Thursday, January 14, 2010

திருவெம்பாவை - 13

நாள் பதின்மூன்று - பாடல் பதின்மூன்று

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவு வார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்து ஆர்ப்பப்
கொங்கைகள் பொங்கப் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.

மடுவில் புதிய குவளை மலரும் புதிய செந்தாமரை மலரும் நிறைந்துள்ளன. அழகிய நீர்ப்பறவைகள் அங்கு ஆர்ப்பரிக்கின்றன. பாம்பு பின்னல் போடுகிறது. உடலின் அழுக்கைப் போக்குபவர்கள் அங்கு குழுமுகின்றனர். ஆதலால் சிவசக்தி சொரூபமாக அத்தடாகம் தென்படுகிறது. அதில் நாம் குதித்துக் குதித்து நீராடுவோம். நமது சங்கு வளைகளும் கால் சிலம்புகளும் சேர்ந்து ஒலிக்கட்டும். மார்பகங்கள் பூரிப்படையட்டும். நாம் முழுகுவதால் நீர் பொங்கட்டும். பாவாய்! இக்கருத்துக்களை ஓர்ந்து உணர்.

இப்பாடலில் சிலேடை நயம் அருமை. சிவன் சூடிக் கொள்வது குவளை மலரும் செந்தாமரையும். இறைவனைச் சுற்றியிருப்பது பறவைக் கூட்டம். கழுத்தில் சுற்றிக் கிடப்பது அரவம். அவனைத் தேடி வருகிறவர்கள் தம் மன அழுக்கைக் கழுவிக்கொள்ள விழைகிறவர்கள். குவளை மலரின் நீலநிறம் இறைவியையும் தாமரையின் செந்நிறம் இறைவனையும் குறிப்பதையும் காணலாம்.

இதை இப்படியும் காணலாம். குளத்தில் குவளை மலர்களும் தாமரையும் உண்டு. குளத்தில் பறவைக் கூட்டம் கூடும். பின்னிக் கிடக்கும் பாம்புகளும் உண்டு. குளத்தில் நீராடி அழுக்கைக் கழுவிக் கொள்ள வருகிறவர்களும் உண்டு.

இப்படியும் பாருங்கள். குவளை செந்தாமரை மலர் போன்ற கண்களோடும் அங்கமாகிய கைகளில் வளைகள் பல பூண்டும் பின்னித் தொடர்ந்து எழுகின்ற சத்தத்தோடும் பாவையர் குளம் சேர்கிறார்கள். பின்னும் அரவம் என்பதை எல்லா அரவங்களுக்கும் மூலமாகிய பிரணவம் என்றும் கொள்ளலாம்.

எனவே ஓம் என்று பாவையர் முழங்குகிறார்கள்.

பாடலின் நான்காம் அடியில் அம்மையப்பனாக இருக்கும் இறைவன் அல்லது அம்மையும் அப்பனும் ஒத்து இசைந்திருப்பதைப் போன்ற குளம் என்று பொருள்படும் வகையில் அமைந்திருக்கிறது.

நீரில் உடலைக் கழுவிக் கொள்வதைப் போல அருட்புனலில் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களைக் கழுவிக் கொள்ளலாம் என்கிறாகிறது.

இறைவியோடு இணைந்த இறைவனே வேண்டுவோர்க்கு வேண்டுவன தருகிறவன். பற்றிலார்க்குக் கூட வீடு பேறு அருளும் பரமயோகி பரமசிவன்.



SHIRDI SAIBABA
| HOMOEOPATHY | PSYCHIC SCIENCES

HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB

சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்



0 Comments: