Thursday, January 14, 2010

திருவெம்பாவை - 11

நாள் பதினொன்று - பாடல் பதினொன்று

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி
ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல்போற்
செய்யா வெண்ணீறாடி செல்வ சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளர்
ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந் தோங்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

நீரடக் குழுமியுள்ள நாங்கள் அகன்ற நீர் நிறைந்த பொய்கையில் இறங்கி, மூழ்கி எழுந்து மூழ்கும்பொழுது 'முகேர்" என்னும் ஒலி எழுப்பி நீராடி உன் திருவடியினைப் புகழ்ந்து பாடுகிறோம். அப்பனே! பரம்பரை பரம்பரையாக உன் அடியார்களாகிய நாங்கள் உறுதியாக உன் அருளில் ஊறி வாழ்ந்து வருகிறோம். சுடர்விடும் தீப்போன்ற செம்மேனியனே, வெண்ணீறணிந்தவனே! மகிமை அனைத்துக்கும் இருப்பிடமே! ஒடுங்கிய இடையும், மை பூசிய அகன்ற கண்களையும் உடைய உமையம்மையின் தலைவா! அழகா! உயிர்களை ஆட்கொள்ளுதல் உன் திருவிளையாடலாம். அதன்படி நாங்கள் எல்லோரும் உறுதியாக உய்வு அடைந்துள்ளோம். உனது வழிபாட்டில் நாங்கள் தளர்வடையாவண்ணம் காத்தருள்வாயாக. பெண்ணே! இக்கருத்துக்களை ஓர்ந்து பார்த்து உணர்வாயாக.

பாவையர் பொய்கைக்கு வந்து சேர்கின்றனர். பொய்கையில் புகுந்து குடைந்து குடைந்து நீராடுகிறார்கள். கையால் நீரைக் குடைந்து குடைந்து உடல் குளிர, உள்ளம் குளிரக் குளிக்கிறார்கள்.

நீரால் அமையும் புறத்தூய்மையைப் பெற்றபின், அகத்தூய்மை, ஆன்மத் தூய்மை பெற நீரடும்போதே நிமலன் திருவடிகள் பற்றிப் பாடுகிறார்கள். அப்படிப் பாடும்போதே தமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பையும் வெளிப்படுத்துகிறார்கள்.

“நாங்கள் உன் வழி அடியோம்.” இறைவன் ஆட்கொண்டு அருளுவோர் நிலையும் அவர்கள் செய்யும் கடமைகளும் அடைந்தாயிற்று. இனி நடக்க வேண்டியதைப் பார்த்துக் கொள்வது அவனே என்கிறார்கள்.

தாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தாயிற்று எனும் போது அதற்கான பயனை இறைவனிடம் உரிமையோடு கேட்பதாக இப் பாடல் அமைகிறது.

நெருப்புப் போன்ற திருமேனியில் தூய வெண்ணீறு பூசியிருப்பது நீறு பூத்த நெருப்பை நினைவூட்டுகிறது. நீற்றுக்குள் நெருப்பு இருப்பதை அறியாதவர்கள் கடவுளுண்மையை அறியார்.

செல்வா எனும்போது அடியார்க்குச் செல்வம் இறைவனே என்கிறார்கள். மார்கழி நீராடி சிவனடியாரைக் கணவராகப் பெறுவது இறைவனின் திருவிளையாடல் கருணை என்கிறார்கள். முன்பு எப்போதும் போலவே இனியும் பாக்கியம் பெற இறைவன் காப்பாற்ற வேண்டும் என்பது வேண்டுதல்.

இத்தனையும் அவன் அருளால் செய்த பின் வேண்டுவது சிவகதியே.



SHIRDI SAIBABA
| HOMOEOPATHY | PSYCHIC SCIENCES

HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB

சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்



0 Comments: