Wednesday, January 13, 2010

திருவெம்பாவை - 4

நாள் நான்கு – பாடல் நான்கு

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக்கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டொம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

நான்காவது பாடலின் தத்துவ விளக்கமாவது பலவிகரணி என்னும் சக்தி கலவிகரணி என்ற சக்தியை எழுப்ப எல்லோரும் சேர்ந்து ஆறாம் சக்தியாகிய காளியை நோக்கிப் போகும் என்பதாம்.

முத்து நகைப் பெண்ணே, உனக்கு இன்னும் பொழுது புலரவில்லையோ என்று அவர்கள் கேட்க, கிளிமொழி பேசும் தோழியர் எல்லோரும் வந்து சேர்ந்துவிட்டனரோ என்று இவள் கேட்க கிண்டலும் கேலிப் பேச்சும் மீண்டும் தொடர்கிறது. சரிதான் நாங்கள் எண்ணிக் கொண்டிருக்கும் நேரம் இன்னுமொரு குட்டித் தூக்கம் போட நினைக்கிறாய் போலும். உடனே எழுந்து வா என்று இவர்கள் சொல்கிறார்கள்.

பின் அவர்கள் பேச்சின் தொனி மாறி, "இறைவனின் குண இயல்புகளை உன்னைப் போல உருகி உருகிப் பேச எங்களுக்கு முடியாது" என்கிறார்கள். இதன் மூலம் தோழியின் சிறப்பு விளங்குகிறது. மீண்டும் பரிகாசம் கொப்பளிக்கிறது. "நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள். யாராவது வரவில்லை என்று கண்டால் வேண்டுமானால் மறுபடி தூங்கப் போகலாம்" என்கிறார்கள்.

விண்ணுக்கு ஒரு மருந்து எனும் போது அமுதத்தால் வாழ்வு பெற்ற விண்ணகத்துக்கு அமுதவாணர்களுக்கு அமுதமாக இருப்பவன் இறைவன் என்கிறார்.

வேதம் விரிக்க விரிக்கப் பொருள் கூடிக் கொண்டே போவது. அப்படி எல்லையற்ற பொருளாக அமைகிறவன் இறைவன் என்பதால் வேதத்து விழுப் பொருள் என்று கூறுகிறார்.

வேதத்தின் பொருள் இறைவன். இறைவனோ மனம் வாக்கு காயத்தால் அறியப்படாதவன். வேதத்தின் மூலம் அறிந்து கொள்ளலாமோ என்றால் வேதத்தின் மையத்துக்குப் போகப் போக இன்னும் அறிய உள்ளது என்ற வகையில் விரிந்து கொண்டே போகும் அளவுக்கான இயல்பினன் இறைவன் என்பதால் வேதத்து விழுப் பொருள் என்கிறார்.

சிவனுக்குச் சொக்கன் என்று ஒரு பெயர் உண்டு. அழகன் என்று பொருள். சிவனை மனதில் நினைக்கும் போதே கண்ணுக்குத் தோற்றம் தந்து தன் அழகால் மெய் மறக்கச் செய்கிறவன் சிவன் என்பதால் கண்ணுக்கு இனியான் என்கிறார்.

முந்தைய பாடலில் இறைவனின் பெயரைச் சொல்லிப் பாடும் அளவிலேயே அவனுடைய இனிமை இவள் வாயில் உமிழ்நீர் சுரக்க வைக்கிறது என்பதைச் சொல்ல அள்ளுறி என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அந்த அளவுக்கு இறைவனை அனுபவ சாத்தியமாக உணர்கிறாள் இவள். எனவே ஆத்ம விளைநிலத்தில் முன்நிற்கும் தோழியைச் சார்ந்தே தாம் இருக்க வேண்டியிருக்கிறது என்று தோழியர் சொல்கிறார்களாம்.

பாவை நோன்பில் இவர்கள் முன்நிற்க அவள் இன்னமும் வந்து சேர்ந்து கொள்ளாமை என்னே என்றால் அவள் உறக்கத்தில் இல்லை. தன் தோழியர் அனைவருக்கும் தலைவியாக இருந்து பாவை நோன்பில் அவர்களை வழி நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்புணர்ந்தே அவள் எல்லோரும் வந்து சேர வேண்டுமே என்று ஆதங்கப்படுகிறாள் என்று கொள்வோம்.

மானிடப் பேறு எய்தற்கு அரியது. அப்பிறவி எய்தியிருக்கும் போது செய்தற்கரிய பக்தியைச் செய்ய வேண்டும். அதன் மூலம் அருட்சோதிப் பேறு பெற வேண்டும். எனினும் பிறவி தன் இயல்பளவில் மும்மல இருள் கவியக் களமாகிப் போவது. இலக்கினை அடையத் தடையாகிப் போகும் இருளைக் கடந்து விழிப்புற்று பரமன் அருளைச் சென்று சேரக் கடைப்பிடிப்பதே பாவை நோன்பு.

திருவெம்பாவையின் உட்குறிப்பு உறங்கும் ஆத்மாக்களை எழுப்பிப் பரமன் அருள் சாரச் செய்வதே ஆகும். தலைவி அளவுக்கு ஆன்ம விளைச்சல் கைகூடாத தோழியர் முன்னெழுந்து வந்திருக்க தலைவி இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறாளோ என்ற மயக்கத்தை இப்பாடல்கள் நமக்குத் தந்துவிடலாகாது. தலைவி எழுந்துவிட்டாள். பாவை நோன்புக்குத் தயாராகத்தான் இருக்கிறாள். எனினும் எழவில்லை. உறங்குவதுபோல் பாசாங்கு செய்கிறாள். கன்னியர் அனைவரும் வந்து சேர வேண்டுமே என்ற அக்கறை அவளுடைய பாசாங்குக்குக் காரணமாகிறது. அவளன்றிப் பாவை நோன்பு சாத்தியமும் இல்லை என்பதைத் தோழியர் மிக அருமையாக உணர்த்துகின்றனர் இப்பாடலில்.

0 Comments: