Tuesday, January 01, 2008

70.அம்பத்தொன்றி லக்கர மடங்கலோ

சிவவாக்கியர்

**************

70.அம்பத்தொன்றி லக்கர மடங்கலோ ரெழுத்துளே
விண்பரந்த மந்திரம் வேதநான்கு மொன்றலோ

விண்பரந்த மூலவஞ் செழுத்துளே முளைத்ததே

அங்கலிங்க பீடமா யமர்ந்ததே சிவாயமே.


ஐம்பத்தியொரு எழுத்தும் ஓர் எழுத்தாகிய "ஓம்"க்குள் அடக்கம். அஞ்செழுத்து மந்திரமாம் "சிவயநம"விலிருந்துதான் வேதம் நான்கும், அத்துடன் விண்வெளியில் பரந்துள்ள மந்திரங்கள் அனைத்தும் வெளிவந்தன. சிவயநம என்பது நம் உடலாகிய அங்கமே. இந்த அங்கபீடத்தினுள் சிவாயமே அடக்கம்.

திருமூலர்:


"ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைந்தும்
ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்
சோதி எழுத்தின் நிலையிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள்ளீரே."


சோதி எழுத்து, நாதவெழுத்து = சிகாரம்.

மந்திரங்களுக்கெல்லாம் முதலில் ஓதப்பெறும் ஓங்காரத்துடன் மற்ற பதினைந்து உயிர் எழுத்துக்களையும் கூட்ட மொத்த உயிரெழுத்து பதினாறு. மெய்யெழுத்து முப்பத்தி ஐந்து. ஆக மொத்தம் 16 = 35 = 51.(செந்தமிழ்க் காலத்துக்கு முந்திய நிலை இஃதாம்.)

சோதி எழுத்து சிகாரம். உடல் அகத்தே உள்ள ஆதார நிலைகள் ஆறு. இந்நிலைக் களங்களில் பரவெளி எழுத்தாகிய ஓம் என ஒலித்து உணர்க.

மூலாதாரம் முதல் புருவநடு வரையுள்ள ஆறு ஆதரத்தானத்துக்கும் முறையே ஓம் யநமசிவ, நமசிவய, சிவயநம, வயநமசி, சிவய சிவ, சிவசிவ எனும் பீசங்கள் உரித்தாகும்.

திருமூலர் ஞானோபதேசம்:

"அஞ்சில் நகார மதிலிரு காலுமாய்

வஞ்சக மான வயிறும காரமாய்

நெஞ்சிற் சிகாரமாய் நேர்கழுத் தின்முகம்

வஞ்சொல் வகாரமாய் வலது நெற்றியே"


தெட்சணாமூர்த்தி சுத்த ஞானம்:


"ஐந்தான வெழுத்துத்தான் விபரங்கேளு

அப்பனே பிருதிவிக்கு நங்கென்றோர்சொல்

சந்தையதா யப்புவுக்கு மங்கென்றோர்சொல்

சாதகமாய் தேயுவிலே சிங்கென்றோர்சொல்
விந்தையதாய் வாயுவுக்கு வங்கென்றோர்சொல்
விளங்கிநின்ற வாகாயம் யங்கென்றோர்சொல்

சிந்தையிலிவ் வகைதெளிந்து சென்றாயானால்

சிதம்பரமுங் காணமுத்தி சித்தியாமே."

0 Comments: