2.28 அன்னம் ஒன்றறி யாமுடிக் கங்கையை யறிந்து
துன்ன வந்தல மருமெகி னங்களின் தொகுதி
என்ன அம்புயத் தொருசத கோடியிந் திரைகள்
முன்ன டைந்துவெண் கவரிகள் இரட்டினர் முறையால்.
துன்ன - நெருங்க.
அலமரும் - சுழலுகின்ற.
எகினங்களின் தொகுதி - அன்னப்பறவைகளின் கூட்டம்.
அம்புயத்து- தாமரை மலர்களில் உள்ள.
சதகோடி - நூறுகோடி.
இந்திரைகள் - திருமகளிர் (இலக்குமியர்).
கவரிகள் - சாமரைகள்.
இரட்டினர் - புறத்தும் வீசினார்கள்.
பிரமன் அன்னப்பறவை யுருக்கொண்டு தேடி யறியாத முடி- சிவ பெருமான் முடியாதலால் அன்னம் ஒன்றறியா முடி எனச் சிறப்புக் கூறினர்.
திருமகளிர் கவரி வீசுதல்
சாமரைகள் வெண்ணிறமுடையன. அவைகளை அசைத்து வீசுதல் அன்னப் பறவைகள் கூட்டம் சுழல்வதை ஒத்துள்ளன. முன்னே ஓரன்னத்தாற் காணமுடியாத திருமுடியில் உள்ள கங்கையை அறிந்து அதில் தங்குவதற்குப் பல அன்னங்கள் வந்து சுழல்வதுபோல் தாமரை மலரில் உள்ள நூறுகோடி இந்திரைகள் வெண்சாமரைகளை(கவரி) வீசினர்.
Saturday, November 29, 2008
2.28 - பிரபுலிங்க லீலை
Posted by ஞானவெட்டியான் at 3:33 PM 0 comments
Labels: பிரபுலிங்க லீலை
சிவவாக்கியர் பாடல் - 87
87.சோதியாதி யாகிநின்ற சுத்தமும் பலித்துவந்து
போதியாத போதகத்தை வோதுகின்ற பூரணா
வீதியாக வோடிவந்து விண்ணடியி னூடுபோய்
ஆதிநாத னாதனென் றனந்தகால முள்ளதே.
போதியாத = விண்டு உரைக்காத (சொல்லாத)
போதம் = ஞானத் தெளிவு
விண் = ஆகாயம்
பக்தி:
எல்லாவற்றிற்கும் முதலானதும் சோதியாகவும் இருந்து அனைத்து செல்வங்களையும் வழங்கும் (இதுவரை யாரும் விண்டுரைக்காத) ஞானத் தெளிவை ஓதும் பரிபூரணமே!
உன்னைத் தேடி வீதி வழி ஓடிவந்து ஆகாயத்தின் அடியில் உட்சென்று ஆதிநாதன் நீதான் என்றுணர இன்னும் எத்தனை காலமுள்ளதோ?
சூக்குமம்:
வீதி = உடலினுள் செல்லும் நாடி நரம்புகள்(குழல்கள்)
ஆகாயத்தின் அடி = தலையினுள்
Posted by ஞானவெட்டியான் at 12:45 PM 0 comments
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Friday, November 28, 2008
விவேக சிந்தாமணி - 120
120.ஒருவனே யிரண்டு யாக்கை யூன்பொதியான நாற்றம்
உருவமும் புகழுமாகு மதற்குள் நீயின்பமுற்று
மருவிய யாக்கை யிங்கே மாய்ந்திடு மற்றியாக்கை
திறமதா யுலகமேற்றச் சிறந்து பின்னிற்குமன்றே.
இப்படியும் கூறுவர் சிலர்:
ஒருவனுக் கிரண்டி யாக்கை யுண்டொன்றூன் பொதிந்த நாற்ற
உருவமாம் புகழொன்றாகு முலகிலே யின்பமுற்று
மருவிய பூததேக மாய்ந்திடு மற்றொன்றென்றுந்
திருவுட னுலகமேத்தச் சிறந்துபின் னிற்குமன்றே.
யாக்கை = உடல்
உற்று = அனுபவித்து
ஒரு மனிதனுக்கு இரு உடல்கள் உண்டு. ஒன்று சதைப்பிண்டத்தால் ஆகிய பூத உடல்(பொய்யுடல்); மற்றொன்று தன் செயல்களால் கிட்டும் புகழ் உடல்.
நாற்றமுடைய நிலையற்ற பொய்யுடல் இவ்வுலக வாழ்வின் நிலையற்ற சுகங்கள் அனைத்தையும் நுகர்ந்து அழிந்து விடும்.
புகழ் உடம்போ எக்காலத்தேயும் அழகோடு உலகில் உள்ள ஆன்றோர் வாழ்த்த நிலைபெற்றுச் சிறந்து விளங்கும்.
ஆகவே, பூதௌடல் அழிவதற்கு முன்னமே அதன் உதவிகொண்டு என்றும் நிலைபெறும் புகழுடலைத் தேடிக் கொள்ளல் வேண்டும்.
Posted by ஞானவெட்டியான் at 11:45 AM 0 comments
Labels: விவேக சிந்தாமணி
Wednesday, November 26, 2008
கந்தர் கலிவெண்பா - 14
கந்தர் கலிவெண்பா - 14
**********************
தோய்ந்த நவரத்னச் சுடர்மணியாற் செய்தபைம் பொன்
வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்த பிறைத்
துண்டமிரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய
புண்டரம் பூத்தநுதற் பொட்டழகும் - விண்ட
பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்(கு)
அருள்பொழியுங் கண்மலர் ஈராறும் - பருதி
பலவு மெழுந்துசுடர் பாலித்தாற் போலக்
குலவு மகரக் குழையும் - நிலவுமிழும்
தேய்ந்த பிறை = குறந்த பிறை(நிலா)
துண்டம் = துண்டு, பிளவு
நிரை = வரிசை
புண்டரம் = கோடு பதித்தது போன்ற நுதல்
புண்டரம் பூத்த நுதல் எனக் கொள்க.
விண்ட = விரிந்த
பருவ மலர் = நாள் மலர்
புண்டரிகம் = தாமரை
பருதி = சூரியன்
சுடர் பாலித்தல் = ஒளி வீசுதல்
குலவும் = அசையும்
நிலவு = ஒளி
குழை = குண்டலம்
ஒன்பது வகை இரத்தினங்களில் ஒளி மிகுந்த மணிகள் பதித்துச் செய்யப்பட்டதாய்ப் பசும் பொன்னாலாகிய கதிர் வீசுகின்ற இரத்தினக் கிரீடமும், (கலைகள்) தேய்ந்தபடியால் பிறையாக விளங்கும் ஆறு சந்திரர்களை வரிசையாக வைத்தாற்போன்ற ஆறு நெற்றிகளும், திருநீற்றுக் குறிகள் இடப்பெற்ற அவைகளில் தாமரைப்பூ பூத்தாற்போல விளங்குவதாய்த் திருவருள் பொழிகின்ற திருக்கண்கள் பன்னிரண்டும், பல சூரியர்கள் தோன்றிக் கதிர் வீசினாற்போல அசையும் மகர குண்டலங்களும், நிலவுபோல் ஒளி வீசும்...
Posted by ஞானவெட்டியான் at 12:15 PM 0 comments
Labels: கந்தர் கலிவெண்பா
Saturday, November 22, 2008
2.27 - பிரபுலிங்க லீலை
2.27 முல்லை யந்தொடை அருந்ததி முதலெழு முனிவர்
இல்ல றம்புரி துணைவிய ராமெழு வரும்போய்
வல்ல ரும்பெனக் குவிமுலைப் பனிமலை மகளைச்
சொல்ல ருந்துதி செய்துவாழ்த் தெடுத்தனர் தொழுது.
முல்லை அம்தொடை - அழகிய முல்லைப் பூமாலை.
வல்-சூதாடு கருவி.
அரும்பு - தாமரைமொட்டு.
வாழ்த்து எடுத்தனர் - வாழ்த்துப்பாடினர்.
சொல் அரும் துதி செய்து - சொல்லால் அருமையான துதி புரிந்து.
முல்லைமாலை கற்புடைய மாதர்க்குரியது.
முதல் ஏழு முனிவர்களின் இல்லத்தரசிகளாம் அருந்ததி முதலிய எழுவர். இவர்கள் அழகிய முல்லை மலர்களால் தொடுக்கப்பட்ட மலர்மாலை அணிந்து பனிமலை மகளாம் பார்வதியிடம் செல்லுகின்றனர். பார்வதியின் அழகினை சூதாடும் சொக்கட்டானின் முனை எப்படிக் கூர்மையாய் உள்ளதோ அங்ஙனம் உள்ள குவிமுலையாள் என வருணிக்கிறார். கற்புடை மாதர் எழுவரும் அங்கு சென்று சொல்லற்கரிய சொற்களால் துதித்து வணங்கி வாழ்த்துப் பா பாடினர்.
Posted by ஞானவெட்டியான் at 11:09 AM 0 comments
Labels: பார்வதி, பிரபுலிங்க லீலை






