Thursday, January 14, 2010

திருவெம்பாவை - 17

நாள் பதினேழு - பாடல் பதினேழு

செங்க ணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குஉண் சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கள் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.


இப் பாடல் பொழுது புலரும் நேரத்தில் பொய்கையில் நீராடப் போகும் கன்னியருள் ஒருத்தி தன்னுடன் வரும் மற்றவளைப் பார்த்துப் பேசுவதாக அமைந்திருக்கிறது.

இயல்பாகவே மணமுடைய கரிய கூந்தலையுடையவளே! திருமால், பிரம்மா ஆகிய அமரர்களும் அனுபவித்திராத இன்பத்தை நம்மையும் ஒரு பொருட்டாகக் கொண்டு அருளியவன் இறைவன். நம் குற்றங்கள் களையப்படும்போது அது அநுபூதி ஆகிறது. அதற்காக இறைவன் நம் நெஞ்சமாகிய இல்லங்கள்தோறும் தேடி வந்து குடி புகுந்தவன். செந்தாமரை போன்ற திருவடியை நமக்குத் தந்தருளும் வள்ளல் அவன். கருணை மிகுந்த கண்களையுடைய அரசன் அவன். அடியவர்களாகிய நம் போன்றவர்க்கு அமுதென வாய்த்தவனைப் பாடுவோம். சிவஞானமெனும் நலம் அவனிடமிருந்து நமக்கு வருகிறது. தாமரைத் தடாகத்தில் மூழ்கி நீராடி அவன் பெருமை பாடுவோம். தோழி! நீ ஓர்ந்து பார்த்து ஏற்றுக்கொள்.

குழந்தை கையில் கிடைத்த பொற்கிண்ணத்தின் அருமை அக்குழந்தைக்குத் தெரியாது. அதுபோல் நமக்கு வாய்த்துள்ள இறைவனின் கருணைத் திறத்தை அறியாதவர்கள் நாம். வலிய வந்து வழங்கப் பெற்ற இறையருளின் அருமை உணரும் போது அது நமது செல்வமாகிறது.

எந்தக் கேள்வியும் இல்லாமல் இறைவன் மனிதன் மேல் பொழிவது அருள்.

இப்பாடலில் பாவை சொல்வது அடிப்படைப் பாவபீடிப்பே அன்றி அவள் அறிந்து செய்த அல்லது செய்யத் தவறிய காரியங்களின் பாற்பட்ட பாவம் அன்று.

இறைவன் ஆன்மாக்களை ஈடேற்றியே தீர்வது என்ற தீர்மானத்தில் இருப்பவன் இறைவன் என்பதால் இறைவனை சேவகன் என்கிறார்.



SHIRDI SAIBABA
| HOMOEOPATHY | PSYCHIC SCIENCES

HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB

சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்



0 Comments: