Thursday, January 14, 2010

திருவெம்பாவை - 16

நாள் பதினாறு - பாடல் பதினாறு

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துஉடையான்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின்
மின்னப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.

மேகமே! கடலைக் குடித்து அதன் நீரைக் குறைத்து, மேலே கிளம்பி, உமையாளின் கார் நிறத்தை ஏற்றாய். நீ மின்னலாக மின்னியது சக்தியின் சிற்றிடையை ஒத்திருந்தது. நீ இடி இடித்தது அன்னையின் பொன்சிலம்பின் ஒலி போன்று இருந்தது. நீ வானவில்லை வீசியது அம்மையின் புருவத்தை ஒத்திருந்தது. எம்மை ஆளுடையாளாகிய அன்னையின் நாயகன் சிவனின் அன்பருக்கு முதலில் அருள் சுரந்துவிட்டுப் பி எங்களுக்கும் அருள் மழை பொழிவாயாக. பாவாய்! இதை எண்ணிப்பாரேன்!

அருளை நினைந்தால் அருட்பேற்றை நாடினால் அம்மையை நினைப்பது சைவ மரபு. உலகும் உயிரும் வாழ வாழ்க்கை வளமுற மழை வேண்டுகின்ற கன்னியரும் அவ்வாறே உமையம்மையை வேண்டுகின்றனர்.

பிராட்டி நம்மை ஆளுடையவள். எனவே ஆட்கொள்ளல் அவள் கடமை ஆகிறது. முன்னி முன் சுரக்கும் என்றது நமக்கு எது வேண்டும் எப்போது வேண்டும் என்பதை அவளே எண்ணிப் பார்த்து நம் தேவையை நாம் உணருமுன்பே அருளுவது அவள் இயல்பு. அருளினை மழை என்றது கைம்மாறு கருதாமல் பொழிவது. இறைவனின் கருணைப் பெருந்திறத்தை மழையை முன்னிறுத்தி விளக்குகிறது இப்பாடல்.



SHIRDI SAIBABA
| HOMOEOPATHY | PSYCHIC SCIENCES

HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB

சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்



0 Comments: