Friday, November 28, 2008

விவேக சிந்தாமணி - 120

120.ஒருவனே யிரண்டு யாக்கை யூன்பொதியான நாற்றம்
உருவமும் புகழுமாகு மதற்குள் நீயின்பமுற்று
மருவிய யாக்கை யிங்கே மாய்ந்திடு மற்றியாக்கை
திறமதா யுலகமேற்றச் சிறந்து பின்னிற்குமன்றே.

இப்படியும் கூறுவர் சிலர்:

ஒருவனுக் கிரண்டி யாக்கை யுண்டொன்றூன் பொதிந்த நாற்ற
உருவமாம் புகழொன்றாகு முலகிலே யின்பமுற்று
மருவிய பூததேக மாய்ந்திடு மற்றொன்றென்றுந்
திருவுட னுலகமேத்தச் சிறந்துபின் னிற்குமன்றே.

யாக்கை = உடல்
உற்று = அனுபவித்து

ஒரு மனிதனுக்கு இரு உடல்கள் உண்டு. ஒன்று சதைப்பிண்டத்தால் ஆகிய பூத உடல்(பொய்யுடல்); மற்றொன்று தன் செயல்களால் கிட்டும் புகழ் உடல்.
நாற்றமுடைய நிலையற்ற பொய்யுடல் இவ்வுலக வாழ்வின் நிலையற்ற சுகங்கள் அனைத்தையும் நுகர்ந்து அழிந்து விடும்.
புகழ் உடம்போ எக்காலத்தேயும் அழகோடு உலகில் உள்ள ஆன்றோர் வாழ்த்த நிலைபெற்றுச் சிறந்து விளங்கும்.
ஆகவே, பூதௌடல் அழிவதற்கு முன்னமே அதன் உதவிகொண்டு என்றும் நிலைபெறும் புகழுடலைத் தேடிக் கொள்ளல் வேண்டும்.

0 Comments: