Tuesday, January 01, 2008

52.இடதுகண்கள் சந்திரன் வலது

சிவவாக்கியர்
**************
52.இடதுகண்கள் சந்திரன் வலதுகண்கள் சூரியன்

இடக்கைசங்கு சக்கரம் வலக்கைசூல மான்மழு

எடுத்தபாதம் நீண்முடி யெண்டிசைக்கு மப்புறம்

உடல்கடந்து நின்றமாயம் யாவர்காண வல்லரோ?


இடது கண் = சந்திரன்
வலது கண் = சூரியன்
இடதுகை = சங்கு சக்கரம்
வலதுகை = சூலம், மான், மழு


இத்தூல உடலில் உள்ள உறுப்புக்களையும், எட்டு திசைக்கப்புறமுள்ள மேல்திசை, கீழ்திசை ஆகியவற்றையும் கடந்து எடுத்துவைத்த பாதம், நீண்ட சடைமுடியும் தாங்கிய சீவனாகிய சிவன், உள்ளது. அது உடலின் வெளியேயுள்ள இடதுகண், வலதுகண், இடக்கை, வலக்கை ஆகியவற்றையும் தாண்டி உள்ளது. இத்தூல உடலில் உள்ளவற்றின் சூக்குமத்தை மேலுரைத்துள்ளபடி உணர்ந்து, உடலுக்குள் இருக்கும் சூக்கு உடலுக்குள் சென்று அச்சீவனை காணக்கூடிய வல்லபம் யாரிடம் உண்டு.

இங்கேயே, மாலியத்தார் வணங்கும் சங்குசக்கரத்தையும், சைவர்கள் வணங்கும் சூலம், மான்,மழு ஆகியவைகள் அனைத்தும் நம் ஒவ்வொருவரின் உடலிலேயே உள்ளது எனக் கூறியமை காண்க. அப்படியிருக்க, திருமால் வேறு, சிவன் வேறு என சண்டையிடுதல் எவ்விதம் நியாயம்?

2 Comments:

Anonymous said...

///உடலில் உள்ளவற்றின் சூக்குமத்தை மேலுரைத்துள்ளபடி உணர்ந்து, உடலுக்குள் இருக்கும் சூக்கு உடலுக்குள் சென்று அச்சீவனை காணக்கூடிய வல்லபம் யாரிடம் உண்டு.///

இன்றைய மனிதனுக்குப் பணம்தான் எல்லாம். சிவனையே அவன் நினைக்க மாட்டான் - சிவ வாக்கியர் சொன்னதையா நினைக்கப் போகிறான்?

நாடி நரம்பெல்லாம் தளர்ந்து - ஆடிய ஆட்டம் மூடியப் போகும்போது அந்தக்
கடைசி நிமிடத்தில் சொன்னால் கூடக் கேட்டுக் கொள்வானா - என்பதும் சந்தேகமே!

தன் சொத்துக்களும், தன் உயிலும், பெட்டகச் சாவியும், ரேசன் கார்டும் உரியவர் கைக்குப் போய்ச் சேருமா என்ற கவலைதான் அந்தக் கடைசி நிமிடத்தில் மேலோங்கியிருக்கும்

கலி முற்றிவிட்டது!
வேறென்ன சொல்ல முடியும்?

Anonymous said...

அன்பு சுப்பையா,
//நாடி நரம்பெல்லாம் தளர்ந்து - ஆடிய ஆட்டம் முடியப் போகும்போது -//

அப்பொழுதும் கையில் காசில்லாவிடினும் கூட இச்சிந்தனை எழாது. எதற்கும் "கொடுப்பினை" வேணுமே!