Saturday, December 27, 2008

சிவவாக்கியர் பாடல் - 90

90. தில்லையே வணங்கிநின்று தெண்டனிட்ட வாயுவை
எல்லையைக் கடந்துநின்று ஏகபோக மாய்கையோ
டெல்லையைக் கடந்துநின்று சொர்க்கலோக வெளியிலே
வெள்ளையுஞ் சிவப்புமாகி மெய்கலந்து நின்றதே.

வடக்கு எல்லை - இடகலை
தெற்கு எல்லை - பிங்கலை
நடு எல்லை - தில்லை - சுழுமுனை

உயிர் மூச்சானது தில்லையாகிய சுழிமுனையில் வணங்கி ஒடுங்கி நின்று விம்மிப் பூரித்து, மாயையின் எல்லையைக் கடந்து பிய்த்துக்கொண்டு வெளிவரும்போது சொர்க்கலோக வெளியாம் ஆகாயம் காணும்( ஆகாயம் கபாலக் குக்கைக்குள்ளேதான் உள்ளது!!!). ஆங்கே சிவப்பும்(சக்தி) வெள்ளையும்(ஞானமாம் சிவன்) சேர்ந்து சிவசக்தியாகும். அதனுடன் உயிர் கலக்கும்.

திருமந்திரம்
************
பூதல மேருப் புறத்தான தெக்கணம்
ஓதும் இடைபிங் கலையொண் சுழுனையாம்
பாதி மதியோன் பயில்திரு வம்பலம்
ஏதமில் பூதாண்டத் தெல்லையி னீறன்றே.

வெண்பா
********
ஆணவ மாமெருமை ஆனைகரி ஆம்மருள்காண்
ஏணஅரி மாவினையாம் ஏர்பரியும் - ஆணமார்
நற்செறிவாம் வெள்ளானை ஞானமாம் ஆனேறும்
இற்புகலன் பின்புருமேல் எண்.

விவேக சிந்தாமணி - 125

125.இந்திரன் பதங்கள் குன்று மிறையவர் பதங்கண்மாறு
மந்தர நிலைகள்பேற மறுகயல் வறுமையாகும்
சந்திரன் கதிரோன் சாயுந் தாரணியிற் றேசுமாளும்
அந்தணர் கருமங்குன்றில் யாவரே வாழ்வர் மண்ணில்.

(இப்படியும் கூறுவாருமுண்டு)

இந்திரன் பதமுங் குன்று மிறையவர் பதங்கள்மாறும்
மந்தர முதலா வுற்ற மலைகளின் நிலைக ணீங்கும்
சந்திரன் கதிரோன் சாய்வர் தரணியிற் றேயமாளும்
அந்தணர் கருமங் குன்றி னகிலமீ துயாவரே வாழ்வர்.

அந்தணர் - வேதியர்
கருமம் - செயல்கள்(வேதம் ஓதல் முதலியன)
குன்றின் - குறைந்தால்
இறையவர் - அரசன்
மந்தர நிலை - மந்தர மலை
தேயம் - தேசம்

வேதியர்கள் தத்தம் தொழிலான வேதம் ஓதல், ஓதுவித்தல், யாகம் செய்தல், திருமணம் முதலிய நற்கருமங்களையும், நீத்தாருக்கு(இறந்தவருக்கு) உரிய தேவ கருமங்களையும் செய்யாவிடில், இந்திரன் செல்வம் குறைந்து இந்திர பதவியும் பறிபோகும்; மந்தரம், கயிலை, இமயம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி, கந்தமாதனம் ஆகிய எட்டு மலைகளும் நிலைகெட்டு நிலை பெயர்ந்து விடும்; சூரியன் சந்திரன் ஆகியோர் தம் நிலைகெட்டுச் சாய்வார்; இப்பூமியில் உள்ள தேசங்கள் அழியும்; இன்னும் இவ்வுலகில் யார் வாழ்வார்?

கந்தர் கலிவெண்பா - 19

இந்நூல் குமர குருபர சுவாமிகளால் அருளப்பட்டது. அவர் பிறவியால் ஊமை. ஐந்தாம் அகவையில் திருச்செந்தூரில் ஊமைத்தன்மை நீங்கப்பட்டது. அப்பொழுது அங்கு அமர்ந்த முருகனைப் போற்றிப் பாடியது. இதனுள் சைவ சித்தாந்தக் கருத்து, கந்த புராணக் கதைச் சுருக்கம் ஆகியவை அடங்கியுள்ளன. இது புகழ் மாலை வடிவாக அமைந்துள்ளது.
************************************************************************

இளம்பருதி நூறா யிரங்கோடி போல
வளந்தருதெய் வீக வடிவும் - உளந்தனிற்கண்(டு)
ஆதரிப்போர்க் காருயிரா யன்பரகத் தாமரையின்
மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே - ஓதியவைந்து
ஓங்காரத் துள்ளொளிக்கும் உள்ளொளியா யைந்தொழிற்கும்
நீங்காத பேருருவாய் நின்றோனே - தாங்கரிய
மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்
தொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால்


பருதி - சூரியன்
ஆதரிப்போர் - விரும்பும் அன்பர்
அகத்தாமரை - இஅதயத் தாமரை
மீது - ஆகாயத்தில்
ஓதியவைந்து - அகரம், உகரம், மகரம், விந்து, நாதம் ஆகிய ஐந்தும்
மந்திரம் - மனத் திறன்
சோரி - இரத்தம்
வான் - பெரிய
பதம் - அடி
முடியா - முடியாக
தொந்தம் - தொடர்பு
வன்னம் - எழுத்து வழி
தொக்கு - தோல்
பந்தனை - அமைப்பு


நூறாயிரம் கோடி இளஞ்சூரியன் வீசும் ஒளிகொண்ட தெய்வத் தன்மை உடைய திருவடிவும், நெஞ்சிலே நினைந்து காணப்பெற்று அன்பு செலுத்துவோருக்கு அரிய உயிராக அவர்களின் உள்ளத் தாமரையில் வீற்றுள்ள தெய்வத் தன்மை பொருந்திய விளக்கொளி போன்றவனே!

அகரம், உகரம், விந்து, நாதம் ஆகியவைகளால் ஆகிய ஓங்கார தத்துவத்தில் விளங்கும் ஒளிக்கு உள்ளீடாகக் காணப்படும் அறிவு ஒளியாய், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழிலுக்கும் உரிய பிரமன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்னும் ஐந்து பெரிய உருவெடுத்து நின்றவனே!

தாங்கமுடியாத வலிமையுடைய மந்திரங்களே இரத்தமாகவும், பெருமையுடைய பதங்களே தலையாகவும், பதங்களாகத் தொகுக்கப்படுவதற்குரிய எழுத்துக்களே தோலாகவும், அமைப்பால்..........

பிரபுலிங்க லீலை - 2.34

நாராயணர் கூட்டம் வருதல்
*********************************
2.34 சங்க மொன்றுடன் ஒன்றுதாக் குறவொளி தழைக்குந்
துங்க நேமியும் அன்னவா யுறவலை சுருட்டும்
பொங்கு வேலைவந் தெனவரிக் கணங்களற் புதத்த
எங்கள் நாயகன் பேரவை யிடத்துவந் திறுத்த.

சங்கம் - சங்கு.
ஒளி தழைக்கும் - ஒளிபெருகும்.
துங்கநேமி - உயர்வினையுடைய ஆழி.
அன்னவாய் உற - அப்படியே நெருக்கமாகப் பொருந்த.
பொங்குவேலை - பொங்குகிற கடல்.
அரிக்கணங்கள் - நாராயணர்களின் கூட்டம்.
அற்புதத்த - வியக்கத்தக்கபடி.
வந்து இறுத்த - வந்து தங்கின.

சங்கும் ஒளிவீசும் வினை போக்கும் சக்கரமும் கொண்டு வலை வீசும் பொங்கு கடலில் பள்ளி கொண்ட எம்பெருமாளின் அடியார்கள் வியக்கத் தக்கவாறு எம்பெருமானாம் சிவனின் பேரவையில் வந்து தங்கின.

Friday, December 26, 2008

பிரபுலிங்க லீலை - 2.33

உருத்திரர்களின் கூட்டம் வருதல்
*****************************
2.33 தெள்ளு வார்திரைக் கங்கையுங் கங்கையுஞ் சிறிய
பிள்ளை யாகிய மதியமும் மதியமும் பெரிது
துள்ளும் ஓரிள நெளவியும் நெளவியுந் தொடர்பு
கொள்ளு மாறவன் நெருங்கின உருத்திர குழாங்கள்.

தெள்ளு - தெளிவு.
வார் - நீர்
திரை - புனல், ஆறு
மதியம் - பிறை
நெளவி - மான்
குழாம் - கூட்டம்.

இறைவன் கங்கை பிறை மான் முதலியவைகளை அணிந்துள்ளான். அவைகளை அணிந்துள்ள இறைவன் கூறாகிய உருத்திரர்களும், கங்கை கங்கையும், பிறை பிறையையும், மான் மானையும் நெருங்கும் வண்ணம் நெருங்கி அங்கே ஒன்றுகூடினர்.

கந்தர் கலிவெண்பா - 18

இந்நூல் குமர குருபர சுவாமிகளால் அருளப்பட்டது. அவர் பிறவியால் ஊமை. ஐந்தாம் அகவையில் திருச்செந்தூரில் ஊமைத்தன்மை நீங்கப்பட்டது. அப்பொழுது அங்கு அமர்ந்த முருகனைப் போற்றிப் பாடியது. இதனுள் சைவ சித்தாந்தக் கருத்து, கந்த புராணக் கதைச் சுருக்கம் ஆகியவை அடங்கியுள்ளன. இது புகழ் மாலை வடிவாக அமைந்துள்ளது.
******************************************************************

அதிர்கே டகஞ்சுழற்று மங்கைத் தலமும்
கதிர்வாள் விதிர்க்கும் கரமு - முதிராத
கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த
அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொற்
புரிநூலுங் கண்டிகையும் பூம்பட் டுடையும்
அரைஞாணுங் கச்சையழகும் - திருவரையும்
நாதக் கழலு நகுமணிப்பொற் கிண்கிணியும்
பாதத் தணிந்த பரிபுரமும் - சோதி


விதிர்க்கும் - அசைக்கும்
கொடியிடை - கொடி போல் மெலிந்த இடை
வேட்டு - விரும்பி
பொற்புரிநூல் - பொன்னால் செய்யப்பட்ட முப்புரி நூல்
பூம்பட்டு - பூவேலை செய்யப்பட்ட அழகிய பட்டு
கண்டிகை - உருத்திராக மாலை, பதக்கம்
கச்சை - இடையில் அணியும் துண்டு
நாதக் கழல் - ஒலிமிக்க வீரத் தண்டை
நகுமணி - விளங்கும் இரத்தினம்
பரிபுரம் - சிலம்பு

போரில் எடுத்த துரட்டி உடைய திருக்கையும், பகைவரை அழிக்கின்ற போரில் அதிர்ச்சி உண்டாக்கக் கூடிய கேடையம் சுழற்றும் திருக்கையும், ஒளி வீசுகின்ற வாளினை வீசும் திருக்கையும், ஆகிய பன்னிரண்டு திருக்கைகளை உடைய பெருமானே! முதுமை அடையாது இளமைத் தன்மையுடைய கும்பம் போன்ற மார்பகங்களையும் சிவந்த வாயையும் கொடி இடையும் உடைய மாதர்கள் அன்பால் தழுவிய அழகிய பொன் அணிகள் அணிந்த பரந்த மார்பும், பசும் பொன்னால் ஆகிய முப்புரி நூலும், உருத்திராக்க மாலையும், பூவேலை செய்யப்பட்ட அழகிய பட்டு ஆடையும் அரை ஞாணும் அரைக் கச்சையும் அணிந்த இடுப்பும், ஒலி உடைய வீரக் கழலும் விளங்குகின்ற இரத்தினங்கள் பதித்த பொன் கிண்கிணிச் சரமும் சிலம்பும் அணிந்த கால்களும்.........

Thursday, December 25, 2008

கந்தர் கலிவெண்பா - 17

தேவர்க் குதவும் திருக்கரமுஞ் சூர்மகளிர்
வேமக் குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாது
மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல்
சேர வணிந்த திருக்கரமும் - மார்பகத்தில்
வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்
உய்த்த குறங்கி லொருகரமும் - மொய்த்த
சிறுதுடிசேர் கையுமணி சேர்ந்ததடங் கையும்
கறுவுசம ரங்குசஞ்சேர் கையும் - தெறுபோர்

கரம் - கை
சூர்மகளிர் - அஞ்சத்தக்க தெய்வப் பெண்கள்
தொடையல் - மாலை
வாமமருங்கு - இடப்பக்கம்
குறங்கு - துடை
மொய்த்த - நெருங்கிய
தொடி - வீரவளை
கறுவு - சினத்தைக் காட்டும்
சமர் - போர்
தெறு - அழிக்கின்ற


கிடைத்தற்கு அரிய அமுதத்தைத் தேவர்களுக்கு கொடுக்கின்ற திருக்கையும், தேவ மங்கையர் விரும்பித் தழுவ அவர்களை அணைத்த திருக்கையும், குறைவில்லாது மழை பொழியச்செய்த தாமரை போன்ற திருக்கையும், பூமாலை திருமேனியில் பொருந்தும்படி அமைந்த திருக்கையும், தனது திருமார்பின் மீது வைத்துக்கொண்டிருக்கும் திருக்கையும், இடுப்பின் பக்கம் வைத்துக் கொண்டிருக்கும் திருக்கையும், தொடைமீது வைத்துள்ள திருக்கையும், நெருங்கின் வீர வளைகள் அணிந்த திருக்கையும், இரத்தினங்கள் பொருத்திய அணிகலன் அணிந்த திருக்கையும், சினம் மிகுந்து செய்யும் போரில்........

விவேக சிந்தாமணி - 124

இரு நண்பர்கள் தங்கள் கண்ட விலைமாதரை வருணித்தல்
******************************************************

124.சங்கரன் தேவி தமையன் மனைவி தனக்கு மூத்தாள்
ஆங்கவள் ஏறிய வாகனம் காணிவள் மற்றங்கவளோ
கொங்கைகள் ஈரைந்து உடையவளாயிக் குவலயத்தில்
எங்கு திரியும் வையிரவர் ஊர்தி என்றே நினையே.

நண்பனே! நான் கண்டவள் சிவனின் இல்லாள் பார்வதி; அவள் தமையன் திருமால்; திருமாலின் மனைவி இலக்குமி; அவள் தமக்கை மூ(த்த)தேவி; அவள் ஏறிய வாகனமாம் கழுதை என்று அறிக.

மற்றவன் கூறியது: நான் கண்டவள் வயிரவக் கடவுளின் வாகனம்; பத்து மார்பகம் உடையவள்; ஊரெங்கும் சுற்றி அலையும் நாய் என அறிக.

(இது இடைச் செருகலாம்)

பிரபுலிங்க லீலை - 2.32

தமோகுணத்தை உடைய மாதின் தருக்கு
**********************************************
2.32 எந்தை பாலுமை முக்குணங் களுமுரு வெடுத்து
வந்த மாதர்கள் அருகுநின் றனர்பணி மகிழூஉ
அந்த மாதருள் தமோகுண மாதுமை அருளால்
சந்த மாயையென் பெயர்கொடு தருக்கிநின் றனளே.


எந்தை - இறைவன்.
முக்குணம் - சத்துவகுணம், இராட்சத குணம், தாமதகுணம்.
பணிமகிழூஉ- குற்றேவல் செய்தலில் மகிழ்ந்து.

இறைவனுடன் உமை கொலுவீற்றுள்ளாள். அங்கு உமையம்மையைச் சுற்றி சத்துவகுணம், இராட்சத குணம், தாமதகுணம் என்னும் மூன்று குணங்களும் மாதர் உருவெடுத்துச் சுற்றி நிற்கின்றனர். அம்மாதர்களுள் தமோகுணமாது, இறைவியின் திருவருளை மிகுதியாகப் பெற்றிருந்ததால், நல்ல அழகையும் மாயை என்னும் பெயரையுங் கொண்டு இறுமாந்து நின்றாள்.

Wednesday, December 24, 2008

கந்தர் கலிவெண்பா - 16

பாச விருள்துரந்து பல்கதிரிற் சோதிவிடும்
வாச மலர்வதன மண்டலமும் - நேசமுடன்
போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோக மளிக்கு முகமதியும் - தாகமுடன்
வந்தடியிற் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்
தந்தருளுந் தெய்வமுகத் தாமரையும் - கொந்தவிழ்ந்த
வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த
பாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம்

பாச இருள் - கட்டாகிய ஆணவம்
துரந்து - துரத்தி
கதிரில் - கதிர் போல
புத்தேளிர் பூங்கொடி - தெய்வயானை அம்மை
தாகமுடன் - விரும்பியதை அடையும் அவாவுடன்
கொந்து - பூங்கொத்து
அவிழ்ந்த - விரிந்த
வேரி - தேன்
கடம்பு - கடப்பம்பூ
விரை - வாசனை
குரவு - குராமலர்
சயிலம் - மலை
பாரம் - பெருமை

பாசமாகிய இருளை ஓட்டிப் பல ஒளிக்கதிர்கள் வீசும், வாசனைப் பூப்போன்ற வட்டமான திருமுகமும், அன்புசெய்து தன்னை அனுபவிக்க விரும்பும் வள்ளியம்மைக்கும், தெய்வயான அம்மைக்கும் ஆசை ஊட்டுகின்ற சந்திரன் போன்ற திருமுகமும், திருவருளைப் பெறும் ஆசையுடன் தனது திருவடியில் வந்து சரணடைந்தவர்கள் மகிழும்படியாகப் பல வரங்களும் கொடுத்து அருளும் தெய்வத் தன்மை உடைய தாமரை போன்ற ஆறு திருமுகங்களும், விரிந்த பூங்கொத்துக்களை உடைய தேன் நிறைந்துள்ள கடப்பம் பூவும், வாசனை உடைய குரா மலரும் பொருந்தி விளங்குகின்ற பெரிய மலை போன்ற பன்னிரண்டு தோள்களும் உடைய பெருமானே!

பிரபுலிங்க லீலை - 2.31

உருத்திரகணிகையர் கூத்தியற்றுதல்

2.31 செப்ப மைந்ததண் ணுமையிசை தாளமென் சிறுதாள்
துப்ப மைந்தவொண் சதிதழீஇச் சுவையபல் காயம்
உப்ப மைந்தஇன் கறியென நடித்தனர் உழையோ
டொப்ப மைந்தகண் உருத்திர கணிகையர் உவந்து.

செப்பு அமைந்த - புகழமைந்த.
தண்ணுமை - மத்தளம்.
சிறுதாள் - சிறிய அடிகளது.
துப்பமைந்த - நன்மை பொருந்திய.
ஒண் சதி தழீஇ - அழகிய மிதிப்பினைத் தழுவி நடித்தனரென்க.
உழை - மான்
உவந்து மகிழ்ந்து


மானின் கண்களை ஒத்த கண்களை உடைய உருத்திர கணிகையர் புகழமைந்த மத்தள இசை போன்ற சிறிய அடிகளது நன்மை பொருந்திய அழகிய மிதிப்பினைத் தழுவி நடித்தனராம். எவ்வாறு?
இனிய கறியானது, எப்படி அளவு ஒத்த சுவையினை உடைய கூட்டுப் பொருட்களால் மகிழ்ச்சியை வரவழைக்கிறதோ, அவ்வாறு மகிழ்ச்சி உண்டாக்கும்படி மத்தளம் முதலியவற்றைத் தழுவி நடித்தனர்.

இது ஒப்பணி.

Tuesday, December 23, 2008

சிவவாக்கியர் பாடல் - 89

89. நெஞ்சிலே யிருந்திருந்து நெருக்கியோடும் வாயுவை
அன்பினா லிருந்துநீ ரருகிருத்த வல்லீரேல்
அன்பர்கோயில் காணலா மகன்று மெண்டிசைக்குளே
தும்பியோடி யோடியே சொல்லடா சுவாமியே!

தும்பி - வண்டு

நெஞ்சிற்கும் மூக்கிற்குமாய் ஓடும் உயிர் வாயுவைச் செயலாலும்(புணர்ச்சி) பேச்சாலும் வீணாக்காது உள்ளுக்குள்ளே அடக்கி மனதைச் சலனமின்றிக் கட்டுப்படுத்தி ஒருமுகப்படுத்த கோ(இறைவன் நடனமாடும்)இல் காணலாம்.அதை விடுத்து எட்டு திசைகளிலும் இறைவனைத் தும்பி இனத்து வண்டுபோலப் (பரக்கப் பரக்கத்) பறந்து தேடினும் பலனேதுமில்லை எனச் சொல்லடா சுவாமியே!

பிரபுலிங்க லீலை - 2.30

கலைமடந்தையர் வீணை மீட்டுதல்
**************************************

2.30 எடுத்து வீணைகள் உளர்நரம் பிதுமிட றிதுவென்
றடுத்த கேள்வராம் பிரமரும் அறிவரி தாகப்
படத்த பாம்பணி பரன்புடை மாதுசீர் பாட்டில்
தொடுத்து வாலிய கலைமடந் தையர்பலர் துதித்தார்.


உளர் - தெரிக்கப்படுகிற.
நரம்பு இது - நரம்பின் ஒலி இது.
மிடறு இது - கண்டத்தின் ஒலி இது.
அடுத்த - அக்கலை மடந்தையர்களுடன் தொடர்புள்ள.
கேள்வராம் - தலைவன்
பிரமர் - முதற்குரு.
படத்த - படத்தினையுடைய.
பரன்புடை மாது - இறைவன் பக்கத்தில் அமர்ந்துள்ள இறைவி.
சீர் - சிறப்பினை.
பாட்டில் தொடுத்து - பாட்டில் அமைத்து.
வாலிய கலை மடந்தையர் - வெண்ணிறமுடைய கலைமகளிர்.

படத்தை உடைய பாம்பினை அணியாகக் கொண்ட இறைவனின் அருகே அமர்ந்துள்ள இறைவியின் சீர் சிறப்பினை வெண்ணிறத்தை உடைய கலை மகளிர் வீணைகளை எடுத்துத் தெரிக்கப்படுகின்ற நரம்பின் ஒலி இது, கண்டத்தில் இருந்து பாடும்பொழுது வெளி வரும் குரல் ஓசை இது எனத் தத்தம் முதற்குருவாகிய தலைவன்கூடப் பிரித்து அறிய முடியாதவாறு துதித்தனர்.

நரம்பு ஒலியுங் கண்டத்தின் ஒலியுந் தத்தம் குருவால்கூடக் கண்டறியமுடியாதவாறு அவ்வளவு பொருத்தமுறப் பாடினராம்.

Monday, December 22, 2008

விவேக சிந்தாமணி - 123

இரு சகோதரிகள் தங்களின் தலைவனை வருணித்தல்
*************************************************
123.அரவிந்தநண்பன் சுதன்றம்பி மைத்துனன் அண்ணன்கையில்
வரமுந்தியாயுதம் பூண்டவன் காணுமற் றங்கவனே
பரமன்றி கிரியையேந்திய மைந்தன் பகைவன்வெற்பை
உரமன் றெடுத்தவன் மாற்றான்றன் சேவகனொண்தொடியே.

தமக்கை கூற்யது:
என் வீட்டிற்கு வந்தவன் தாமரைக்கு நண்பனாம் சூரியன், அவன் மைந்தன் கர்ணன், அவன் தம்பி அருச்சுனன், அவன் மைத்துனன் கண்ணன், அக்கண்ணனின் அண்ணன் பலராமன், அப்பலராமனின் கையில் உள்ள கலப்பை ஆயுதம், அதைத் தாங்கும் எருமைக்கடாவாகும்.

தங்கை கூறியது:
என் வீட்டிற்கு வந்தவன் சிவன் வசிக்கும் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணன், அவ்விராவணனின் பகைவனான இராமன், அவன் தொண்டனும், இராவணனை எதிர்த்து மலையைப் பெயர்த்தெடுத்துப் போர் புரிந்தவனுமாகிய அநுமனும் ஆகும்.

Friday, December 19, 2008

சிவவாக்கியர் பாடல் - 88

88. இறைவனா லெடுத்தமாடத் தில்லையம் பலத்திலே
அறிவினா லடுத்தகாய மஞ்சினா லமைந்ததே.
கருவிநாத முண்டுபோய்க் கழன்றவாச லொன்பதும்
ஒருவரா யொருவர்கோடி யுள்ளுளே யமர்ந்ததே.


தில்லை அம்பலத்திலே உள்ள இறைவன் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களை எடுத்து மனித உடலை அறிவினால் சமைத்தான். கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, மூக்குத் துளைகள் இரண்டு, வாய், சிறுநீர்த் துளை, மலத் துளை ஆகிய ஒன்பது வாயிலையும் ஒருசேர அடைக்கும் வல்லமை கோடியில் ஒருவரே!

திருமந்திரம்
***********
ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்
ஒன்பது நாடி ஒடுங்கவல் லார்கட்கு
ஒன்பது காட்சி யிலைபல வாமே

ஒன்பது துளைகளை உடைய இவ்வுடலிலே ஒன்பது நாடிகள் ஊடாடும். இந்த நாடிகளை கபாலக் குகையின் நாற்சந்தியில் ஒடுக்குவதுதான் ஒன்பது வாயில் அடைப்பதாகும். இங்கு காட்சிகள் என்பது உணர்வுகளைக் குறிக்கும்.

ஞானக் குறள்
*************
ஒன்பது வாசலுமொக்க வடைத்தக்கா
லன்பதி லொன்றா மரன்.

குருபிரான் சுட்டிக்காட்டும் (சூக்கும) வாயில்கள் ஒன்பதையும் (நவத்துவாரம்) அடைத்தால் ஐம்பது பீசங்களோடு ஐம்பத்தி ஒன்றாகச் சிவன் இருப்பான்.

இவ்வைம்பத்தொன்றுமே, சிதம்பர இரகசியமாகும்.

"ஈறுசெய் மூலமதில் நாலதாகும் எண்ணரிய லிங்கத்தே ஆறதாகும்
கூறியதோர் ஆலடியில் பத்ததாகும் குறிப்புடைய முக்கோணத்தில் - பனிரெண்டதாகும்
பேரரிய காலதனில் பதினாறதாகும் பேசரிய வாயதனில் ரெண்டதாகும்
மாரிலாக் குருபதத்தே ஒன்றதாகும் மன்னிய சீரட்சரங்க ளன்பத்தொன்றே
குருபதத்தி லொன்றென்பதே பரமசிவமாகும்."

கந்தர் கலிவெண்பா - 15

கந்தர் கலிவெண்பா - 15
**********************

புன்முருவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்
சென்மவிடாய் தீர்க்குந் திருமொழியும் - வின்மலிதோள்
வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்ஞுரனைத் தடிந்து
தெவ்வருயிர் சிந்துந் திருமுகமும் - எவ்வுயிர்க்கும்

ஊழ்வினையை மாற்றி யுலவாத பேரின்ப
வாழ்வுதருஞ் செய்ய மலர்முகமும் - சூழ்வோர்
வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்கும் கமல முகமும் - விடுத்தகலாப்


விடாய் = தாகம்
மலி = பொருந்திய
வில்மலி = ஒளி நிறைந்த
தடிந்து = கொன்று
தெவ்வர் = பகைவர்
ஊழ்வினை = முன்னர் செய்த வினை
மாற்றி = ஒழித்து
உலவாத = அழியாத
வடிக்கும் = கற்றுத் தெளியும்
முடிக்கும் = ஐயம் தவிர்த்து முற்றுப் பெறுவிக்கும்
விடுத்தகலா = விட்டு நீங்காத

பற்களில் புன்சிரிப்பு விளங்கப்பெற்ற அழகிய செவ்வல்லி மலர் போன்ற சிவந்த இதழுடைய வாயும், பிறவித் தாகத்தைத் நீக்கும் குளிர்ந்த திருவாக்கும், கொடிய வில் பொருந்திய தோளை உடைய அசுரர்கள் வணங்கிப் புகழுகின்ற கொடிய சூரபதுமனைக் கொன்று பகைவரின் உயிரைப் போக்கும் வீரமிக்க திருமுகமும், எல்லா உயிர்களுக்கும் முன் செய்த வினையை ஒழித்து அழியாத பேரின்ப வாழ்வைத் தருகின்ற சிவந்த தாமரை போன்ற திருமுகமும், ஆராய்ச்சி செய்து பழைய வேதம், ஆகமம் ஆகிய அருள் நூல்களைப் படிக்கின்றவர்கள் அவைகளில் தேர்ச்சி பெற்று ஆராய்ச்சி முற்றுப்பெறச் செய்யும் தாமரை போன்ற திருமுகமும், உயிர்களை விட்டு நீங்காத.....

2.29 - பிரபுலிங்க லீலை

இந்திராணிகள் சிற்றாலவட்டம் வீசுதல்

2.29 அரவு கெளவிய கதிரெனப் பட்டசாந் தாற்றி
பரவை அல்குல்வெண் முத்தவாள் நகைக்கொலை பயில்வில்
புருவ மென்மலர்க் குழற்சசி கோடிகள் புகன்று
மருவி அம்பிகை மருங்குநின் றசைத்தனர் மன்னோ.

சிற்றாலவட்டம் - விசிறி
அரவு கெளவிய கதிர் - பாம்பினாலே கெளவப்பெற்ற சுடர்(ஞாயிறு திங்கள்).
சாந்தாற்றி - சிற்றாலவட்டம்.
பரவை அல்குல் - பரப்பினையுடைய அல்குல்.
கொலை பயில் - கொலையைப் பழகுகின்ற.
வில்புருவம் - வில்லைப்போன்ற புருவம்
சசிகோடிகள் - கோடி இந்திராணிகள்.
புகன்று - வாழ்த்துரை கூறி.
மருவி - பொருந்தி.
மருங்கு - பக்கம்.
வாள்நகை - ஒளிபொருந்திய பற்கள்.

தங்கத்தால் செய்யப்பட்ட விசிறி பாம்பு விழுங்கும் சூரியன்.
முத்துக்களால் செய்யப்பட்ட விசிறி பாம்பு விழுங்கும் சந்திரன்.
ஆக சூரியனையும் சந்திரனையும் ஒத்த விசிறிகளால் கோடி இந்திராணிகள் வாழ்த்துப்பா கூறி அம்பிகையின் அருகே நின்று விசிறி வீசுகின்றனர். கோடி இந்திராணிகள் எப்படிபட்டவர் என வருணிக்கிறார். பரந்த அல்குல் உடையோர்; வெண்முத்துப்போல் ஒளிவீசும் பற்கள்; கொலைசெய்ய உதவும் வில்போல் புருவம்.


