Thursday, January 14, 2010

திருவெம்பாவை - 14

நாள் பதினான்கு - பாடல் பதினான்கு

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதித்திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வதைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

காதில் அணிந்துள்ள குழைகள் ஆட, பசும் பொன்னால் ஆதிய மற்ற ஆபரணங்களும் ஆட, பூமாலை அணிந்த குழல் ஆட, மலர்களை நாடிவந்த வண்டினம் ஆட, நாம் குளிர்ந்த நீரில் மூழ்கி நீராடுவோம். பின்னர் சிற்றம்பலத்தானைப் போற்றித் துதிப்போம். வேதம் அவனை விளக்க முயலுகிறது. நாம் அவனை அடையவேண்டும். அவன் ஞானச்சுடர். செஞ்சடையில் கொன்றை மலர் அணிந்துள்ளான். ஊழிக்காலத்தின் முன்னும் பின்னும் இருப்பவன் அவனே. இறைவனின் கருணையும் அருளும்தான் அன்னை உமையவள். அவனே ஆதியும் அந்தமுமாதலும் ஆணவ, கன்ம மலங்களை நீக்கி மானுடரைப் பேணும் வளையணிந்த உமா தேவியின் திருவடிகளும் அமைகின்றன. இப்படிப் பாடி ஆடி நீராடுவோம்.

இறைவன் ஆடிக் கொண்டிருக்கும் சிதம்பரத்தைப் பாடிக் குளிர்ந்த நீரில் இறங்கக் குளிர் தெரியாது. சம்சாரத்தின் நடுக்கங்களும் போய்விடும் என்பதைக் கூறாமல் கூறுகிறாள்.

பாடலின் இறுதி மூன்று வரிகள்ஆதியும் அந்தமுமாகிப் பிரம்மாண்டமாக நிற்கும் இறைவனின் கருணையும் அருளும் அன்னையின் அருளாக மாந்தருக்குக் கிடைப்பதைக் கொண்டாடுகின்றன.

சிற்றம்பலம் ஞான வெளி. அங்கிருந்து வேதம் தோன்றுகிறது. அதிலிருந்து வேதப் பொருளாகிய மெய்யுணர்வு வெளிப்படுகிறது. அந்த மெய்யுணர்வின் சோதியாக இறைவன் தோன்றுகிறான்.

இந்தப் பாடலில் பொய்கையாவது அம்மையப்பனின் அருள் பெருக்கின் குறியீடேயாம்.



SHIRDI SAIBABA
| HOMOEOPATHY | PSYCHIC SCIENCES

HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB

சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்



0 Comments: