Thursday, January 14, 2010

திருவெம்பாவை - 12

நாள் பன்னிரெண்டு - பாடல் பன்னிரெண்டு

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.

பாவை நோன்பிருக்கும் கன்னியர் இறைவனைப் புகழ்ந்து திருவடி ஏத்திச் சுனைநீர் ஆடுகிறார்கள். அப்போது நீராடுகின்ற ஒருத்தி மற்றொருத்தியைப் பார்த்துக் கூறுவதைப் போல அமைந்திருக்கிறது இப் பாடல்.

நம்மைப் பிணித்துள்ள பிறவித்துன்பம் ஒழியட்டும். நாம் மகிழ்ந்தாடுவது பரிபூரணனான தில்லைச் சிற்றம்பலத்தில் ஞானாக்கினி எடுத்து ஆடும் கூத்தனைக் குறித்தே. விண்ணுலகு, மண்ணுலகு ஆகிய அனைத்தையும் படைத்துக் காத்து அழிக்கும் (ஐந்தொழில்) செயலைத் திருவிளயாடலாகச் செய்யும் சீலன். அவன் புகழையே சொல்லி வளைகள் ஒலிக்கவும், பெரிய ஒட்டியாணங்கள் ஆரவாரித்து ஒலிக்கவும், அழகிய கூந்தலின்மேல் வண்டுகள் முழங்கவும், மலர்கள் நிறைந்துள்ள பொய்கையில் நீராடி பொன்னம்பலத்தானின் பொன்னடியைத் துதித்துப் பெரிய சுனைநீரில் மூழ்குவோம். பெண்ணே! இக்கருத்துக்களை ஓர்ந்து உணர்.

பற்றை விட்டொழித்து இறைவன் திருவடியைச் சிக்கெனப் பற்றிவிட்டால் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்கலாம் என்பதாம்.



SHIRDI SAIBABA
| HOMOEOPATHY | PSYCHIC SCIENCES

HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB

சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்



0 Comments: