Friday, January 16, 2009

பிரபுலிங்க லீலை - 2.36

இந்திரர்கள் வருகை
****************

2.36 அயனு மாயனும் எனினுயர்ந் தவரென்ப தன்றிக்
கயிலை நாயகன் அமர்திரு வோலக்கங் காண்பான்
நயனம் ஆயிரம் இலாமையி னதிகன்நா னென்று
வயிர வான்படை யிந்திரர் எண்ணிலர் வந்தார்.

அயனும் - நான்முகனும்.
மாயனும் - திருமாலும்.
நயனம் - கண்.
வயிரவன் படை - சிறந்த வச்சிரப்படை.

நான்முகனும் திருமாலும் செயலால் உயர்ந்தவர் யார் என அறிய அடிமுடி தேடி முடிவு அறியாது கயிலை நாதனின் திருச்சந்நிதி அடைந்தனர். ஆயிரங் கண்களாற் பார்க்கப்படுஞ் செயலால் நானே சிறந்தவன் என எண்ணி வச்சிரப்படை தாங்கிய இந்திரரும் அங்கே வந்தனர்.

சிந்தனைக்கு - 1

சிந்தனைக்கு - 1
***************

பரம்பரை பரம்பரையாக சமக்(ஸ்)கிருத மொழி மூலமே சமய போதனைகள் இந்தியாவில் கற்பிக்கப்பட்டன. அம்மொழிமூலம் சமயக் கல்வி கற்பிப்பதை புத்தர் புறக்கணித்து விட்டார். ஏனெனில், சமக்(ஸ்)கிருத மொழி மூலம் சமயக் கல்வி கற்பித்தால் அம்மொழியில் உள்ள மூடநம்பிக்கைகள் தம்மைப் பின்பற்றுவோருக்கு ஏற்படக்கூடும். ஆகவே அதற்கு வாய்ப்புத் தரலாகாது எனக் கருதினார்.

- விவேகாநந்தர்

பழமொழி நானூறு - பாயிரம்

பாயிரம்
************

பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப்
பண்டைப் பழமொழி நானூறும் - கொண்டினிதா
முன்றுறை மன்னன் நான்கடியும் செய்தமைத்தான்
இந்துறை வெண்பா இவை.

அசோக மரத்து நிழலில் எழுந்தருளியுள்ள அருகக் கடவுளின் திருவடி தொழுது, பழைய பழமொழிகளைத் தழுவி இந்நானூறு பழமொழிகளையும் முன்றுறையரையனாரே இனிய பொருள் துறைகள்(அறம், பொருள், இன்பம், வீடு) அமைந்த நான்கு அடிகள் கொண்ட வெண்பாக்களாய் சுவை சொட்ட யாத்து(பாடி) அமைத்தான்.

Sunday, January 04, 2009

விவேக சிந்தாமணி - 126

126.என்னனைக் கன்று முத்தனைக் குனிக்கு
மிறைவனை யணைக்கு மேயன்று
மன்னனைக் கன்று பிள்ளைக் குதவா
வன்பினால் வருந்தி வாடுவனோ
முன்னனைக் கொன்று பின்னனைப் புரந்த
முதுபகை வன்பிதா வுறாமல்
கன்னனைக் கொன்று விசயனைப் காத்த
கவத்துவ இராம கிருட்டிணனே.

(இடைச் செருகல்)


முத்துவுக்கும், கரும்பை வில்லாக உடைய மன்மதனுக்கும் தாயாய் விளங்கும் கடலைத் தாயாய் உடைய இலக்குமியை அணைப்பவன் நாரணனே! பிள்ளைக்கு உதவ இயலாத தயரதனின் பிள்ளை இராமனும் அவனே! வாலியைக் கொன்று சுக்கிரீவனைக் காத்து அப்பழி அவன் தந்தை இந்திரனை அடையவிடாதபடி தடுத்தவனும் அவனே! கர்ணனைக் கொன்று அருச்சுனனைக் காத்ததும் கபடம் நிறைந்த இராம கிருட்டிணனே!

சிவவாக்கியர் பாடல் - 91

91. உடம்புயி ரெடுத்ததோ வுயிருடம் பெடுத்ததோ
உடம்புயி ரெடுத்தபோ துருவமேது செப்புவீர்
உடம்புயி ரிறந்தபோ துயிரிறப்ப தில்லையே
உடம்புமெய் மறந்துகண் டுணர்ந்துஞான மோதுமே.

உடலுக்கு உயிர் வந்ததா? அல்லது உயிருக்கு உடல் வந்ததா? அப்படி உடலுக்குள் உயிர் நுழைந்தது என்றால் அந்த உயிருக்கு உருவம் எது எனக் கூறுவீர். உடல் இறந்த பின்னரும் உயிர் இறப்பது இல்லை. ஆகையால் அந்த ஆன்மாவாகிய உயிர் ஆவியின் ஓட்டத்தில் சலனமற்ற கவனத்தை வைத்து ஒருமுகப்படுத்தி ஞானத்தை ஓதுவீர்களே!

திருமந்திரம்
*************

இன்புறு வண்டிங் கினமலர் மேற்போய்
உண்பது வாச மதுபோல் உயிர்நிலை
இன்புற நாடி நினைக்கிலு மூன்றொளி
கண்புற நின்ற கருத்துள்நில் லானே.

இன்புறும் இயல்பு கொண்ட வண்டுகள் பூவின் நறுமணம் கண்டு அம்மணத்தின் வழியே சென்று மலரில் உள்ள மணம் நிறைந்த மதுவினை உண்ணும். மூன்று ஒளியாம் சூரிய, சந்திர, அக்கினி கலைகளை உடைய உடலில் உயிர் நிலை தங்கும் கருத்தினைக் கண்டு அங்கு நாடியிருத்தல் வேண்டும். புறத்தில் மூன்று ஒளியாய் விளங்கும் திருவடிகளின் உள்ளே சந்திக்கும் இடத்தில்தான் உயிர்நிலை உள்ளது.

உயிரது வேறா யுணர்வெங்கு மாகும்
உயிரை யறியில் உணர்வறி வாகும்
உயிரன் றுடலை விழுங்கு முணர்வை
அயரும் பெரும்பொரு ளாங்கறி யாரே.

உயிர் உடல் இரண்டும் வெவ்வேறு என்னும் உண்மை புலப்பட்டால் உணர்வுநிலை உடலெங்கும் தங்கும். அதுபோல் உயிரின் உண்மையை அறிய அவ்வுணர்வே மெய்யுணர்வு ஆகும். உடலை நீங்கச் செய்வது உயிர் இல்லை. இவ்வுண்மையை அறிவிக்காமல் மறைத்து வைத்திருப்பதும் பெரும்பொருளே.

பிரபுலிங்க லீலை - 2.35

நான்முகர்கள் வருதல்
********************

2.35 முகங்கள் நான்கிலும் நான்மறை விதிமுறை முழங்க
உகந்து கையிரு நான்குநான் குச்சியிற் குவியச்
சகந்த ருஞ்செயற் பிரமர்கள் அளப்பிலர் தையல்
பகுந்த மேனியன் அவையிடைப் புகுந்தனர் பரவி.


விதிமுறை - சட்ட திட்டங்களின் பாடல்
உகந்து - விரும்பி, உயர்ந்து
சகம் தரும் - உலகங்களைப் படைக்கும்.
பகுந்த - பகிர்ந்த, பங்குகொண்ட.
தையல் - இறைவி.
பரவி - புகழ்தல், வணங்கல்

நான்கு முகத்தாலும் நான்கு வேதங்களின் பொருட்கள் முழங்க, நான்கு தலை உச்சியிற்மேல் குவித்த எட்டுக் கைகளுடன் உலகங்களைப் படைக்கும் பிரமர்கள் அளவிட முடியாத அளவு இறைவி பங்குகொண்ட இறைவனின் அவையில் புகழ்ந்து வாழ்த்திப் புகுந்தனர்.