நாள் இருபது - பாடல் இருபது
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோரெம்பாவாய்.
இப் பாடலிலும் கண்ணனையும் நப்பின்னையையும் துயிலெழுப்புதல் தொடர்கிறது. தேவர்கள் துயரை துடைப்பவர் கடவுள். தேவர்களுக்குத் துயரம் அடிக்கடி ஏற்படுவதுண்டு என்பதை இந்து புராணங்கள் அடிக்கடி சொல்கின்றன. அவர்களும் குறைகள் முழுக்க நீங்கியவர்கள் அல்லர். தேவர்கள் தவறு செய்வதும் செய்த தவறுக்காகத் தங்களை மன்னித்துச் சாபம் நீக்கவும் அவர்கள் பிரார்த்திப்பதும் புராணங்களில் சொல்லப்படுகிறது. மேலும் ராவணன், கம்சன் போன்ற அசுரர்களால் தோற்கடிக்கப்பட்டுத் துயருறுவதும்
சொல்லப்பட்டுள்ளது. அவர்களுக்குத் துயர் வந்துற்ற போதெல்லாம் கடவுள் அவர்களைக் காப்பாற்ற முயல்வது, பின்னர் காப்பாற்றுவது ஆகியவை சொல்லப்பட்டுள்ளன.
“முன் சென்று” என்பதற்கு இரண்டு வகையான விளக்கங்கள் தரப்படும். துயரம் ஏற்படும் முன்னரே அவற்றைத் தவிர்ப்பது என்பது ஒரு பொருள். துயர் ஏற்படும்போது தானாக முன்வந்து அவற்றைத் தீர்ப்பது என்பது இன்னொரு பொருள்.
இவற்றுள் பின்னதே சரியாகத் தெரிகிறது. தானாக முன்வந்து தேவர்களின் துயரைத் துடைப்பவன் இறைவன் என்பதே சரியாகப் படுகிறது.
“கப்பம்” என்ற சொல் துயரம் அல்லது அடிமைப்படுத்தப்படுவது என்று இரண்டு வகைப் பொருள்படும். எனவே செப்பமுடையாய் என்ற அடுத்த கூற்று சரியான தொடர்ச்சியாக அமைகிறது. அருள்வதில் முந்தியிருப்பதும் அப்படி அருள்வதற்கான திறமுடையவராக இறைவன் இருப்பதையும் செப்பமுடையாய் திறுலுடையாய் என்று குறிக்கிறார். “செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா” எனும் சொற்றொடரால் கடவுளை நினைத்தாலே போதும் எதிரிகள் பயந்து விடுவார்கள் என்கிறார்.
முப்பத்து மூவர் (தேவர்களுடைய) துயரை நீக்குவதில் அவ்வளவு முனைப்புள்ள இறைவன் அருளுக்கு ஏற்புடையதாக அமையும் அன்றோ அவர் இவர்கள் மேல் வைத்து கருணை என்பது கன்னியர்தம் எண்ணம்.
என்னதான் வாழ்வின் அவலத்தில் சிக்கித்துன்புற்றாலும் மழை வேண்டும் என்னும் விரக்தியைத்தான் ஆயர்பாடிச் சிறுமியர் இப்பாடலில் வெளிப்படுத்துகின்றனர்.
ஆனால் விரக்திக்கான காரணம்தான் வேறு. கடவுளோடான இடையீடற்ற தொடர்பு இல்லாமல் வாழ்வது என்பதுதான் இவர்களுடைய துயரம்.
உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது என்கிறார். இறைவனுக்கும் பக்தனுக்குமிடையேயான சம்பந்தம் பிரிக்க முடியாதது.
நப்பின்னையின் அழகை விளக்கும்போது உணர்வு மிகுதலைக் காணலாம். செப்பன்ன மென்மையான முலைகளாம். செவ்வாயாம். வட இந்தியாவின் ராதையைப் போலத் தெற்கே நப்பின்னை என்று கொண்டால் ராதையைப் போல ஆழ்ந்த காதல் கொண்டவள் என்று சொல்லலாம். அதைத்தான் செவ்வாய் குறிக்கிறது என்று கொள்ளலாம். நப்பின்னையை செல்வத்தின்
கடவுளான இலக்குமியாகக் காணலாம். நாராயணர் கண்ணனாக வந்திருக்கும் போது இறைவியாகிய இலக்குமி நப்பின்னையாக வந்திருப்பதால் நப்பின்னை நங்காய் திருவே என்கிறார்கள்.
உக்கமும் தட்டொளியும் என்பது பாவை நோன்பின் அங்கமாகின்றன. திருவரங்கத்துப் பெருமானுக்கு மணமுடித்துக் கொடுத்த அன்று திருவாழி என்ற கிணற்றில் ஆண்டாள் குளித்தார். அந்தத் திருவாழி இன்றும் திருவரங்கத்தில் இருக்கிறது. மணப் பெண்ணாக அலங்கரித்த போது கடைசியாக மாலை அணிவித்தார்கள். கையில் கண்ணாடி இல்லாததால் தன் தோற்றத்தைக் கிணற்றுத் தண்ணீரில் பார்த்துக் கொண்டாராம்.
சூடிக்கொடுத்த சுடர்கொடி அல்லவா ஆண்டாள்? அதனால்தான் பாவை நோன்போடு கண்ணாடியும் சேர்த்துக் காணப்படுகிறது. மாலையும் கண்ணாடியும் ஆண்டாளின் வாழ்வில் பிரிக்க முடியாத பகுதியாகிப் போயின. கையில் சாமரத்தோடும் கண்ணாடியோடும் கண்ணனை நீராட்ட எம்மை அனுமதியேன் என்கிறார்கள் ஆயர்பாடிக் கன்னியர். எம்மை என்ற வார்த்தையோடு சேர்த்துப் படிக்கும் போது கண்ணனுடன் நாங்களும் நீராட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை என்றும் கொள்ளலாம்.
இப்போதே எம்மை நீராட்டேல் என்பதில் ஓர் அவசரம் தொனிக்கிறது. இப்போது இல்லையென்றால் எப்போதும் இருக்கப் போவதில்லை என்கிறார்களா? கடவுளின் கருணை இல்லையேல் நாங்கள் உயிர்தரியோம் என்கிறார்களா?
இப்படியாக இறைவனைத் துயிலெழுப்புவதாகத் தொடங்கும் இருபதாவது பாடல் வாழ்வியல் பற்றிய தத்துவக் கவிதையாக உருப்பெறுகிறது. கடவுளின் கருணை சூழ்ந்திருந்தாலன்றி உயிர் தரிக்க முடியாது என்கிற உணர்வை வெளிப்படுத்துகிறது.
Saturday, January 09, 2010
திருப்பாவை - 20
Posted by ஞானவெட்டியான் at 5:41 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment