Tuesday, January 01, 2008

47.தரையினிற் கிடந்தபோ தன்றுதூமை

சிவவாக்கியர் பாடல்கள் - 47
********************************


47.தரையினிற் கிடந்தபோ தன்றுதூமை யென்கிலீர்

துறையறிந்து நீர்குளித்த தன்றுதூமை யென்கிலீர்

பறையறைந்து நீர்பிறந்த தன்றுதூமை யென்கிலீர்

புறையிலாத வீசரோடு பொருதுமாற தெங்ஙனே?


தூமை = தூய்மை, மகளிர் சூதகம், வெண்மை.

குழந்தை பிறந்து தரையில் வீழ்ந்தவுடன் தீட்டி என்கிறீர். நீர்த்துறை சென்று நீங்கள் குளித்தபோது தூய்மையாகி விட்டோம் என்கிறீர்.
"நீங்கள் பிறந்தபோது அத்தீட்டு எங்கே சென்றது?", என நான் பறையை அடித்துக் கேட்கிறேன்.

இதுபோல் நாட்களில், இந்த நாள் (தீட்டு) ஆகாது. அந்த நாள் ஆகாது. இப்படிக் கூறிக்கொண்டு நாட்களை வீணடிக்கிறீர்களே! நீங்கள் எப்பவும் ஆகாயத்தாமரையில் இருந்து தவம் செய்து எப்படிக் குற்றமே (தீட்டே)இல்லாத இறைவனை அடையப் போகிறீர்கள்?

5 Comments:

Anonymous said...

அப்படிப் போடுங்க!
புறத் தூய்மைக்காக வைத்த ஒன்றைக் காலம் எல்லாம் கட்டிக் கொண்டு அழுதால், அகத் தூய்மைக்கு ஏது நேரம்?

தீட்டும், அழுக்கும்
வாயினால் பாடி, "மனத்தினால் சிந்திக்க"....
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய் அல்லவா?

புறத்தூய்மையை வைத்துக் கொள்ளட்டும்! தேவை தான்!
ஆனால் மற்ற தூய்மைக்கு நேரம் ஒதுக்கியாச்சா?

அருமையாச் சொன்னீங்க ஞானம் ஐயா!

Anonymous said...

அன்பு இரவி,
மிக்க நன்றி.

Anonymous said...

//19.சங்கிரண்டு தாரையொன்று சன்னபின்ன லாகையால்
மங்கிமாளு தேயுலகில் மானிடங்க ளெத்தனை
சங்கிரண்டை யுந்தவிர்ந்து தாரையூத வல்லிரேல்
கொங்கைகொங்கை பங்கரோடு கூடிவாழ லாகுமே.//

இப்பாடலுக்குத் தங்களின் விளக்கம் படித்தேன். இதற்கு எனக்குத் தோன்றிய வேறொரு பார்வையை இங்கு தருகிறேன், தங்களின் கருத்தினை எதிர்நோக்கி;

இடகலை, பிங்கலை எனும் இரண்டு சங்கும், சுழுமுனை எனும் தாரையும் தங்களுக்குள் பின்னிப் பினைந்து, சுவாசமாக நடந்துகொண்டுள்ளது. அந்தப் போக்கிலேயே சுவாசித்து, அதன் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக மங்கவைத்து, ஆயுள் கழிந்து இறப்பது, பெரும்பான்மை மக்களின் வழக்கமாய் உள்ளது. அப்படியல்லாமல், தீவிர யோக சாதகத்தால், இடகலை, பிங்கலைகளின் காலத்தைக் குறுக்கி, சுழுமுனையின் காலத்தைப் பெருக்கி, குண்டலியினை எழுப்பி, சிரசில் இருக்கும் அம்பலத்தில் சேர்த்து, இறையுடன் கலந்து, இறவா நிலைபெறலாம்.

தங்களின் மேலான கருத்துக்காகக் காத்திருக்கும்,
ஹரன்.

Anonymous said...

இந்த தீட்டு என்ற சொல் / வழக்கம் பெரும்பாலும் ஆண் வர்க்கம் பெண் வர்க்கத்தையும் மனித இனத்தில் ஒரு பிரிவு மற்றொரு பிரிவை கீழ்மை படுத்துவதற்கு மட்டுமே பயன்பட்டுள்ளது.
தீண்டத்தகாதவை இந்த தீட்டு என்ற சொல்லும் சாதி என்ற சொல்லுமே.

மேலும் ஒரு சந்தேகம் என் மனதில்.
பெரும்பாலும் அஷ்டமி நவமி திதிகளை நற்காரியம் செய்யத்தகாதவை என்று ஒதுக்குவதை பார்த்திருக்கின்றேன். அஷ்டமி கண்ணன் பிறந்த நாள். நவமி இராமர் பிறந்த நாள். இருவருமே தீமையை அழிக்கப்பிறந்தவர்கள். அந்த இரு நாட்களுமே கொண்டாடப்பிறந்தவையே என்பது என் கருத்து. விளக்கம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Anonymous said...

அன்பு supersubra,

//தீண்டத்தகாதவை இந்த தீட்டு என்ற சொல்லும் சாதி என்ற சொல்லுமே.//

ஆமாம். அது ஒழிய மற்றவை அழிந்துபடும்.

//பெரும்பாலும் அஷ்டமி நவமி திதிகளை நற்காரியம் செய்யத்தகாதவை என்று ஒதுக்குவதை பார்த்திருக்கின்றேன். அஷ்டமி கண்ணன் பிறந்த நாள். நவமி இராமர் பிறந்த நாள். இருவருமே தீமையை அழிக்கப்பிறந்தவர்கள். அந்த இரு நாட்களுமே கொண்டாடப்பிறந்தவையே என்பது என் கருத்து.//

ஆமாம். இறைவனின் படைப்பினில் எல்லா நாளும் நல்ல நாளே!

மற்ற உலகியல் வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு இறைசிந்தனையில் முழுவதும் ஈடுபடல் வேண்டும். அதற்காகத்தான் இந்நாட்கள் ஆகாது என்றனர் பெரியோர்.

காலத்தை வீணாக்காதே! ஒரு மணித்தியாலத்தைக்கூட வீணாக்காதே! இறை சிந்தனையிலிருந்து விலகாதே! என்பதும் இதற்காகவே.

"இறை சிந்தனை மனத்தில் இருக்க" உலகியல் வாழ்க்கையில் வாழ்ந்துவருவது நன்மை பயக்கும்.