ஈண்டு அரவு கெளவிய கதிர் எனப் பொதுவாகக் கூறினார். சிற்றாலவட்டங்கட்கு பாம்பின் உடல்தான் காம்பு. இது மயக்கவணி.

122.விவேக சிந்தாமணி

122.அறங்கெடு நிதியுங்குன்று மாவியு மாயுங்காய
நிறங்கெடு மதியும்போகி நீண்டதோர் நரகிற்சேர்க்கு
மறங்கெடு மறையோர் மன்னன்வணிகர் நல்லுழவோரென்றுங்
குலங்கெடு வேசைமாதர் குணங்களை விரும்பிவோர்க்கே.

இப்படியுங் கூறுவர்:

அறங்கெடு நிதியுங் குன்றுமாவியு மாயுங்காய
நிறங்கெடு மதியும்போகு நீண்டதோர் நரகங்கிட்டும்
மறங்கெடுங் கீர்த்தி நீங்கும் வசைமொழி பரவுஞ்சாதித்
திறங்கெடும் வேசைமாதர் சேர்க்கையை விரும்பினோர்க்கே.

மறையோர் = வேதியர்
வேசை = விலைமாதர்
காயம் = உடல்
மதி = அறிவு
மறம் = வீரம்
கீர்த்தி = புகழ்
திறம் = மேன்மை


மனித இனத்தை, வேதியர், மன்னன், வணிகர், உழவர் ஆகிய பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.(இதில் எமக்கு உடன்பாடு இல்லை). ஆகவே உடல் ஆசைக்காக பரத்தையரை நாடி விரும்பும் மனுக்குலத்தில் உள்ள அனைவரின் தருமம் கெடும்; ஈட்டிய பொருளும் கெட்டுக் குறைந்துவிடும்; விந்து விரையத்தால் சக்தி குறைந்து வீரம் கெட்டு உயிரும் போகும்; ஊரில் உள்ளவர்களின் ஏளனம் கூடும்; மேன்மை குறையும்; சக்தி குறைவால் உடல் அழகு குன்றும்; அறிவு மழுங்கும். இவை அழிந்தால் நீண்ட நெடிய நரகு கிட்டும்.(இவ்வுலகில் இருந்து அடையும் இன்னல்களே நரகாகிவிடும்)

Wednesday, December 17, 2008

வாழ்த்துகட்கு வணக்கம்

எளியோனின் (நானே மறந்துவிட்ட)பிறந்தநாளை நினைவுகூர்ந்த "சுவரொட்டி" கோவி கண்ணனுக்கு நன்றி.
http://sangamwishes.blogspot.com/2008/12/wishes_12.html

வாழ்த்துகள் கூறிய விஜய், சுரேஷ், இளா, தெகா, குமரன், தங்கை துளசி கோபால், யோகன் ஆகிய அனைவருக்கும் நன்றி.

Monday, December 01, 2008

121 - விவேக சிந்தாமணி

121.வேலியானது பயிர்தனை மேய்ந்திட விதித்தாற்
காலனானவ னுயிர்தனைக் கவர்ந்திட நினைத்தால்
ஆலமன்னையர் பாலகர்க் கருத்துவாரானால்
மேலிதோர்ந்துடன் யார்கொலோ விலக்குவர் வேந்தே.

ஆலம் = விடம்
அருத்துவர் = ஊட்டுவர்
ஓர்ந்து = அறிந்து
விலக்குவர் = தடுப்பவர்

வேந்தே!
காவல் காக்கும் வேலியே விலங்குகளை அழைத்துத் தன் காவலுக்குட்பட்டுள்ள பயிரை மேய்ந்துகொள்ளுங்கள் என்றால் பயிர் யாரிடம் முறையிடும்? உயிர் கவருவதையே தொழிலாக உடைய மறலியாம் எமன் எவ்வுயிரைக் கவர்ந்தாலும் அவன் செயலைத் தடுத்து நிறுத்த இயலாது. பாசமும் நம்பிக்கையும் உடைய தாயே தன் குழவிக்கு நஞ்சூட்ட நினைத்தால், அக் கொடிய செயலை அறிந்து குழவியால் தடுக்க இயலாது. இவைபோல் குடிமக்களைக் காக்கவேண்டிய மன்னனே அவர்களை அழிக்க நினைத்தால், அக்குடிமக்களால் அதைத் தடுக்க இயலாது.
ஆகவே, அரசன் தன் குடிகளைக் காக்கவேண்டுமேயன்றி அழிக்க நினையாதிருத்தல் வேண்டும்.