சிவவாக்கியர்
***************
55.எத்திசைக்கு மெய்வுயிர்க்கு மெங்களப் பனெம்பிரான்
முத்தியான வித்துளே முளைந்தெழுந்த வச்சுடர்
சித்தமுந் தெளிந்து வேதகோயிலுந் திறந்தபின்
அத்தனாடல் கண்டபின் னடங்கலாடல் காணுமே!
எம்பிரான் அருந்தவச் சுடர். அவரே எல்லா திசைகளுக்கும் தலைவன்; எல்லா உயிர்களுக்கும் அப்பன். முத்திக்குக் காரணமான விந்துவாம் வித்துக்குள்ளே இருந்து முளைத்து எழும் அந்த ஞானச் சுடர் வசிக்கும் இவ்வுடலின் சித்தமாகிய மனம் தெளிந்து, உள்ளே உள்ள அகக்கோவிலைத் திறக்க வழியறிய வேண்டும். அப்படி அறிந்து திறந்த பின், அத்தனாம் பித்தனின் ஆடல் காணலாம்; கண்டபின் ஆடல் நிறைந்த சித்தமும் அடங்குமே!
Tuesday, January 01, 2008
55.எத்திசைக்கு மெய்வுயிர்க்கு
Posted by ஞானவெட்டியான் at 9:45 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
அத்தன் ஆடல்= இறைவனின் ஆடல்.
அடங்கல் ஆடல்= இறைவனின் எல்லைக்குள் அடங்கியிருக்கும் மொத்த அண்டசராசரமும் ஆடுவது.
முதலில் இறைவனின் திருநடனமும், அதன்பின் அண்டசராசரங்கள் அனைத்தின் இயக்கங்களையும் காணலாம் என ஒரு விளக்கமும் கூறுகிறார்கள்.
அன்பு ஹரன்,
//முதலில் இறைவனின் திருநடனமும், அதன்பின் அண்டசராசரங்கள் அனைத்தின் இயக்கங்களையும் காணலாம் என ஒரு விளக்கமும் கூறுகிறார்கள்.//
இப்படியும் கொள்ளலாகும்.
ஆயினும், அத்தனே ஆடும்பொழுது, அவனுக்குள் இருக்கும் அண்ட சராசரங்களும் ஆடத்தானே செய்யும்.
//கண்டபின் ஆடல் நிறைந்த சித்தமும் அடங்குமே!//
என்று பொருள் கொண்டால், மெய் விளக்கம் கிட்டுமே!
அன்பு ஐயா,
"சித்தமும் தெளிந்து, வேதகோவிலும் திறந்தபின்" என்று பாடல் வருகின்றது. அலையும் சித்தம் அடங்கியபின்னேயே, இறைதரிசனம் கிடைக்கின்றது. மீண்டும் 'ஆடல் நிறைந்த சித்தம்' வருமா? எனவே 'ஆடல் அடங்கல் காணுமே' என்று மாற்றிப் பார்ப்பதைவிட, 'அடங்கல் ஆடல் காணுமே' என்றே பார்க்கலாம் எனத் தோன்றுகிறது.
அன்பு ஹரன்,
//"சித்தமும் தெளிந்து, வேதகோவிலும் திறந்தபின்" என்று பாடல் வருகின்றது. அலையும் சித்தம் அடங்கியபின்னேயே, இறைதரிசனம் கிடைக்கின்றது. மீண்டும் 'ஆடல் நிறைந்த சித்தம்' வருமா?//
ஆம். தெளிந்த சித்தம் கலங்க எத்தனை நொடி தேவை? ஒரு நொடி போதுமே!
போகர்:
***********
"நாடாமற் போவதென்ன வென்றுகேட்கில்
நலசத்த பரிசமொடு ரூபங்கெந்தி
தாடாமல் ரசத்தோடு பொறிகளைந்தும்
தனக்கேத்த வழிபோக்கில் மனந்தானோடும்
வீடாமல் வேகத்தாற் போகொட்டாமல்
மீட்டுமே புலனைவெட்டி வீசிப்போடு"
வாசியை மீண்டும் மீண்டும் கட்டவேண்டுமென்றால், நிலைப்பட்ட வாசி கட்டறுத்துச் செல்வதையே குறிக்கும். அநுபவித்துப் பாருங்கள். புரியும்;தெரியும்.
இக்கருத்து ஒவ்வாவிடின், தாங்கள் கூறியபடிக்கே வைத்துக்கொள்ளலாம்.
Post a Comment