Sunday, January 04, 2009

சிவவாக்கியர் பாடல் - 91

91. உடம்புயி ரெடுத்ததோ வுயிருடம் பெடுத்ததோ
உடம்புயி ரெடுத்தபோ துருவமேது செப்புவீர்
உடம்புயி ரிறந்தபோ துயிரிறப்ப தில்லையே
உடம்புமெய் மறந்துகண் டுணர்ந்துஞான மோதுமே.

உடலுக்கு உயிர் வந்ததா? அல்லது உயிருக்கு உடல் வந்ததா? அப்படி உடலுக்குள் உயிர் நுழைந்தது என்றால் அந்த உயிருக்கு உருவம் எது எனக் கூறுவீர். உடல் இறந்த பின்னரும் உயிர் இறப்பது இல்லை. ஆகையால் அந்த ஆன்மாவாகிய உயிர் ஆவியின் ஓட்டத்தில் சலனமற்ற கவனத்தை வைத்து ஒருமுகப்படுத்தி ஞானத்தை ஓதுவீர்களே!

திருமந்திரம்
*************

இன்புறு வண்டிங் கினமலர் மேற்போய்
உண்பது வாச மதுபோல் உயிர்நிலை
இன்புற நாடி நினைக்கிலு மூன்றொளி
கண்புற நின்ற கருத்துள்நில் லானே.

இன்புறும் இயல்பு கொண்ட வண்டுகள் பூவின் நறுமணம் கண்டு அம்மணத்தின் வழியே சென்று மலரில் உள்ள மணம் நிறைந்த மதுவினை உண்ணும். மூன்று ஒளியாம் சூரிய, சந்திர, அக்கினி கலைகளை உடைய உடலில் உயிர் நிலை தங்கும் கருத்தினைக் கண்டு அங்கு நாடியிருத்தல் வேண்டும். புறத்தில் மூன்று ஒளியாய் விளங்கும் திருவடிகளின் உள்ளே சந்திக்கும் இடத்தில்தான் உயிர்நிலை உள்ளது.

உயிரது வேறா யுணர்வெங்கு மாகும்
உயிரை யறியில் உணர்வறி வாகும்
உயிரன் றுடலை விழுங்கு முணர்வை
அயரும் பெரும்பொரு ளாங்கறி யாரே.

உயிர் உடல் இரண்டும் வெவ்வேறு என்னும் உண்மை புலப்பட்டால் உணர்வுநிலை உடலெங்கும் தங்கும். அதுபோல் உயிரின் உண்மையை அறிய அவ்வுணர்வே மெய்யுணர்வு ஆகும். உடலை நீங்கச் செய்வது உயிர் இல்லை. இவ்வுண்மையை அறிவிக்காமல் மறைத்து வைத்திருப்பதும் பெரும்பொருளே.

0 Comments: