Tuesday, January 01, 2008

46.கறந்தபால் முலைப்புகா கடைந்த

சிவவாக்கியர்
******************
46.கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணை மோர்புகா

உடைந்துபோன சங்கினோசை யுயிர்களு முடற்புகா

விரிந்தபூ வுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா

இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை யில்லையே!


மாட்டின் மடியிலிருந்து கறந்த பால் திரும்பி மாட்டின் முலைக்குள் செல்ல இயலாது. உறைக்குத்திய தயிரைக் கடைந்து எடுத்த வெண்ணை மறுபடியும் தயிராகாது. அதுபோல் சங்கிலிருந்து வெளிவந்த ஓசை சங்குக்குள் செல்ல முடியாது. உடலில் இருந்து பிரிந்த உயிர் மீண்டும் உடலுக்குள் புகமுடியாது. மொட்டாக இருந்த மலர் மலர்ந்தபின் திரும்பவும் மொட்டாக முடியாது. மரத்திலிருந்து உதிர்ந்த்த இலை, பூ, காய் ஆகியவை திரும்ப மரத்தைச் சென்று அடையாது. அதுபோல் இறந்தவர் பிறப்பதில்லை. இல்லை! இல்லை! இல்லையே!!

15 Comments:

Anonymous said...

ஐயா

இந்த பாடலில் முக்கியமாக சொல்லப்பட்டு இருப்பது காலம்.

பிரிக்க முடியாத ஒன்று
ஒன்று அதிலிருந்து பிரியும் போது மீண்டும் அது பழைய நிலையை அடைய முடியாது என்பது எடுத்துக்காட்டுடன் சொல்லப்பட்டு உள்ளது !

நன்று !

Anonymous said...

அய்யா சிவ வாக்கியர் பாடல்களுக்கு நான் புதியவன்.
நன்ராக இருக்கிறது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன்

ஒரு இலக்கியம் படித்த அரசியல்வாதி மேடையில் பேசும்போது சொல்வார்

கறந்த பால் மடி புகாது
கருவாடு மீனாகாது
காகிதப் பூ மணக்காது
(ஒரு எதிர்க் கட்சியின் பெயரைச் சொல்லி)
--------- ஜெயிக்காது என்று முடிப்பார்

பலத்த கைதட்டல் கிடைக்கும் அவரது அடுக்கு மொழிகளுக்கு
அவர் இந்த சிவவாக்கியர் பாடல் தெரிந்துதான் அதைக் கையாண்டார் போலும்

Anonymous said...

அன்பு கண்ணன்,
ஆமாம். அதுவேதான்.
திரும்பத் திரும்பச் சொல்லுகிறேன்.
"காலம்தான் காலன்"
ஒரு நிமிடம் கழிந்தாலும் திரும்பி வருவதில்லையே! அதனால்தான் கால விரயம் வேண்டாமென்பது.
இது இப்போது மேலை நாடுகளுக்குச் சென்றுவிட்டு நம்மிடமே TIME MANAGEMENT ஆகத் திரும்பி வந்துள்ளது

Anonymous said...

அன்பு சுப்பையா,
தெரிந்தோ தெரியாமலோ அவர் பேசுகிறார். நாமும் கைதட்டிவிட்டு வந்துவிடுகிறோம். சிந்திப்பது மிக குறைவு.

Anonymous said...

அருமையான பாடலை இட்டமைக்கு நன்றி ஐயா

Anonymous said...

யாவரும் நலமா?
மிக்க நன்றி அம்மா

Anonymous said...

\\இறந்தவர் பிறப்பதில்லை. இல்லை! இல்லை! இல்லையே!!\\

என்ன ஐயா செய்வது இது பெரும்பாலானோர்க்கு தெரியவில்லையே. இருக்கும் இந்த வாழ்வில் நல்ல காரியம் செய், கெட்ட காரியங்கள் செய்யாதே என்றால் பெரும்பாலோர்க்கு கோபம்தான் வருகிறது. இதைச்சொன்னால் போடா பைத்திக்கார என்ற பட்டம் வேறு என்ன செய்ய?.

நல்ல கருத்துக்கள் ஐயா!.

Anonymous said...

//மொட்டாக இருந்த மலர் மலர்ந்தபின் திரும்பவும் மொட்டாக முடியாது//

எல்லா மலர்களுக்கும் இது பொருந்தாது.

காலையில் விரிந்து மாலையில் சுருங்கி(மொட்டாக)மறுபடியும் மலரும் பூக்களும் உண்டு :-))

தாமரை - ஒரு நல்ல உதாரணம்.

Anonymous said...

அன்பு ஸ்யீத்,
இதுதான் உலகம்.
நன்றி

அன்பின் கல்வெட்டு,
அறியாத உண்மை. அறிந்துகொண்டேன் நண்பரே.
நன்றி

Anonymous said...

இறந்தவர் பிறப்பதில்லை என்றால் மறுபிறவி எல்லாருக்கும் இல்லை என்று சொல்கிறாரா இல்லை 'நான்' என்ற அகங்காரம் இறந்தவர் மீண்டும் பிறப்பதில்லை என்று சொல்கிறாரா? கொஞ்சம் விளக்குங்கள் ஐயா.

Anonymous said...

அன்பு குமரா,
அறிவுபூர்மான வினாக்கள் எழுப்புபவர்கள் அருகி வருகிறார்களே! என்னும் ஏக்கத்தைத் தணித்தது தங்களின் வினா.

//'நான்' என்ற அகங்காரம் இறந்தவர் மீண்டும் பிறப்பதில்லை என்று சொல்கிறாரா?//

ஆம் "நான்" எனும் அகம்+காரம் ஒழிந்தால் பிறப்பேது?

இறந்தவரின் உடலாம் சடலத்தில் திரும்பவும் உயிர் புகாது எனவும் பொருள் கொள்ளலாம்.

Anonymous said...

முழு பாடலும் இப்போது தான் காணக்கிடைத்தது.
திரு குமரன் கேட்டிருந்த சந்தேகம் எனக்கும் வந்தது.
தெளிந்தேன்.
நன்றி ஐயா.

Anonymous said...

//
காலையில் விரிந்து மாலையில் சுருங்கி(மொட்டாக)மறுபடியும் மலரும் பூக்களும் உண்டு :-))

தாமரை - ஒரு நல்ல உதாரணம்.
//

மொட்டு மலர்ந்தால் மலர். மொட்டும் மலரும்
பருவத்தினை அதாவது காலத்தினைக் குறிக்கும். இரண்டு அடுத்தடுத்த நிலைகளைக் குறிக்கும்.

ஆகவே மலர்ந்த மலர் சுருங்குவது என்பது
மொட்டாகுதல் என்று கருத இயலாது.

மொட்டு மலர்வது வேறு; மலர் சுருங்குவது வேறு.

தொட்டாற்சிணுங்கி சுருங்குதற்போன்றதே
மலர் சுருங்கி விரிவதும். காரணம் வேறாக இருக்கலாம்.

ஆகவே மலர் மொட்டாவதில்லை. மலர்ப்பருவம் மொட்டுப் பருவமாவதில்லை.

Anonymous said...

அன்பு குமார்,
மிக்க நன்றி

Anonymous said...

அன்புத் தம்பி இளங்கோ,
விளக்கத்துக்கு நன்றி.
தெளியாத மனம் தெளிந்தது.
நன்றி