நாள் இருபத்து மூன்று - பாடல் இருபத்து மூன்று
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப்போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காதனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்தருளேலோ ரெம்பாவாய்.
மழைக் காலத்தில் மலைக்குகையில் அயர்ந்து உறங்கும் சீரிய சிங்கமானது, உறக்கம் களைந்து, அனல் பறக்கும் கண்களை அகல விரித்து, பிடரியை சிலிர்த்து, உடல் உதறி, சோம்பல் தொலைத்து நெஞ்சு நிமிர்த்தி, நீண்ட கர்சனை புரிந்து கம்பீரமாக புறப்படுவது போல் காயா மலர் போல் கருமை நிறக் கண்ணா! நீயும் எழுந்து வந்து இவ்விடம் வந்து இவ்வழகிய சிங்காதனத்தில் அமர்ந்து திருவோலக்கம் அருளி, நாங்கள் வந்த காரியத்தை விசாரித்து அறிந்து எங்களுக்கு அருள்வாயா! ஏ மாதவா!
எதிரிகளுக்கு சிங்கமாக விளங்கும் கண்ணன் தனது அடியவர்களுக்கு பூவைப் போன்ற பூவண்ணனாக விளங்குகிறான்.
காட்சிகளின் வருணனை போற்றவேண்டய ஒன்று.
மழைக்காலத்துக்குப்பின் ஒரு காலை நேரம்; மலை மேல் ஒரு குகை; அதில் ஒரு அறிவுற்ற சீரிய சிங்கம். இப்படித் தொடங்குகிறது காட்சி. அந்தச் சிங்கம் கம்பீரமாகத் தூங்கி எழுகிறது. கண்கள் தீக்கங்குகளாகச் சுடர்விடுகின்றன. நுரைவிட்டுப் பொங்கும் அலைகடலைப் போலப் பிடறி மயிர் பொங்குகிறது. ஒரு சிலிர்ப்பில் எல்லா மயிர்க்கால்களிலும் உதறல் தந்து படிந்திருக்கும் பொடி மண்ணை எத்திசையும் விட்டெறிகிறது. தூக்கத்தையும் ஒரு நெட்டுயிர்ப்போடு விட்டெறிந்து முழங்கிப் புறப்படுகிறது. முழக்கம் பாறைக்குகை எங்கும் எதிரொலித்து உரக்க வெளியே கேட்கிறது. இப்படியாக ஆரண்ய அரசன் சிங்கம் தன் அரசுக் கடமைகளாற்றப் புறப்படுகிறது.
இந்தக் காட்சியின் உயிரோட்டமே இந்தப் பாடலின் சிறப்பாக அமைகிறது.
இந்தப் பாடலைப் புரிந்து கொள்ள முதன்மையாக அமைவது காரியம் என்ற வார்த்தை. இறைவனைத் தமது ஈடேற்றத்துக்காக அணுகியிருக்கும் பாவைக் கன்னியர் தமது காரியத்தைக் கவனித்து நிறைவேற்றித் தருமாறு
பிரார்த்திக்கிறார்கள்.
என்னதான் விதித்தவாறு வாழ்ந்தாலும் இச்சாபத்தினின்றும் விடுபடுவதை உயிர் தானாகச் சாதிக்க முடியாது. ஏனென்றால் உடலெடுத்து வந்ததற்குக் காரணம் ஆன்மாவின் கர்ம வினை. அந்தக் கர்ம வினையின் இயல்பு இன்னதெனத் தெரிந்து கொள்ள முடியாத வரை அதைக் கழிக்க எப்படிஇயலும்?
வாழ்வின் ரகசியமே தானறியாக் கர்ம வினையின் வழி தானாகிய பின் தானாக தனக்குத் தெரியாததைக் கழித்துக் கட்ட வேண்டியிருப்பதுதான். எனவே தன்னைக் கழித்துவிட்டு இறைவனிடம் சரணடைந்து விடுவது தவிர வினைப் பயனைக் கழித்துக் கட்ட வேறு வழியில்லை. அதை விடுத்து அதைக் கழிக்க இதையும் அதையும் செய்தோ செய்யாமலோ விடும்போது வினைப் பயனைக் கழித்துக் கூட்டி வினை இருக்கச் செய்யத்தான் வருகிறோம். அவ்வாறன்றி உடலெடுத்த வாழ்வைச் செயல்களைக் கொண்டன்றி இறைச் சிந்தனை கொண்டு நிறைப்பதே மேலும் உடலெடுத்து வாராமல் இருக்கச் சிறந்த வழியாகிறது. சரணாகதித் தத்துவமும் இப்படித்தான் விளக்கம் கொள்ள வருகிறது.
பிறவித் தளை உறுதியானது என்றால் வலிவானவர்தான் அதை வெட்டி எறிந்து நீக்க முடியும். அதனால்தான் இறைவனை கம்பீரத்தோடும் வலிமையோடும் தொடர்பு படுத்துகிறார்கள். வீரம் அல்ல இங்கு அவர்கள் குறிப்பது. வீரம் பகையை முறியடிக்கும். பகை இருப்பது தெரியாமல் இருப்பதாகப் பிறவித்துயரம் இருக்கும்போது என்ன செய்வது? அப்படியான பிறவித்துயரத்துக்குக் காரணமான அடிப்படைச் சாபத்தை, பிறவிகள் தோறும் செயல்பட்டு செயல்படாமல் விடுத்துச் சேர்த்துச் சேர்த்துக் கொண்டு வந்த கர்ம வினையை நீக்குமாறு கேட்கிறார்கள்.
Sunday, January 10, 2010
திருப்பாவை - 23
Posted by ஞானவெட்டியான் at 9:59 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment