Wednesday, January 13, 2010

திருவெம்பாவை - 8

நாள் எட்டு -பாடல் எட்டு

கோழி சிலம்புச் சிலம்பும் குருகுஎங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.

கோழிகள் கூவுகின்றன; பறவைகள் ஏழு வகை சுரங்களில் இசைபாடுகின்றன; வெண்சங்குகள் முழங்குகின்றன; உவமையில்லாத பரஞ்சோதியாம், உவமையில்லாத கருணையாம், உவமையில்லாத மேலாம் பொருளாம் சிவனை நாங்கள் பாடிக்கொண்டுள்ளோம். இவை யாவும் உன் செவியில் விழவில்லையோ? நீ வாழ்ந்திருப்பாயாக. இதுவும் ஓர் உறக்கமோ? சொல்; கேட்போம். கருணைக்கடலாம் சிவனிடம் அன்பு வைப்பது இம்முறையில்தானோ? ஊழிக் காலத்தில் அனைத்தும் ஒடுங்குகையில் எஞ்சியிருப்பவன் அவன் ஒருவனே! அருட்சக்தியாகிய உமை அம்மையை இடப்பங்கில் எப்போதும் கொண்டவன் அவன். அத்தகையவனின் சிறப்பைப் பாடுகிறோம். தோழி! நீ ஓர்ந்து பார்த்து ஏற்றுக்கொள்.

பரஞ்சோதி நாயகனின் ஒப்பற்ற பெருங்கருணைத் திறன்தான் இப்பாடலின் பொருள்.

இப்பாடல் தாமச குணத்தைச் சுட்டிக்காடுகிறது. என்னதான் கண்ணுக்கும் கருத்துக்கும் எளிதாக எட்டும்படி உயர் மதிப்புடையவை வலியக் கிடைத்தாலும் தாமத குணமுடையவர்கள் அதைத் தெரிந்து கொள்வதில்லை. அடியார்கள் சத்துவ குணத்தினர்க்கே வழி காட்ட வல்லவர்கள். அவர்கள் கூட்டத்திலே தாமச குணம் இருக்கலாமா?

பாவை நோன்பிருக்க முன் நிற்கும் கன்னியரில் ஒருத்தி அப்படி ஆகிவிட்டாளே என்ற ஐயத்தின் வெளிப்பாடே இப்பாடல்.

இப்படியாகப் பாவையர் எழுப்பும் பாவை வேறு யாருமில்லை. இறை நாட்டமின்றி ஆணவம் கன்மம் மாயை என்ற மல இருள் உற்ற உறங்கும் நம்மைத்தான் மணிவாசகர் இப்பாடலில் உருவகிக்கிறார்.

பொழுது புலர்வது போல அறியாமை இருள் நீங்கி ஞான ஒளி உதயமாக வேண்டும் என்பதும் இந்த உதயத்துக்கு உறக்கம் நீங்கிய அன்பு இன்றியமையாதது என்பதும் அவன் அருளால் அவன் தாள் வணங்கி இந்த அன்பை அடையவேண்டும் என்பதும் இப்பாடலின் உட்பொருளாகும்.

இப்பாடலின் சிறப்பு நல்லன நாடும் ஆன்மாவின் விழிப்பிற்கு காலம், களம், இனம் என்ற முவ்வகையிலும் சரியான வாய்ப்பு வாய்த்துளது என்று உணர்த்துகிறது.

ஞானச் சேவலின் குரல், குருவின் மணிவாசகம், வெண்சங்கின் ஒலி - இது காலத்தைக் குறித்தது.
மார்கழி மாதத்து நோன்பு இடத்தைக் குறித்தது.
அறனறிந்து மூத்த அறிவுடையார் தோழியர். அவர்கள் இனத்தைக் குறித்தனர்.

0 Comments: