Friday, February 27, 2009

சிந்தனைக்கு - 16

சிந்தனைக்கு - 16
******************

16."முதலில் உங்களிடத்தில் நம்பிக்கை வையுங்கள்; பிறகு கடவுளிடத்தில் வையுங்கள். ஆற்றலும் தகுதியும் உள்ள பலசாலிகள் தாங்கள் விரும்பியவாறு உலகத்தை இயங்கச் செய்வர்; உணர்வதற்கு இதயமும், சிந்திப்பதற்கு மூளையும், உழைப்புக்கு வலிமை வாய்ந்த தோள்களும் நமக்குத் தேவை."

- விவேகாநந்தர்

பழமொழி நானூறு - 14

பழமொழி நானூறு - 14
********************************

14.கல்லாதான் கண்ட கழிநுட்பம் காட்டரிதால்
நல்லேம்யாம் என்றொருவன் நன்கு மதித்தலென்
சொல்லால் வணக்கி வெகுண்(டு) அடுகிற்பார்க்கும்
சொல்லாக்கால் சொல்லுவது இல்.



நூல்களைக் கல்லாதவன் தான் நுண்மையாக அறிந்ததாக் நினைக்கும் மிக்க நுண்பொருளைப் பிறருக்கு விளங்கும்படி எடுத்துக்காட்டுதல் இயலாது. (ஆனபின்) கல்வியும் சொல்வன்மையும் இல்லாத ஒருவன் நல்ல பொருள் விளக்கம் எனக்குத் தெரியும் என்று தன்னைத் தானே மிகப் பாராட்டுதல் எந்தக் காரணத்தினால்? தமது சொற்களால் செய்யும் தவத்திற்குப் பகையாய் உள்ளவரைப் பணியச் செய்து, அப்படிப் பணியாதவர்களைச் சினந்து சாபம் இட்டுக் கொல்லுகின்ற முனிவர்களுக்கும், தாம் கருதியதை(எண்ணியதை) எடுத்துச் சொல்ல முடியாத இடத்தில் தவத்திற்குச் சொல்லப்பட்ட ஆற்றல்கள் இல்லையாம்.

சொற்றிறம் இல்லையெனில் சாபம் எவ்வாறு பலிக்கும்?

கற்றோருக்குச் சொல்வன்மை இன்றியமையாதது.

பழமொழி
**********
"முற்றத்துறந்த முனிவர்கட்கும் சொற்றிறம் வேண்டும்."

Monday, February 23, 2009

சிந்தனைக்கு - 15

சிந்தனைக்கு - 15
************************

13."முரட்டுத்தனமான சீர்திருத்தப் போக்கு னுடிவில் சீர்திருத்தத்தையே தடைப்படுத்திவிடும். யாரையும் தீயவன் என்று கூறலாகாது. 'நீ நல்லவன்; இன்னும் நல்லவனாய் இரு' என்று சொல்லுங்கள்."

- விவேகாநந்தர்

பழமொழி நானூறு - 13

பழமொழி நானூறு - 13
********************************

13.கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்றார்முன்
சொல்லுங்கால் சோர்வு படுதலால் - நல்லாய்
வினாமுந் துறாத உரையில்லை இல்லை
கனாமுந் துறாத வினை.


நற்குணம் உடைய பெண்ணே! நூல்களைக் கல்லாதவன் அறிந்த மிக்க நுண்பொருள், நூல்களைக் கற்றார் முன்பு சொல்லும்பொழுது வலிவு இழத்தலால் வினாவானது முற்பட்டுத் தோன்றாத விடையில்லை; கனவானது முற்பட்டு நடவாத செயலும் இல்லை.(கல்வி இன்றி விளங்கும் நுண்பொருளும் இல்லை)

பழமொழிகள்
************

1.வினா முந்துறாத விடையில்லை
2.கனா முந்துறாத வினையில்லை

Saturday, February 21, 2009

பழமொழி நானூறு - 12

பழமொழி நானூறு - 12
*******************************

12.கற்றானும் கற்றார்வாய்க் கேட்டானும் இல்லாதார்
தெற்ற உணரார் பொருள்களை - எற்றேல்
அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை
நாவல்கீழ்ப் பெற்ற கனி.


நூல்களைத் தாமே கற்றாயினும் கற்றவர்களிடம் கேட்டாயினும் கல்வி கேள்வி இல்லாதவர்கள் பொருள்களின் உண்மையைத் தெளிவாக அறியார்கள். கல்வி கேள்விகளின் அறிவு இல்லாதான் உண்மைப் பொருள்களை ஒருகால் அறிதல் எத்தன்மை உடையதெனில், நாவல் மரத்தின் அடியில் தானே விழுந்த கனியைப் போல் ஆவதன்றி, கல்வி கேள்விகளுள் எதுவும் காரணமாக இல்லை.

"கல்வி கேள்வி இல்லாதவர்கள் உண்மைப் பொருள்களை அறியமாட்டார்கள்.'

பழமொழி
**********

"நாவல்கீழ்ப் பெற்ற கனி"

சிந்தனைக்கு - 14

சிந்தனைக்கு - 14
***********************

14."ஏழை மக்களை அரைத்து, அரைத்துக் கசக்கிப் பிழிந்த செல்வத்தை வைத்துக்கொண்டு, பகட்டாக உடை அணிந்து, உலாவருபவர்கள் பதர்கள். பசியால் வாடும் காட்டுமிராண்டிகளைக் காட்டிலும் மோசமாக வாழ்ந்துகொண்டு இருக்கும் கோடான கோடி ஏழை மக்களுக்கு உதவாது வாழும் இவர்களைப் பதர் என்றுதான் கூறவேண்டும்."

- விவேகாநந்தர்

Friday, February 20, 2009

பழமொழி நானூறு - 11

பழமொழி நானூறு - 11
**********************

11.விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை யில்லார்
கதிப்பவர் நூலினைக் கையிகந்தா ராகிப்
பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல்
மதிப்புறத்துப் பட்ட மறு.

மதிப்புறம் - சந்திரனின் ஓரம்

நல்ல நெறிகள் அமைந்த நூல்களை அறிந்து, நூல்களின் விதிகளுக்கும் தமது வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லாது வாழ்பவர், மாறுபட்டு எழுந்தோர்களது நூலின் கொள்கைகளைத் தம் அறிவின் வன்மையால் வென்று தலைமைப் பேறு பெற்று வாழும் அறிஞர்கள், இகழ்ச்சிக்குறிய செயல்களைச் செய்தல் சந்திரனின் மேல் விளங்கும் களங்கம் போல் விளங்கித் தோன்றும்.

பழமொழி
*********

"மதிப்புறத்துப் பட்ட மறு"

சிந்தனைக்கு - 13

சிந்தனைக்கு - 13
************************

13."பணத்தையும் அதிகாரத்தையும் சேர்த்துப் பங்கிட்டுக்கொள்ளும் கருத்துடன் இரு சாரார் இணைதல் கூடாது. பலவீனருக்கு உதவவும், அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மனிதர்களுக்கு அறிவு கிட்டச் செய்யவும், இழந்த பண்டைப் பெருமையை நாடு மீண்டும் பெறவும், அவர்கள் ஒத்துழைக்க வேண்டும்."

- விவேகாநந்தர்

Thursday, February 19, 2009

பழமொழி நானூறு - 10

பழமொழி நானூறு - 10
***********************

10. கற்(று)அறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார் - தெற்ற
அறைகல் அருவி அணிமலை நாட!
நிறைகுடம் நீர்தளும்பல் இல்.



பாறைக் கற்களிருந்து இழிகின்ற அருவிகளை (மாலையாக) அணிந்த மலை நாட்டை உடையவனே! நீர் நிறைந்த குடம் ஆரவாரம் செய்யாது. அதுபோல, நூல்களைக் கற்று அவைகளின் உண்மைகளை அறிந்தவர்கள் தமது வாழ்வில் அடக்கத்துடன் செயலாற்றுவார்கள். நூல் உண்மைகளின் அறிவும், அனுபவ அறிவும் அற்று கல்வி மட்டும் கற்றவர்கள், தங்களைத் தெளிவாக வாயாரப் புகழ்ந்து பேசுவர்.

அதாவது, கற்றறிந்தவர்கள் தங்களைப் புகழ்ந்து பேசமாட்டார்கள்.

பழமொழி
**********

"நிறை குடம் நீர்தளும்பாது."

Wednesday, February 18, 2009

சிந்தனைக்கு - 12

சிந்தனைக்கு - 12
*****************

12. "சாதாரணமான எனது வாழ்விலே எனக்கு ஏற்பட்ட அனுபவமானது, நல்ல நோக்கம், நேர்மை, அளவற்ற அன்பு இவற்றைக்கொண்டு ஒருவன் உலகத்தையே வெல்லலாம். இத்தகைய அறநெறி உள்ளம் படைத்த ஒருவரைக் கோடிக்கணக்கான கொடியவர்களும் விலங்குகளும் ஒன்றுகூடி முயன்றாலும் அவருக்குத் தீமை செய்ய முடியாது."

- விவேகாநந்தர்

யாரோ சொன்னது - 20

யாரோ சொன்னது - 20

************************

20."துன்பம் வந்துவிடுமோ என்னும் அச்சம் துன்பத்தைவிடக் கொடியது; துயரமானது."

யாரோ சொன்னது - 19

யாரோ சொன்னது - 19

************************

19."நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது; ஆனால், உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பதுதான் அரிது."

யாரோ சொன்னது - 18

யாரோ சொன்னது - 18

************************

18."இயலுமாயின் பிறரைவிட அறிவாளியாக இரு; ஆனால், அதை அவர்களிடம் கூறாதே!"

யாரோ சொன்னது - 17

யாரோ சொன்னது - 17

************************

17."சிந்தனையாளனுக்கு உலகம் ஒரு இன்பியல் நாடகம்; செயலற்றவர்கட்கோ துன்பியல் நாடகம்."

யாரோ சொன்னது - 16

யாரோ சொன்னது - 16

************************

16."ஒருவனைத் தனிமையில் கண்டிக்கவேண்டும்; பலர் முன் பாராட்டவேண்டும்."

யாரோ சொன்னது - 15

யாரோ சொன்னது - 15

************************

15."எந்த ஒரு முட்டாளும் பணம் ஈட்டமுடியும்; ஆனால் அறிவாளியால் மட்டுமே அதைக் காப்பாற்ற இயலும்."

யாரோ சொன்னது - 14

யாரோ சொன்னது - 14

************************

14."வல்லமையற்ற நீதி ஆற்றலற்றது; நீதியற்ற வல்லமை கொடுங்கோன்மை."

யாரோ சொன்னது - 12

யாரோ சொன்னது - 12

************************

12."பொறுமைசாலிக்குக் கோபம் வரும்பொழுது எச்சரிக்கையுடன் விலகி
இருந்துகொள்வது நல்லது."

யாரோ சொன்னது - 11

யாரோ சொன்னது - 11

***********************

11."உன்னை நீ நம்பினால் ஊர் உன்னை நம்பும்."

யாரோ சொன்னது - 10

யாரோ சொன்னது - 10

************************

10."நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது."

யாரோ சொன்னது - 9

யாரோ சொன்னது - 9

***********************

9."எழுதப்படும் சொல்லைவிட நாக்கால் பேசப்படும் சொல்லே வலிமை மிக்கது."

யாரோ சொன்னது - 8

யாரோ சொன்னது - 8

***********************

8."பெண்ணை ஒரு பொருள்போல் நடத்துவதால்தான் எல்லா இன்னல்களும் வருகின்றன."

யாரோ சொன்னது - 7

யாரோ சொன்னது - 7

***********************

7."செலவுக்குமேல் வரும்படி உள்ளவன் செல்வன்; வரவுக்குமேல் செலவழிப்பவன் ஏழை."

யாரோ சொன்னது - 6

யாரோ சொன்னது - 6

***********************

6."அழகுக்கு ஆற்றல் அதிகம்; ஆயினும் அதைவிட ஆற்றலுடையது பணமே!"

யாரோ சொன்னது - 5

யாரோ சொன்னது - 5

***********************

5."ஆண்களைவிடப் பெண்களுக்குப் பசி இருமடங்கு; புத்தி நான்கு மடங்கு; ஆனால் ஆசைகளோ எட்டு மடங்கு." (பெண்கள் வருந்தற்க)

யாரோ சொன்னது - 4

யாரோ சொன்னது - 4

***********************

4."பரிசுத்த இதயத்தைப் பெற்று இருப்பதே மனிதனின் முதல் தகுதி."

யாரோ சொன்னது - 3

யாரோ சொன்னது - 3
***********************


3."போனால் வராதது ஒன்றே ஒன்று; அதுதான் காலம்(நேரம்)."

யாரோ சொன்னது - 2

யாரோ சொன்னது - 2
***********************

2."துயரத்துக்கு ஒரே மாற்று மருந்து சாதனைதான்."

யாரோ சொன்னது - 1

யாரோ சொன்னது - 1
**********************

1."உள்ளத்தில் அன்பு இருந்தால் மட்டும் போதாது; அது செயலில் வெளிப்படவேண்டும்."

அமரர் "தகவல்" தங்கவேலு - "யாரோ சொன்னது"

"யாரோ சொன்னது" என்னும் தலைப்பில் நான் கொத்தி அனுப்புபவைகள் யாருடைய சேமிப்பு என அறிய ஆவலாயுள்ளீர்கள் என நினைக்கிறேன்.

கரூருக்கு அருகில் கொடுமுடியில் 1946ம் ஆண்டு ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். SSLC வரை படித்தார். பின்னர் தந்தை இறந்ததும் அண்ணனுக்குத் தன் பங்கான 2காணி நிலத்தை விட்டுக்கொடுத்துவிட்டு 10,000 உரூபாயுடன் கரூருக்குப் பிழைக்க வந்தார். 1967ல் கரூர்வந்து ஊர்க்கோடியில் ஒரு பெட்டிக்கடை வைத்தார்.

அப்போது அவர் மளுக்கு 3வயது; மகனுக்கு 1வயது. 1980ல் வையாபுரிநகர் என்னும் காலனியில் அதே பெட்டிக்கடையை மாற்றினார். STATE BANK OF INDIAவில் ஒரு சேமிப்புக்கணக்கு ஒன்று வைத்திருந்தார். 1984ல் தன் மைத்துனனுக்கே தன் மகளை எளிய முறையில் திருமணம் செய்து வைத்தார். மைத்துனன் சேனைப்படையில் ஒரு ஹவில்தார். ராஜஸ்தானில் இருக்கிறார்.1987ல் மனைவியின் மறைவு அவருக்குத் தாளவியலா அயர்வைத் தந்தது.

1988ல் களப்பணி அதிகாரியாக நான் கரூர் சென்றேன். அங்குதான் அறிமுகமானார் தங்கவேலு. அவரின் கடையைத் தாண்டித்தான் நான் என் வீட்டிற்குச் செல்லவேண்டும். ஆகவே, தாளிகைகள் வாங்குவதெல்லாம் அவர் கடையில்தான். அவரிடம் என்னை ஈர்த்தவை இரண்டு. சோம்பலற்ற கடின உழைப்பும் தமிழின்பால் அவர் வைத்திருந்த பற்று.

உரையாடும்போதெல்லாம் அவர் உதிர்க்கும் பொன்மொழிகளும், சொற்றொடர்களும் என்னை வியக்க வைக்கும். அப்பொழுதுதான், தங்கம் இந்த நாட்குறிப்புக்களில் நீங்கள் படித்த தகவல்களையெல்லாம் குறித்து வையுங்களேன்; மற்றவருக்குப் பயன்படுமே என்றேன். சொன்னதைத் தவறாமல் செய்து வைத்தார். நானும் அவ்வப்போது வாங்கிப் படிப்பது வழக்கம்.

கடையை விரிவாக்க 10,000 உரூபாய் கடன் வங்கியில் வாங்கித் தந்தேன். அவரும் தவறாது தவணைப் பணம் செலுத்தி விடுவார். அப்போழுதுதான் சோதனை ஆரம்பமாகியது.தனது படிப்பை முடித்த தன் மகனைக் கடையில் வைத்துச் சென்றபோதெல்லாம் கையிருப்பு குறைய ஆரம்பித்தது. மகனும் இரவு நேரங்களில் குடித்துவிட்டு அலைய ஆரம்பித்தான். 1991ல் கடையை மூடவேண்டிய சூழ்நிலை வந்தது. கடன் பாக்கி 4,000 உரூபாய் இருந்தது. அப்பொழுதும்கூட தகவல் சேகரிப்பை விடவில்லை. நூலகம் சென்று படித்து குறித்து வைப்பார்.

அந்த காலகட்டத்தில், 1994ல் கடன் இரத்து செய்யும் திட்டம் வந்தது. நிலைமையை எனது மூத்த அதிகாரியிடம் விளக்கிக் கூறி கடனை இரத்து செய்து கொடுத்தேன். ஒரு ஆடை நெய்யும் கம்பனியில் கணக்கப் பிள்ளை வேலை வாங்கிக் கொடுத்தேன்.

"பெட்டியிலே பணமில்லே; பெத்த புள்ள சொந்தமில்லே" என்று மகனும் ஒரு பெண்ணைக் காதலித்து மணந்து தனியே சென்றுவிட்டான்.

காலத்தைத் தனியே ஓட்டிவந்த தங்கவேலுவை என் நண்பனின் இல்லத்தில் தங்க வைத்தேன். அவர் கணினி வைத்து data processing செய்து வருகிறார். அங்கேயே படுக்கை. அப்போதுதான் கணினி பயன்பாட்டை விளக்கி வலைப்பூ பதியச் சொன்னேன். அங்குள்ள நண்பனின் மகன் உதவி செய்தான். அதில் நிம்மதி கண்டார் தங்கவேலு.

அந்த நிம்மதியிலேயே, நிரந்தர நிம்மதி அடைந்துவிட்டார். அமரரானார்.

அன்புத் தம்பி அமரர் தகவல் தங்கவேலுவின் இறுதி அவாவை நிறைவுசெய்ய அவரின் கருத்துக் கருவூலத்திலிருந்து "யாரோ சொன்னது" என எடுத்துக் கொத்தி வலைப்பூவில் ஏற்றுகிறேன்.

பழமொழி நானூறு - 9

பழமொழி நானூறு - 9
**********************

9. நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல
மயிலாடு மாமலை வெற்பமற்(று) என்றும்
அயிலாலே போழ்ப அயில்.

அயில் - இரும்பு


கண்களுக்கினிய (உவகையோடு தோகை விரித்து ஆடும்) மயில்கள் நடமாடும் சிறந்த மலைநாட்டை உடையவனே! எக்காலத்தேயும் இரும்பைக் கூரிய இரும்பினாலேயே பிளப்பார்கள். அதுபோல, கற்று அறிந்த நற்குணமுடையோரின் அறிவின் நன்மையை அறிவதாக இருந்தால், அவர்களை விடக் கல்வி ஒழுக்கங்களில் மிக்க அறிஞர்களே அதனை அறிவார்கள். கல்வி ஒன்றே உடைய ஒத்தாரும் அவையின்றி இழிந்தாரும் அறியமாட்டார்கள்.

பழமொழி
*********
"நல்லார் அறிவினை அவரினும் நல்லாரே அறிவர்."

"இரும்பை இரும்புகொண்டு துணித்தல் வேண்டும்."

சிந்தனைக்கு - 11

சிந்தனைக்கு - 11
******************

11. சமயம் என்பது புலன்களையும் உணர்வுகளையும் கடந்து அப்பால் இருப்பது. புலன் மூலம் யாரும் கடவுளைக் காண முடியாது. கண்கள் மூலம் இதுவரை யாரும் கடவுளைக் கண்டது இல்லை. இனிக் காணவும் இயலாது. உணர்வின் மூலமும் இறைவனை உணரமுடியாது.

- விவேகாநந்தர்

Tuesday, February 17, 2009

சிந்தனைக்கு - 10

சிந்தனைக்கு - 10
********************

"மண்ணைக்கொண்டு மண்ணை எப்படிக் கழுவமுடியாதோ, அதேபோல வேற்றுமை உணர்வைக் கொண்டு ஒற்றுமையை உருவாக்க முடியாது."

- விவேகாநந்தர் (6-295)

பழமொழி நானூறு - 8

பழமொழி நானூறு - 8
******************************

8.புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புனல் ஊர பொதுமக்கட்(கு) ஆகாதே
பாம்பறியும் பாம்பின் கால்.

நன்மை மிகுந்த அழகிய நீர்வளம் நிரம்பிய ஊரனே! பாம்பின் கால் பாம்பு இனம்
மட்டும் அறியும் தன்மையன. அதுபோல், அறிவிற் சிறந்தவர்களை அறிவினால்
அறிந்துகொள்ளும் திறம் அவர்களைப் போன்ற அரிவிற் சிறந்தோர்க்கே விளங்கும்.
கல்வி அறிவற்ற பொது மக்கட்க்கு ஆகாது.

பழமொழி
********

"பாம்பின் கால் பாம்பறியும்."

Monday, February 16, 2009

பிரபுலிங்க லீலை - 2.40

வீரபுத்திரர் வருதல்
***********************

2.40 செருக்கொ டுஞ்சிவ நிந்தைசெய் வாய்க்கிலை தீர்வு
விரிக்கி னென் றுமுன் சிறுவிதி தலையற வெட்டி
எரிக்கு நல்கிநிந் தனைசெயா மறிமுகம் இயைத்துத்
தருக்கி நின்றவவ் வீரன்வந் தொருபுடை சார்ந்தான்.

செருக்கொடும் - ஆணவத்தோடும்.
தீர்வு இலை - கழுவாய் இல்லை.
சிறுவிதி - தக்கன்.
மறிமுகம் - ஆட்டுமுகத்தை.
இயைத்து - பொருத்தி.
தருக்கிநின்ற - மகிழ்ந்து நின்ற.
ஒரு புடை - ஒரு பக்கம்.

இறைவனை இகழ்ந்தமைக்கும் மேலும் இகழாமல் இருக்கும் பொருட்டும் தக்கன் தலையை வெட்டி ஆட்டு முகத்தை அமைத்த வீரபுத்திரர் வந்து இறைவனின் ஒரு பக்கம் நின்றான்.

பழமொழி நானூறு - 7

ப‌ழ‌மொழி நானூறு - 7
************************

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்.


உரை - சொல், வழக்கு


வழக்கின் முடிவான உண்மையை ஆராயும் அறிவு நிரம்பப் பெறாதவன், சிறு வயதினன், என்று இகழ்ந்த நரைமுடி உள்ள இருவர் மகிழும்படி நரைமயிரை முடியில் முடித்து, அவர்கள் கூறிய சொற்களாலேயே நீதி வழங்கினான் கரிகால் பெருவளத்தான். ஆகவே, தத்தம் குலத்திற்குரிய அறிவு நூல்களைக் கல்லாமலே அமையும்.

பழமொழி
**********
"குலவித்தை கல்லாமலே உளவாம்."

சிந்தனைக்கு - 9

சிந்தனைக்கு - 9
***********************

9."புத்தர் தியானத்தாலும், இயேசுநாதர் பக்தியாலும் அடைந்த உயரிய நிலையை ஒருவன் கர்மயோகத்தின்(கருமங்களைச் செய்வதன்) மூலம் அடையலாம்."

- விவேகநந்தர்

Sunday, February 15, 2009

விவேக சிந்தாமணி - 99

99. தடாரி தண்ணுமை திண்டிமஞ் சல்லரி இடக்கை
படாது கூடியே யொலித்திடல்போல இப்பாரில்
விடாத நாணகன்று அன்னிய புருடனை விழைந்தே
அடாதுசெய்த மங்கையர்வசை யொலித்திடு மன்றே.

இவ்வுலகில் நாணமின்றித் தன் கணவனை விட்டு வேறொருவனை விரும்பிக் கூடும் மங்கையரைப் பற்றிய பழிச் சொற்கள்(அவதூறு) அவர்கள் எவ்வளவு இரகசியமாக வைத்து இருப்பினும் பேரிகை, திரிகை ஆகிய பேரிரைச்சல் தரும் இசைக்கருவிகள் முழங்கினால்போல் எங்கும் பரவி ஒலித்திடும்.

சிந்தனைக்கு - 8

சிந்தனைக்கு - 8
***********************

தன்னை வெல்லக் கற்றுக்கொண்டவனிடமே நாகரிகத்தின் முதிர்ச்சி இருப்பதாகச் சொல்லலாம்.

- விவேகாநந்தர்(4-196)

பிரபுலிங்க லீலை - 2.39

பூதக்கூட்டம் வருதல்

2.39 குழவி பால்குடிப் பதுகடல் குடிப்பது குழவி
பழகு மாறுணல் மண்ணெடுத் துண்பது படைப்பு
முழுது மோர்தளர் நடைமகச் செயலெனு முரண்கொள்
வழுவி லாவருட் கணங்களெண் ணிகந்தன வந்த.


குழவி - குழந்தை.
பழகும் ஆறு உணல் - பழகும்படி உண்ணுதல்.
முரண் - வலிமை.
வழுவு - தவறு.
எண் இகந்தன - அளவு இல்லாதன.


பூதக்குழவிகளுக்குக் கடல் குடிப்பது பால் குடிப்பதுபோன்றது; மண் எடுத்து உண்பது பழக்கம். படைப்பு முழுதும் குட்டிப் பூதங்களின் விளையாடல். குட்டிப் பூதங்களின் பெருமையைக் கூறி பெரும்பூதங்களின் தன்மையை விளக்குகிறார் ஆசிரியர். இப்படிப்பட்ட அருள் கணங்கள்(பூதங்கள்) அளவற்றன வந்தன.

Saturday, February 14, 2009

பிரபுலிங்க லீலை - 2.38

வசிட்டர் முதலிய முனிவர்கள் வருதல்

2.38 அழிவும் ஆக்கமும் உரையினாற் செயும்வலி அடைந்தார்
மொழியும் யாக்கையு மனமுநல் அறங்களின் முயன்று
கழியு மாறுமுக் காலமு முளர்தளை கழன்றார்
பழியி லாவதிட் டாதிமா முனிவரர் பரந்தார்.


ஆக்கம் - பெருக்கம்.
உரை - வாய்மொழி.
தளை கழன்றார் - உலகப் பற்றுக்களினின்றும் விடுபட்டவர்.
பரந்தார் - பரவினார்கள்.
முக்காலமும் உளர் - மூன்று காலத்திலும் இருப்பவர்கள்.

பழி இல்லாத வசிட்டர் முதலிய இருடி(ரிஷி)கள் வந்து பரவினார்கள். அந்த முனிவர்களது பெருமையை மேல் மூன்று அடிகளில் கூறுகிறார் ஆசிரியர். ஆக்கவும் அழிக்கவும் முடியும் அவர்களால்; அவ்வலிமையை வாய்மொழியால் மந்திர செபஞ்செய்து பெருக்கிக் கொண்டவர்கள். உடலாலும் மனதாலும் சொல்லாலும் செயலாலும் செம்மையாய் வாழ்நாளைக் கழித்தவர்கள். முக்காலமும் உணர்ந்தவர்கள்; வாழ்பவர்கள். உலகப் பற்றுக்களினின்றும் விடுபட்டவர்கள்.

சிந்தனைக்கு - 7

சிந்தனைக்கு - 7
****************

கையில் எதுவும் இல்லாது ஏழைகளாய் இருக்கும்போது, பிறர் கொடைக் குணத்துடன் இருப்பதை விரும்புகிறோம். பணமும் அதிகாரமும் நமக்கு வந்துவிடுமாயின் அக்கணமே நாம் குறுகிவிடுகிறோம். ஏழை பணக்காரன் ஆனதும், தன்னை உயர்ந்தவனாகக் கருதுகிறான்; சமய நிறுவனங்களிலும் இந்நிலையே நீடிக்கிறது.

- விவேகாநந்தர்

சிந்தனைக்கு - 6

சிந்தனைக்கு - 6
***********************
எதையும் தவிர்க்காதே! எதையும் தேடிச் செல்லாதே!
இறைவனின் திருவுள்ளத்திற்கு இயைய நடந்துகொள்ளக் காத்திரு.

- விவேகாநந்தர்

பழமொழி நானூறு - 5

ப‌ழ‌மொழி நானூறு - 5
******************************

ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.



ஆற்றுணா - வழியி உண்ண உணவு

மிகுதியும் கற்கவேண்டிய நூல்களை ஐயமின்றிக் கற்று அறிந்தோர்களே அறிவுடையர் எனப்படுவர். அவ்வறிவு படைத்தோரின் புகழ் நான்கு திசைகளிலும் பரவாத நாடுகள் இல்லை. அதனால் அந்த நாடுகள் எல்லாம் வேற்று நாடுகள் இல்லை; அவ்வறிவு உடையோரின் நாடுகள்தாம். அப்படியானால், எந்த நாட்டுக்குச் சென்றாலும் வழியில் உண்ண உணவு(வழியிடையமுது) கொண்டு செல்ல வேண்டியதில்லை.

பழமொழி
*********
"கற்றாருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு."
"அறிவுடை யொருவனை அரசனும் விரும்பும்."

Friday, February 13, 2009

சிந்தனைக்கு - 5

5. தமது கடவுடளிடத்தும் சமயத்தினடத்தும் அதிகப் பிடிப்புக்(வெறி) கொண்ட ஒருவன் பிற சமயத்தையோ கடவுளையோ காதால் கேட்டவுடனேயே வெறிகொண்டு ஊளையிடுவதற்கு, பக்குவம் அடையாத தாழ்ந்த பக்தியே காரணம்.

- விவேகாநந்தர்

பழமொழி நானூறு - 4

4.விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத்
துளக்கமின்று என்றனைத்தும் தூக்கி விளக்கு
மருள்படுவதாயின் மலைநாட என்னை
பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள்.

விளக்கு - உண்மை நிலையை விளக்குவதால் இப்பெயர் பெற்றது.
துளக்கம் - அசைவு - பொருள் நிலை வேறுபாடு


மலை நாட்டை உடையவனே! விளக்கிற்கு வேண்டிய நெய் முதலிய பொருட்களை விலை கொடுத்து வாங்குவது அது இருளைப் போக்கும் என்னும் தன்மையை ஆராய்ந்தேயாகும். விளக்கு தெளிவாகக் காட்டாது தானே மழுங்குதலைச் செய்தால் பொருள் கொடுத்து வாங்கியதன் பயன் என்ன? ஆதலினால், பொருள் கொடுத்து இருளை வாங்கமாட்டார்கள்.

பழமொழி
**********
"பொருளைக் கொடுத்துக் இருளைக் கொள்ளார்"

விளக்கைப் போன்ற குருவின் உதவியால் ஞான நூல்களைக் கற்கவேண்டும்.

புறநானூறு
**********
"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே"

Thursday, February 12, 2009

விவேக சிந்தாமணி - 129

129.தண்டுல மிளகின் றூள்புளியுப்பு தாளிதம் பதார்த்தமிதேஷ்டம்
தாம்புநீர் தோற்ற மூன்றுகோ லாடை சக்கிமுக்கி கைராந்தல்
கண்டங் காண்பான் பூசை முஸ்தீபு கமுற்குடை யேவல் சிற்றுண்டி
கம்பளியூசி நூலாடைக்கா பிலையை கரண்டகங் கண்டமேற் றங்கி
துண்டுமூறி யகாய் கரண்டிநல் லெண்ணெய் துட்டுடன் பூட்டுமே கத்தி
சொல்லிய தெல்லாங் குறைவறத் திருத்தித் தொகுத்து பலவினி மமைத்துப்
பெண்டுகடுணையோ டெய்துவர் கன்னாய் பெருநிலை நீர்நிழல் விறகு
பிரஜையுந் தங்குமிடஞ் சமைத்துண்டு புறப்படல் யாத்திரைக் கழகே.

அரிசி, மிளகுப் பொடி, புளி, உப்பு, மிகுதியான தாளித்த காய்கறி, வடகம், கயிறு, தண்ணீர், ஊன்றுகோல், ஆடைகள், சக்கிமுக்கிக் கல்(நெருப்புப் பெட்டி), விளக்கு, அறிவாள், செருப்பு, குடை, வேலைக்கு ஆள், சிற்றுண்டி, கம்பளி, ஊசி, நூல், எழுத்தாணி, ஊறுகாய், கரண்டி, நல்லெண்ணை, பணம், பூட்டு, கத்தி ஆகியவைகளைத் திருத்தமாகச் சேகரித்துப் பெண்கள் துணையோடு சரியான வாகனத்தோடு நிலையான நிலம், நல்ல நிழல், விறகு கிடைக்குமிடம், மனிதர்கள் தங்கும் இடம் கண்டு சமைத்து உண்டு பிரயாணம் செய்தல் யாத்திரைக்கு அழகாம்.

விவேக சிந்தாமணி - 128

128. காமமே குலத்தினையும் நலத்தினையும் கெடுக்கவந்த களங்கம்
காமமே தரித்திரங்க ளனைத்தையும் புரட்டி வைக்குங்கடாரம்
காமமே பரகதிக்குச் செல்லாமல் வழியடைக்குங் கபாடங்
காமமே யனைவரையும் பகையாக்கிகழுத்தறியுங் கத்திதானே.

காமமே, குல நெறியையும் நன்மையையும் கெடுக்கும் களங்கம்; வறுமைகள் அனைத்தையும் கொட்டி வைக்கும் பொக்கிடம்; முக்தி வழியை அடைத்துள்ள கதவு; அனைவருக்குள்ளும் பகை உண்டாக்கி கழுத்தை அறுக்கும் கத்தி.

விவேக சிந்தாமணி - 127

127.பண்புளருக் கோர்பறவை பாவத்திற் கோரிலக்கம்
நண்பிலரைக் கண்டக்கானாற்காலி - திண்புவியை
ஆள்வார் மதுரை யழகிய சொக்கர்க் கரவம்
நீள்வாகன நன்னிலம்.

பறவை - ஈ(கொடு)
இலக்கம் - அஞ்சு(பயப்படு)
நாற்காலி - விலங்கு(விலகல்)
திண்புவி - வலிமிகுந்த உலகு

நற்குணமுள்ளவர்கட்குக் கொடு. பாவச் செயலுக்கு அஞ்சு. நண்பர் இல்லாதோரைக் கண்டால் விலகு. வலிமிகுந்த உலகை ஆளும் மதுரை சொக்கருக்குப் பணிவிடை செய்.

சிந்தனைக்கு - 4

சிந்தனைக்கு - 4
**********************

நல்ல காரியமாயினும், அதற்கென நிதி திரட்டுவது சந்நியாசியின் தருமம் ஆகாது என மனு கூறியுள்ளார். இக்கருத்து முற்றும் சரி என நானும் உணரத் தொடங்கியுள்ளேன். அதற்காக அவரின் கருத்துகள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொண்டதாகக் கொள்ளுவது தவறு.

- விவேகாநந்தர்

பழமொழி நானூறு - 3

3.சொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்
கற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி
உற்றொன்று சிந்தித்து உழன்றுஒன்(று) அறியுமேல்
கற்றொற்ந்தான் கல்லாத வாறு.


சோர்வு - குற்றம், மனத் தளர்வு
கல்தொறும் - கற்குங் காலத்தே
வழியிறங்கி - வருந்தி
உற்று ஒன்று - மனம் ஒருமைப்பட்டு
உழன்று - வருந்தி

கற்றார் முன் ஒன்றைச் சொல்லும்போது குற்றம் உண்டாதலால் மனத் தளர்வின்றி, கற்கும்போது நான் கல்லாதவன் எனக் கருதி, விரயம் செய்த நாட்களுக்காக வருந்தி, மனம் பொருந்தி ஒருமைப்பட மீண்டும் மீண்டும் நினைத்து வருந்தி, அறிந்திராத ஒரு பொருளை அறிவானாயின், பின்னும் நூல்களைக் கற்குந்தோறும் தன் கல்லாதவனாகவே நினைத்துக் கற்கக் கடவான்.

படிக்குந்தோறும் அறியாதவனாக நினைத்து ஒவ்வொருவனும் படிக்கவேண்டும்.

பழமொழி
*********
"உற்று ஒன்று சிந்தித்து உழன்று ஒன்று அறியுமேல்"

Wednesday, February 11, 2009

சிந்தனைக்கு - 3

யாரோ ஒரு தீர்க்கதரிசி அல்லது அவதார புருடர் சொன்னார் என்பதற்காக நாம் மதத்தைப் பின்பற்றுவதில்லை. கிருஷ்ணர் சொன்னார் என்பதற்காக நாம் வேதங்களை நம்புவதில்லை.வேதங்களின் காரணமாகத்தான் கிருஷ்ணனை நாம் நம்புகிறோம்.

- விவேகாநந்தர்

சிந்தனைக்கு - 2

மூடக்கொள்கைகளை விடாப்பிடியாகப் பற்றிக் கொள்ள வேண்டாம். புது உண்மைகளை ஏற்க ஆயத்தமாக இருங்கள்; பிறர் வெட்டிய கிணறு என்பதற்காக, அதில் ஊறியுள்ள தீஞ்சுவை நீரைப் பருகாமல் இருக்க வேண்டாம்; தன் முன்னோர்கள் தோண்டிய கிணறு என்பதற்காக, உவர் நீரைப் பருகி, முட்டாள் ஆகவேண்டாம்.

- விவேகாநந்தர்

பிரபுலிங்க லீலை - 2.37

நாகர் சித்தர் முதலியோர் வருதல்
***************************************
2.37 உரகர் சித்தர்கள் வித்தியா தரர்சுர ருயர்கிம்
புருடர் மெய்க்கதிர் முதலிய கோள் திசை புரப்போர்
நிருதர் மற்றுளார் விழிபிதுங் கிடவுடல் நெருங்க
வரதன் அத்திரு வோலைக்கங் காணிய வந்தார்.

உரகர் - நாகர்.
சுரர் - தேவர்.
வித்தியாதரர் - மேகவாகனர்கள்
சுரர் - வானோர்
நிருதர் - இராக்கதர், அசுரர்
மெய்க்கதிர் - உண்மை ஞாயிறு.
திசை புரப்போர் - எட்டு திக்குகளையும் ஆள்வோர்.
வரதன் - மேன்மைகளை அளிக்கும் கடவுள்.
காணிய - காணும் பொருட்டு.

நாகர், தேவர், மேகவாகநர்கள், வானோர், ஞாயிறு முதலிய கோட்கள், திசைகளைக் காப்போர், இராக்கதர்கள் ஆகிய யாவரும் மேன்மை அளிக்கும் கடவுளின் திருவோலக்கம் காணக் கூட்டத்தால் உடல் நெருங்க விழி பிதுங்கி ஒன்றுகூடி வந்தனர்.

பழமொழி நானூறு - 2

2. ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை
மரம்போக்கிக் கூலிகொண் டார்.

ஆற்றுதல் - செய்தல்
சுரம் - வழி கடந்து
சுரம்போக்கி - பாலையில் வழி கடத்தல்
உல்கு - தீர்வைப் பொருள், ஆயம்
மரம் - ஓடம்
புணருமோ - சொல்லலாமோ

பாலையில் மிக்க வழி கடந்து தீர்வைப் பொருள்(ஆயம்) அடைபவர்கள் இல்லை; ஓடத்தைச் செலுத்தி நிறுத்தியபின் கூலியைப் பெற்றுக்கொள்பவர்கள் இல்லை. அதுபோல கல்வி கற்கும் காலத்தே கற்காதவன் முதுமையில் கற்று வல்லவன் ஆவான் எனச் சொல்லுதல் கூடுமோ? இல்லை.

பழமொழிகள்:
*************
1. சுரம்போக்கி உல்குகொண்டார் இல்லை
2. மரம்போக்கிக் கூலிகொண்டார் இல்லை

“தும்பை விட்டு வாலைப் பிடிக்காதே” எனும் இக்காலப் பழமொழியுடன் ஒத்து வருவது காண்.

Sunday, February 08, 2009

கந்தர் கலிவெண்பா - 20

ஒத்த புவனத் துருவே யுரோமமாத்
தத்துவங்க ளேசத்த தாதுவாய் - வைத்த
கலையே யவயவமாக் காட்டுமத்து வாவின்
நிலையே வடிவமா நின்றோய் - பலகோடி
அண்டமுருவாகி அங்கஞ் சராசரமாய்க்
கண்டசத்தி மூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும்
ஆவிப்புலனுக் கறிவளிப்ப ஐந்தொழிலும்
ஏவித் தனிநடத்தும் எங்கோவே - மேவ

சத்த - ஏழு
தாது - இரத்தம், ஊன், மச்சை, மேதை, எலும்பு ஆகியன
கலை - நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதை ஆகியன
காட்டும் - ஈண்டு குறிக்கப்பட்ட
அண்டம் - திருமேனி
சரம் - நடக்கும் பொருள்
அசரம் - நிற்கும் பொருள்
சராசரம் - நிற்கும் பொருள், நடக்கும் பொருள்
அங்கம் - உறுப்பு
சத்தி மூன்று - இச்சை, கிரியை, ஞானம்
உட்கரணம் - அந்தக்கரணம், அகக் கருவி
தொண்டுபடும் - அடிமையாய் நிற்கும்
ஆவிப்புலன் - உயிரின் அறிவு
அறிவளிப்ப - அறிவிக்க

அண்டங்கள் சமைக்கப்பட்டுள்ளதில் ஒத்த புவனங்கள் உருவமாகவும், தத்துவங்களே இரத்தம், ஊன், மச்சை, மேதை, எலும்பு ஆகிய உடலின் சத்துப் பகுதிகளாகவும், கலைகளே இவைகளெல்லாம் வைக்கப்பட்டுள்ள அங்கங்களாகவும், இவையெல்லாம் சேர்ந்த நிலையே திரு உருவாகவும் கொண்டு நின்றவனே!

பலகோடி அண்டங்கள் தன் வடிவங்களாகவும் அவற்றில் உள்ள அசையும் அசையாப் பொருட்கள் அனைத்தும் உறுப்புக்களாகவும், விருப்பம், அறிவு, தொழில் என்ற மூன்று சத்திகளும் உட்கருவிகளாகவும் கொண்டு, தனக்கு அடிமை செய்தற்குரிய ஐந்து தொழிலையும் தனது ஆணையால் செய்விக்கின்ற எங்கள் தலைவனே!

கந்தர் கலிவெண்பா - 19

கந்தர் கலிவெண்பா - 19

இந்நூல் குமர குருபர சுவாமிகளால் அருளப்பட்டது. அவர் பிறவியால் ஊமை. ஐந்தாம் அகவையில் திருச்செந்தூரில் ஊமைத்தன்மை நீங்கப்பட்டது. அப்பொழுது அங்கு அமர்ந்த முருகனைப் போற்றிப் பாடியது. இதனுள் சைவ சித்தாந்தக் கருத்து, கந்த புராணக் கதைச் சுருக்கம் ஆகியவை அடங்கியுள்ளன. இது புகழ் மாலை வடிவாக அமைந்துள்ளது.
************************************************************************

இளம்பருதி நூறா யிரங்கோடி போல
வளந்தருதெய் வீக வடிவும் - உளந்தனிற்கண்(டு)
ஆதரிப்போர்க் காருயிரா யன்பரகத் தாமரையின்
மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே - ஓதியவைந்து
ஓங்காரத் துள்ளொளிக்கும் உள்ளொளியா யைந்தொழிற்கும்
நீங்காத பேருருவாய் நின்றோனே - தாங்கரிய
மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்
தொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால்

பருதி - சூரியன்
ஆதரிப்போர் - விரும்பும் அன்பர்
அகத்தாமரை - இஅதயத் தாமரை
மீது - ஆகாயத்தில்
ஓதியவைந்து - அகரம், உகரம், மகரம், விந்து, நாதம் ஆகிய ஐந்தும்
மந்திரம் - மனத் திறன்
சோரி - இரத்தம்
வான் - பெரிய
பதம் - அடி
முடியா - முடியாக
தொந்தம் - தொடர்பு
வன்னம் - எழுத்து வழி
தொக்கு - தோல்
பந்தனை - அமைப்பு

நூறாயிரம் கோடி இளஞ்சூரியன் வீசும் ஒளிகொண்ட தெய்வத் தன்மை உடைய திருவடிவும், நெஞ்சிலே நினைந்து காணப்பெற்று அன்பு செலுத்துவோருக்கு அரிய உயிராக அவர்களின் உள்ளத் தாமரையில் வீற்றுள்ள தெய்வத் தன்மை பொருந்திய விளக்கொளி போன்றவனே!

அகரம், உகரம், விந்து, நாதம் ஆகியவைகளால் ஆகிய ஓங்கார தத்துவத்தில் விளங்கும் ஒளிக்கு உள்ளீடாகக் காணப்படும் அறிவு ஒளியாய், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழிலுக்கும் உரிய பிரமன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்னும் ஐந்து பெரிய உருவெடுத்து நின்றவனே!

தாங்கமுடியாத வலிமையுடைய மந்திரங்களே இரத்தமாகவும், பெருமையுடைய பதங்களே தலையாகவும், பதங்களாகத் தொகுக்கப்படுவதற்குரிய எழுத்துக்களே தோலாகவும், அமைப்பால்……….

Saturday, February 07, 2009

பழமொழி 600

549.யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
550.யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
551.யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ?
552.வரும் விதி வந்தா பட்டே ஆகவேண்டும்.
553.வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும்.
554.வழி வழியாப் போகும்போது விதி விதியா வருது
555.விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
556.வித்தைக்கு அழிவில்லை.
557.விரலுக்குத் தகுந்த வீக்கம்.
558.விறகு வெட்டிக்குத் தலைவலி வந்தா விறகால ரெண்டு போடு
559.விலை மோரில் வெண்ணை எடுத்துத் தலைச்சனுக்குக் கல்யாணம் செய்வாளாம்
560.விளையும் பயிர் முளையிலே தெரியும்
561.வீட்டுப் பெஞ்சாதி வேம்பு; நாட்டுப் பெஞ்சாதி கரும்பு
562.வீண் இழவாம் வெங்காயம்; உரிக்க உரிக்கப் பேரிழவாம்.
563.வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
564.வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
565.வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல .
566.வெளுத்ததெல்லாம் பாலல்ல.
567.வேக நேரமிருந்தாலும் சாக நேரமில்லை.
568.வேலிக்கு ஓணான் சாட்சி.
569.வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு
570.வைக்கோற் போர் நாய் போல.

பழமொழி 600

526.மகன் செத்தாலும் சரி; மருமகள் கொட்டம் அடங்க வேண்டும்
527.மதி இல்லா விண்ணானேன்; மருந்து இல்லா புண்ணானேன்.
528.மனம் போல மாங்கலியம்
529.மனைவி இல்லாதவன் அரை மனிதன்
530.மரம் வைத்தவன் தண்ணி ஊத்துவான்
531.மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
532.மறைவிலே பெண்டாட்டி; மந்தையிலே அக்கச்சி.
533.மலை போல் வந்தது பனிபோல் விலகியது
534.மழைவிட்டும் தூவானம் விடாததுபோல்
535.மாடு மேய்க்கவும் வேணும்; மச்சினனுக்குப் பெண் பார்க்கவும் வேணும்.
536.மாமியா உடைச்சா மண் குடம்; மருமகள் உடைச்சா பொன் குடம்.
537.மாமியார் சாகாளோ? மனக் கவலை தீராதோ?
538.மாமியார் செத்த ஆறாம் மாதம் மருமகன் கண்ணில் நீர் வந்ததாம்
539.மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
540.முடக் குதிரைக்குச் சறுக்கினதுதான் சாக்கு.
541.முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
542.முலை கொடுத்து வளத்தவள் மூதேவி; முந்தானை போட்டவள் சீதேவி.
543.முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
544.முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல்
545.மூக்குள்ளவரை சளி போகாது.
546.மேயிற மாட்டை நக்கற மாடு கெடுக்கும்
547.மொட்டச்சிக்குத் தகுந்த மூக்கறையன்
548.மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.

பழமொழி 600

496.பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
497.படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
498.படிக்கிறது இராமாயணம்; இடிக்கிறது பெருமாள் கோயில்.
499.பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
500.பத்தாம் பேறு பாடையில் வைக்கும்
501.பத்து அரிசியும் வேகவில்லை; பாவியின் ஆவி போகவில்லை.
502.பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
503.பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
504.பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
505.பழமொழியில் உமி கிடையாது
506.பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்ததுபோல்
507.பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
508.பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
509.பிள்ளையாருக்குப் பெண் தேடுவது போல்
510.பிள்ளையின் அருமை பெற்றவளுக்குத்தான் தெரியும்.
511.பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
512.புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெளுப்பான்.
513.புலி பசித்தாலும் புல் தின்னாது.
514.பூ மலர்ந்து கெட்டது , வாய் விரிந்து கெட்டது
515.பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
516.பெண் என்றால் பேயும் இரங்கும்
517.பெண்ணுக்குப் பொன் இட்டுப்பார்; சுவற்றுக்கு மண் இட்டுப்பார்.
518.பெத்த மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு.
519.பெற்ற தாய் மூதேவி; புகுந்த தாரம் சீதேவி.
520.பெற்றவள் வயிற்றைப் பாப்பாள்; பெண்டாட்டி மடியைப் பாப்பாள்.
521.பேயும் அறியும் பெஞ்சாதி பிள்ளையை
522.பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
523.பொல்லாக் காலம் சொல்லாமல் வந்தது
524.போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
525.போன மச்சான் திரும்பி வந்தான்

பழமொழி 600

484.நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
485.நச்ச வாயன் வீட்டிலே நாறும் வாயன் பெண் எடுத்தது போல்
486.நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
487.நம்பமாட்டாதவன் பெண்டாட்டிக்கு நாற்பது பேர் மாப்பிள்ளை.
488.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
489.நாணமில்லா நாகுவுக்கு நாலு திக்கும் வாசல்படி
490.நான் படும் பாடு நாய்தானும் படாது.
491.நித்திய கண்டம் பூரண ஆயுசு
492.நிறைகுடம் தளம்பாது.
493.நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
494.நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
495.நெருப்பு இல்லாமல் புகையாது.

பழமொழி 600

459.தடியெடுத்தவன் தண்டக்காரன்.
460.தனக்கு அழகு மொட்டை; பிறருக்குக் கொண்டை.
461.தனக்கு என ஒருத்தி இருந்தால் தலைமாட்டில் குந்தி அழுவாள்.
462.தனிமரம் தோப்பாகாது.
463.தன் பெஞ்சாதியைத் தான் அடிக்க தலையாரியின் அனுமதியா?
464.தன் வினை தன்னைச் சுடும்.
465.தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
466.தலைக்கு மிஞ்சின ஆக்கினை இல்லை; கோவணைத்தை மிஞ்சிய வறுமையும் இல்லை.
467.தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
468.தள்ளி இருக்க உறவு, கிட்ட வந்தால் முட்டப் பகை.
469.தாயிற் சிறந்த கோவிலுமில்லை.
470.தாயில்லாப் பிள்ளை தறுதலை.
471.தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
472.தாயை தண்ணீர்த் துறையில் பார்த்தால் பெண்ணை வீட்டில் பார்க்கவேண்டாம்.
473.தாயை மறக்கடிக்கும் தயிறும் சோறும்.
474.தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
475.தாய் அறியா சூல் உண்டோ?
476.தாய் பொறுக்காததை ஊர் பொறுக்காது.
477.தாய் வார்த்தை கேட்கா பிள்ளை நாய் வாயில் சீலை.
478.தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
479.துளசியின் வாசமும் முள்ளின் கூர்மையும் முளையிலே தெரியும்.
480.தூக்கி வளர்த்த பிள்ளையும் துடையில் வைத்து தைத்த இலையும் உருப்படாது
481.தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.
482.தேரோட போச்சு திருநாளு , தாயோட போச்சு பிறந்தவீடு
483.தைமாத மழை தவிட்டுக்கு ஆகுமா?

பழமொழி 600

436.சட்டி ஓட்டையானா என்ன? சோறு வெந்தா போதும்.
437.சண்டிக் குதிரை; நொண்டிச் சாரதி
438.சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
439.சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
440.சந்திரனைப் பாத்த கண்ணுக்கு சனியனைப் பாத்தா போல
441.சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
442.சந்நியாசி வீடு திண்ணையிலே
443.சப்பாணிக்கு சந்து ஒடிந்த பெண் போதாதோ?
444.சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும்
445.சருகைக் கண்டு தணலஞ்சுமா
446.சருகு பொருக்கினாலும் குளிர் காய நேரமில்லை.
447.சர்க்கரை என்றால் தித்திக்குமா?
448.சாக்கடைப் புழுவும் சக்களத்தியும் ஒண்ணு
449.சாட்சிக்காரனின் காலில் விழுவதை விட சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.
450.சித்திரத்தைக் குத்தி அப்புறத்தே வைப்பதுபோல்
451.சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
452.சீரங்கத்து உலக்கை மாத்துவது போல
453.சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
454.சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது .
455.செல்லம் சீரழிக்கும்
456. செல்லம் சொல்லுக்கு அஞ்சாது.
457.சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
458.சோத்துல கெடக்குற கல்லை எடுக்காதவன் சேத்திலே கெடக்குற எருமையத் தூக்குவானா ?

பழமொழி 600

320.காகம் திட்டி மாடு சாகாது.
321.காக்கா கர் என்றால் (நடிக்கும் மனைவி)கணவனை இறுகக் கட்டிக்கொள்வாளாம்
322.காக்காய்க்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு
323.காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல்.
324.காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும்; காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
325.காடிச் சோத்துக்குக் கரணம் போடுறா
326.காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
327.காட்டில் ஆனையைக் காட்டி வீட்டில் பெண்னைக் கொடுப்பதுபோல்
328. காட்டுப் பூனைக்குச் சிவராத்திரி விரதமா ?
329.காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
330.காணாமல் கண்ட கம்பங்கூழை சிந்தாமல் குடி
331.காணி ஆசை கோடி கேடு.
332.காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
333.காயும் கனியும் உண்டானால் கார்த்திகையில் திருமணம்
334.காய் சுமையைக் கொடி தாங்காதா?
335.காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
336.காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
337.காரியமாகும் வரையில் கழுதையானாலும் காலைப்பிடி.
338.காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
339.கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
340.காற்றில்லாமல் தூசி பறக்குமா?
341.காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
342.காலம் அறிந்து பிழைக்காதவன் வால் அறுந்த குரங்கு ஆவான்
343.காலம் செய்வதை ஞாலம் செய்யாது.
344.காலம் போகும் வார்த்தை நிற்கும்; கப்பல் போகும் துறை சேரும்.
345.காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
346.கால் வயிற்றுக் கஞ்சியானாலும் கடன் இல்லா கஞ்சி.
347.காவடியின் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
348.காஞ்சவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
349.காடுவெட்டிக்கு கம்பு பிடுங்கப் பயமா?
350.கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்வமா?
351.கிணற்றுத் தவளைக்கு நாட்டு நடப்பு தெரியுமா?
352.கிழவனுக்கு வாக்கப்படுறதைவிடக் கேணியில் விழுவது மேல்.
353.கீர்த்தியால் பசி தீருமா?
354.கீறி ஆற்றினால் புண் ஆறும்.
355.குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
356.குசவனுக்கு ஆறுமாதம்; தடிக்காரனுக்கு அரை நாழிகை.
357.குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
358.குடிஇருந்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
359.குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
360.குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
361.குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படவேண்டும்.
362.குணத்தை மாற்றக் குருவில்லை.
363.குணம் இல்லா வித்தை எல்லாம் பாழ்.
364.குலத்தைவிடக் குணமே பெரிது.
365.குளத்திடம் கோவித்துக் குண்டி கழுவாம இருந்தால் எப்படி?
366.குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது போல்.
367.குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
368.குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
369.குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
370.குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
371.குப்பை உயரும் கோபுரம் தாழும்.
372.குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
373.குரங்கு கையில் பூமாலை கிடைத்ததுபோல்
374.குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
375.குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
376.குரு மொழி கேளாதவனும் தாய் சொல்லுக்கு அடங்காதவனும் சண்டி.
377.குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
378.குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
379.குரைக்கிற நாய் கடிக்காது.
380.குறுணிக்காரனுக்கு வாக்கப்பட்டு பதக்கு, பதக்கு என்றால் எப்படி?
381.குறைகுடம் தளும்பும்; நிறைகுடம் தளும்பாது.
382.குறும்பியுள்ள காதும் குற்றமுள்ள நெஞ்சும் குறுகுறு என்குமாம்
383.குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
384.குல வழக்கும் இட வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
385.குலத்தைக் கெடுக்க வந்த கோடாலிக் காம்பே
386.குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே
387.குளிராத வீடும் கூத்தியும் இருந்தா, மயிரான வெள்ளாமை விளைஞ்சா என்ன? விளையாட்டி என்ன?
388.குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
389.கூரை ஏறிக் கோழி பிடிக்கமுடியாதவன் வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுவானா
390.கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
391.கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
392.குடுத்தாலும் கல்வி குறையாது
393.கெடுமதி கண்ணுக்குத் தெரியாது
394.கெடுவான் கேடு நினைப்பான்
395.கெட்டாலும் செட்டியே; கிழிந்தாலும் பட்டு பட்டுதான்.
396.கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
397.கெட்டும் பட்டணம் சேர்
398.கெண்டையைப் போட்டு வராலை இழு.
399.கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
400.கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
401.கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
402.கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பினது எல்லாத்தையும் சொல்லாதே?
403.கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்
404.கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
405.கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறாது
406.கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
407.கையில் பொருள் இல்லையென்றால் கட்டினவளும் பாராள்
408.கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
409.கையிலே காசு வாயிலே தோசை
410.கையில் பொருள் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
411.கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலம்
412.கையில் பொருளில்லை என்றால் கட்டுக் கழுத்தியும் திரும்பிப் பாராள்.
413.கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
414.கொடிக்கு காய் கனமா?
415.கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
416.கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
417.கொடுத்தைக் கேட்டால் வந்திடும் பகை.
418.கொடும்பாவியானாலும் கொண்ட மாமியார் வேண்டும்
419.கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
420. கொண்டவன் அடிக்கக் கொழுந்தன் மேல் விழுந்தாளாம்
421.கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
422.கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
423.கொல்லன் தெருவில் ஊசி விலைபோகாது.
424.கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
425.கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
426.கோள் சொல்பவன் கொடுந்தேள்.
427.கோணிக் கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
428.கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
429.கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
430.கோபம் சண்டாளம்.
431.கோபுரத்து பூதம்போல
432.கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
433.கோயில் சோத்துக்கு குமட்டிண தேவடியா
434.கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
435.கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.

பழமொழி 600

223.ஐங்காயம் அரைத்துக் கரைத்தாலும் நாத்தம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
224.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
225.ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
226.ஐயர் வருகிறவரை அமாவாசை நிற்குமா?
227.ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
228.ஒத்துமையில்லாக் குடி ஒருமிக்கக் கெடும்.
229.ஒரு காசு சேத்தா இரு காசு தேறும்
230.ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
231.ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
232.ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
233.ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
234.ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
235.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
236.ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உறியிலே சோறு; நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத் தெருவிலே ஓடு.
237.ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
238.ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
239.ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
240.ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
241.ஒளியத் தெரியாம தலையாரி வீட்டில் ஒளிந்தது போல
242.ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
243.ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
244.ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
245.ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
246.ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
247.ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.

பழமொழி 600

175.எங்கே வெளைஞ்சாலும் காஞ்சிரங்காய் தேங்காயாகுமா?
176.எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
177.எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
178.எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
179.எண்ணறக் கற்று எழுத்தற வாசித்தாலும், பெண் புத்தி பின் புத்தியே(will have an afterthought)
180.எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
181.எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
182.எண்ணை கண்ட இடத்தில் தடவிக்கொண்டு சீப்புகண்ட இடத்தில் சீவிக்கொள்வது போல
183.எண்ணை முந்துதோ திரி முந்துதோ?
184.எதார்த்தவாதி வெகுசன விரோதி.
185.எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
186.எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
187.எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
188.எத்திலே பிள்ளை பெற்று இரவலிலே தாலாட்டுவது
189.எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
190.எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்.
191.எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
192.எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
193.எருமை மூத்திரம் எக்கியத்துக்கு ஆகுமா?
194.எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
195.எறும்பு ஊர கல்லுந் தேயும்.
196.எறும்புந் தன் கையால் எண் சாண்
197.எலி அழுதால் பூனை விடுமா?
198.எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
199.எலி வளை யானாலும் தனி வளை வேண்டும்.
200.எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
201.எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
202.எல்லாத் தலையிலும் எட்டு எழுத்து; பாவியென் தலையில பத்தெழுத்து.
203.எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
204.எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
205.எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
206.எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
207.எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
208.எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
209.எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
210.எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
211.எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
212.எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
213.எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
214.ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
215.ஏன் என்பாரும் இல்லை; எடுத்துப் பாப்பாரும் இல்லை
216.ஏரி நிறைந்தால் கரை கசியும்.
217.ஏர் உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
218.ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
219.ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
220.ஏழை என்றால் எவர்க்கும் எளிது
221.ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
222.ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை

பழமொழி 600

142.உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
143.உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
144.உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
145.உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
146.உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
147.உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
148.உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
149.உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
150.உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
151.உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
152. உயிரோடு இருக்கும்போது ஒரு வாய் சோறு இல்லை; காரியத்துக்கு கால் வீசை நெய்யாம்.
153.உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
154.உரலுக்கு ஒருபக்கம் இடி; மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.
155.உரல் போய் மத்தளத்திடம் முறையிட்டதாம்.
156.உறவு போகாமல் கெட்டது; கடன் கேட்காமல் கெட்டது.
157.உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்
158.உலை வைத்த சந்திலே சாறு காய்ச்சுவதுபோல்
159.உலோபிக்கு இரட்டை செலவு.
160.உளவு இல்லாமல் களவு இல்லை.
161.உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன் உடுப்பியிலே போயி உடும்பு பிடிப்பானா ?
162.உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
163.உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிச்சமில்லை.
164.ஊசியைக் காந்தம் இழுக்கும்; உத்தமனை நட்பு இழுக்கும்.
165.ஊணுக்கு முந்து; வேலைக்குப் பிந்து.
166.ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு
167.ஊரார் பண்டம் உமிபோல்; தன் பண்டம் தங்கம் போல.
168.ஊரார் வீட்டு நெய்யே , என் பெண்டாட்டி கையே.
169.ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி
170.ஊரை வளைத்தாலும் உற்ற துணையில்லை; நாட்டை வளைத்தாலும் நல்ல துணையில்லை.
171.ஊர் இருக்கு பிச்சை போட; ஓடு இருக்கு வாங்கிக்கொள்ள
172.ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
173.ஊர் எல்லாம் சுற்றி; என் பேர் முக்தி
174.ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.

பழமொழி 600

109.இக்கரை(மாட்டு)க்கு அக்கரை பச்சை.

110.இஞ்சி இலாபம் மஞ்சளில்.

111.இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.

112.இட்ட உறவு எட்டு நாளைக்கு; நக்கின உறவு நாலு நாளைக்கு.

113.இந்திரனை சந்திரனை இலையாலே மறைப்பாள்; எமனைக் கையாலே மறைப்பாள்.

114.இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே

115.இன்னைக்கு செத்தா நாளைக்கு இரண்டு

116.இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.

117.இமையின் குத்தம் கண்ணுக்குத் தெரியாது.

118.இரக்கப் போனாலும் சிறக்கப் போ.

119.இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.

120.இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.

121.இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை; இராச திசையில் கெட்டவணுமில்லை

122.இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.

123.இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.

124.இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இருக்குமா?

125.இறுகினால் களி , இளகினால் கூழ்.

126.இறைத்த கிணறு ஊறும், இறையாத கேணி நாறும்.

127.இலை அறுத்தவன் குலை அறுக்கமாட்டானா?

128.இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.

129.இல்லாமல் பிறாவது அள்ளாமல் குறையாது.

130.இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.

131.இளங்கன்று பயமறியாது

132.இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.

133.இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.

134.இளமையில் முயற்சி முதுமையில் காக்கும்

135.இளைத்தவன் பெஞ்சாதி எல்லாருக்கும் மச்சினி

136.இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?

137.ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.

138.ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.

139.ஈட்டுக்கும் பாட்டுக்கும் இருந்தாள் எடுகுமரி

140.ஈயத்தைக் காச்சிக் காதில ஊத்தினாப் போல

141.ஈர நாவிற்கு எலும்பில்லை.

பழமொழி 600

70.ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு அதிலும் கெட்டது அய்யருக்கு
71.ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
72.ஆடத் தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்.
73.ஆடிக் காற்றில் அம்மி பறப்பது போல
74.ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடிப்பிடித்து அடி
75.ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்
76.ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
77.ஆணில்லா மங்கைக்கு அழகு பாழ்
78.ஆணில்லாத் துக்கம் அழுதாலும் தீராது
79.ஆணுக்கு அவக்கேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழைக்கேடு செய்யாதே
80.ஆணை அடித்து வளர்;பெண்ணைப் போற்றி வளர்.
81.ஆண் வாங்கினா கடன்; பெண் வாங்கினா சோரம்.
82.ஆத்தா மனம் எரிய வாழான் ஒரு நாளும்.
83.ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
84.ஆத்து தண்ணி. அம்மா குடி; அய்யா குடி.
85.ஆனை இருந்தாலும் செத்தாலும் ஆயிரம் பொன்.
86.ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
87.ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே
88.ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
89.ஆனைக்கும் அடிசறுக்கும்.
90.ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
91.ஆரால் கேடு, வாயால் கேடு.
92.ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
93.ஆறாவது பெண்ணானால் ஆறானது நீறாகி விடும்.
94.ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
95.ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
96.ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
97.ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
98.ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
99.ஆறுமில்லாப் பெண்ணுக்கு அண்டை வீட்டுக்காரன் அத்தை மகனாம்
100.ஆற்ற ஆள் இல்லை; தேற்ற யாரும் இல்லை
101.ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை
102.ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
103.ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
104.ஆலை இல்லாத ஊரிக்கு இலுப்பைப் பூ சக்கரை.
105.ஆளோ கட்டக்கரிச்சி; பேரோ பொன்னம்மாள்.
106.ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
107.ஆழம் தெரியாமல் காலை விடாதே.
108.ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலன் தரும்.

பழமொழி 600

1.அகத்தினழகு முகத்தில் தெரியும்.
2.அகல உழுகிறதை விட ஆழ உழு.
3.அகல் வட்டம் பகல் மழை.
4.அக்கா இருக்கும்வரைதான் மச்சான் உறவு
5.அக்கா வைச்சிருந்தா அரிசி; தங்கை வச்சிருந்தா தவிடு.
6.அசடுக்கு வாக்கப்பட்டு ஆயிரம் வருடம் வாழ்வதைவிட, சமத்துக்கு வாக்கப்பட்டு சட்டுன்னு தாலி அறுக்கலாம்.
7.அசைந்து தின்பது யானை, அசையாமல் தின்பது வீடு.
8.அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
9. அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடைக்காது.
10.அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
11.அடக்கமே பெண்ணுக்கு அழகு
12.அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
13.அடாது செய்தவன் படாது படுவான்.
14.அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் தேனும்.
15.அடிக்கடி அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்பாதே
16.அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் முகத்துக்கு முன் ஆடும்.
17.அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
18.அடியாத மாடு படியாது
19.அடியைப் போல அண்ணன் தம்பி உதவான்.
20.அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரன் நிம்மதி போச்சு.
21.அடுப்பிலெ இருக்கும் சட்டி பொறுத்தாலும் மூடி பொறுக்காதாம்.
22.அடுப்பே வனவாசம்; கடுப்பே கைலாசம்.
23.அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
24.அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது
25.அதை விட்டாலும் கதியில்லை; அப்புறம் போனாலும் விதியில்லை.
26.அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
27.அந்தி மழை அழுதாலும் விடாது.
28.அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
29.அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்
30.அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
31.அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
32.அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
33.அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
34.அயலூரானுக்கு ஆத்தோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.
35.அயல்வீட்டானுக்குப் பரிந்துகொண்டு ஆம்படையானை அடித்ததுபோல்
36.அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
37.அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
38.அரிசி அளக்கும் படிக்கு அரிசியின் விலை தெரியுமா?
39.அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி(கல்) மூன்று வேண்டும்.
40.அரிசி என்று அள்ளிப்பார்ப்பாரும் இல்லை; உமி என்று ஊதிப்பார்ப்பாரும் இல்லை.
41.அரிசி பகையும் ஆம்படையான் பகையும் போல்(கணப்பொழுது)
42.அருக்காணி முத்து கரிக்கோலமானது போல்
43.அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
44.அரைத்துட்டிலே கலியாணம், அதிலே கொஞ்சம் வாணவேடிக்கை
45.அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
46.அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
47.அறச் செட்டு முழு நட்டம் .
48.அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் வாங்கவும் மாட்டான்.
49.அறமுறுக்கினால் அத்துப் போகும்.
50.அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
51.அறிய அறியக் கெடுவார் உண்டா?
52.அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
53.அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
54.அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
55.அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
56.அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
57.அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
58.அறுதாலி மகனுக்கு அங்கம் எல்லாம் சேட்டை
59.அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி
60.அறுப்புக் காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள்.
61.அற்ப அறிவு அல்லற்கிடம்.
62.அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
63.அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
64.அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
65.அழகுக்குச் செய்தது ஆபத்துக்கு உதவும்.
66.அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
67.அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
68.அழுது அழுது பெத்தாலும் அவளே பெறவேண்டும்
69.அவுசாரி ஆனாலும் முகராசி வேணும்

பழமொழி நானூறு - கடவுள் வணக்கம்

கடவுள் வணக்கம்
*********************

அரிதவித்(து) ஆசின்(று) உணர்ந்தவன் பாதம்
விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்(து)
உரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்
பெரியதன் ஆவி பெரிது.

அரிது - முக்குற்றங்கள்(காமம், வெகுளி, மயக்கம்)
அவித்து - அழித்து நீக்கி
ஆசு - குற்றம்
வியன்கண் - அகன்ற
ஓக்கம் - உயர்வு

காமம், வெகுளி, மயக்கம், ஆகிய முக்குற்றங்களையும் அழித்துக் குற்றமின்றி முற்றும் உணர்ந்தவனாம் இறைவனின் பாதத்தையே, அகன்ற கடலால் சூழப்பட்ட பரந்த இவ்வுலகில், தன் உரிமைப் பொருளைப்போல் கருதி உணர்ந்து அறிந்தவர்களின் உயர்வே பேருடலையுடைய ஆவியைப் போன்று பெரியது.

பழமொழி - “பெரியதன் ஆவி பெரியது.”