Wednesday, January 13, 2010

திருவெம்பாவை - 5

நாள் ஐந்து – பாடல் ஐந்து

மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.

திருமாலும் பெருமனும்(பிரம்மா)வும் சிவனின் அடிமுடி கண்டறியார். அப் பரமேசுவரனை நாம் அறிந்து விட முடியும் என்பது போல் மற்றவர்கள் நம்பும்படியான பொய்யைப் பாலும் தேனும் ஒழுகப் பேசிய வாயினையுடைய வஞ்சகியே! வந்து கதவைத் திற! ஈசன் எம்பெருமான் விண்ணுலகினராலும், மண்ணுலகினராலும், மற்றும் உள்ள உலகினராலும் யாராலும் காணுதற்கு கிட்டாதவன். அந்த பெருமான் எளி வந்த கருணையினால் அவர் தம்முடைய திருக்கோலத்தையும் காட்டி, எளியவர்களான நம்மை ஆட்கொண்டு அருளிச் சீராட்டுகின்ற திறத்தைப் பாடுகின்றோம்! சிவனே! சிவனே! என்று உள்ளுருகி உரக்கப் பாடுகின்றோம்! அந்த ஒலி கேட்டும் நீ உணர்ந்தாய் இல்லை! உணர்ந்து விழித்தாயில்லை! மணம் பொருந்திய கூந்தலை உடையவளே! இதுவோ உனது தன்மை?

ஐந்தாவது பாடலில் காளியை எழுப்ப, காளியும் வேறு சக்திகளும் ரெளத்திரி சேட்டை வாமை என்ற சக்திகளை எழுப்புவதாகப் பொருள்.

இப்பாடல் பாவை நோன்புக்கென அணிவகுத்து நிற்கும் கன்னியர் இன்னும் தம்மோடு வந்து சேராத தலைவியைப் பார்த்துப் பேசுவது போல அமைந்துளது.

பொக்கம் என்றால் வெற்றுப் பேச்சு. நம்மை நாம் ஓரொருவர் பார்ப்பது போலவே இறைவனையும் பார்க்க முடியும் என்று உள்ளிருக்கும் தலைவி முன்னர் சொல்லிப் போனதைச் சொல்லிக் காட்டி இந்தப் பாடல் ஆரம்பமாகிறது.

மலை என்ற சொல் அண்ணாமலையாரைக் குறிக்கும். மலையாக நின்றபோதும் மாலும் பிரம்மனும் இறைவனை அறிந்திலர். திருமாலும் பிரம்மனும் அறிய முடியாதவன் சிவன் என்கிறபோதும் அவன் மேல் பக்தி வைத்த நாம் அவனை எளிதில் பார்த்து அனுபவிக்க முடியும் என்று கூறிச் சென்ற தலைவி நீ. நீ சொன்ன வார்த்தை வெறும் வார்த்தைகள்தானோ? என்கிறார்கள் கன்னியர். பாலும் தேனும் கலந்தது போல இனிக்க இனிக்கச் சொல்லிப் போனவள் தலைவி. இப்போதோ பாவை நோன்பிருக்க வந்து சேராமல் வீட்டுக்குள்ளேயே இருப்பது சரியோ என்பது கேள்வி. எங்களைப் பார் என்கிறார்கள். இவ்வுலகத்தினர் அறிய முடியாதவன். தேவர்களும் அறிந்து சொலப்படாதவன். அவன் கோலம் எங்களை ஆட்கொள்ள வேண்டும் என்று பிரார்த்தித்துப் பாடுகிறோம். நம் போன்றவரை வலிய ஆட்கொள்ளும் அவனுடைய எளிமையை நாங்கள் பாடுகிறோம். அப்படி சிவனே சிவனே என்று ஓலமிட்டுப் பாடுவதும் உன் காதுகளில் விழாமல் நீயிருப்பது எப்படி என்கிறார்கள். இனியாகிலும் வந்து கதவைத் திற என்கிறார்கள்.

மலையாகக் நின்றும் கண்ணால் காண முடியவில்லை எனில் அது மலையின் குற்றமன்று; காண்கிறவரின் குறை. எம்மை ஆட்கொள்ள வேண்டும் என்ற ஏக்கம் நிரம்பிய மனமே இறைவனை ஆட்கொள்ள வைக்கும் உபாயம் என்பதக் கன்னியர்கள் உணர்த்துகின்றனரோ? சரணடைந்தவர்க்கு எளியவனாகிறான் இறைவன்.

மால் எங்கும் உள்ளவன். விட்டுணு என்றாலே எங்கும் பரவியிருப்பவன் என்பது பொருள். எங்குமிருப்பவனே அறிந்து கொள்ள முடியாதவன் இறைவன். நான்முகனாகிய பிரமன் வேதா என்று அழைக்கப்படுகிறவன். அந்த வேதியனும் அறிய முடியாதவன் இறைவன்.

மலையின் அருமை அளக்க முடியாதது. மலையின் பெருமை விளக்கவொண்ணாது. அப்படிப்பட்டவன் இறைவன். அத்தகைய அரிய பரம்பொருள் இக்கன்னியரை ஆட்கொள்ள இறங்கி வந்த சீலம்தான் என்னே என்று கூறுகிறார்கள். இப்படியாகக் கடந்துறையும் கடவுள் இறைஞ்சி வரும் எளிமை கொண்ட இறைவனாகவும் இருக்கும் இறை இயல்பை இப்பாடல் விளக்குகிறது.

பக்தி செலுத்துவது போல் நடிக்கும் நடிப்பே போதும் இறைவனின் கருணைக்குப் பாத்திரமாக அவனைச் சேர்வதற்கு என்பார் மணிவாசகர்.

இடைவிடா அன்போடு உருகிப் பன்னாளும் அவனை அழைத்து வந்தால் “இவன் நம்மைப் பன்னாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே” என்கிறார் நாவுக்கரசர். இதைச் சாதிக்க நாம் வேறெதையும் செய்ய வேண்டியதில்லை. நமக்குள்ளே இருக்கும் உணர்வொன்றே போதும்.

இப் பாடல் இறைவனின் அடியார்க்கு எளியனாக வந்து
ஆட்கொள்வதை சிறப்பித்துக் கூறுகிறது.

0 Comments: