Wednesday, January 13, 2010

திருவெம்பாவை - 10

நாள் பத்து - பாடல் பத்து

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்று அல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டர்உளன்
கோதில் குலத்தரன்றன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவரைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

அனைத்துமாயிருப்பவன் பரமன்; அவனுக்குப் புறம்பாக ஒன்றுமில்லை. அவனை முழுவதும் விளக்கவியலாது. சிவனின் திருவடி பாதாள உலகங்கள் ஏழுக்கும் கீழே, சொல்லுக்கு எட்டாத இடத்துக்கும் கீழே உள்ளது. கொன்றை மலரால் அலங்கரிக்கப்பட்டுள்ள செஞ்சடையுடைய திருமுடியோ எல்லாப் பொருட்களுக்கும் முடிவானதே. உமையவளைத் பங்கில் ஒருபாகமாகத் தாங்கியுள்ளதால் அவனுக்கு மேனி ஒன்றன்று. அவனை முற்றும் விளக்க வேதங்கள், அமரர், மக்கள் ஆகியோர் யாராலும் இயலாது. அவன் சொல்லில் அடங்கா உயிர்த்தோழன். தொண்டரின் உள்ளத்தே தெளிவுற விளங்குகிறான். குற்றமற்ற ஏற்றத்தையுடைய அரன் அவன். அவனுக்கு ஊர், பேர், உறவினர், அயலார் இல்லை. அம்மா! அவனுடைய சிறப்புக்களை ஓர்ந்து நோக்கி ஏற்றுக்கொள்.

பரம்பொருளாக எங்கும் உள்ள இறைவன், அடியார்களுக்கு மட்டுமே உறவினனாக இருக்கிறான். அவர்தம் உள்ளத்தில் மட்டும் நிறைந்திருக்கிறான்.

இது அருவுருவ நிலைக் குறிப்பது. ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உரு ஒன்றாதலால் அருவுருவ (சதாசிவ) நிலையாம்.

0 Comments: