Tuesday, January 01, 2008

42.அம்பலத்தை யம்புகொண் டசங்கென்றா

சிவவாக்கியர் பாடல்கள்
*****************************


42.அம்பலத்தை யம்புகொண் டசங்கென்றா லசங்குமோ?

கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ?

இன்பமற்ற யோகியை யிருளும்வந் தணுகுமோ?

செம்பொனம் பலத்துளே தெளிந்ததே சிவாயமே!


கம்பம் = அசைவு

இப்பிரபஞ்சத்தை ஒரு அம்பால் அசைக்க,முடியுமா? அசைவில்லாது இருக்கும் பாற்கடலைக் கலக்கிக் குழப்ப முடியுமா? அது போல,செம்பொன்னைப் போல் ஒளிவீசும் இவ்வுடலாம் கோவிலுக்குள்ளே சிவாயமாம் இறைவன் உள்ளான். அவனையே சிந்தித்து, சிற்றின்பத்தை வெறுத்து ஒதுக்கியிருக்கும் யோகியை, மாயையென்னும் இருள் வந்தணுக முடியாது.

4 Comments:

Anonymous said...

//,செம்பொன்னைப் போல் ஒளிவீசும் இவ்வுடலாம் கோவிலுக்குள்ளே சிவாயமாம் இறைவன் உள்ளான் //

ஐயா,

இந்த பாடல் அத்வைத சித்தாந்தமாக படுகிறது எனக்கு !

நாமே இறைவன் என்ற கருத்தில் ஏற்பு இல்லை எனக்கு, இருந்த போதிலும் இறைத்தன்மை எல்லோரிடமும் உண்டு, அதை முயற்சித்தால் அறிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

Anonymous said...

அன்பு கண்ணன்,

//நாமே இறைவன் என்ற கருத்தில் ஏற்பு இல்லை எனக்கு,//

பரவாயில்லை.

//இருந்த போதிலும் இறைத்தன்மை எல்லோரிடமும் உண்டு, அதை முயற்சித்தால் அறிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.//

ஆக இறைத்தன்மை உண்டு என ஒத்துக் கொள்கிறீர்கள். அதுவும் உடலில் உள்ளது என்பதையும் ஒத்துக் கொள்கிறீர்கள்.

80 விழுக்காடு சிவவாக்கியத்துடன் ஒத்துப் போகிறீர்கள். பின்னர் இருக்கும் 20 விழுக்காட்டையும் முயன்றுதான் பாருங்களேன்.

Anonymous said...

ஐயா. சிறுவயதிலிருந்து இந்தப் பாடலைப் படித்து வருகிறேன். பல முறை படித்தும் அவ்வளவாகப் புரிந்ததில்லை. அம்பலத்தை அம்பு கொண்டு அசங்கென்றால் அசங்குமோ என்னும் போது அம்பலம் என்றால் கோயில் என்ற பொருளை மட்டுமே கொண்டேன். இப்போது அது பிரபஞ்சத்தையும் குறிக்கும் என்பதால் பொருள் புரிகிறது.

கம்பம் என்றவுடன் கம்பு என்றும் மத்து என்றும் பொருள் கொண்டிருந்தேன். இப்போது தான் கம்பம் என்பதன் வேறு பொருளான (சரியான பொருளான) அசைவு என்பது புரிகிறது. அம்பலம், அம்பு, கம்பமற்ற பாற்கடல் போன்றவைகளின் உட்பொருளையும் கூறுங்கள் ஐயா.

Anonymous said...

அன்பு குமரா,
ஆகட்டும்.
நன்றி