சிவவாக்கியர்
**************
58.அகாரமென்ற வக்கரத்து ளவ்வுவந் துதித்ததோ
உகாரமென்ற வக்கரத்தி லுவ்வுவந் துதித்ததோ
அகாரமும் உகாரமுஞ் சிகாரமின்றி நின்றதோ
விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே.
அவ்வு = அகாரம், அவ்விடம், அந்த இடம்
உவ்வு = உகாரம், தவம்
அகாரமாகிய எழுத்துக்குள்ளே மூலமாகிய அவ்விடம் உதித்ததா?
உகாரமெனும் எழுத்துக்குள்ளே தவம் உதித்ததா?
அகாரமும், உகாரமும் சிகாரமின்றித் தனியாக நிற்கின்றனவா?
மனத்திலே மலமற்ற யோகிகளே, விளக்கம் தாருங்கள்.
அகாரம் + உகாரம் = அ+உ= ய = யகாரம்
அதாவது 2+8 = 10
சிவமந்திரமாம் "நமசிவய"வில் வரும் யகரமே 2ம் 8ம்.
யகரம் திருவடியாம் கண்ணே. அதன் வழியாக, இயல்பாகவே பன்னிரண்டங்குலம் ஓடும் உயிர்ப்பை வளிப்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்த உடல் அழியாது.
சோதி எழுத்து, நாதவெழுத்து = சிகாரம்.
சிகாரம் என்னும் சோதி இல்லாத கண்களாம் திருவடி உண்டோ?
கண்ணில்லாதவருக்கு என ஒரு வினாவெழும்பலாம். அவர்களுக்கு அகக்கண்ணாம் உணர்வு தூண்டப்பட்டு கண்ணுள்ளோரைப்போல் இருமடங்கு கூர்மை உண்டாம்.
"அகார வுகார சிகார நடுவாய்
வகார மோடாறும் வளியுடன் கூடிச்
சிகார முடனே சிவன் சிந்தை செய்ய
ஒகார முதல்வ னுவந்து நின்றானே."
அகரமோடாறும் = பிரணவத்தோடு கூடிய சிவமந்திரமாம் "சிவயநம" (ஓம்நமசிவய = சடாக்கரம்).
அகர உகரம் ஓங்காரத்தைக் குறிக்கிறது. சிகர வகரம் திருவைந்தெழுத்தாம் "நமசிவய"வைக் குறிக்கிறது. இவையிரண்டுமே ஆறெழுத்து மந்திரம். "சிவ சிவ" என இடைவிடாது உயிர்ப்புடன் எண்ணிக் காலை(காற்றை)ப் பிடிக்கும் கணக்கை அறிந்து வளிப்பயிற்சி செய்தால் ஓங்கார முதலாம் சிவன் தோன்றுவான்.
"அவ்வென்ற போதினி லுவ்வெழுத் தாலித்தா
லுவ்வென்ற முத்தி யுருகிக் கலந்திடு
மவ்வென்ற னுள்ளே வழிபட்ட நந்தியை
யெவ்வணஞ் சொல்லுகே னெந்தை யியற்கையே."
உவ் = நடு இடம்.
அகரத்துடன் உகரத்தையும் சேர்த்து உடலினுள்ளே ஒலித்து (நடுக்குறிப்பாம் "உவ்") அக்கினி கலையை மற்ற கலைகளுடன் கலந்தால் வீடு பேறு அடையலாம். "மவ்" எனும் மனத்தினிலே விளங்கும் நந்தியாகிய சிவம் முன்னின்று வழிப்படுத்தும். எந்தை சிவபெருமான் அருளுவதை எங்ஙனம் இயம்புவேன்.
"அவ்வொடு சவ்வென் றரனுற்ற மந்திரம்
அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிகிலர்
அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிந்தபின்
அவ்வொடு சவ்வும் அனாதியு மாமே."
அகரமும் சகரமும் அரனுக்குறிய மந்திரமாம். அகரத்துடன் கூடிய சகரமாகிய "ச" என்னும் மறையினை எல்லோரும் அறிந்தபின், அகர சகரங்கள் அநாதியாகிய தொன்மை உடையதாம். மகரத்துடன் கூடிய சகரம் = சம். அதாவது "அசம்". இதுவே அசபை ஆயிற்று. அசபை எனில் தவத்தில் ஒலிக்கப்படாதது.
Tuesday, January 01, 2008
58.அகாரமென்ற வக்கரத்து ளவ்வு
Posted by ஞானவெட்டியான் at 9:49 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment