Wednesday, January 13, 2010

திருவெம்பாவை - 7

நாள் ஏழு - பாடல் ஏழு

அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுதுஎன்று எல்லாமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

அம்மா! இப்படியும் சில இயல்புகள் உன்னிடம் உள்ளனவா? அமரர் அனைவராலும் நினைத்தற்கரியவனும் ஒப்புயர்வு அற்றவனும், பெருஞ்சிறப்பை உடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளி வருதற்கு அடையாளமாகக் "காளம்" ஊதும் ஒலி மடுத்தவுடன் "சிவசிவ" என நீ வாய் திறப்பாயே! "தென்னா" என அவன் பெயரைச் சொல்லுதற்கு முன்னரே தீயிலிட்ட மெழுகுபோல் மனம் உருகுவாயே! அத்தகையவளாகிய உன்முன், "எனக்கு இனியவன்; என் அரசன்; என் இனிய அமுதன்" என்றெல்லாம் நாங்கள் அனைவரும் தனித்தனியே சொன்னோம். அதையெல்லாம் கேட்ட பின்னும் உறங்கிக்கொண்டுள்ளாயா? கல்நெஞ்சுடைய அறிவிலி போல நீ உணர்ச்சியற்றுக் கிடக்கிறாயே! உறக்கத்தின் பரிசு இதுவோ?

ஆதமபோதம் அடையப்பெறாதவர்கள் உணர்ச்சியற்றுக் கிடப்பர். சமக்கிருதத்தில் ஸ்தம்ப என்பர். அது போன்று அவள் உணர்வின்றிக் கிடக்கிறாளாம்.

இப்பாடலில் ஒரு நல்லாசிரியன் போல் உறக்க மயக்கத்தில் இருக்கும் மான்விழியாள் உலக மயக்கத்தை உதறித் தள்ளிவிட வேண்டியதை நினைவுறுத்துகிறாள். "அய்யோ பாவம் நீ என்ன செய்வாய்... உன் உறக்கமன்றோ நீ செய்ய வேண்டியதைச் செய்யாது வைத்திருக்கிறது" என்கிறாள்.

விரைந்து செய்ய வேண்டியதில் தாமதம் கூடாது. இயல்பிலேயே பக்திக் கனிவுடைய கன்னி தாமதம், மறதி, சோம்பல், தூக்கம் ஆகியன வயப்படுதல் கூடாதல்லவா? நல்வழிக்கு அவள் வந்து சேர வேண்டும் என்பதே தோழியின் கருத்து.

0 Comments: