Tuesday, January 01, 2008

36.இருக்குநாலு வேதமு மெழுத்தையற

சிவவாக்கியர் பாடல்கள்
*****************************

36.இருக்குநாலு வேதமு மெழுத்தையற வோதிலும்
பெறுக்கநீறு பூசிலும் பிதற்றிலும் பிரானிரான்
உருக்கி நெஞ்சை யுட்கலந்து வுண்மைகூற வல்லீரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே!

இருக்கு முதலான நான்கு வேதங்களிலுள்ள எழுத்துக்களையெல்லாம் செம்மையாக ஓதினாலும், நெற்றி நிறையத் திருநீறு அணிந்தாலும், "எனக்கு இது தெரியும்; அது தெரியும்; கடவுளைக் கண்டேன்; அவருடன் உரையாடினேன்;" என அரற்றிப் பிதற்றித் திரிந்தாலும், எம்பிரான் இருக்க மாட்டான். உள் மெய்யில் ஞானவினையாம் முக்கண் புணர்ச்சி செய்து நெஞ்சுருகி, கண்ணீர் பெருகி உள்ளே சென்று நெஞ்சமாம் மனதால் சிறுமையற்ற சோதியாம் எம்பிரானைக் கூடிடல்வேண்டும்.

4 Comments:

Anonymous said...

இப்படி கூறலாமா?
'புனிதம்' அல்லது 'இறைநூல்' என கருதப்படுகிற நூலை வைத்துக்கொண்டு அதை வாசிப்பது மட்டுமே வாழ்க்கை நெறி அல்லது அதற்குள் அனைத்தும் அடங்கிவிட்டது என கொள்ளாமல் இறை அனுபவம் பெறுதலே உண்மையான ஆன்மிகமாகும். ஆக, இறைநூல்களில் அல்ல ஒருவரது தனிப்பட்ட சாதனையும் அனுபவமுமே சத்தியத்தை தரும். மற்றதெல்லாம் வெறும் கையேடுகள் தாம். நன்றி

Anonymous said...

அன்பு நீலகண்டன்,
வருகைக்கு நன்றி.
இதையேதான் சிவவாக்கியர் பாடல்கள்- 12ல் விளக்கியிருந்தேன்.

12."சாத்திரங்கள் ஓதுகின்ற ச(த்த)ட்டநாத பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ?
மாத்திரைப்போ தும்முளே மறித்து தொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது? சத்தி முத்தி சித்தியே!"

சாற்றிறங்களை நன்கு கற்றுத் தினம் ஓதுகின்ற சட்டநாத பட்டரே, மறலியாகிய ஏமன் வரும் தருணத்தில் வேர்த்து, விறுவிறுத்து, மூச்சிறைக்கும் போதிலே, நீங்கள் கற்ற வேதங்கள் உங்களுக்கு வந்து உதவுமோ?

மரண சமயத்தில் சாற்றிறங்கள் உதவாது. வாய் குழறும். நாவு இழுக்கும்.
நாவு இழுக்கும்போது வேதங்களை எங்ஙனம் பலுக்குவது (உச்சரிப்பது)?

இதற்குப் பதிலாக ஒரு மத்திரைப் பொழுதாகிலும் சூரியகலை, சந்திரகலை, அக்கினிகலை ஆகிய மூன்றையும் ஒன்றாக்கி உடலுக்குள்ளேயே மறித்து நிறுத்தும் வல்லமை இருந்தால் சாத்திரப்பைக்கு (சாத்திரம் ஓதிய பையாகிய உடல்) நோய்கள்ஏது? சத்தி(விந்து சக்தி) முத்தி (முற்றி) சித்தியாகும்(மோட்சம்என அழைக்கப்படும் பிறவிப்பிணி அறுத்தல்).

சாற்றிரங்கள் கற்பதன் பயன் என்ன?

எவையெவை என்னென்ன? எதற்காக? என்ன செய்தல் வேண்டும்? என்னும் அறிவிற்காகவே.

சாற்றிறங்கள் குப்பை. ஞானச்செயலுக்கு ஆகாது.
செயல் இல்லையேல் ஒன்றுமில்லை.
விந்து நாறிச் சாக வேண்டியதுதான்.

ஞானச் செயல் என்பது சூரியகலை( வலக்கண்), சந்திர கலை (இடக் கண்), அக்கினி கலை (புருவ மத்தி) ஆகியனவற்றை ஒரே நேர்கோட்டில் நிறுத்துதல். அப்பொழுது 3 கலைகளும் ஒன்றாக இணைந்து மேலேறும். அதை சூட்சமமாகக் காட்டவே முப்புரி நூல் அணிவித்தனர். பெண்கள் முச்சடையிட்டுக் கொண்டனர்.

இதற்கு இன்னும் பல நூல் ஆதாரங்கள் இதோ:

ஞானக் குறள்:

நல்லன நூல்பல கற்பினுங் காண்பரிதே
எல்லையில் லாத சிவம்.

நல்லவற்றைக் கூறும் பல ஞான நூல்களைப் படிப்பதால் மட்டும் எல்லையில்லா சிவத்தையுணர்தல் அரிது.


சிற்றம்பல நாடிகள்:

"தற்கம் படித்துத் தலைவெடித்துக் கொள்ளுமதைக்
கற்கநினையா தருளைக் காட்டுங் கருணையனோ."

சச்சிதானந்த விளக்கம்:

"கோடிபல நூலறிவு வேதமுறை பேசினுங்
குருபாதம் வெளியாகுமோ."

Anonymous said...

நன்றி ஐயா.
ஆதி சங்கரரும் இதையே பஜகோவிந்தத்தில் கூறுகிறார். சாகும் நேரத்தில் இலக்கணம் துணைக்கு வராது என்கிறார். நமது அப்துல்கலாம் அவர்களும் மதத்தின் வெளி அமைப்புகளை மத நூல் சட்டகங்களையும் இறுகப்பிடித்து ஆன்மிக பரிணாம வளர்ச்சியை தொலைப்பது குறித்து கூறியுள்ளார்.

Anonymous said...

அன்பு நீலகண்டன்,
மிக்க நன்றி