Sunday, June 29, 2008

பிரபுலிங்க லீலை - 2.24

பட்டாடையும் மேகலையும்

2.24 தோலு டைப்பரன் தொல்மனை யாட்டிதன்
பால டுத்ததெவ் வாறெனும் பட்டரை
மேலு டுத்து விளங்கவொண் மேகலை
நூலி டைக்குறு நோய்புரி யாது ற.


தோல் உடைப்பரன் - புலித்தோலையும் யானைத்தோலையும் உடையாக அணிந்துள்ள கடவுள்.
தொல்-பழமையையுடைய.
ஒண் - ஒள் - அழகிய
ஒண்மேகலை - அழகிய மேகலை.
உறுநோய்-மிகுந்த நோய்.

புலித்தோலையும் யானைத்தோலையும் உடையாக அணிந்துள்ள கடவுளின் இல்லாள் வியக்கத்தக்க பட்டாடையை இடுப்பில் உடுத்தி அதன்மேல் ஒளி பொருந்திய மேகலையைத் தன் நூல்போன்ற இடுப்பு நோகாவண்ணம் பூட்டி இருப்பது எங்ஙனம்?

தோலுடையான் மனையாட்டிக்குப் பட்டாடை யெவ்வாறு கிடைத்தது என்பது கருத்து.

Thursday, June 26, 2008

பிரபுலிங்க லீலை - 2.23

கையில் கருங்குவளைமலரும் பைங்கிளியும்

2.23 பறந்தி டாமணி வண்டு படுமலர்
சிறந்த நீல மலரொடு சீர்பெற
மறந்தி டாது மறைமுடி யின்பொருள்
அறைந்து பைங்கிளி முன்கை அமர்ந்திட.

மணி வண்டு - அழகிய வளையல்.
படுமலர் - பொருந்திய மலர்போன்ற கை.
நீலமலர் - கருங்குவளை மலர்.
அறைந்து-சொல்லி.

மறக்காமல் வேதமுடிவின் பொருள் கூறிய அம்மையின் அழகிய வளையல் பொருந்திய மலர்போன்ற கையில் சிறந்த கருங்குவளை மலர் தாங்கியுள்ளாள். அவ்வழகிய வளையல் தாங்கிய முன்கையில் பைங்கிளி வந்து அமர்ந்துள்ளது.

பறக்கும் வண்டினை விலக்குதற்குப் பறந்திடா என அடை கொடுத்தனர். அவ்வண்டு படுமலர் எனவே கை என்பது குறிப்பாகத் தோன்றியது.

கையை மலராகவும் வளையல்களை வண்டாகவும் கூறியுள்ள நயத்தினைக் காண்க.

Wednesday, June 25, 2008

பிரபுலிங்க லீலை - 2.22

முத்துமாலை

2.22 அரவு லாஞ்சடை அண்ணலைப் பிள்ளைதான்
பருவ மூன்றினிற் பாடஇன் பால்தரும்
பொருளில் கொங்கைப் புகழெனப் பொங்கொளி
மருவும் ஆர மணிவடந் தாழ்ந்துற.

அரவு - பாம்பு.
அண்ணல் - சிவபெருமான்.
பிள்ளை - சம்பந்தர்.
இன்பால் - இனிய திருமுலைப்பால்.
பொருவுஇல் - ஒப்பில்லாத.
பொங்கு ஒளி மருவும் - மிகுதியான ஒளி பொருந்திய.
ஆர மணிவடம் - முத்தினாலாகிய அழகிய மாலை.


சம்பந்தர் மூன்றாண்டில் பாடுவதற்கு ஆற்றல் அளித்த இனிய பாலுடைய கொங்கையாதலிற் புகழ் நிறைந்தது எனவும், புகழின் நிறம் வெண்மையாதலால், அது போர்த்தது போல முத்து மாலையினொளி கொங்கைமேற் பரவியது எனவும் கூறப்பட்டுள்ளது. இது தற்குறிப்பேற்ற அணி.

Sunday, June 22, 2008

பிரபுலிங்க லீலை - 2.21

பூணரசாக விளங்கும் பொன்தாலி

2.21 ஓங்கு வாவுடை உம்பன் அயனரி
தாங்கும் ஆவி தணந்தொழி நாளினும்
வாங்கு றாவெழில் மங்கல நாணொளி
தேங்கு பூணர சென்னச் சிறந்திட.

ஓங்கு - உயர்ந்த,
உவா - யானை,
உம்பன் - தேவர்கோன்,
அயன் - நான்முகன்,
அரி - திருமால்,
தாங்கும் ஆவி - தாங்கியுள்ள உயிர்,
தணந்து - நீங்கி,
வாங்குறா - நீக்கப்பெறாத,
மங்கலநாண் - திருத்தாலிக்கயிறு.
பூண் அரசு - அணிகலன்களுக்குத் தலைமை.

உயர்ந்த யானைய உடைய தேவர்கோன், நான்முகன், திருமால் ஆகிய மூவரும் தாங்கியுள்ள உயிர் நீங்கிய காலத்தேயும் நீக்கப்பெறாத ஒளிதேங்கியுள்ள அணிகலன்களுக்குத் தலைமையாய் உள்ள திருத்தாலிக்கயிறு அணிந்துள்ளார் எம்பிரான்.


இந்திரன், பிரமன், திருமால், இம்மூவர் அழியுங் காலத்தும் வாங்குறா மங்கலநாண் எனக் கூறியதனால் இறைவனது நித்தியத் தன்மையும் மங்கலநாணின் பெருமையும் விளங்கின.

Friday, June 20, 2008

பிரபுலிங்க லீலை - 2.20

காதோலை

2.20 மாணப் பூண்புனை மற்றை உறுப்பெனப்
பூணுட் பட்டிடா தோலையின் பூணென
யாணர்ச் செம்பொன் இலங்கொளி யோலைமேற்
காணக் காதெனும் வள்ளை கவின்செய.

மாண - பெருமையுண்டாக,
பூண் புனை - அணிகலன்களைத் தாங்குகின்ற
பூணுள் பட்டிடாது - அணிகலன்களுக்கு உட்படாமல்,
ஓலையின்பூண் என - காதோலையின் அணிகலன் என்று சொல்லும்படி,
யாணர் - அழகு,
கவின் - அழகு.

காது தவிற பிறவுறுப்புக்கள் அணிகலன்களை அணிவதால் அணிகலன்களுக்கு உட்பட்டு அணிகலன்களால் அழகைப் பெறுகின்றன. காதுகளோ அவ்வாறு உட்படாமல் தாம் அழகான செம்பொன்னால் செய்ததால் ஒளி வீசும் பொன்ஓலையின் அணிகலன்களைப்போல நின்று அவைகட்கு அழகைச் செய்கின்றன.

Thursday, June 19, 2008

பிரபுலிங்க லீலை - 2.19

திருநோக்கும் திருநகையும்

2.19 ஈச னார்முக மென்னு முளரியில்
ஆசை கூரும் அளிவிழிக் காரருள்
வாச மாமலர் வாய்க்கிள வெண்ணகை
தேசு லாமணி யாகச் சிறந்துற.

முளரி - தாமரை.
அளிவிழி - வண்டுகளாகிய கண்கள்,
ஆர் அருள் - நிறைந்த திருவருள்,
இளவெண் நகை - புன்னகை,
தேசு உலாம் - ஒளி விளங்குகின்ற,
அணி - அணிகலன்

ஈசனின் முகத்தாமரையில் திருவருள் பொங்கித்தளும்பும் விழிகளும் நறுமணம் வீசும் வாயில் புன்னகையும் ஒளிவீசும் மணிகளாகத் திகழ்கின்றன.

விழிக்கு நிறைந்த திருவருளும், வாய்க்குப் புன்னகயும் அணியாக என உம்மை கூட்டிப் பொருள் கொள்தல் நலம்.

இறைவி யணிந்துள்ள அணிகலன்களைக் கூறத் தொடங்கியவர், கூந்தலில் மாலையையும், நெற்றியில் சுட்டியையுங் கூறிக் கண்ணுக்கு அருளையும், வாய்க்குப் புன்னகையும் அணிகலன்களாகக் கூறினார். கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் என்றார் திருவள்ளுவரும். முகத்திலே தாமரையயும் விழியிலே வண்டையும் உருவகப்படுத்திக் கூறலால் இது உருவகவணி.

Tuesday, June 17, 2008

பிரபுலிங்க லீலை - 2.18

நெற்றியில் நெற்றிச்சுட்டி விளங்குதல்

2.18 ஏற்று வார்கொடி யெந்தை சடைப்பிறை
யாற்றுள் வீழ்வுற் றிறப்பதற் கெண்ணுறத்
தோற்ற மேவு சுடர்த்திரு நெற்றியன்
ஞாற்று மோர்மணிச் சுட்டி நலந்தர.

ஏற்றுவார் கொடி - காளை வடிவம் எழுதப்பெற்ற நீண்ட கொடி,
ஆற்றுள் - சடையிலுள்ள கங்கையாற்றுள்,
தோற்றம் - அழகு,
ஞாற்றும் - தொங்கவிடப்பெற்ற,
நலந்தர - அழகு செய்ய.

எந்தையாம் இறைவனுடைய அழகு மிக்க சுடரை(மூன்றாம் கண்) உடைய நெற்றியில் தொங்க விடப்பட்ட ஒரு மணிச்சுட்டி அழகு செய்கிறது. இந்த
பிறையான நெற்றியின் அழகிற்குத் தோற்றுக் காளை வடிவம் எழுதப்பெற்ற நீண்ட கொடி கங்கையாற்றில் விழுந்து இறந்து போதற்கு எண்ணும்படியான அழகிய நெற்றி என்றாகும்.

Sunday, June 15, 2008

பிரபுலிங்க லீலை - 2.17

கூந்தலில் திருமாலை விளங்குதல்

2.17 இறைவன் அங்கண் எனுமுச் சுடர்களும்
உறவு கொண்ட இருளெனும் ஓதிமேல்
அறவ னென்றவவ் வண்ணல் புனைந்தருள்
நறவு மிழ்ந்த நறுமலர் தாழ்ந்திட.

முச்சுடர்களும் - ஞாயிறு திங்கள் தீ என்னும் மூன்று ஒளிப் பிழம்புகளும், இருள் எனும் ஓதி - இருளைப்போன்ற கூந்தல்,
அறவன் என்ற - அற வடிவினன் என்று கூறப்பெற்ற,
நறவு உமிழ்ந்த - தேனை வெளிப்படுத்திய,
தாழ்ந்திட - தொங்க,

அறவடிவினன் எனப்படும் இறைவன், இருளைப்போன்ற தன் கூந்தல்மேல் ஞாயிறு திங்கள் தீ என்னும் மூன்று ஒளிப் பிழம்புகளையும் தேனை வெளிப்படுத்தும் மணமிக்க மலராகத் தொங்க விட்டுள்ளான்.

கூந்தலிலே இருள் தன்மையை யேற்றலும் மூச்சுடர் உறவைச் சேர்த்தலும் மிகையொற்றுமை யுருவக வணியாகும்.

( 2.17 ) இப்பாட்டு முதல் இருந்த ஆரருள் எம்பெருமாட்டிபால் என்னும் 2.26 (இருபத்தாறாவது) பாட்டுவரை குளகம்.
குளகம் பல பாட்டொருவினை கொள்ளும்.

Saturday, June 14, 2008

பிரபுலிங்க லீலை - 2.16

இறைவனிடத்தில் இறைவி எழுந்தருளியிருத்தல்

2.16 இருந்த ஆதி யிடத்தில் இருந்தனள்
பரந்த வானும் படியும் உயிர்களும்
ஒருங்கு தோன்ற உதவிக் கருவுறீஇ
வருந்தி லாத மணிவயிற் றன்னையே.

இருந்த - எழுந்தருளியுருந்த (வேணியின் மேவுற ஆயிடை வாழ்வுற, திருநுதல். சேர்தர போன்றுற, தோடுற, ஒன்றுற, தயங்குற, பொற்புற, தாளுற),
ஆதி - கடவுள்,
படி - மண்ணுலகம்,
வான் - விண்ணுலகம்,
கருவுறீஇ - சூலுற்று,
மணி வயிறு - அழகிய வயிறு.

நீண்டு பரந்த வானுலகும், மண்ணுலகும், அதில் உள்ள அனைத்து உயிர்களும் ஒன்றாகத் தோன்ற உதவிசெய்து சூலுற்ற அழகிய வயிறுடன் இறைவனுடன் எழுந்தருளினாள் அம்மை.

2.10(குழவியாயுடல் என்னுஞ் செய்யுள்) முதல் 2.16(இச் செய்யுள்) வரையிலுங் குளகம்.

Thursday, June 12, 2008

பிரபுலிங்க லீலை - 2.15

தாள் வீரக்கழலின் தனிச்சிறப்பு

2.15 புரத்தை வென்ற நகைக்குமென் போதினோன்
சிரத்தை வென்றசெங் கைக்குஞ் சிலைமதன்
எரித்த கண்ணிற்கும் இன்றெனக் கூற்றடூஉத்
தரித்த வீரக் கழலொடு தாளுற.

புரத்தை - முப்புரங்களை,
போதினோன் - நான்முகன்,
சிரம் - தலை,
கூற்று அடூஉ - கூற்றுவனைக் கொன்று,
தரித்த - கட்டிய.

நகைக்கும், கைக்கும், நெற்றிக் கண்ணுக்கும் முப்புரங்களை வென்றும், நான்முகன் தலையைக் கொய்தும், காமனை யெரித்தும் ஒருபயனு மில்லையென்று சொல்லும்படி, கூற்றுவனைக் கொன்ற காலுக்கு மட்டும் வீரக்கழல் கிடைத்தது. இது தனிசிறப்பு என்க.

Sunday, June 08, 2008

பிரபுலிங்க லீலை - 2.14

பாம்புக்காப்பு, பன்றிக்கொம்பு புலித்தோல் அணிந்தமை

2.14 சொற்றெ ரிந்த சுடர்மணிக் கங்கணம்
உற்றி லங்க ஒருகருங் கேழலின்
பற்றி ருந்த மதாணியிற் பட்டெனப்
புற்ற ருங்கலை உற்றரை பொற்புற.

சொல் தெரிந்த - சொல் இலக்கணங்களையுணர்ந்த,
சுடர் - ஒளி,
கங்கணம் - காப்பு,
உற்று - பொருந்தி,
கேழல் - பன்றி,
பல் மதாணியில் திருந்த - தந்தமானது மார்புப் பதக்கத்தைப் போலத் திருத்தமாக அமையவும்,
புல்தரும் கலை - புலி கொடுத்த ஆடையாகிய தோல்,
அரை - இடுப்பு,
பொற்புற - அழகு செய்ய.

ஒளி பொருந்திய மணியைத் தலையில் சூடிய சொல் இலக்கணங்களையுணர்ந்த ஆதிசேடனாகிய நாகத்தைக் காப்பாக அணிந்து, கரும் பன்றியின் வெண்மைமிகு கோரைப்பல்லை(தந்தம்) தன் மார்புப் பதக்கமாகவும் அணிந்து, புலியின் தோலைத் தன் இடுப்பில் கச்சையாக அணிந்து(இடுப்பை அழகு செய்ய) சிவன் இருந்தான்.

சொற்றெரிந்த என்ற அடைமொழியால் ஆதிசேடன் ஆகிய பாம்புக் கங்கணம் என்பது தோன்றியது. மதாணியில் திருந்த எனவும், கலை அரையுற்றுப் பட்டெனப் பொற்புற எனவும் கூட்டுக.

அகத்தியர் பஞ்சபட்சி சாற்றிறம்-3


காப்பு
*******

3."ஒன்று திசைக்குருவி யொன்றிவரு மோர்தூதன்

நின்றநிலை யாருடத்தில் நேருமே - நன்று

வழுவா துரைத்தாயும் வல்லவர்கள் சொன்ன

முழுவா கடத்தின் முறை."

நன்றாக யாதொரு தவறுமின்றி வழுக்காது ஆஅய்ந்து உரைக்கும் வல்லவர்கள் சொன்ன முழுமையான பட்சி நூலின் முறையாவது, தன்னிடம் வினாவெழுப்ப வந்த தூதன், அவன் வந்த திசை, நின்ற இடம், நிற்கும் நிலை, எழுப்பிய வினாவின் முதலெழுத்து ஆகியவற்றை ஆய்ந்து சொல்லலாம். இங்கு "வாகடம்" என்பது வைத்திய நூலை மட்டும் குறிக்காது சாற்றிற நூல்களையெல்லாம் குறிக்கும். நின்ற இடத்தை வைத்துச் சொல்லலுக்கு "நட்ட சாதகம்" என்னும் நூல் உதவும். "சர நூல்" நிற்கும் நிலையை வைத்துச் சொல்ல உதவும். ஆக, வழக்கிலிருக்கும் இந்நுண்கலைகள் எல்லாம் அறிந்தவனாலேயே சரியாகக் கணிக்க இயலும்.

Saturday, June 07, 2008

பஞ்சபட்சி சாற்றிறம் - 2

அகத்தியர் பஞ்சபட்சி சாற்றிறம்
**********************************

2. "துய்யமலருறையுந் தோகா யுன தைம்பொற்
செய்ய மலர்ப்பாதஞ் சேவித்தேன் - வையத்
தைந்து வகைப்பட்சி யமையுங் குணமென்றன்
சிந்தை தனினிற்கவே செய்."

பரிசுத்தமான வெண்தாமரையில் எழுந்தருளியிருக்கிற தோகைமயிலைப் போன்ற கலைவாணியே!
உன்னுடைய அழகிய பொன்போன்ற சிவந்த தாமரைமலர் போன்ற திருவடித்தாள் வணங்கினேன்.
ஆகையால், நீ இவ்வுலகில் இருக்கும் சகலசீவராசிகளையும் பட்சிகளாகப் பாவித்துப் பிரித்து, அதனதன் குணம் முதலியவைகளை விளக்கும் கலையை எம்மனத்தில் உணர்த்தி இருக்கச் செய்யவேண்டும்.

உதவி

தமிழ் மணத் திரட்டியில் உருவம்(Avtar) தெரியச் செய்ய என்ன செய்யவேண்டும்.
உதவி தேவை

ஞானவெட்டியான்

பிரபுலிங்க லீலை - 2.13

கையின் கண்ணுள்ள மான் திரும்பியதற்குக் காரணம்

2.13 நகந்த ருங்கொடி கண்களை நாணியே
முகந்தி ரும்பு முறையில் திரும்புமான்
மகிழ்ந்தி டங்கதிர் வீர மழுவலந்
தகுத்த குந்தகு மென்று தயங்குற.

நகம் தரும்கொடி - மலைபெற்ற பூங்கொடிபோல்பவளாகிய இறைவி,
முகம் திரும்பும் - முகத்தைத் திரும்பிக் கொள்ளும்,
முறையில் - தன்மையில்,
கதிர் - ஒளி,
வீரமழு - வீரத்தன்மை பொருந்திய மழு,
தயங்குற - விளங்க.

இறைவனுடைய இடதுகையிலுள்ள மான் இறைவியின் கண்களுக்கு நாணமடைந்து முகத்தைத் திருப்பிக்கொண்டது. வலது கையிலுள்ள மழு தகும் தகும் என்னும் ஒலியுண்டாகும்படி எரிதல், மான் திரும்பிக்கொண்டது தகும் தகும் என்று கூறுவது போல் இருக்கிறதென்று காரணங் கற்பித்தார் ஆசிரியர். இது தற்குறிப்பு.
மான் இடக்கையினும் மழு வலக்கையினும் விளங்கின.

Friday, June 06, 2008

சோதனை-தமிழ்மண நிர்வாகத்தின் கவனத்திற்கு

சோதனை-தமிழ்மண நிர்வாகத்தின் கவனத்திற்கு

இன்றஉ பதிப்பித்த இடுகைகளுக்குக் கீழ்கண்ட பிழை செய்தி வருகிறதே!

Warning: ./cache/4bba67f28ae840bbfcbbed352f8b5121.spc is not writeable in /var/www/vhosts/thamizmanam.com/httpdocs/SimplePie/simplepie.inc on line 1769
புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை
கடந்த 45 நாட்களில் எழுதப்பட்ட இடுகைகளை மட்டுமே தமிழ்மணம் ஏற்றுக்கொள்ளும்
பழைய இடுகைகளை மறுபடியும் உங்கள் வலைப்பதிவில் புதுப்பித்து அளிக்கலாம்

சன்னலை மூடு

பிரபுலிங்க லீலை - 2.12

காதில் தோடுகளும் கண்டக் கருமையும்

2.12 எண்ணு மன்பர் இதயமென் புட்படு
கண்ணி போன்றுவார் காதிடைத் தோடுற
நண்ணு மாதுமை நன்னுதற் பொட்டென
வண்ண நீல மணிமிடற் றொன்றுற.


இதயம் என்புள் - உள்ளமாகிய பறவைகள்,
படும் - அகப்படும்,
கண்ணி - வலை,
வார் - நீண்ட,
வண்ணநீலம் - அழகிய கருமை,
மணிமிடறு - அழகிய கண்டம்.
ஒன்றுற - அமைய.

காதுத்தோடுகள் அன்பர்களது உள்ளப் பறவைகளைப் பிடிக்கிற வலைகளைப் போலவும், கண்டக்கருமை உமையம்மை நெற்றிப் பொட்டைப் போன்றும், அமைந்துள்ளன.

தோட்டைக் கண்ணியாகக் குறித்தலால் தற்குறிப் பேற்றவணி.
நெற்றித் திலகத்தைக் கண்டக் கருமைக்கு உவமை கூறப்பட்டது.

Wednesday, June 04, 2008

பஞ்சபட்சி சாற்றிறம் - 1

காப்பு
-------
1.உன்னியொருவன் உரைத்த முதலெழுத்தைப்
பன்னிப் பறவையாய்ப் பாவித்து - வன்னி
உதைய திசைப்பட்சி யுண்மை யுரைக்கக்
கதைகா வியப்பொருளே காப்பு.

உன்னி = தியானித்து, கவனத்துடன்
பன்னி = பண்ணி = அமைத்து
வன்னி = வன்னி மரம், நெருப்பு = குண்டலிப் பாதையாம் நெருப்பாறு

நற்சேத்திரத்தை வைத்துத்தான் (புள்,பறவை) பட்சி நிணயித்தல் வேண்டும். அது தெரியாதபோது: வந்தவன் உரைக்கும் முதல் எழுத்தைக்கொண்டு, அதை அமைத்துப் பறவையாய் உருவகப்படுத்தி அக்கினி திசையாம்
தென்கிழக்கில் உதிக்கும் பட்சிகளின் உண்மையை உரைக்க இக்கலை கதையெனினும் காவியமெனினும் அதனுள்ளிருக்கும் மெய்ப்பொருளே காப்பு.

(யோக விளக்கம்):

ஒருவனாகிய ஆடவல்லான் உரைத்த முதலெழுத்தாம் குத்தெழுத்தைக் கவனமுடன் தியானித்து (உன்னி), அதை ஆன்ம பட்சியாக அமைத்துக் (பன்னி) குண்டலியாம் அங்கியில் உதிக்கும் பட்சியை (சரத்தை) உள் மெய்யில்
(உண்மை) ஒலிக்க (உரைக்க) உதவும் கதைகாவியப் பொருளே காப்பாம்.

ஞானவெட்டியான்
http://siththan.com/