நாள் இருபத்து ஒன்று - பாடல் இருபத்து ஒன்று
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தாய் மகனே அறிவுறாய்
ஊக்கமுடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாறு போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.
திருப்பாவையின் இருபத்தொன்று முதல் இருபத்து மூன்றாம் பாடல் வரை நப்பின்னையும் ஆயர்குலச் சிறுமியரோடு சேர்ந்து கொண்டு இறைவனைத் துயிலெழுப்புவதாக அமைந்திருக்கின்றன.
இப்பாடல்களில், வளம், ஊக்கம், பெருமை, பொலிவு ஆகிய இறை இயல்புகளும் ஆய்க்குலத்துப் பெண்டிரின் சரணாகதியும் மிகப் பொருந்தி வந்துள்ளது. ஒரு வகையில் இறைஇயல்பு குறித்த வைணவக் கோட்பாடும் பாகவதர் இலக்கணமும் பக்தியின் முடிந்த குறிக்கோளும் இப்பாடல்களில் தொகுத்துச் சொல்லப்பட்டுள்ளது எனலாம்.
இருபத்து ஒன்றாம் பாடலில், வளம், ஊக்கம் ஆகியன சொல்லப்படுகின்றன. நந்தகோபன் அரண்மனையின் வளத்தை மிகச் சிறப்பாகச் சொல்கின்றன முதலிரண்டு அடிகள். ஏற்கெனவே பாத்திரங்கள் நிரம்பிவிட்டன. என்றாலும் பசுக்களின் மடியில் இன்னமும் பால் உள்ளது. எனவே ஏற்கெனவே பால் நிறைந்து விட்ட பாத்திரங்களில் மேல் நுரையைத் தள்ளிவிட்டு இடம் உண்டாக்கி இன்னமும் கொஞ்சம் பாலைக் கறந்து விடுகிறார்களாம்.
முன்னரே இறைவனை நந்தகோபன் மகனாகக் கண்டோம். கண்ணனை நந்தகோபன் மகனாகக் காண்பதில் ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருக்கிறது. ஆயர் குலத்தில் இறங்கி வந்து வளர்ந்தது இறைவனின் சித்தம். அதுவும் ஆய்க்குலத்துப் பெண்டிரை ஈடேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் வந்திருக்கிறார். அப்படிப்பட்டவர் அந்த அடியார்கள் தன்னைத் தேடி வந்தபின்னும் உறங்கிக் கொண்டிருக்கலாமா? எனவே அவதாரத்தின் பயனே தம்மை ஈடேற்றுவது என்பதை வலியுறுத்தவே கண்ணனைத் திரும்பத் திரும்ப நந்தகோபன் மகன் என்று கூறுகிறார்கள்.
பசுக்கள் = குரு. ஞானத்தின்பால் சீடர்களைத் திருப்புகிறவர்கள். அவர்களுடைய உபதேசமே பால். மடியில் கைவைத்தவுடன் பால் சொரிய ஆரம்பிக்கும் பசுக்கள் பாத்திரம் நிறைந்த பின்னும் விடாது பால் சொரிந்து கொண்டே இருக்கின்றன. அப்படிப்பட்ட எல்லையில்லாத உபதேசமே இந்தப் பாடலில்
சிறப்பித்துப் பேசப்படுகிறது.
ஊக்கமுடையாய் என்ற சொல்லுக்கும் பல பொருள் காண்பர். வேதத்துக்கு உட்பொருள் இறைவன். இறைவன் இல்லாமல் வேதம் பொருளுடையதாகவே ஆவதில்லை. இரண்டாவதாக அமரர் துயரத்தையும் தீர்க்கும் வல்லமை உடையவன் இறைவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
பெரியாய் எனும் வார்த்தைக்குப் பொருள் காணும் போது வேதங்களாலும் உரைக்க முடியாத பெருமையும் அருமையும் கொண்டவன் என்று கொள்வர். இருக்கும் வேதங்களும் இனி இருக்க வரும் வேதங்களும் சொல்லி மாளாத பெருமையும் அருமையும் அவனுடையது. வேதங்கள் உரைத்த அருமை பெருமையெல்லாம் தாண்டியதே அவன் அருமையும் பெருமையும்.
தோற்றுப் போனவர் தன் ஆணவத்தையும் அகந்தையையும்
துறந்துவிட்டு வென்றவர் வாயிற்படியில் காத்துக் கிடப்பதைப் போல நாங்கள் உன்னிடம் வந்து சேர்ந்திருக்கிறோம் என்கிறார்கள். எதிர்த்தவர் சரணடையும் போது இயல்பாகத் தன் அருளை அவருக்குத் தருபவன் இறைவன். காகத்தின் கண் ஒன்றை மட்டும் எடுத்துச் சென்ற இராம பாணத்தை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். இன்று போய் நாளை வா என்று இராவணனை அனுப்பி வைத்தமையை எண்ணிப் பாருங்கள்.
இவர்கள் தோற்று வந்தவர்கள் அல்லர். போற்றிப் பாடி வந்தவர்கள். தம்மைத் தத்தம் கொடுத்துவிட்டவர்கள். இறைவன் வல்லவன் என்பதால் அன்றி இறைவனின் அருளைத் தெரிந்து கொண்டவர்களாக அவனிடம்
சரணடைகிறவர்களாக ஆய்ப்பாடிச் சிறுமியர் தம்மை இனம் காட்டிக் கொள்கிறார்கள்.
உக்கம் என்ற சாமரம் பற்று எல்லாவற்றையும் விரட்டி அடிப்பது. கண்ணாடியே ஞானம்.
எனவே இருபதாம் பாடலின் கோரிக்கையை பற்றுக்களை விரட்டி அடிப்பதற்கும் ஞானத்தைக் கண்டு கொள்வதற்கும் அருளுமாறு கேட்பதாகக் கொள்ள வேண்டும்.
திருப்பாவையின் இருபத்தொன்றாம் பாடல் வைணவ மெய்ப் பொருட்குவியலில் ஒரு வைரம்.
Sunday, January 10, 2010
திருப்பாவை - 21
Posted by ஞானவெட்டியான் at 6:22 AM
Labels: திருப்பாவை, பக்தி, வைணவம்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment