Thursday, January 14, 2010

திருவெம்பாவை - 15

நாள் பதினைந்து - பாடல் பதினைந்து

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையான் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.


தெய்வக் காதல் ஏற்றிய பித்தால் பெரும்பிச்சியாகக் காட்சியளிக்கும் ஒரு பெண்ணைப் பாவை நோன்புக் கன்னியர் காண்கின்றனர். எம்பெருமான் என்றே ஒரு வேளையில் சொல்லிக்கொண்டிருப்பாள். மற்றொரு வேளையில் நம்பெருமானின் பெருமையை வாயால் ஓயாது செபித்துக்கொண்டிருப்பாள். மனதில் களிப்பு மிக்கமையால் கண்ணீர் விட்டவண்ணமாய் இருப்பாள். இன்னுமொரு வேளையில் தரையி வீழ்ந்து கிடப்பாள். எவ்வளவு பெரியவராயினும் சித்தத்தைச் சிவன் பாலே வைத்தவளாதலால் வேறு யாரையும் மதிக்க மாட்டாள். இறைவனின் பித்துப் பிடித்தவள். ஓர் உயிரை இப்படி முற்றிலும் தன்வயமாக்கிக் கொள்ளும் ஞான வடிவே சிவன். கச்சும் பூணும் அணிந்த மார்பகத்தை உடைய பாவையரே! நம் இறையவனை வாயாரப் போற்றிப் புகழ்ந்து அழகிய மலர்கள் நிறைந்த பொய்கையில் குதித்து நீராடுவோம். அப்படிப் பாடினால் நம்மையும் ஆட்கொண்டருளி இறைவன் இந்த அனுபவத்தைத் தராமலா போவான்? பாவையே! இவற்றையெல்லாம் எண்ணிப்பார்.

அடியவர்களை வலிய ஆட்கொள்ளுவதில் அளவிறந்த கருணை உடைமையால் கடவுளையே பெரும் பித்தன் என்று குறிப்பிடுவது இயல்பு. தான் பித்தனாவதோடு ஆன்மாக்களையும் ஆட்கொண்டு பித்தமாக்குவது பெருமான் இயல்பு.



SHIRDI SAIBABA
| HOMOEOPATHY | PSYCHIC SCIENCES

HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB

சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்



0 Comments: