நாள் இருபத்திரெண்டு - பாடல் இருபத்திரெண்டு
அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற்கீழ்
சங்கமிருப்பார் போல வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.
இப் பாடலும் முந்தைய பாடலைப் போலவே இறைவனின் அருளை வேண்டுவதாக அமைந்திருக்கிறது. முந்தைய பாடலில் மாற்றார் வலி தொலைந்து ஆற்றாது வந்து அடிபணிவதைப் பற்றிப் பேசக் கேட்டோம்.
ஆயினும் அவர்கள் வாசற்கடையில்தானே நிற்கிறார்கள்? இருபத்திரெண்டாம் பாடலில் குறித்த அரசர் மாற்றார் அல்லர். அரசர்களானாலும் வாழ்வியலின் ஏற்றத் தாழ்வுகளுக்கு உட்பட்டவர்கள். தோல்வி, வறுமை, விரக்தி போன்ற உணர்வுகளை அநுபவிப்பவர்கள். வாழ்வியலின் கூறுகளான துன்பங்கள் தாக்கும் போது அரசர்களாயினும் ஆண்டிகளாயினும் ஆணவம் அழிகிறது. தான் தனது என்பவற்றின் சிறுமையை உணரும்போது இறைவனிடம் வந்து சேர்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடும்போது இக்கன்னியரும் அவ்வாறே ஆனவர் என்பது தெரிகிறது. அவர்களும் வாழ்வின் துயர வசப்பட்டவர்களே. அத்துயரங்கள் எல்லாம் நீங்கிப் போகும் என்பதனாலேயே “எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர்” என்கிறார்கள்.
ஆயினும் அவர்களுடைய சாபம் செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டுவிட்டதாலோ அல்லது செய்யக் கூடாததைச் செய்து விட்டதாலோ அவர்கள் மேல் பாய்ந்ததல்ல. உடலெடுத்து வந்ததே பாவத்தின் அடிப்பிறந்தது என்பதால் அந்தப் பாவத்தைக் கழிக்க வேண்டும் என்கிறார்கள். சீரிய வாழ்வு வாழ்ந்தால் இறைவனின் கருணைக்கும் கீழான வாழ்வு வாழ்ந்தால் சாபத்துக்கும் ஆளாக நேரிடும். எனவே ஒழுக்கம் என்பது சமய வாழ்வின் முக்கிய பகுதியாகிறது.
இந்து மெய்ப்பொருளியலில் ஈடேற்றம் என்பது சிறப்பான பொருளைப் பெறுகிறது. இறைவனோடு இடையீடற்ற தொடர்பு கொள்ள வேண்டும் என்பதே வாழ்வின் பயனாகிறது. பாவங்கள் மட்டுமன்றி புண்ணியங்களும் தொடர்ந்து வரும் பிறப்புக்குக் காரணமாகின்றது. எனவே உண்மையான துறவு என்பது புண்ணிய பாவம் ஆகிய இரண்டையும் துறந்து விடுவதுதான். இறைவனிடம் சரணடையும் போது புண்ணியம் பாவம் ஆகிய இரண்டின் விளைவுகளும் தீர்ந்து போய்விடுகிறது.
அதனால்தான் நம்மாழ்வார், எல்லாவற்றையும் முழுக்க விட்டுவிட்டு இறைவனிடம் சரணடைய வேண்டும் என்கிறார். எல்லாவற்றையும் எனும்போது பாவம் புண்ணியம் ஆகிய இரண்டையும்தான் என்று கொள்ள வேண்டும்.
அடுத்து, தான் தனது என்ற பற்றை வேரோடு விட்டுவிடுவதைப் போல உயிருக்கு ஆகிவருவது வேறு எதுவும் இல்லை என்கிறார். அப்படித் தனது பற்றை எல்லாம் விட்டுவிட்டு இறைவனிடம் சரணடைய வேண்டும்
என்கிறார். உடலெடுத்திருப்பது அப்படி அனைத்தையும் விட்டுவிட்டுச் சரணடைவதற்குத் தடை.
ஆகையால் பாவையர் தங்கள் மேல் சாபம் இழிய வேண்டும் என்று வேண்டும்போது உடலெடுத்திருப்பதன் பீடிப்பு நீங்கவேண்டும் என்றுதான் பொருள்.
இறைவனின் கருணை திடீரெனப் பொங்கிப் பாய்வதல்ல. சிறுகச் சிறுகச் எங்கள்மேல் விழிபடாதோ என்கின்றனர். அப்பொழுதாவது மெதுவாக மெதுவாக எங்களைப் பிடித்த பாவம் அகலுமே என்கின்றனர். அதுவன்றித் திங்களைப் போலக் குளுமையும் சூரியனைப் போல வெம்மையும் எனும்போது ஆணவத்தைத் தகிக்கும் வெம்மையும் அருளின் குளுமையும் குறிக்கப்பட்டனவாம்.
சாபம் என்றால் செய்த அல்லது செய்யாமல் விடுத்த செயல்களால் விளைவது எனக் கொள்ளாது உடலெடுத்திருப்பதே சாபம் என்று கொள்கின்றனர் பாவையர். இங்கு, தம் பாவம் புண்ணியம் ஆகிய அனைத்தையும் தீர்த்துவிட்டு ஈடேற்றம் வேண்டும் என்று வேண்டுகிறார்கள்.
Sunday, January 10, 2010
திருப்பாவை - 22
Posted by ஞானவெட்டியான் at 6:50 AM
Labels: திருப்பாவை, பக்தி, வைணவம்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment