Monday, September 07, 2009

பிரபுலிங்க லீலை - 2.41

வடுகன் வருகை
****************

2.41 காதி யாயிர மால்களைப் பிழிந்துமாங் கனிபோற்
கோது வீசினுங் கடல்கவிழ்த் தனையசெங் குருதி
பாதி யாயினு நிரம்புறாக் கபாலபா ணியனாய்
மாது பாதியன் அவையிடைப் புகுந்தனன் வடுகன்.

காதி – கொன்று.
கோது – சக்கை.
செங்குருதி – செந்நிறமுடைய உதிரம்.

கபாலபாணியன் – நான் முகன்(பிரமன்) தலையோட்டைக் கையிலே உடையவன்.

வடுகன் – வைரவன்

ஆயிரம் திருமால்களைக் கொன்று, மாங்கனியைப் பிழிந்தாற்போல் பிழிந்து சக்கையை வீசிவிட்டுக் குருதியை மட்டும் பிடித்தால், பிரமனைக் கொன்றதால் தோடம் பிடித்து உள்ளங்கையுடன் ஒட்டிக்கொண்ட மண்டை ஓட்டில் பாதியும் நிறையாது. வைரவன் கையிலுள்ள மண்டையோடு அவ்வளவு பெரியதாம். அத்தோற்றத்துடன் வைரவன், மங்கை ஒரு பாகனாம் சிவனின் அவையில் புகுந்தனன்.

Friday, February 27, 2009

சிந்தனைக்கு - 16

சிந்தனைக்கு - 16
******************

16."முதலில் உங்களிடத்தில் நம்பிக்கை வையுங்கள்; பிறகு கடவுளிடத்தில் வையுங்கள். ஆற்றலும் தகுதியும் உள்ள பலசாலிகள் தாங்கள் விரும்பியவாறு உலகத்தை இயங்கச் செய்வர்; உணர்வதற்கு இதயமும், சிந்திப்பதற்கு மூளையும், உழைப்புக்கு வலிமை வாய்ந்த தோள்களும் நமக்குத் தேவை."

- விவேகாநந்தர்

பழமொழி நானூறு - 14

பழமொழி நானூறு - 14
********************************

14.கல்லாதான் கண்ட கழிநுட்பம் காட்டரிதால்
நல்லேம்யாம் என்றொருவன் நன்கு மதித்தலென்
சொல்லால் வணக்கி வெகுண்(டு) அடுகிற்பார்க்கும்
சொல்லாக்கால் சொல்லுவது இல்.



நூல்களைக் கல்லாதவன் தான் நுண்மையாக அறிந்ததாக் நினைக்கும் மிக்க நுண்பொருளைப் பிறருக்கு விளங்கும்படி எடுத்துக்காட்டுதல் இயலாது. (ஆனபின்) கல்வியும் சொல்வன்மையும் இல்லாத ஒருவன் நல்ல பொருள் விளக்கம் எனக்குத் தெரியும் என்று தன்னைத் தானே மிகப் பாராட்டுதல் எந்தக் காரணத்தினால்? தமது சொற்களால் செய்யும் தவத்திற்குப் பகையாய் உள்ளவரைப் பணியச் செய்து, அப்படிப் பணியாதவர்களைச் சினந்து சாபம் இட்டுக் கொல்லுகின்ற முனிவர்களுக்கும், தாம் கருதியதை(எண்ணியதை) எடுத்துச் சொல்ல முடியாத இடத்தில் தவத்திற்குச் சொல்லப்பட்ட ஆற்றல்கள் இல்லையாம்.

சொற்றிறம் இல்லையெனில் சாபம் எவ்வாறு பலிக்கும்?

கற்றோருக்குச் சொல்வன்மை இன்றியமையாதது.

பழமொழி
**********
"முற்றத்துறந்த முனிவர்கட்கும் சொற்றிறம் வேண்டும்."