்கிறங்கி யெண்ணிறந்து போவீர்காள்

கான்றவாழை மொட்டலர்ந்த காரண மறிகிலீர்

நான்றவாசலைத் திறந்து நாடிநோக்க வல்லீரேல்

தோன்றுமாயை விட்டொழிந்து சோதிவந்து தோன்றுமே!


நம்மை ஈன்ற வாசலாம் கருக்குழியில் ஆசை வைத்து இறங்கி இறங்கி விந்து விரயம் செய்து இறந்து போகும் மக்களே! வாழை மரம் பூத்துக் குலை தள்ளியவுடன் வெட்டி வீழ்த்துவது ஏன்? என எண்ணிப்பார்த்து உண்மையை அறிந்துகொள்ளுங்கள். தன்னிடன் உள்ள வீரியம் அகன்றவுடன் இவ்வுடலாகிய வாழை மரத்தைச் சுடுகாட்டுக்குத்தான் அனுப்புவார்கள். ஆகவே, நான்ற வாயிலாம் வாயின் அடிப்பகுதியில் உள்ள நம்பு முடிச்சை நாடி, ஊசிப்பார்வை வைத்து நோக்கியிருக்கும் வல்லமை உள்ளவரென்றால், தோன்றும் மாயையை ஒழித்து எழும் சோதியாம் இறைவனைக் காணலாம்.

65.கண்டுநின்ற மாயையுங் கலந்து

சிவவாக்கியர்
***************
65.கண்டுநின்ற மாயையுங் கலந்துநின்ற பூதமும்

உண்டுறங்கு மாறுநீ ருணர்ந்திருக்க வல்லீரேல்

பண்டையா றுமொன்றுமாய்ப் பயந்தவேத சுத்தனாய்

அண்டமுத்தி யாகிநின்ற வாதிமூல மூலமே!


கண்ணால் காண்பது எல்லாம் மாயை. அதில் திளைத்துள்ள ஐந்து பூதங்கள். உண்டி உண்டவுடன் உடல் உறங்குவதுபோல், இந்த ஐம்பூதங்களையும் மாயையையும் உறங்க வைக்கும் வழியை உணர்ந்து இருக்கும் வல்லமை உடையவரென்றால், பயபக்தியுடன் சுத்தமான மனதுடன் பழய வழியாகிய முக்கலையை ஒன்றித் தவமிருந்து ஆதி மூலமாகிய அண்டத்துடன் ஒன்றி முத்தி பெறலாம்.

64.கழுத்தையு நிமிர்த்திநல்ல கண்ணையும்

சிவவாக்கியர்
**************
64.கழுத்தையு நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்

பழுத்துவாய் விழுந்துபோன பாவமென்ன பாவமே

அழுத்தமான வித்திலே யனாதியா யிருப்பதோர்

எழுத்திலா வெழுத்திலே யிருக்கலா மிருந்துமே.


எழுத்திலா எழுத்து = சிவம்

நீங்கள், கழுத்தை நிமிர்த்தி, கண்களை விரிய விழித்து யோகம் புரிகிறேன் எனக்கூறி, இறுதியில் வயதாகி உடல் பழுத்து, வாயில் உள்ள பற்கள் உதிர்ந்துபோன நிலையை அடைந்துள்ளது பாவமே! சிறு அணுக்குள் பெரிய சக்தியை அடைத்து வைத்ததால் அழுத்தம் நிறைந்துள்ள விந்தினுள்ளே அனாதியாயிருக்கும் சிவத்தை, எழுத்திலா எழுத்தை அறிந்து அதனுள் மூழ்கியிருக்கலாமே!

63.தீர்த்தமாட வேணுமென்று தேடு

சிவவாக்கியர்
***************
63.தீர்த்தமாட வேணுமென்று தேடுகின்ற தீனர்காள்

தீர்த்தமாடல் எவ்விடந் தெளிந்துநீ ரீயம்பிலீர்

தீர்த்தமாக வும்முளே தெளிந்தநீ ரிருந்தபின்

தீர்த்தமாக வுள்ளதுஞ் சிவாயவஞ் செழுத்துமே.


தீர்த்தம் = சுத்தம், திருமஞ்சனநீர், திருவிழா, தீ, நீர், பிறப்பு, பெண்குறி, யாகம், புண்ணிய தீர்த்தம்.

புண்ணிய தீர்த்தங்களாகிய புட்கரணிகளில் நீராடவேண்டுமென்று சொல்லுகின்ற அறிவிலிகளே! எங்கே சென்று தீர்த்தமாட வேண்டும் என்று தெளிந்து தெரியாமல் சொல்லமுடியாது திகைக்கிறீர்கள். தீயும் நீரும் சேர்ந்து இருக்கும் இடமாகிய கண்வழி சென்று, கபாலக் குகைக்குள்ளே உள்ள தடாகமாம் புட்கரணியிலே சென்று பாருங்கள். அதுவே பாற்கடல்; அங்கேதான் எம்பெருமானாம் திருமால்(முகுளம்) மிதந்து பள்ளி கொண்டுள்ளார். அஞ்செழுத்து மந்திரமாம் "நமசிவய"வால் ஆகிய இந்த உடலின் கைலாயப் பகுதியாம் தலையின் உள்ளே இருக்கிறது. அங்கு சென்று நீராடுங்கள்.

62.கருவிருந்து வாசலாற் கலங்குகின்ற

சிவவாக்கியர்
**************
62.கருவிருந்து வாசலாற் கலங்குகின்ற வூமைகாள்

குருவிருந்து சொன்னவார்த்தை குறித்து நோக்கவல்லீரேல்

உருவிலங்கு மேனியாகி யும்பராகி நின்றநீர்

திருவிலங்கு மேனியாகச் சென்று கூடலாகுமே.


உம்பராகி = உயர்வுற்று
உருவு = அச்சம்

கருக்குழியின் மயக்கத்தால் கலங்கி வாய்மூடி மவுனம் காக்கும் ஊமைகளே!
குருவின் உபதேசத்தில் குறித்த இடமாம் நாசி நுனியில் ஊசிப்பார்வை வைத்து நோக்கும் வல்லமை உள்ளவராயிருந்தால் அச்சம் துலங்கும் உடலை உடைய நீங்கள், உயர்வடைந்து, திருவாகிய இறைவன் நடமாடும் உடலுடன் அவனை இனங்கண்டு அவனுடன் கூடலாகுமே!

61.மையடர்ந்த கண்ணினார் மயக்கிடும்

சிவவாக்கியர்
**************
61.மையடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே

மையிறந்து கொண்டுநீங்க ளல்லலுற் றிருப்பீர்காள்

மெய்யடர்ந்த சிந்தையால் விளங்குஞான மெய்தினால்

உய்யடர்ந்து கொண்டுநீங்க ளூழிகாலம் வாழ்விரே!


மைபூசிக் கருமைபெற்ற கண்களை உடைய மயக்கும் கன்னிகளின் மயக்கத்திலே ஆழ்ந்து அவதியுறும் மக்களே!பொய்க் கலப்பில்லாத சிந்தையை உள்ளுணர்வு நிலைக்குக் கொண்டு செல்லும் நிலையைத் தெளிவாக அறிந்து செம்மையாகச் செய்ய இயலுமாயின் மறலியாம் மரணத்தை வென்று அழிவற்று வாழலாம்.

60.அண்டம்நீ யகண்டம்நீ யாதிமூல

சிவவாக்கியர்
***************
60.அண்டம்நீ யகண்டம்நீ யாதிமூல மானநீ

கண்டம்நீ கருத்தும்நீ காவியங்க ளானநீ

புண்டரீக மற்றுளே புணருகின்ற புண்ணியர்

கொண்டகோல மானநேர்மை கூர்மையென்ன கூர்மையே!


கண்டம் = எல்லை
புண்டரீகம் = வெண்தாமரை
கூர்மை = அறிவு
நேர்மை = நுண்மை

அண்டம், அகண்டம், ஆதிமூலம், எல்லை, மனிதனின் கருத்து, காவியம் ஆகிவைகளாய் விளங்கும் இறைவா! அறிவுக்கும் அறிவே! புண்டரீகம் என்னும் வெண்தாமரையினுள்ளே, தத்தம் சூரிய, சந்திர, அக்கினி கலைகளை ஒன்று சேர்த்துத் தவம் இயற்றும் புண்ணியர்கள் உணரும் நுண்மையான உணர்வுதான் நீ.

59.அறத்திரங்க ளுக்குநீ மகண்டமெண்

சிவவாக்கியர்
**************
59.அறத்திரங்க ளுக்குநீ மகண்டமெண் டிசைக்கும்நீ

திறத்திரங்க ளுக்குநீ தேடுவார்கள் சிந்தைநீ

உறக்கம்நீ யுணர்வுநீ யுட்கலந்த சோதிநீ

மறக்கொணாத நின்கழற் மறப்பினுங் குடிகொளே.


திரம் = உரம், உறுதி, நிலை, பலன், முத்தி
திறம் = அதிகம், உறுதி, காரணம், குணம், குறை, கூறுபாடு, தத்துவம், தன்மை, திறமை, பக்கம், மருத்துவம், மேன்மை, வகை, வலி

அறத்தின் பலனாகிய முத்தி நீ; அகண்ட எட்டு திசைக்கும் அதிபதி நீ; தத்துவத்தின் உறுதி, அதனால் கிட்டும் முத்தி நீ; உண்மை எதுவெனத் தேடுவோரின் சிந்தையும் நீ; உறக்கமாகிய தூக்கமும் நீ; உணர்வு நீ; அவ்வுணர்வில் உட்கலந்து நிற்கும் சோதி நீ; மறக்கமுடியாத உன் திருவடியை மறந்தவரிடமும் குடிகொண்டிருக்கும் சீவனாகிய சிவமும் நீயே.

58.அகாரமென்ற வக்கரத்து ளவ்வு

சிவவாக்கியர்
**************
58.அகாரமென்ற வக்கரத்து ளவ்வுவந் துதித்ததோ

உகாரமென்ற வக்கரத்தி லுவ்வுவந் துதித்ததோ

அகாரமும் உகாரமுஞ் சிகாரமின்றி நின்றதோ

விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே.


அவ்வு = அகாரம், அவ்விடம், அந்த இடம்
உவ்வு = உகாரம், தவம்

அகாரமாகிய எழுத்துக்குள்ளே மூலமாகிய அவ்விடம் உதித்ததா?
உகாரமெனும் எழுத்துக்குள்ளே தவம் உதித்ததா?
அகாரமும், உகாரமும் சிகாரமின்றித் தனியாக நிற்கின்றனவா?
மனத்திலே மலமற்ற யோகிகளே, விளக்கம் தாருங்கள்.

அகாரம் + உகாரம் = அ+உ= ய = யகாரம்
அதாவது 2+8 = 10

சிவமந்திரமாம் "நமசிவய"வில் வரும் யகரமே 2ம் 8ம்.
யகரம் திருவடியாம் கண்ணே. அதன் வழியாக, இயல்பாகவே பன்னிரண்டங்குலம் ஓடும் உயிர்ப்பை வளிப்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்த உடல் அழியாது.

சோதி எழுத்து, நாதவெழுத்து = சிகாரம்.
சிகாரம் என்னும் சோதி இல்லாத கண்களாம் திருவடி உண்டோ?
கண்ணில்லாதவருக்கு என ஒரு வினாவெழும்பலாம். அவர்களுக்கு அகக்கண்ணாம் உணர்வு தூண்டப்பட்டு கண்ணுள்ளோரைப்போல் இருமடங்கு கூர்மை உண்டாம்.

"அகார வுகார சிகார நடுவாய்
வகார மோடாறும் வளியுடன் கூடிச்

சிகார முடனே சிவன் சிந்தை செய்ய

ஒகார முதல்வ னுவந்து நின்றானே."


அகரமோடாறும் = பிரணவத்தோடு கூடிய சிவமந்திரமாம் "சிவயநம" (ஓம்நமசிவய = சடாக்கரம்).

அகர உகரம் ஓங்காரத்தைக் குறிக்கிறது. சிகர வகரம் திருவைந்தெழுத்தாம் "நமசிவய"வைக் குறிக்கிறது. இவையிரண்டுமே ஆறெழுத்து மந்திரம். "சிவ சிவ" என இடைவிடாது உயிர்ப்புடன் எண்ணிக் காலை(காற்றை)ப் பிடிக்கும் கணக்கை அறிந்து வளிப்பயிற்சி செய்தால் ஓங்கார முதலாம் சிவன் தோன்றுவான்.

"அவ்வென்ற போதினி லுவ்வெழுத் தாலித்தா
லுவ்வென்ற முத்தி யுருகிக் கலந்திடு

மவ்வென்ற னுள்ளே வழிபட்ட நந்தியை

யெவ்வணஞ் சொல்லுகே னெந்தை யியற்கையே."


உவ் = நடு இடம்.

அகரத்துடன் உகரத்தையும் சேர்த்து உடலினுள்ளே ஒலித்து (நடுக்குறிப்பாம் "உவ்") அக்கினி கலையை மற்ற கலைகளுடன் கலந்தால் வீடு பேறு அடையலாம். "மவ்" எனும் மனத்தினிலே விளங்கும் நந்தியாகிய சிவம் முன்னின்று வழிப்படுத்தும். எந்தை சிவபெருமான் அருளுவதை எங்ஙனம் இயம்புவேன்.

"அவ்வொடு சவ்வென் றரனுற்ற மந்திரம்
அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிகிலர்

அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிந்தபின்

அவ்வொடு சவ்வும் அனாதியு மாமே."


அகரமும் சகரமும் அரனுக்குறிய மந்திரமாம். அகரத்துடன் கூடிய சகரமாகிய "ச" என்னும் மறையினை எல்லோரும் அறிந்தபின், அகர சகரங்கள் அநாதியாகிய தொன்மை உடையதாம். மகரத்துடன் கூடிய சகரம் = சம். அதாவது "அசம்". இதுவே அசபை ஆயிற்று. அசபை எனில் தவத்தில் ஒலிக்கப்படாதது.

57.போதடா வெழுந்ததும் புலனாகி

சிவவாக்கியர்
****************
57.போதடா வெழுந்ததும் புலனாகி வந்ததும்

தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்

ஓதடா வஞ்சுமூன்று மொன்றதான வக்கரம்

ஓதடா விராமராம ராமவென்னும் நாமமே.


போது = காலம், மலரின் மொட்டு
தாது = விந்து
அஞ்சுமூன்று = எட்டெழுத்து

காலம் வந்து வாலிபம் எய்தியவுடன், விந்து புனல்போல் ஊற்றெடுக்கும். அந்த விந்து தானாக உள்ளே புகுந்து விளைய ஆரம்பிக்கும். அவ்வேளையிலே, எட்டெழுத்து மந்திரமாம்,"ஓம் நமோ நாராயணா" என்னும் எட்டெழுத்து முனுத்தத்தை(மந்திரத்தை) ஓதுங்கள்.

"ராம ராம ராமா" என்பதும் முனுத்தமே. எந்த ஒரு இறையின் நாமத்தை ஓதினும், மனம் சலனமற்று இருத்தல் வேண்டும். சிரஞ்சீவியான அநுமன் ஓதித் தவமியற்றியது இம்முனுத்தத்தைத்தான் என்கிறது நூல்கள்.
எட்டெழுத்து மந்திரம் என்பது, "ஓம் நமோ நாராயணா".

56.உற்றநூல்க ளும்முளே யுணர்ந்து

சிவவாக்கியர்
**************
56.உற்றநூல்க ளும்முளே யுணர்ந்துணர்ந்து பாடுவீர்

பற்றறுத்து நின்றுநீர் பராபரங்க ளெய்துவீர்

செற்றமாயை யுள்ளாரைச் செருக்கறுத் திருத்திடில்

சுற்றமாக வும்முளே சோதியென்றும் வாழுமே.


செற்றம் = சினம், வெறுப்பு

சினம், வெறுப்பு ஆகிய மாயையில் மூழ்கியுள்ளோரின் செருக்காகிய கருவத்தை நீக்கி அவர்களைத் திருத்தினால், நம்முள்ளே(நம் உடலினுள்ளே) ஒளிஉருவாய் இறை என்றும் வாழும். இறைமணங் கமழும் நூல்களையும், அதன் உள்வயண முனுத்தங்களையும் (மந்திரங்கள்) உணர்ந்து, உணர்ந்து நம் மனதினுள்ளே உருவேற்ற, பற்றாகிய மாயை அழிந்துபடும். அந்நிலை கிட்டினால் பராபரமாகிய சீவனை அறியலாம். இறையொடு உணர்வால் ஒன்றலாம்.

55.எத்திசைக்கு மெய்வுயிர்க்கு

சிவவாக்கியர்
***************
55.எத்திசைக்கு மெய்வுயிர்க்கு மெங்களப் பனெம்பிரான்

முத்தியான வித்துளே முளைந்தெழுந்த வச்சுடர்

சித்தமுந் தெளிந்து வேதகோயிலுந் திறந்தபின்

அத்தனாடல் கண்டபின் னடங்கலாடல் காணுமே!


எம்பிரான் அருந்தவச் சுடர். அவரே எல்லா திசைகளுக்கும் தலைவன்; எல்லா உயிர்களுக்கும் அப்பன். முத்திக்குக் காரணமான விந்துவாம் வித்துக்குள்ளே இருந்து முளைத்து எழும் அந்த ஞானச் சுடர் வசிக்கும் இவ்வுடலின் சித்தமாகிய மனம் தெளிந்து, உள்ளே உள்ள அகக்கோவிலைத் திறக்க வழியறிய வேண்டும். அப்படி அறிந்து திறந்த பின், அத்தனாம் பித்தனின் ஆடல் காணலாம்; கண்டபின் ஆடல் நிறைந்த சித்தமும் அடங்குமே!

54.தில்லைநா யகனவன் திரு

சிவவாக்கியர்
*****************
54.தில்லைநா யகனவன் திருவரங் கனுமவன்

எல்லையான புவனமு மேகமுத்தி யானவன்

பல்லுநாவு முள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்

வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே!


தில்லை அம்பலத்திலே களிநடனம் புரியும் நடராசப் பெருமானும் அவனே!
திருவரங்கத்தில் அறிதுயிலில் ஆழ்ந்திருந்து அருள் புரிபவனும் அவனே! புவனங்கள் அனைத்துக்கும் ஒரே மூர்த்தியாகப் புலப்பட்டு(புலன்+பட்டு) ஏகமுத்தி தருபவனும் அவனே! இதையெல்லாம் உணராமல், பல்மேல் நாக்குப் போட்டு பிரித்துப் பேசி அற்பத்தனமான மகிழ்ச்சி அடைபவர்கள் சிலர்; தன்னை வல்லவர்கள் என நினைத்துக்கொண்டு இதையே மாற்றி மாற்றிப் பேசுபவர்கள் சிலர்; இவர்கள் எல்லோரும் வாய் புழுத்துச் சாவார்கள்.

53.நாழியும் நாழியுப்பு நாழியான

சிவவாக்கியர்
**************
53.நாழியும் நாழியுப்பு நாழியான வாறுபோல்

ஆழியோனு மீசனு மமர்ந்துவாழ்ந் திருந்திடம்

எருதிலேறு மீசனு மியங்குசக்ரத் தரனையும்

வேறுகூறு பேசுவார் வீழ்வர்வீ ணரகிலே!


நாழி = ஒருபடி
நாழியுப்பு = ஒரு படியின் எல்லை

படியும், படியின் எல்லையும் படிக்குள் அடக்கம். ஆழ்கடலில் துயின்று கொண்டுள்ள சக்கரத்தைக் கையிலேந்தும் நாரணனும், எருதின்மீது அமர்ந்துள்ள அரனும், வேறு வேறு என உடலின் தத்துவம் அறியாமல் பேசுவார்கள். இதை அறியாதவர்கள் நரகில் வீழ்வார்.

52.இடதுகண்கள் சந்திரன் வலது

சிவவாக்கியர்
**************
52.இடதுகண்கள் சந்திரன் வலதுகண்கள் சூரியன்

இடக்கைசங்கு சக்கரம் வலக்கைசூல மான்மழு

எடுத்தபாதம் நீண்முடி யெண்டிசைக்கு மப்புறம்

உடல்கடந்து நின்றமாயம் யாவர்காண வல்லரோ?


இடது கண் = சந்திரன்
வலது கண் = சூரியன்
இடதுகை = சங்கு சக்கரம்
வலதுகை = சூலம், மான், மழு


இத்தூல உடலில் உள்ள உறுப்புக்களையும், எட்டு திசைக்கப்புறமுள்ள மேல்திசை, கீழ்திசை ஆகியவற்றையும் கடந்து எடுத்துவைத்த பாதம், நீண்ட சடைமுடியும் தாங்கிய சீவனாகிய சிவன், உள்ளது. அது உடலின் வெளியேயுள்ள இடதுகண், வலதுகண், இடக்கை, வலக்கை ஆகியவற்றையும் தாண்டி உள்ளது. இத்தூல உடலில் உள்ளவற்றின் சூக்குமத்தை மேலுரைத்துள்ளபடி உணர்ந்து, உடலுக்குள் இருக்கும் சூக்கு உடலுக்குள் சென்று அச்சீவனை காணக்கூடிய வல்லபம் யாரிடம் உண்டு.

இங்கேயே, மாலியத்தார் வணங்கும் சங்குசக்கரத்தையும், சைவர்கள் வணங்கும் சூலம், மான்,மழு ஆகியவைகள் அனைத்தும் நம் ஒவ்வொருவரின் உடலிலேயே உள்ளது எனக் கூறியமை காண்க. அப்படியிருக்க, திருமால் வேறு, சிவன் வேறு என சண்டையிடுதல் எவ்விதம் நியாயம்?

51.ஆடுகாட்டி வேங்கையை யகப்படுத்து

சிவவாக்கியர்
***************
51.ஆடுகாட்டி வேங்கையை யகப்படுத்து மாறுபோல்

மாடுகாட்டி யென்னைநீ மதிமயக்க லாகுமோ

கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா

வீடுகாட்டி யென்னைநீ வெளிப்படுத்த வேணுமே!


ஆடு ஒன்றைக் கட்டிப்போட்டு, அதைக் காட்டி வேங்கையைப் பிடிப்பதுபோல், செல்வம் என்னும் இரையைக் காட்டி என் புத்தியை மயக்கலாமோ?
இலைக் கொம்பாகிய கோடுதனைக் காட்டி யானையக் கொன்று தோலை உரித்த என் கொற்றவனாம் இறைவா, நான் வாழவேண்டிய இறைவீட்டைக் காட்டிக்கொடுத்து, என்னை மதி மயக்கத்திலிருந்து வெளியேற்றிக் காக்கவேண்டும், ஐயா.

50.கைவழங்கள் கொண்டுநீர் கண்

சிவவாக்கியர்
**************
50.கைவழங்கள் கொண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர்

எவ்விடங்கள் கண்டுநீ ரெண்ணியெண்ணிப் பார்க்கிறீர்

பொய்யுணர்ந்த சிந்தையைப் பொருந்திநோக்க வல்லீரேல்
மெய்கடிந்த தும்முளே விளைந்துகூற லாகுமே!

கைவழம் = வழங்கும் கைப்பழக்கம்
எண்ணி = நினைத்து
எண்ணி = துணிந்து
கடிதல் = அழித்தல்,அறுத்தல், ஒடுக்கல்,சினத்தல்,தடைசெய்தல்,தண்டித்தல், நீக்கல், வெட்டல்.

இறைவனை அடைய, சரியை, கிரியை ஆகிய வழிகளில்(மார்க்கத்தில்) நீங்கள் செய்யும் தான தருமங்கள் போதுமென எண்ணிக்கொண்டு கண் சிமிட்டிக்கொண்டு நிற்கிறீர்கள்.அது தவறு. பின்னர் எந்த இடத்தில் என்று கண்டு நீங்கள் நினைத்துப் பின் துணிந்து பார்த்தால் தெரியும். பொய்யாகிய மாயை எதுவென உணர்ந்த மனமாம் சிந்தையை, நினைவினில் நிறுத்திக் கருத்தினில் பொருத்தி உள்நோக்கும் வல்லமை உண்டெனில் மெய்யாகிய உடலை உள்ளே ஒடுக்கி, விந்துவை விளைவிக்க வைத்து மணியாக்கி இறையுணரலாம்.

49.சொற்குருக்க ளானதுஞ் சோதிமேனி

சிவவாக்கியர்
****************
49.சொற்குருக்க ளானதுஞ் சோதிமேனி யானதும்

மெய்க்குருக்க ளாயினும் வேணபூசை செய்கினும்

சற்குருக்க ளாயினுஞ் சாத்திரங்கள் சொல்லினு

மெய்க்குருக்க ளாயினுந் திரண்டுருண்ட தூமையே!


வேதங்களை ஓதி மெய்யாலுமே குருக்களாய் இருந்தாலும், வேண்டிய அளவு பூசைகள் செய்தாலும், "சற்குரு" எனப் பலராலும் போற்றும் மானிடராய் இருந்தாலும், சாற்றிறங்கள் பல படித்திருப்பினும், தாம் செய்யும் செயல்கள்தாம் தூய்மையானவை எனக்கூறும் மானிடராய் இருந்தாலும், அவர்கள் எல்லாம் தீட்டு என இவர்களால் அழைக்கப்படும் தாயின் சூதகத்தில் இருந்து திரண்டு மனித உடலெடுத்துத் திரண்டு வெளி வந்தவர்கள்தாம்.

முக்கலையைச் சேர்த்துத் தவமியற்றி தம்நிலை கடந்தவர்கள்தாம் மெய்யிலே(உடலிலே) தூய்மையானவராம்.

48.தூமைதூமை யென்றுளே துவண்டலையு

சிவவாக்கியர்
***************
48.தூமைதூமை யென்றுளே துவண்டலையு மேழைகாள்

தூமையான பெண்ணிருக்கத் தூமைபோன தெவ்விடம்

ஆமைபோல முழுகிவந் தனேகவேத மோதுறீர்

தூமையுந் திரண்டுருண்டு சொற்குருக்க ளானதே.


எந்தச் செயலும் தூய்மையானதல்ல; கெட்டதாகவே(தூமை=தீட்டு) இருக்கின்றன; எனும் சஞ்சலத்தால் அலைக்கழிக்கப்படும் மனிதர்கள், ஒழுக்கமற்ற தூய்மையற்ற பெண்ணைக் கண்டதும் மனம் மயங்கி அப்பெண்ணின் பின் அலைவது ஏன்? அப்பொழுது அவர்கள் கூறும் அந்தத் தூய்மை எங்கே போனது? ஆமையைப்போல் நீரில் முழுகிவிட்டு, அழுக்கு போய்விட்டதா என்றுகூடப் பார்க்காமல், சுத்தமாய்த்தான் இருக்கிறோமென்று சொல்லிக்கொண்டு வாயால் மட்டும் எண்ணிலடங்கா முனுத்தங்களைச்(மந்திரங்கள்) சொன்னால் மட்டும் போதுமா? நற்பயன் கிட்டுமா?

சலனமற்ற மனம் ஒருநிலைப்பட்டுத் தவத்தில்(முக்கலையொன்றித்தல்) நின்றால் மட்டுமே அழுக்கற்ற சிவத்தின் தன்மையை உணரலாம்.

47.தரையினிற் கிடந்தபோ தன்றுதூமை

சிவவாக்கியர் பாடல்கள் - 47
********************************


47.தரையினிற் கிடந்தபோ தன்றுதூமை யென்கிலீர்

துறையறிந்து நீர்குளித்த தன்றுதூமை யென்கிலீர்

பறையறைந்து நீர்பிறந்த தன்றுதூமை யென்கிலீர்

புறையிலாத வீசரோடு பொருதுமாற தெங்ஙனே?


தூமை = தூய்மை, மகளிர் சூதகம், வெண்மை.

குழந்தை பிறந்து தரையில் வீழ்ந்தவுடன் தீட்டி என்கிறீர். நீர்த்துறை சென்று நீங்கள் குளித்தபோது தூய்மையாகி விட்டோம் என்கிறீர்.
"நீங்கள் பிறந்தபோது அத்தீட்டு எங்கே சென்றது?", என நான் பறையை அடித்துக் கேட்கிறேன்.

இதுபோல் நாட்களில், இந்த நாள் (தீட்டு) ஆகாது. அந்த நாள் ஆகாது. இப்படிக் கூறிக்கொண்டு நாட்களை வீணடிக்கிறீர்களே! நீங்கள் எப்பவும் ஆகாயத்தாமரையில் இருந்து தவம் செய்து எப்படிக் குற்றமே (தீட்டே)இல்லாத இறைவனை அடையப் போகிறீர்கள்?

46.கறந்தபால் முலைப்புகா கடைந்த

சிவவாக்கியர்
******************
46.கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணை மோர்புகா

உடைந்துபோன சங்கினோசை யுயிர்களு முடற்புகா

விரிந்தபூ வுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா

இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை யில்லையே!


மாட்டின் மடியிலிருந்து கறந்த பால் திரும்பி மாட்டின் முலைக்குள் செல்ல இயலாது. உறைக்குத்திய தயிரைக் கடைந்து எடுத்த வெண்ணை மறுபடியும் தயிராகாது. அதுபோல் சங்கிலிருந்து வெளிவந்த ஓசை சங்குக்குள் செல்ல முடியாது. உடலில் இருந்து பிரிந்த உயிர் மீண்டும் உடலுக்குள் புகமுடியாது. மொட்டாக இருந்த மலர் மலர்ந்தபின் திரும்பவும் மொட்டாக முடியாது. மரத்திலிருந்து உதிர்ந்த்த இலை, பூ, காய் ஆகியவை திரும்ப மரத்தைச் சென்று அடையாது. அதுபோல் இறந்தவர் பிறப்பதில்லை. இல்லை! இல்லை! இல்லையே!!

45.சாதியாவ தேதடா சலந்திரண்ட

சிவவாக்கியர்
****************
45.சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெலாம்

பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ

காதில்வாளி காரைகம்பி பாடகம்பொ னொன்றலோ

சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே?


நீர் எங்கிருந்தாலும் அதற்குச் சாதி உண்டா? பொன்னால் செய்யப்பட்ட நகைகளைக் காதில், வாளி, காரை, கம்பி, பாடகம் என உருமாற்றம் செய்து அணிந்துகொள்கிறீர்கள். ஆயினும் அவைகளெல்லாம் பொன்னே.
இவ்வுடல் ஐந்து பூதங்களால் ஆகியது. இவ்வைந்து பூதங்களும் ஒன்றியபின்தான் உயிர் உண்டாகிறது. அது இருக்குமிடமும் ஒரு வாயில்தான்; அதுதான் நம் வாய்க்குள்ளேதான். நாக்கின் அடியின் உள்ள நரம்பு முடிச்சில்தான். இவைகளில் எல்லாம் சாதிவேறுபாடு எங்குள்ளது? பிறகு மற்றவைகளில் சாதிபேதம் பார்க்கும் தன்மையை என்ன சொல்வது?

44.சித்தமற்று சிந்தையற்று சீவனற்று

சிவவாக்கியர்
****************
ஒடுக்க நிலை

*****************

44.சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்
சத்தியற்று சம்புவற்று சாதிபேத மற்றுநன்

முத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்

வித்தையித்தை யீன்றவித்தில் விளைந்ததே சிவாயமே.


சித்தம், மனம், சீவன், சத்தி, சிவம், சாதி மத பேதம், முத்தி, மூலாதாரம், மூலமந்திரம், கற்ற கல்வி, வித்தைகள் ஆகிய அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, சூரிய சந்திர கலைகளாகிய இரு கண்களாலும் உள்ளே நோக்கி அக்கினி கலையுடன் கலந்து மேலேற்றி ஆகாயத்தாமரையில் சிவத்துடன் சலனமற்று ஒன்றியிருக்க, அதுவே சிவாயமாம்.

43.சித்தமேது சிந்தையேது சீவனேது

சிவவாக்கியர்
****************
கடவுள் நிலை

*****************


43.சித்தமேது சிந்தையேது சீவனேது சித்தரே

சத்தியேது சம்புவேது சாதிபேத மற்றது

முத்தியேது மூலமேது மூலமந்தி ரங்களேது

வித்திலாத வித்திலே யின்னதென் றியம்புமே?


விதையின்றி மரம் வருவதில்லை; அம்மரம் பூத்துக் காய்க்காவிடில் விதை இல்லை. அதுபோல், சித்தம், சிந்தை, சீவன் ஆகியவைகள் எல்லாம் உடலின் உள்ளேயுள்ள சிவத்தில்(ஆன்மா) ஒடுங்க, ஒருவனுக்கு சத்தியாம் அம்மையில்லை; சம்புவாகிய சிவமில்லை; சாதிபேதமில்லை; முத்தியும் கிடையாது; மூலம் என்று சொல்லப்படும் மூலாதாரம் கிடையாது; மூலமந்திரங்கள் கிடையாது.

உள்ளம், மனம் யாவும் சிவத்தொடு ஒடுங்கி ஒன்றாக, அவனுக்கு மூலாதாரம், மூலமந்திரங்கள் வேண்டாம்; முத்தியும் வேண்டாம். மவுனத்தில் அழுந்தி இருத்தலே அவன் வேண்டுவது; அப்பொழுது அவனுக்கு இறை எதுவும் வேண்டாம். அப்படியெனில் தூல வழிபாடு தேவையில்லை.

42.அம்பலத்தை யம்புகொண் டசங்கென்றா

சிவவாக்கியர் பாடல்கள்
*****************************


42.அம்பலத்தை யம்புகொண் டசங்கென்றா லசங்குமோ?

கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ?

இன்பமற்ற யோகியை யிருளும்வந் தணுகுமோ?

செம்பொனம் பலத்துளே தெளிந்ததே சிவாயமே!


கம்பம் = அசைவு

இப்பிரபஞ்சத்தை ஒரு அம்பால் அசைக்க,முடியுமா? அசைவில்லாது இருக்கும் பாற்கடலைக் கலக்கிக் குழப்ப முடியுமா? அது போல,செம்பொன்னைப் போல் ஒளிவீசும் இவ்வுடலாம் கோவிலுக்குள்ளே சிவாயமாம் இறைவன் உள்ளான். அவனையே சிந்தித்து, சிற்றின்பத்தை வெறுத்து ஒதுக்கியிருக்கும் யோகியை, மாயையென்னும் இருள் வந்தணுக முடியாது.

41.பிறப்பதற்கு முன்னெலா மிருக்குமாற

சிவவாக்கியர் பாடல்கள்
****************************

41.பிறப்பதற்கு முன்னெலா மிருக்குமாற தெங்ஙனே
பிறந்துமண் ணிறந்துபோ யிருக்குமாற தெங்ஙனே

குறித்துநீர் சொலாவிடிற் குறிப்பிலாத மாந்தரே

அறுப்பனே செவியிரண்டு மஞ்செழுத்து வாளினால்.


கருத்து(குறிப்பு) இல்லாதா மாந்தர்களே! பிறப்பதற்கு முன் நீங்கள் இருந்தது எங்கே? பிறந்தபின்பு இறந்தபின்னர் போவதுதான் எங்கே? இவ்விரு வினாக்களுக்கும் விடை சொல்லாவிடில் "நமசிவய" என்னும் ஐந்தெழுத்து வாளினால் உங்களின் காதுகளை அறுப்பேனே.

சூக்கும உடலான ஆன்மா அழிவதில்லை. பிறப்பதற்குமுன் ஆன்மா இறைவனுடன் கலந்திருக்கும். பிறவி எடுக்கும்பொழுது ஆன்மத் துகள் பிரிந்துவந்து உடலில் குடிகொள்ளும். பின்னர் இறக்கும்போது அது ஆகாயவெளியாம் அண்டத்திற்குப் போய்விடும்.

40.ஓதுகின்ற வேதமெச்சி லுள்ள

சிவவாக்கியர்
***************
40.ஓதுகின்ற வேதமெச்சி லுள்ளமந் திரங்களெச்சில்

மோதகங்க ளானதெச்சில் பூதலங்க ளேழுமெச்சில்

மாதிருந்த விந்துவெச்சில் மதியுமெச்சி லொலியுமெச்சில்

எதிலெச்சி லிலதில்லை யில்லையில்லை யில்லையே!


வேதியர்களே! நீங்கள் ஓதுகின்ற வேதம் வாயிலிருந்து வெளியே வருவதால் எச்சில். பலுக்கும் முணுத்தங்கள் (மந்திரங்கள்) எச்சில். இருபாலாருக்குமிடையில் இணக்கம் (மோதகம்) வந்தபின் அதுவும் எச்சில். மாதின் கருப்பையில் விழும் விந்து எச்சில். பூமிகள் ஏழும் எச்சில். சந்திரனும் எச்சில். ஒலிக்கும் ஒலியும் எச்சில். இவற்றுள் (அண்டங்களில்) எதில் எச்சில் இல்லையென அறுதியிட்டுக் கூறுவீரே!

39.வாயிலே குடித்தநீரை யெச்சிலென்று

சிவவாக்கியர்
**************
39.வாயிலே குடித்தநீரை யெச்சிலென்று சொல்லுறீர்;

வாயிலே குத்தப்புவேத மெனப்படக் கடவதோ?

வாயினெச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்;

வாயினெச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே!


வாயில் உள்ள எச்சி போகவேண்டுமென நீர்தனைக் குடிப்போரே!
வாயிலுள்ள எச்சில் போக்கிப் பின்னர் எச்சில்லாத வாயுடன் வந்து என் வினாவுக்கு விடை சொல்லுங்களேன்.

வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுகிறீர். ஆனால் வாயிலேயிருந்து துப்பும் வார்த்தகளாலான வேதமும் எச்சியன்றோ? ஆனால் அதை மட்டும் வேதமெனக் கூறுதல் எங்ஙனம்?

38.பறைச்சி ஆவதேதடா பணத்தி

சிவவாக்கியர் பாடல்கள்
***************************

38.பறைச்சி ஆவதேதடா பணத்தி ஆவதேதடா?

இறைச்சி தோல் எலும்பினும்இலக்கம்இட்டிருக்குதோ?

பறைச்சி போகம் வேறதோ, பணத்தி போகம்வேறதோ?

பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முளே.


முதல் மூன்று வரிகளுக்கும் பொருள் சொல்லவேண்டியதில்லை. நான்காம் வரியில் உள்ள "பறைச்சி" "பணத்தி" ஆகியவைகளில்தான் சூக்குமம் உள்ளது. சாதியில் பறைச்சி அடிமட்டத்துள்ளவள். (பார்ப்)பணத்தியோ மேல் மட்டத்துள்ளாள்.

எண்சாண் உடலுக்கு சிரமே பிரதானம். அதுவே இமயம். அதுவே கைலாயம்.
அத்தலையில் கீழ்மட்டத்துள்ளே இருப்பதையும், மேல்மட்டத்துள்ளே
இருப்பதையும் உரித்து உடைத்து விண்டு பாருங்கள்.

கீழ் மட்டத்துள்ளது - வாய் - பறச்சி

மேல் மட்டத்துள்ளது - சிதாகாயம்என்னும் அண்ணாமலை - பணத்தி

37.கலத்தில் வார்த்து வைத்தநீர்

சிவவாக்கியர் பாடல்கள் - 37
***********************************

37.கலத்தில் வார்த்து வைத்தநீர் கடுத்ததீமுடுக்கினால்

கலத்திலே கரந்ததோ கடுத்ததீ குடித்ததோ

நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ

மனத்தின்மாயை நீக்கிலே மனத்துள்ளே கரந்ததே


மிகுந்த வெப்பத்துடன் கூடிய தீயை மூட்டினால் மட்பாண்டத்திலே ஊற்றிவைத்த நீர் ஆவியாகிப் போய்விடும். அதை கலம் (உண்டதெனக்)மறைத்ததெனக் கொள்ளலாமா? அல்லது தீ குடித்துவிட்டதெனக் கூறலாமா?
நிலத்திலே மறைந்துவிட்டதென்பதா? நீள்விசும்பாகிய ஆகாயம் உட்கொண்டுவிட்டதென்பதா?

அதுபோல், இந்த மட்பாண்டமாகிய உடலில் உள்ள சீவனாகிய சிவம் மாயையைப் புறந்தள்ள மனத்துள்ளே மறைந்திருக்கும்.

36.இருக்குநாலு வேதமு மெழுத்தையற

சிவவாக்கியர் பாடல்கள்
*****************************

36.இருக்குநாலு வேதமு மெழுத்தையற வோதிலும்
பெறுக்கநீறு பூசிலும் பிதற்றிலும் பிரானிரான்
உருக்கி நெஞ்சை யுட்கலந்து வுண்மைகூற வல்லீரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே!

இருக்கு முதலான நான்கு வேதங்களிலுள்ள எழுத்துக்களையெல்லாம் செம்மையாக ஓதினாலும், நெற்றி நிறையத் திருநீறு அணிந்தாலும், "எனக்கு இது தெரியும்; அது தெரியும்; கடவுளைக் கண்டேன்; அவருடன் உரையாடினேன்;" என அரற்றிப் பிதற்றித் திரிந்தாலும், எம்பிரான் இருக்க மாட்டான். உள் மெய்யில் ஞானவினையாம் முக்கண் புணர்ச்சி செய்து நெஞ்சுருகி, கண்ணீர் பெருகி உள்ளே சென்று நெஞ்சமாம் மனதால் சிறுமையற்ற சோதியாம் எம்பிரானைக் கூடிடல்வேண்டும்.

35.பூசைபூசை யென்றுநீர் பூசை

சிவவாக்கியர் பாடல்கள்
*****************************
35.பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே!

இறைவன் உனக்குள்ளே இருப்பதை அறியாது, அவனை எந்த இடத்தில் பூசிப்பது என அறியாது, பூசை பூசை என நீர் இரைத்துப் பூசைகள் பல செய்யும் பேதைகளே!

இறைவனுக்கு ஆதியுமில்லை! அந்தமுமில்லை!
இறைவன் இருப்பதோ உனக்குள்ளே.
நீங்கள் செய்த பூசைகளை ஆதியான விந்து ஏற்றுக்கொண்டதோ?
அனாதியான ஆகாயம் ஏற்றுக்கொண்டதோ?
இல்லை வேறு யார் ஏற்றுக்கொண்டார்களோ?
என்னவெனக் கூறுங்களேன்.

34.செங்கலுங் கருங்கலுஞ் சிவந்தசாதி

சிவ வாக்கியர் - 34
******************
34.செங்கலுங் கருங்கலுஞ் சிவந்தசாதி
..............லிங்கமும்
செப்பிலே தராவிலுஞ் சிவனிருப்ப
.............னென்கிறீர்
உன்பத மறிந்துநீ ரும்மைநீ
............ரறிந்தபின்
அம்பலம் நிறைந்தநாத ராடல்பாட
.............லாகுமே.


செங்கல்லிலும், கருங்கல்லிலும், சிவந்த சாதி லிங்கத்திலும், செப்புச் சிலையிலும், சங்கிலும் சிவன் இருக்கிறான் எனப் பூசிக்கிறீர்கள். உன்னிடமுள்ள இறைவனின் மலர்ப்பாதத்தை அறிந்துகொண்டு அதன் வழியே சென்று நினைவாம் இறைவனை அறிந்துணர்ந்தபின் உன் உடலே இறைவன் பிரணவ மந்திரமாகிய பாடலுடன் ஆடும் அம்பலமாம் கோயில் ஆகிவிடும்.

33.கோயிலாவ தேதடா குளங்களாவ

சிவ வாக்கியர் - 33
******************
யோக நிலை
************
33.கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே.

கோயில் குளங்கள் ஆகியவற்றிற்குச் சென்று கும்பிடும் அறிவற்றவர்களே! கோயில், குளங்கள் ஆகியவை நம் மனத்துள்ளே இருக்க, அவற்றை இனம் கண்டுகொண்டு பூசிக்க பிறப்பு, இறப்பு ஆகியவைகளில்லை. இல்லை. இல்லையே.

32.மாறுபட்டு மணிதுலக்கி வண்டி

சிவ வாக்கியர் - 32
*******************
சரியை நிலை
****************
32.மாறுபட்டு மணிதுலக்கி வண்டினெச்சில்
............கொண்டுபோய்
ஊறுபட்ட கல்லின்மீதே யூற்றுகின்ற
..............மூடரே
மாறுபட்ட தேவரு மறிந்துநோக்கு
...............மென்னையும்
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள்பாதம்
.............வைத்ததே.


செய்யவேண்டிய கடமையினின்றும் மாறுபட்டு, மணியைத் துலக்கி, உடைந்துள்ள கல்லுக்குப் பூசை செய்து, வண்டின் எச்சிலாம் தேனை அபிசேகம் செய்து இறைவனை வணங்கும் மூடரே, உங்களிடமிருந்து (பூசாவிதிகளில்) மாறுபட்ட தேவர்கள் என்னை அறிந்து நோக்கிப் பலன் பெறுகின்றனர்.

உங்களுக்குக் குருக்கள் பாதமாம் கண்களைக் கொடுத்தது ஒன்றுபட்டு என்னை நோக்காது கூறுபோட்டு உலகைக் காணவோ?

31.செய்யதெங்கி லேயிளநீர்

சிவ வாக்கியர் - 31
*******************
31.செய்யதெங்கி லேயிளநீர் சேர்ந்தகார
.............ணங்கள்போல்
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில்
.............கொண்டனன்
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில்
..............கொண்டபின்
வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப
................தில்லையே.


உயர்ந்து வளர்ந்த தென்னை மரத்திலே இளநீர் எப்படி வந்ததோ, அப்படியே ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன். அதர்குப் பின் இவ்வுலகில் மனிதர்களுக்குமுன் நான் வாய்மூடி மவுனியாகி விட்டேன்.

இறைவன் எப்பொழுது எவனொருவன் உள்ளத்தில் கோயில் கொள்ளுகிறானோ அப்பொழுதே அவன் மவுனியாகி விடுவான். நாவடங்கி விடும். இதுவே நாவடக்கம்.

30.பாட்டிலாத பரமனை பரமலோக

சிவ வாக்கியர் - 30
*******************
30.பாட்டிலாத பரமனை பரமலோக
...........நாதனை
நாட்டிலாத நாதனை நாரிபங்கர்
..........பாகனை
கூட்டிமெள்ள வாய்புதைத்து குணுகுணுத்த
..........மந்திரம்
வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடா
...........முநின்றதே.


பாட்டிலாத பரமனை, பரமலோக நாயகனை, நாடு இல்லாத நாதனை, உமையொருபாகனை நினைத்து மெள்ள வாய் புதைத்து குணுகுணு என்று ஓதிய மந்திரங்களைவிட, வேட்டைக் காரனான கண்ணப்பன் இரகசியமாய்க் குசுகுசு எனக் கூப்பிடுவதற்குமுன் நிற்பான் ஈசன்.

29.நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு

சிவ வாக்கியர் - 29
*******************
யோக நிலை
**************
29.நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்த
..............நித்த நீரிலே
விருப்பமோடு நீர்குளிக்கும் வேதவாக்கியங்
..............கேளுமின்
நெருப்புநீரு மும்முளே நினைந்துகூர
..............வல்லிரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்துகூட லாகுமே.

நித்தமும் விருப்பத்துடன் நீரிலே குளித்து, நெருப்பைமூட்டி நெய்யை அதில் விட்டு எரித்து அக்கினி வளர்த்து யாகம் செய்வோரே, ஒரு வேத வாக்கியத்தைக் கேளுங்கள்.

நெருப்பும் நீரும் நமக்குள்ளே ஒரே இடத்தில் உள்ளது. அது எந்த இடம்? நீரும் நெருப்பும் ஒரே இடத்தில் இருப்பின் நெருப்பு அணைந்துவிடுமே? ஆம். இறைவனின் படைப்பில் நெருப்பும் நீரும் இருக்குமிடம் அவனவன் கண்களே.

அதுவே உணர்வு உடல் அடைய வழி. இதன் வழியாகச் செல்ல சோதி உருவாய் இருக்கும் சீவனைக் கூடலாம்.

28.அண்டர்கோ னிருப்பிட மறிந்து

சிவ வாக்கியர் - 28
*******************
28.அண்டர்கோ னிருப்பிட மறிந்துணர்ந்த
............ஞானிகள்
பண்டறிந்த பான்மைதன்னை யாரறிய
.............வல்லரோ
விண்டவேத பொருளையன்றி வேறுகூற
............வகையிலா
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்ப
............தில்லையே.

அண்டர் = சிவன், கர்த்தா
பண்டு = ஞானம், கல்வி, பழமை;
பான்மை=தன்மை, குணம், தகுதி,பங்கு

சீவனின் இருப்பிடமறிந்த ஞானிகள் வேதத்தில் சொல்லிய பொருளயன்றி வேறுகூறாமல், ஞானம் அறிந்துணர்ந்த தன்மைதனை யாரும் அறிய முடியாது. இத்தகைய பக்குவமடைந்தவர்கள் கண்ட(பார்த்த) கோயிலில் இருப்பதெல்லாம் தெய்வம் எனக் கையெடுத்துக் கும்பிடுவதில்லையே.

27.பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்

சிவ வாக்கியர் - 27
*******************
ஞான நிலை
**************
27.பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்க
..............ளெத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்க
.............ளெத்தனை
மிண்டராய்த் திரிந்தபோ திரைத்தநீர்க
.............ளெத்தனை
மீளவுஞ் சிவாலயங்கள் சூழவந்த
............தெத்தனை.

பழைய காலத்தில் நான் பூசை செய்கிறேன் எனப் பறித்து எறிந்த மலர்கள் எத்தனை? வீணாகச் செபித்த மந்திரங்கள் எத்தனை?

மிண்டன் = திண்ணியன் = வலிவுடையவன்.

வலிவுடையவனாய்த் திரிந்தபோது இரைத்த நீர்கள் எத்தனை?

இவ்வளவையும் செய்துவிட்டுப் பின் சுற்றிவந்த சிவாலயங்கள் எத்தனை?

26.அண்ணலே யனாதியே யனாதி

சிவ வாக்கியர் - 26
*******************
26.அண்ணலே யனாதியே யனாதிமுன்
............னனாதியே
பெண்ணுமாணு மொன்றலோ பிறப்பதற்கு
............முன்னெலாம்
கண்ணிலாணின் சுக்கிலங் கருதியோங்கு
............நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாற
..........தெங்ஙனே.

ஆதி = அந்+ஆதி=அந்(த)+ஆதி=அந்தாதி=அநாதி

அண்ணலாகிய இறை ஆதிப்பொருள். அதுவே அநாதி. அதுவே அந்தமும் ஆதியும். பிறப்பதற்கு முன்னர் சுக்கிலமும் விந்துவும் கூடியபோது அது பெண்ணுமில்லை, ஆணுமில்லை. அலியே. அதைக்குறிக்குமாறுதான் உமையொருபாகனைச் சித்தரித்தனர் முன்னோர். மண்ணில் உள்ளோரும் விண்ணில் உள்ளோரும் வந்தது இப்படித்தான்.

25.ஓடமுள்ள போதெலாம் ஓடியே

சிவ வாக்கியர் - 25
*******************
25.ஓடமுள்ள போதெலாம் ஓடியே
.................உலாவலாம்
ஓடமுள்ள போதெலாம் உறுதிபண்ணிக்
...............கொள்ளலாம்
ஓடமும் உடைந்தபோதங்கு ஒப்பில்லாத
...............வெளியிலே
ஆடுமில்லை கோனுமில்லை ஆருமில்லை ஆனதே.

ஓடமாகிய உடல் உள்ளபோது நம் சீவனைப் பரிபூரணத்துடன் இணைத்துக்கொள்ள வழிதேடி அதை உறுதி செய்து கொண்டிருப்பதை விட்டுவிட்டு, சீவனின் மூலமாம் விந்துவை ஓடிஓடி உலாவி (புணர்ச்சி செய்து) நாசம் (வீணடித்து) விடுகிறோம்.

பின்னர் ஓடம் உடைந்து சீவன் பரதேசம் செல்லும்போது, ஆடு, அதை மேய்க்கும் கோனான் ஆகிய சுற்றம் யாரும் கூட வருவதில்லை.

"வீடு வரை உறவு - வீதிவரை மனைவி - காடுவரை பிள்ளை - கடைசிவரை யாரோ"(கவியரசு)

24.வீடெடுத்து வேள்விசெய்து

சிவ வாக்கியர் - 24
*******************
24.வீடெடுத்து வேள்விசெய்து மெய்யரோடு
.............பொய்யுமாய்
மாடுமக்கள் பெண்டிர்சுற்ற மென்றிருக்கு
...............மாந்தர்காள்
நாடுபெற்ற நடுவர்கையி லோலைவந்
...............தழைத்திடில்
ஓடுபெற்ற தவ்விலை பொறாது
..............காணுமுடலமே.

இந்த உண்மையும் பொய்யும் நிறைந்த உலகிலே, வீடுகட்டி வேள்வி செய்து, மாடு, மக்கள், மனைவி, சுற்றத்தார் என்று வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் மாந்தர்களே, எமலோகத்தின் அதிபதியாம் எமனிடமிருந்து ஓலை வந்து அழைத்த பின்னால் இந்த உடல் வெறும் உடைந்த பானை ஓட்டின் விலை கூடப் பெறாது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

23.நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு

சிவ வாக்கியர் - 23
*******************

23.நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு
..............சாத்துறீர்
வாழவேணு மென்றலோ மகிழ்ந்திருந்த
.................மாந்தரே
காலனோலை வந்தபோது கைகலந்து
..................நின்றிடும்
ஆலமுண்ட கண்டர்பாத மம்மைபாத
.................முண்மையே.


வாழவேண்டுமெனும் எண்ணத்தால் நீளமாக வீட்டைக் கட்டிப் பெரிய கதவையும் வைத்துச் சாத்திக்கொள்ளுகிறீர்கள். அந்த நிலைதான் நிலையானது என்று மகிழ்ந்தும் இருக்கிறீர். ஆயினும், மறலியாம் ஏமனோலை பூட்டிய கதவையுந்தாண்டி வந்தபோது என்ன செய்யப் போகிறீர்கள். ஆலவிடமுண்ட அப்பன் பாதமும் அம்மை பாதமும் கலந்து நிற்கும் கை(முகுளம்)யில் பள்ளி கொண்டிருக்கும் எம்பெருமாளை அடைய வழி தெரிந்துகொள்வீர். முக்கலை ஒன்றித்தலாம் வாசியோகம் அறிந்து நினைவாகிய இறைவனைக் கருத்தில் அடைத்து வைக்கத் தெரிந்தால் ஏமனையும் ஏமாற்றலாம்.

22.அஞ்சுமஞ்சு மஞ்சுமே யனாதியான

சிவவாக்கியர் - 22
*******************
யோக நிலை
**************

22.அஞ்சுமஞ்சு மஞ்சுமே யனாதியான
.............தஞ்சுமே
பிஞ்சுபிஞ்சு தல்லவோ பித்தர்காள்
..............பிதற்றுறீர்
நெஞ்சிலஞ்சு கொண்டுநீர் நின்றுதொக்க
.............வல்லிரே
லஞ்சுமில்லை யாறுமில் லனாதியாக
............தோன்றுமே.


ஐந்து உடல்கள்(கோசங்கள்):
உணவுடம்பு, காற்றுடம்பு, மன உடல், அறிவு உடல், இன்ப உடல்

ஐந்து கர்ம இந்திரியங்கள் :
கை, கால், வாய்,எருவாய், கருவாய் முறையே செங்கிருதத்தில் பாணி, பாத, வாக்கு, பாயுரு, உபத்தம்.

ஐந்து ஞான இந்திரியங்கள்:
மெய், வாய், கண், மூக்கு, செவி முறையே செங்கிருதத்தில் தொக்கு, சிங்குவை, சட்சு, ஆக்கிராணம், சோந்திரம்.

ஐம்பூதங்கள்:
மண், நீர், தீ, காற்று, ஆகாயம்

மேற்கூறிய ஐந்து உடல்கள், ஐந்து கர்ம இந்திரியங்கள், ஐந்து ஞான இந்திரியங்களும் அனாதியான ஐம்பூதங்களும் பிஞ்சு அல்லவா; பித்தர்களே பிதற்றாதீர்கள். நெஞ்சினில் ஐந்தெழுத்தை(சிவயநம) ஓர்மையுடன் நினைவினில் வைத்துக் கொள்ள வல்லவராயின், ஓதும் அஞ்சும், செல்லும் வழியாம் ஆறு ஆதரமுமில்லமல் போய் அனாதியான சீவன் நினைவில் ஒன்றுமே.

21.அஞ்செழுத்தி லேபிறந்து அஞ்செழுத்தி

சிவவாக்கியர் - 21
*******************
யோக நிலை
**************
21.அஞ்செழுத்தி லேபிறந்து அஞ்செழுத்தி
...............லேவளர்ந்து
அஞ்செழுத்தை யோதுகின்ற பஞ்சபூத
...............பாவிகாள்
அஞ்செழுத்தி லோரெழுத் தறிந்துகூற
..............வல்லிரேல்
அஞ்சலஞ்ச லென்றுநாத னம்பலத்தி
..............லாடுமே.

அஞ்செழுத்தாம் ஐம்பூதங்களிலே பிறந்து, அதாலேயே வளர்ந்து அஞ்செழுத்தாம் "சிவயநம" என்னும் மந்திரத்தை ஓதுகின்ற பாவிகளே, இந்த ஐந்தெழுத்தின் ஆதி எழுத்தாம் குத்தெழுத்தை உணர்ந்து (அறிந்து)கூறும் வல்லபம் இருக்குமானால், அஞ்சாதே, அஞ்சாதே என (விந்து)நாதமாகிய நாதன் வெட்டவெளியாயாம் சிதாகாயத்தில் ஆடுவான்.

20.தங்கமொன்று ரூபம்வேறு தன்மையான

சிவவாக்கியர் - 20
*******************
ஞான நிலை
**************
20.தங்கமொன்று ரூபம்வேறு தன்மையான
...........வாறுபோல்
செங்கண்மாலு மீசனுஞ் சிறந்திருந்த தெம்முளே
விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்றநாமம் நாமமிந்த நாமமே.

விங்களங்கள் = வேறுபாடுகள், வித்தியாசங்கள்
நாமம் = அதிசயம், இணக்கம், ஐயம், கோபம்,நிச்சயம், நிந்தை, நினைப்பு(நினைவு), கீர்த்தி, தும்பை, நெற்றியிலிடும் குறி, பெயர்.

தங்கத்தை உருக்கி நகை செய்யும்போது, மூலப்பொருளாம் தங்கம் தன்னால் செய்யப்படும் பொருட்களின் நாமத்தைத்(பெயரை) தாங்கி வேறாகத் தெரிதல்போல், செங்கண் மாலும் ஈசனும் நம்முள்ளே சிறந்து விளங்குகிறார்கள். வேறுபாடுகள் கற்பித்துத் திரியும் மானிடர்களே, எங்குமாகிப் பரந்து நிற்கும் நினைவே இறைவனாகிய மாலும் சிவனும்.

19.சங்கிரண்டு தாரையொன்று

சிவவாக்கியர் - 19
*******************
யோக நிலை
**************
19.சங்கிரண்டு தாரையொன்று சன்னபின்ன
..............லாகையால்
மங்கிமாளு தேயுலகில் மானிடங்க ளெத்தனை
சங்கிரண்டை யுந்தவிர்ந்து தாரையூத வல்லிரேல்
கொங்கைகொங்கை பங்கரோடு கூடிவாழ லாகுமே.

சங்கு = இயங்கு
தாரை = கண்மணி, நாக்கு, வழி,எக்காளம்.

இயங்குதளமாகிய கண்கள் இரண்டு.

அதன் பார்வை உள்ளே புகும் வழி ஒன்று.

கண்கள் பார்க்க, பார்வை காமத்தில் திளைத்து, அது தாரைவழி ஓட, புத்தி தடுமாறி, மழுங்கி மாளும் மானிடர்கள்எத்தனை பேர்.

கண்கள் (சூரிய, சந்திர கலைகள்) வெளிமுகப் பார்வையைத் தவிர்த்து, உள்முகமாகத் திருப்பி அக்கினி கலையுடன் இணையவிட்டு, நாக்கு வழியாக மேலேற்ற உள்நாக்குத் துளையிலிருந்து எக்காளம் ஊதுவது போல் சத்தம் கேட்கும். அப்படிச் செய்ய முடியுமானால் உமையொருபாகனோடு இணையலாம்.

18.சாமம்நாலு வேதமும் சகல

சிவவாக்கியர் - 18
*******************
யோக நிலை
**************
18.சாமம்நாலு வேதமும் சகலசாத் திரங்களும்
சேமமாக வோதிலுஞ் சிவனேநீ ரறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துளே யுணர்ந்தபின்
ஊனமற்ற காயமா யிருப்பனெங்க ளீசனே.

"சிவவாக்கியர் யோகம் ஞானம் 800" என்னும் பொத்தகத்தில் இப்பாடல் இங்ஙனம் தவறாக அச்சிடப் பட்டுள்ளது:

"சாமம் நாலுவேதமும் சகல சாத்திரங்களும்
ஏமஜாம பொழுதிலும் இறவனை அறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையற்ற காயமா யிருப்பனெங்கள் ஈசனே."

எது எப்படி இருப்பினும் பொருள் இதோ:

சாமம் முதலாய நான்கு வேதங்களையும், சகல சாற்றிறங்களையும் நன்றாக ஓதினாலுஞ் சிவனாகிய சீவனை அறியமாட்டீர்கள். சிற்றின்பத்தில் அளவுகடந்து அங்காடி நாய்போல் அலைந்து திரிய வைக்கும் காம நோயை ஒதுக்கிவிட்டு, யோக நிலைக்கு வந்து

முக்கலை ஒன்றித்தலாம் ஞானவினை (ஞானக் குறள் காண்க) புரிந்தால் நமது கருத்துக்குள்ளே கருவாய் இருக்கும் சீவனாம் சிவனை உணரலாம். அந்நிலை கிட்ட, ஊனம் இல்லாத உடலாய்(காயம்) இருப்பதுஎங்கள் ஈசனே.

17.அண்டவாச லாயிரம்ப்ர சண்ட

சிவவாக்கியர் - 17
*******************
யோக நிலை
**************
17.அண்டவாச லாயிரம்ப்ர சண்டவா சலாயிரம்
ஆறிரண்டு நூறுகோடி யானவாச லாயிரம்
இந்தவாச லேழைவாச லேகபோக மானவாசல்
எம்பிரா னிருக்கும்வாச லியாவர்காண வல்லரே.

அண்டம் = முட்டை, கரு
ப்ரசண்டம் = வலிமை, கடுமை

அண்ட வசல் ஆயிரம். பிரசண்ட வாயில் ஆயிரம். இது இல்லாமல் பன்னிரண்டு நூறுகோடி வாசல் ஆயிரம். அதாவது அணுவில் எங்கெல்லாம் துளை உள்ளதோ அங்கெல்லாம் வாசல்.எம்பிரானாம் சீவன் இருக்கும் வாசலோ ஏழையின் வாசல். ஆனால் ஒருவருக்கே சொந்தமான (ஏகபோக) வாயில். அதுவே கபாலக் குகை வாசல். இந்த வாசலை யார் கண்டது?

16.அஞ்சுமூணு மெட்டதா யநாதியான

சிவவாக்கியர் - 16
*******************
யோக நிலை
**************
16.அஞ்சுமூணு மெட்டதா யநாதியான
..............மந்திரம்
நெஞ்சிலே நினைந்துகொண்டு நூறுருச்
.............செபிப்பீரேல்
பஞ்சமான பாதகங்க ணூறுகோடி
..............செய்யினும்
பஞ்சுபோல் பறக்குமென்று நான்மறைகள்
..............பன்னுமே.


அஞ்சுஎழுத்தாகிய "சிவாயநம" வும் சூரிய, சந்திர, அக்கினி கலைகளாகிய முக்கலைகளும் சேர்ந்து எட்டாகும். இதுவே அநாதியான (ஆதிக்கு முன்னதான தோற்றமின்மை) மந்திரம். இம்மந்திரத்தை ஓர்மையான மனத்தில் நூறு முறை செபித்தால், பஞ்சமாபாதகங்கள் நூறுகோடி செய்திருப்பினும் பஞ்சுபோல் பறக்குமென்று நாலு வேதங்களும் கூறுகின்றன.

அதற்காக, பஞ்சமாபாதகம் செய்யலாம் என்ற கருத்து இல்லை. பாவங்களின் தன்மையைக் காட்டவே இவ்வாறு கூறுகிறார் சிவவாக்கியர்.

15.வித்திலாத சம்பிரதாய மேலுமில்லை

சிவவாக்கியர் - 15
*******************
யோக நிலை
**************
15.வித்திலாத சம்பிரதாய மேலுமில்லை
.............கீழுமில்லை
தச்சிலாத மாளிகை சமைந்தவாற
............தெங்ஙனே
பெற்றதாயை விற்றடிமை கொள்ளுகின்ற
.............பேதைகாள்
சித்திலாத போதுசீவ நில்லையில்லை
.............யில்லையே.

சித்து = அறிவு, உருவற்றமை, மாயவித்தை, யாகம், ஆன்மா, வெற்றி

வித்தில்லாமல் முளையில்லை. தச்சனில்லாமல் மாளிகை கட்ட இயலாது. பெற்ற தாயாம் விந்து சக்தியை விற்று அடிமைத்தளையை ஏற்றுக்கொள்ளும் பேதைகளே, ஆன்மா இல்லாதபோது சீவனில்லை. பிணம். சீவனில்லை என்றால் சிவனுமில்லை.

14.நாலுவேத மோதுவீர் ஞானபாத

சிவவாக்கியர் - 14
*******************
யோக நிலை
**************

14.நாலுவேத மோதுவீர் ஞானபாத
............மறிகிலீர்
பாலுநெய்க லந்தவாறு பாவிகா
.............ளறிகிலீர்
ஆலமுண்ட கண்டனா ரகத்துளே
.............யிருக்கவே
காலனென்று சொல்லுவீர் கனாவிலும்ம
.............தில்லையே.

பாலில் நெய் கலந்ததுபோல் ஆலமுண்ட கண்டனாம் சீவனாகிய சிவன் அகமாம் உடலுக்குள்ளே யிருக்கிறார். காலன்என்று சொல்லுவீர். நாலு வேதத்தையும் ஓதுவீர்; ஆனால் ஞானபாதமாம் திருவடி எது என்று அறியமாட்டீர்.

13.தூரதூரந் தூரமென்று சொல்லுவார்கள்

சிவவாக்கியர் - 13
*******************
ஞான நிலை
***********

13.தூரதூரந் தூரமென்று சொல்லுவார்கள்
..............சோம்பர்கள்
பாரும்விண்ணு மெங்குமாய் பரந்தவிப்
.............பராபரம்
ஊருகாடுநாடுதேடி யுழன்றுதேடு
............மூமைகாள்
நேரதாக வும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே.

பராபரம் இருக்குமிடம் வெகு தூரம், தூரம் என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள் சோம்பேரிகள்.

பராபரமோ உலகிலும்(பாரிலும்), விண்ணிலும்எங்குமாய்ப் பரந்து விரிந்துள்ளது. பராபரத்தைத் தேடும் ஊமைகள் அது , ஊர், காடு, நாடு ஆகியவிடங்களில் எல்லாம் இருக்கிறதுஎனத் தேடி உழன்று கொண்டிருக்கிறார்கள்.

நேராக நம் உடலுக்குள்ளேயே அந்தப் பராபரம் உள்ளது என்பதை அறிந்துகொள்வீர்களே.

12.சாத்திரங்கள் ஓதுகின்ற ச(த்த)ட்டநாத

சிவவாக்கியர் - 12
*****************
12.சாத்திரங்கள் ஓதுகின்ற ச(த்த)ட்டநாத
.........பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து
.........உதவுமோ?
மாத்திரைப்போ தும்முளே மறித்து தொக்க
...........வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது? சத்தி முத்தி
...........சித்தியே!

சாற்றிறங்களை நன்கு கற்றுத் தினம் ஓதுகின்ற சட்டநாத பட்டரே, மறலியாகிய ஏமன் வரும் தருணத்தில் வேர்த்து, விறுவிறுத்து, மூச்சிறைக்கும் போதிலே, நீங்கள் கற்ற வேதங்கள் உங்களுக்கு வந்து உதவுமோ?

மரண சமயத்தில் சாற்றிறங்கள் உதவாது. வாய் குழறும். நாவு இழுக்கும்.
நாவு இழுக்கும்போது வேதங்களை எங்ஙனம் பலுக்குவது (உச்சரிப்பது)?

இதற்குப் பதிலாக ஒரு மத்திரைப் பொழுதாகிலும் சூரியகலை, சந்திரகலை, அக்கினிகலை ஆகிய மூன்றையும் ஒன்றாக்கி உடலுக்குள்ளேயே மறித்து நிறுத்தும் வல்லமை இருந்தால் சாத்திரப்பைக்கு (சாத்திரம் ஓதிய பையாகிய உடல்) நோய்கள்ஏது? சத்தி(விந்து சக்தி) முத்தி (முற்றி) சித்தியாகும்(மோட்சம்என அழைக்கப்படும் பிறவிப்பிணி அறுத்தல்).

சாற்றிரங்கள் கற்பதன் பயன் என்ன?

எவையெவை என்னென்ன? எதற்காக? என்ன செய்தல் வேண்டும்? என்னும் அறிவிற்காகவே.

சாற்றிறங்கள் குப்பை. ஞானச்செயலுக்கு ஆகாது.
செயல் இல்லையேல் ஒன்றுமில்லை.
விந்து நாறிச் சாக வேண்டியதுதான்.

ஞானச் செயல் என்பது சூரியகலை( வலக்கண்), சந்திர கலை (இடக் கண்), அக்கினி கலை (புருவ மத்தி) ஆகியனவற்றை ஒரே நேர்கோட்டில் நிறுத்துதல். அப்பொழுது 3 கலைகளும் ஒன்றாக இணைந்து மேலேறும். அதை சூட்சமமாகக் காட்டவே முப்புரி நூல் அணிவித்தனர். பெண்கள் முச்சடையிட்டுக் கொண்டனர்.

இதற்கு இன்னும் பல நூல் ஆதாரங்கள் இதோ:

ஞானக் குறள்:

நல்லன நூல்பல கற்பினுங் காண்பரிதே
எல்லையில் லாத சிவம்.

நல்லவற்றைக் கூறும் பல ஞான நூல்களைப் படிப்பதால் மட்டும் எல்லையில்லா சிவத்தையுணர்தல் அரிது.


சிற்றம்பல நாடிகள்:

"தற்கம் படித்துத் தலைவெடித்துக் கொள்ளுமதைக்
கற்கநினையா தருளைக் காட்டுங் கருணையனோ."

சச்சிதானந்த விளக்கம்:

"கோடிபல நூலறிவு வேதமுறை பேசினுங்
குருபாதம் வெளியாகுமோ."

11.நானதேது நீயதேது நடுவினின்ற

சிவவாக்கியர் - 11
*****************
11.நானதேது நீயதேது நடுவினின்ற தேதடா
கோனதேது குருவதேது கூறிடுங் குலாமரே
ஆனதேது வழிவதேது வப்புறத்தி லப்புறம்
ஈனதேது ராமராம ராமவென்ற நாமமே.

கோன் = அரசன், இடையன், தலைவன், இறைவன்
ஈனம் = அழிவு, இழிவு, கேடு, கள்ளி, குறை
குலாமர் = கீழ்மக்கள், உலோபிகள்

ராமராம ராமவென்ற நாமத்தை மனம் ஒன்றி செபித்தால், நான்ஏது? நீ ஏது? இரண்டுக்கும் நடுவிலுள்ள நானும் நீயுமற்ற அதுவும் ஏது? கோன் ஏது? குரு ஏது? கூறிடுவீர் குலாமரே. அப்புறம் ஆனது ஏது? அப்புறம் அழிவது ஏது? குறைகள்ஏது? சொல்வீரே.

10.சதாவுபஞ்ச பாதகங்க ளைத்துரந்த

சிவவாக்கியர் - 10
*****************
10.சதாவுபஞ்ச பாதகங்க ளைத்துரந்த
............மந்திரம்

இதாமிதாம நல்லவென்று வைத்துழலு
............மோழைகாள்

சதாவிடாம லோதுவார் தமக்குநல்ல
...........மந்திரம்

இதாமிதாம ராம ராமராம ராமவென்னும் நாமமே."

துரந்தரம் = வல்லபம்
மோழை = மடமை, கஞ்சி, மொட்டை, வெடிப்பு, கீழுறு

எப்பொழுதும் பஞ்சமா பாதகங்களைச் செய்துவிட்டு, அதன் பாவம் தீர்க்க, இதுதான் நல்ல மந்திரம்; இல்லையில்லை இதுதான் நல்ல மந்திரம் என நினைத்து மனம் குழம்பும் மடமையுடையோரே, ராம ராமராம ராமவென்னும் நாமமே சதா சர்வ காலமும் விடாமல் மனம் ஒன்றி ஓதுவாருக்கு நல்ல மந்திரமாம்.

9.அந்திகால முச்சிமூன்று

சிவவாக்கியர் - 9
***************
9.அந்திகால முச்சிமூன்று மாடுகின்ற
............தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களுந் தபங்களுஞ்
...........செபங்களும்
சிந்தைமேவு ஞானமுந் தினஞ்செபிக்கு
...........மந்திரம்
சிந்தைராம ராமராம ராமவெனும் நாமமே.

சரியை நிலையை (பக்தி வழியை) விளக்கப்போந்த சிவவாக்கியர் நாமசெபத்தின் மகிமையை உணர்த்துகிறார். அந்தி, சந்தி, உச்சி ஆகிய மூன்று காலங்களிலும் தீர்த்தமாடி(குளித்து), சந்தியாவந்தனம் (சந்தித்து வந்தனம்), தர்ப்பணம், சபம், தவம், ஆகிய கிரியைகளால் அடையும் ஞானமும், சிந்தையால் தினமும் "ராம ராமராம ராம" என்னும் மந்திரத்தை ஓர்ந்து செபித்தால் கிட்டும்.

சந்தியாவந்தனம் = சந்தித்து வந்தனம் = சாயுங்காலத்தே ஆதித்தனாம் சூரியனைச் சந்தித்து வந்தனம் செய்வதால் அது சந்தித்து வந்தனம் ஆயிற்று.

8.அரியுமல்ல வயனுமல்ல வலப்புறத்தி

சிவவாக்கியர் - 8
***********************
ஞான நிலை
******************
8.அரியுமல்ல வயனுமல்ல வலப்புறத்தி
..............லப்புறம்
கருமைசெம்மை வெண்மையைக் கடந்து
.............நின்றகாரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள்
...........பற்றுமின்கள்
துரியமுங் கடந்துநின்ற தூரதூர தூரமே.

தூரம் = தொலைவு, அருகாமை, அண்மை
வலம் = மேல்
காரணம் = கரு, மூலம், ஆதி, அனாதி

மாலும் அல்ல; சிவனும அல்ல . மேல் புறத்திற்கு மேலே (அப்புறம்) வண்ணங்களையெல்லாங் கடந்து நின்ற காரணம் (கரு = மூலம்) சிறியதுமில்லை; பெரியதுமில்லை. அந்தக் கருவாகிய காரணம் துரியம் கடந்துதான் உள்ளது. அதைப் பற்றுங்கள். விட்டுவிடாது பற்றுங்கள்.

7.மண்ணும்நீ விண்ணும்நீ மறுகடல்

சிவவாக்கியர் - 7
*************************
ஞான நிலை
******************
7.மண்ணும்நீ விண்ணும்நீ மறுகடல்க ளேழும்நீ
எண்ணும்நீ எழுத்தும்நீ யியைந்த பண்ணெழுத்தும்நீ
கண்ணும்நீ மணியும்நீ கண்ணுளாடும் பாவைநீ
நண்ணுநீர் மைநின்ற பாதம் நண்ணுமா றருளிடாய்.

நீர்மை = ஒப்புரவு, குணம், பரம நிலை

மண், விண், ஏழு கடல்கள், எண், எழுத்து, இசைக்கும் பாட்டு, கண், கண்ணின் மணி, அதற்குள் ஆடும் பாவை ஆகியவை யெல்லாம் தந்த குஞ்சித பாதமே, நின் பாதம் தந்து அருளிடாயோ?

6.நினைப்பதொன்று கண்டிலே

சிவவாக்கியர் - 6
*************************
ஞான நிலை
******************
6.நினைப்பதொன்று கண்டிலே னீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை
அனைத்துமா யகண்டமா யனாதிமுன் னாதியாய்
யெனக்குள்நீ யுனக்குள்நா னிற்குமாற தெங்கனே.

மாயை நினைப்பு, மறப்பு ஆகியவைகளாக இருக்கின்றது. அதை மாய்த்து நினைப்பது ஒன்றும் கண்டிலேன். நான் காண்பதெல்லாம் நீயே அல்லாது வேறு எதுவுமில்லை. ஆதியாய், அனாதியாய், அகண்டமாய், அனைத்துமாய் இருக்கும் உனக்குள் நான்,எனக்குள் நீ நிற்கும் வழிஎப்படி?

5.என்னிலே இருந்த ஒன்றை யான்

சிவவாக்கியர் - 5

*************************

5.என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்துகொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யார் காண வல்லவரோ?
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே!

இப்பாடலின் கரு ஏக இறையைக் குறிக்கிறது.
ஏக இறைதான் ஆதி. விந்துவே ஆதி.

இவ்விடத்து, பீர் முகம்மது அவுலியாவின் ஆநந்தக் களிப்பின் ஒரு பாடலை நினைவு கூருதல் அவசியம்.

"இவ்வென் றெழுத்ததைப் பற்றி - இரு வாசலைப் பூட்டி யடைத்துப் பிடித்துக்
கொல்லன் றுத்திகொண் டூதி - நல்ல கோவலமாய் மூலக் குகையை யெழுப்பி
வில்லின்மேல் நாணம்பை யேற்றி - வெகு வேகமா யொன்பது வாச லடைத்து
அல்ஹம்தி லொன்றாகி நின்ற - நந்தம் ஆதியை நன்றாகக்
கண்டு கொண்டேனே."

ஆதி என்னும் சொல்லுக்கு ஒலியியலின்படி ஆன்மத் தீ என்னும் பொருள் வரும்.

ஆ+தீ=ஆதீ. ஆதீ தான் ஆதியாயிற்றென்பர்.

என்னுள்ளே இருந்த இவ்வான்மத் தீயை நான் அறியவில்லை. அதை நான் அறிந்துகொண்டபின் அதை யாரும் காணமுடியாது.ஏனெனில் அதை யாரும் காணவியலாது.

"கண்ணால் காண்பதெல்லாம் மாயையே."

ஆன்மத்தீ மாயை அல்ல.

ஆகவே,என் மெய்க்குள் நான் இருந்து, இருந்து, தவமிருந்து,
மெய்த்தவமிருந்து உணர்ந்து கொண்டேனே.

நாம் அடையவேண்டிய நான்கு நிலைகள்:
1. அறிவு
2. உணர்வு
3. நினைவு
4. கருத்து

இருந்து, இருந்து என சிவவாக்கியர் சொன்னது ஆன்மத்தீயை கருத்தில் நிறுத்தி, நிறுத்தி, அளவிலாவின்பம் பெற்று, பரிபூரணமாம் இறையுடன் கலந்தேனேஎன்றுதான்.

4.வடிவு கண்டுகொண்ட பெண்ணை

வேத நிலை

******************


4.வடிவு கண்டுகொண்ட பெண்ணை மற்றொருவ நத்தினால்
விடுவனோ லவளையின்னம் வெட்டவேணு மென்பனே
நடுவன் வந்தழைத்தபோது நாறுமிந்த நல்லுடல்
சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகை கொடுப்பரே.


மாயை என்னும் அழகிய பெண்ணை ஞானவினையாம் வாசி யோகத்தால் வெட்டி விட்டு கருத்தில் கலக்கும் நேரத்தில், அதைக் கெடுக்கத் திரும்பி வரும் மாயையை விடுவனோ? விடாமல், திருப்பியும் முன் செய்தவாறே வெட்ட வேண்டுமென்பேன். இல்லையெனில், நடுவனாகிய ஏமன் வந்து அழைக்கும்போது நாறிச் செத்த இந்த உடலை, மற்றவர்கள் சுடலையில் கொண்டுபோய்த் தோட்டி கையில் கொடுத்து விடுவார்கள்.