Friday, January 08, 2010

திருவெம்பாவை - 3

நாள் மூன்று – பாடல் மூன்று


முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.

மூன்றாவது பாடலில் மனோன்மணி, சர்வ பூத தமணி, பலப்பிரதமணி ஆகிய சக்திகளும் பிறரும் பலவிகரணி என்ற சக்தியை துயிலெழுப்புவதாகக் கருதுவர்.

பாவை நோன்பிருக்க வந்திருக்கும் கன்னியர் யாவரும் உள்ளம் ஒத்த அன்புடையவர்கள்; அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் போது கிண்டல் செய்கிறார்கள். ஆனால் குத்திப் பேசுதல் இல்லை. பாசம் இழையோடுகிறது. வேடிக்கைக்கிடையே பக்தி உணர்வின் மேம்பாட்டை இப் பாடல் உணர்த்துகிறது.

ஏற்கெனவே எழுந்து நீராடப் புறப்பட்டுவிட்ட கன்னியர் இன்னமும் தம்மோடு வந்து சேராத தோழியை அழைத்துப் பேசுகிறார்கள். “உன் வழக்கம்தான் எங்களுக்குத் தெரியுமே. எல்லோருக்கும் முன் எழுந்து வந்துவிடுவாய். தோய்ந்து நிற்கும் பெருமானின் பெருமையை நினைவில் கொள்ளுமாறு பிறரைத் தூண்டுவாய். அத்தன் என்பாய். ஆனந்தன் என்பாய். அமுதன் என்பாய். யாரும் காணமுடியாத பெருமானின் பெருமையை எடுத்து வாய் ஓயாது பேசி இனிக்க இனிக்கப் பேசுவாய். ஒளி விளங்கும் முத்துப் பல் வரிசை கொண்டவள் நீ. அந்தப் பல்வரிசை தித்திக்கத் தித்திக்கச் சிவன் புகழ் பாடுவாய். இது என்ன இன்று கதவை அடைத்துக் கொண்டு கிடக்கிறாய்? வா, வந்து கதவைத் திற.” என்கிறார்கள்.

தோழியர் பேச்சை உள்ளிருந்து கேட்கிறாள். அட ஏதோ ஒரு நாள் தாமதித்துவிட்டேன். அதற்கு இத்தனை ஆரவாரமா என்று நினைத்துக் கொள்கிறாள். சற்றே குத்தலாகவே பதில் சொல்கிறாள். “அடாடா பக்தியில் நீங்கள் என்னிலும் சிறந்தவர்கள்தான். ஈசன் மேல் பல காலமாகப் பக்தி வைத்திருப்பவர்களே. நானோ புதிதாகப் பக்தி கொண்டவள்தான். என் பக்தி நடிப்புத்தானோ? ஏதோ என்னையும் மன்னித்து ஈசனுக்குப் பழவடியார்களாகிய நீங்கள் என்னையும் ஆட்கொள்ளலாகாதோ?” என்கிறாள்.

அவர்களோ விடுவதாக இல்லை. “இப்படியா பேசுவது? உன்னுடைய பக்தியின் பெருமை எங்களுக்குத் தெரியாதா என்ன?” என்கிறார்கள்.

அவளோ, “வெறும் பேச்சுப் பேசுகிறீர்களே. உங்கள் மனத்தில் பெருமான் நினைப்பு நிறைந்திருக்கிறதா என்று ஐயமே படுகிறேன். உங்கள் சித்தம் பெருமான் நினைவால் அழகு பெறவில்லை போலும். சிவன் புகழைத் தாங்குதலே சிந்தைக்கு அழகு. அழகிய சித்தம் கொண்டோர் சிவனையல்லவா பாட வேண்டும்? அதை விட்டு விட்டு வெற்றுரைகள் பேசி நிற்கிறீர்களே,” என்கிறாள்.

அவர்கள் இன்னமும் விடுவதாயில்லை. “உன்னை எழுப்ப வந்த எமக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.”என்கிறார்கள்.





0 Comments: