Tuesday, January 01, 2008

72.உருவமல்ல வெளியுமல்ல வொன்றை

சிவவாக்கியர்
****************
72.உருவமல்ல வெளியுமல்ல வொன்றைமேவி நின்றதல்ல

மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல வற்றதல்ல

பெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல

அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே.


வற்றதல்ல=அற்றதல்ல

இறைவன் உருவமாக உள்ளான் என்பதில்லை; அவன் உருவற்று சிதாகாயப் பெருவெளியிலும் இருக்கிறான். அவன் ஒன்றினை அணுகியும், அணுகாமலும் உள்ளான். அருகிலும் உள்ளான்; தொலைவிலுமுள்ளான்.

இறைவனை வணங்காது இறைத் தன்மைக்கு புறம்பாய் இருப்போர் இறைவனிடமிருந்து வெகு தொலைவில் உள்ளனர். தொழுபவர்க்கோ அவர்தம் உள்ளத்தின் (அருகில் அல்ல) உள்ளே வசிக்கிறான். அப்படிப்பட்ட தன்மை உடைய திருவடிக் கழல்கள் வெற்றி உடையதாகுக.

கூடவுமில்லை; குறையவும் இல்லை. பெரியதல்ல; சிறியதல்ல; எதுவுமில்லை. பேசும் ஆவியாக மட்டும் இருப்பதில்லை. இந்த தத்துவத்தை யாரால் காணமுடியும். அந்த வல்லபமிருப்பின் இறைவன் கைவசமாவான்.

திருவாசகம்

*************

"ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க."


இறைவன் மூலப் பொருளாயிருக்கும்போது ஒன்று. அதுவே பரிபூரணம்.
பூரணம் என்பது உட்பொருளுக்கு உட்பொருளாம். பரிபூரணம் அளவிட முடியாதது; நிறையிட முடியாதது. பூரணத்திற்குப் பூரணமே அளவு. அதற்கு அதே மட்டு. அதற்கு அதுவே நிறை. கால எல்லை இல்லாதது. முடிவில்லாதது.இறைவனாகவேயிருந்து, இறைவனிலிருந்து வெளியானவை சிருஷ்டிகள்.

இறை சிருட்டிக்குப்பின்னும், முன்னிருந்தது போன்றே இப்போதுமிருக்கும்.
அகண்டகாரமாய்ப் பரிபூரணமாய் விரிந்து நிறைந்து தனக்குத் தானே காட்சியாய் மற்றவை என இல்லாததாய் மறைந்தும் மறையாததாய் அசையாததாய் துணை இல்லாததாய் தனித்துவமாய் ஒன்றாய் இடைவெளி இல்லாமல் எங்குமாய்ப் பேதமின்றிப் பிரிவின்றிக் கலந்து உறைந்த ஒன்று.. இதற்கு முன்னும் இதுவேதான் இருந்தது. வேறொன்றும் இருக்கவில்லை. இல்லை, இல்லை, இல்லையே. இதுவே நித்தியம். இதுவே சத்தியம்.

நித்திய சத்தியமென்பது, என்றும் நிலைத்து நிற்பது. அதற்கு அன்றும், இன்றும், என்றுமே அழிவும் இல்லை. மாற்றமும் இல்லை, குறைவதும் இல்லை, கூடுவதும் இல்லை. எல்லாம் பரி பூரணம்.

0 Comments: