Wednesday, November 26, 2008

கந்தர் கலிவெண்பா - 14

கந்தர் கலிவெண்பா - 14
**********************

தோய்ந்த நவரத்னச் சுடர்மணியாற் செய்தபைம் பொன்
வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்த பிறைத்
துண்டமிரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய
புண்டரம் பூத்தநுதற் பொட்டழகும் - விண்ட
பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்(கு)
அருள்பொழியுங் கண்மலர் ஈராறும் - பருதி
பலவு மெழுந்துசுடர் பாலித்தாற் போலக்
குலவு மகரக் குழையும் - நிலவுமிழும்


தேய்ந்த பிறை = குறந்த பிறை(நிலா)
துண்டம் = துண்டு, பிளவு
நிரை = வரிசை
புண்டரம் = கோடு பதித்தது போன்ற நுதல்
புண்டரம் பூத்த நுதல் எனக் கொள்க.
விண்ட = விரிந்த
பருவ மலர் = நாள் மலர்
புண்டரிகம் = தாமரை
பருதி = சூரியன்
சுடர் பாலித்தல் = ஒளி வீசுதல்
குலவும் = அசையும்
நிலவு = ஒளி
குழை = குண்டலம்

ஒன்பது வகை இரத்தினங்களில் ஒளி மிகுந்த மணிகள் பதித்துச் செய்யப்பட்டதாய்ப் பசும் பொன்னாலாகிய கதிர் வீசுகின்ற இரத்தினக் கிரீடமும், (கலைகள்) தேய்ந்தபடியால் பிறையாக விளங்கும் ஆறு சந்திரர்களை வரிசையாக வைத்தாற்போன்ற ஆறு நெற்றிகளும், திருநீற்றுக் குறிகள் இடப்பெற்ற அவைகளில் தாமரைப்பூ பூத்தாற்போல விளங்குவதாய்த் திருவருள் பொழிகின்ற திருக்கண்கள் பன்னிரண்டும், பல சூரியர்கள் தோன்றிக் கதிர் வீசினாற்போல அசையும் மகர குண்டலங்களும், நிலவுபோல் ஒளி வீசும்...

0 Comments: