Wednesday, January 13, 2010

திருவெம்பாவை - 6

நாள் ஆறு – பாடல் ஆறு

மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்.

மான் போன்ற மருட்சியுடைய விழிகளையுடைய காரிகையே! " நாளை நானே வந்து உங்களையெல்லாம் எழுப்புவேன்" என்று நேற்று சொல்லிய நீ வெட்கமில்லாமல் இன்னும் தூங்குகின்றாயே? அச்சொல் எங்கு, எத்திசையில் போயிற்று என்பதை சொல்? இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா?

யாரும், எதுவும் அறிதற்கு அரியவனான எம்பெருமானின் மேலான கழலணிந்த திருவடிகள் எளியவர்களான நம்மை தானாகவே வந்து காத்து ஆட்கொள்வன. அந்த வீரக் கழலணிந்த திருவடிகளை மனமுருகிப் பாடி வந்த எங்களிடம் வாய் திறந்து பேசினாயில்லை! உடல் உருகவில்லை. உனக்குத் தான் இந்நிலை பொருந்தும். நம் அனைவரின் தலைவனாகிய சிவபெருமானை பாட எழுந்து வா கண்ணே!

நேற்று என்ன சொன்னாய்? நீயே வந்து எம்மை எழுப்புகிறேன் என்றாய். சொன்ன வார்த்தை எத் திசையில் போய் மறைந்தது என்று கேட்கிறார்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லையே என்ற நாணம் உனக்கு இல்லையோ? அல்லது உனக்கு மட்டும் இன்னமும் பொழுது விடியவில்லையோ என்னவோ? என்று கேட்கிறார்கள்.

"சரிதான். மான் போன்றவளே. பொழுது விடிந்துதான் விட்டது. இப்போதாவது எழுந்து வா. யாரும் அறிதற்கு அரிய பிரானின் திருவடிப் புகழை நாம் பாடி வந்திருக்கிறோம். வந்து விட்டோமே நாங்கள் என்பதற்காகவாவது கதவைத் திறந்து வெளியே வா. உனக்கும் உன்னைத் தேடி வந்த எமக்கும் தலைவனாகிய இறைவன் புகழைப் பாடலாம் வா" என்று அழைக்கிறார்கள்.

வானே நிலனே பிறவே அறிவரியான் என்ற தொடர் கடவுளின் கிட்டரிய பெருமையைப் புலப்படுத்துகிறது. அளக்க இயலாப் பெருந்திறல் உடையவன் இறைவன். எட்டாப் பரம் பொருள். சிந்தையும் மொழியும் செல்லா
நிலையினை உடையவன்.

உயிர்களோ எனில் சில வாழ்நாளும் சிற்றறிவும் உடையவர். இந்த உயிர்கள் அப்பொருள் பற்றி அவாவுவது வீணல்லவா? அவன் பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் படரொளிப் பரப்பினன். நீர் உறு தீயானவன். நினைவதேல் அரிய நின்மலன் உள்ளவன்.

அப்படிப்பட்டவன் நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்டவன். அவனுடைய அருள்வெள்ளச் சீருறு சிந்தையில் தேனாய் எழுந்து தித்திக்கும் எளிமை உடையவன்.

இத்தகைய இறைஇயல்பைத்தான் மணிவாசகர் வானே நிலவே பிறவே அறிவரியான் என்றும் தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் கழல் என்றும் குறிக்கிறார்.

சொக்கன் வந்திக்குக் கூலியாளாக வந்தார்; வந்து பிரம்படியும் பட்டுக்கொண்டார். பத்தி வலையில் பட்ட எளிமையே காரணமாக பிரம்படி பட்டார்.

திருவெம்பாவையின் ஆறாம் பாடலில் இப்படியாக இரண்டு கூறுகளை அமைத்துப் போகிறார் மணிவாசகர்.
நட்புரிமை எப்படி உலகியலில் வெளிப்படுகிறது என்பது ஒன்று. அருமைக்கு அருமையாக உள்ள பரம்பொருள் அடியவர்க்கு எளிமைப் பாங்குடையதாய் ஆட்கொள்ளும் தத்துவம் இன்னொன்று.

0 Comments: