Tuesday, January 01, 2008

34.செங்கலுங் கருங்கலுஞ் சிவந்தசாதி

சிவ வாக்கியர் - 34
******************
34.செங்கலுங் கருங்கலுஞ் சிவந்தசாதி
..............லிங்கமும்
செப்பிலே தராவிலுஞ் சிவனிருப்ப
.............னென்கிறீர்
உன்பத மறிந்துநீ ரும்மைநீ
............ரறிந்தபின்
அம்பலம் நிறைந்தநாத ராடல்பாட
.............லாகுமே.


செங்கல்லிலும், கருங்கல்லிலும், சிவந்த சாதி லிங்கத்திலும், செப்புச் சிலையிலும், சங்கிலும் சிவன் இருக்கிறான் எனப் பூசிக்கிறீர்கள். உன்னிடமுள்ள இறைவனின் மலர்ப்பாதத்தை அறிந்துகொண்டு அதன் வழியே சென்று நினைவாம் இறைவனை அறிந்துணர்ந்தபின் உன் உடலே இறைவன் பிரணவ மந்திரமாகிய பாடலுடன் ஆடும் அம்பலமாம் கோயில் ஆகிவிடும்.

10 Comments:

Anonymous said...

மிகவும் சிறப்பாக உள்ளது.

தங்கள் மேம்பணி சிறக்கவும், இடையறாது தொடரவும் வாழ்த்துக்கள்.

ஜயராமன்.

Anonymous said...

சித்தர்களை புரிந்து கொள்வதில் தாமதம் அடைந்தாலும் அவர்களுடைய பாடல் எளிமையாகவும், நிறைந்த கருத்துக்கள் கொண்டதாகவும் உள்ளது.

Anonymous said...

அன்பு சிவமுருகன்,

//சித்தர்களை புரிந்து கொள்வதில் தாமதம் அடைந்தாலும் அவர்களுடைய பாடல் எளிமையாகவும், நிறைந்த கருத்துக்கள் கொண்டதாகவும் உள்ளது.//

எளிமையினுள் பொதிந்திருக்கும் கருத்துக்களை இனம் காணல் வேண்டும்.
நன்றி.

Anonymous said...

My dear Sir,
How about keeping updated!

Anonymous said...

அருமையாக உள்ளது...சிறப்பாக பதிவுசெய்கிறீர்..

Anonymous said...

அன்பின் செந்தழல் இரவி,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

அன்பின் சாகர்,
தொடர முயலுகிறேன்.

Anonymous said...

ஞானவெட்டியான் ஐயா. இந்த உள்ளே தேடுறது ரொம்பவும் சிறப்பானது. இது பெரும்பாலும் ஆன்மிகத் தேடல் இல்லாத கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்குத் தேவையில்லாதது. நம்பினால்தானே கடவுள். இப்படித்தான் என்று அன்போடு நம்பும் பொழுது அப்படியே வராதா கடவுள்! கண்டிப்பாக வரும்.

நீங்கள் சொல்லும் இந்தச் சிவவாக்கியர் பாடலின் படித்தானோ வள்ளலார் கண்ணாடியில் கடவுளைக் கண்டமை?

Anonymous said...

அன்பின் இராகவன்,
//ஞானவெட்டியான் ஐயா. இந்த உள்ளே தேடுறது ரொம்பவும் சிறப்பானது.//

உள்ளே தேடுவது கடவுளை என்று நான் கூறவில்லையே. அங்குபோய்த் தேடுவது உணர்வாகிய ஏழாவது அறிவை. அதில் திளைத்திருத்தல் கிட்டும் இன்பம் இனிமையான ஒன்று.

//இது பெரும்பாலும் ஆன்மிகத் தேடல் இல்லாத கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்குத் தேவையில்லாதது. //

இதைவிட இனிமையான ஒன்றுள்ளது. அதையும் உருசித்துப் பாருங்கள் என்றுதான் கொரல்(குரல்) கொடுக்கிறேன். இயன்றால் வாருங்கள்.

//நம்பினால்தானே கடவுள். இப்படித்தான் என்று அன்போடு நம்பும் பொழுது அப்படியே வராதா கடவுள்! கண்டிப்பாக வரும்.//

அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன். கட்டாயம் வருவான். அவன் வரும்போது இனம்காண அறிவு வேண்டுமே!

//நீங்கள் சொல்லும் இந்தச் சிவவாக்கியர் பாடலின் படித்தானோ வள்ளலார் கண்ணாடியில் கடவுளைக் கண்டமை?//

அல்ல! அல்ல!! வள்ளலார் கண்+ஆடியில் காணச் சொன்னார் (கண்ணின் கருமணியில்). நாம் கண்ணாடியில்(BELGIUM) பார்த்துக் கொண்டுள்ளோம்.
உண்மையை உணரும் காலமெப்போ?

Anonymous said...

ஐயா!!
நம்மில் இறைவனைக் காணுவதென்பதை; நம்மை இறைநிலைக்கு உயர்த்துதல்;அதாவது அன்புடையோராக்குதல் எனக் கொள்ளலாமா??,
யோகன் பாரிஸ்

Anonymous said...

அன்பு யோகன்,
//நம்மில் இறைவனைக் காணுவதென்பதை; //

நம்மில் காணவியலாது; கண்ணால் காண்பதெல்லாம் மாயையே!

//நம்மை இறைநிலைக்கு உயர்த்துதல்;அதாவது அன்புடையோராக்குதல் எனக் கொள்ளலாமா??,//

அன்புடையோர் எல்லாம் தமக்குறியர் அல்லவா? அன்பே சிவம். இதுவும் ஒரு நிலைப்பாடுதான்(கிரியை).