ஒத்த புவனத் துருவே யுரோமமாத்
தத்துவங்க ளேசத்த தாதுவாய் - வைத்த
கலையே யவயவமாக் காட்டுமத்து வாவின்
நிலையே வடிவமா நின்றோய் - பலகோடி
அண்டமுருவாகி அங்கஞ் சராசரமாய்க்
கண்டசத்தி மூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும்
ஆவிப்புலனுக் கறிவளிப்ப ஐந்தொழிலும்
ஏவித் தனிநடத்தும் எங்கோவே - மேவ
சத்த - ஏழு
தாது - இரத்தம், ஊன், மச்சை, மேதை, எலும்பு ஆகியன
கலை - நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதை ஆகியன
காட்டும் - ஈண்டு குறிக்கப்பட்ட
அண்டம் - திருமேனி
சரம் - நடக்கும் பொருள்
அசரம் - நிற்கும் பொருள்
சராசரம் - நிற்கும் பொருள், நடக்கும் பொருள்
அங்கம் - உறுப்பு
சத்தி மூன்று - இச்சை, கிரியை, ஞானம்
உட்கரணம் - அந்தக்கரணம், அகக் கருவி
தொண்டுபடும் - அடிமையாய் நிற்கும்
ஆவிப்புலன் - உயிரின் அறிவு
அறிவளிப்ப - அறிவிக்க
அண்டங்கள் சமைக்கப்பட்டுள்ளதில் ஒத்த புவனங்கள் உருவமாகவும், தத்துவங்களே இரத்தம், ஊன், மச்சை, மேதை, எலும்பு ஆகிய உடலின் சத்துப் பகுதிகளாகவும், கலைகளே இவைகளெல்லாம் வைக்கப்பட்டுள்ள அங்கங்களாகவும், இவையெல்லாம் சேர்ந்த நிலையே திரு உருவாகவும் கொண்டு நின்றவனே!
பலகோடி அண்டங்கள் தன் வடிவங்களாகவும் அவற்றில் உள்ள அசையும் அசையாப் பொருட்கள் அனைத்தும் உறுப்புக்களாகவும், விருப்பம், அறிவு, தொழில் என்ற மூன்று சத்திகளும் உட்கருவிகளாகவும் கொண்டு, தனக்கு அடிமை செய்தற்குரிய ஐந்து தொழிலையும் தனது ஆணையால் செய்விக்கின்ற எங்கள் தலைவனே!
Sunday, February 08, 2009
கந்தர் கலிவெண்பா - 20
Posted by ஞானவெட்டியான் at 10:25 AM
Labels: கந்தர் கலிவெண்பா
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment