நாள் இருபத்து நான்கு - பாடல் இருபத்து நான்கு
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குனிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோரெம்பாவாய்.
திரிவிக்கிரமனாக மூன்று அடிகளால் மூவுலகங்களையும் அளந்த திருவடியை போற்றி வணங்குகின்றோம். இலங்கையை அழித்த உனது திறமையைப் போற்றுகின்றோம். மாய வடிவில் வந்த சகடாசுரனை உதைத்து மாய்த்து உனது புகழைப் போற்றுகின்றோம். கன்றின் உருவத்தில் வந்த வத்ராசுரனை எறிந்து விளங்கனி விழ வைத்த உனது திறத்தைப் போற்றுகின்றோம். ஆயர்களையும், ஆநிரைகளையும் காப்பாற்ற கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்த உன் கருணை குணத்தைப் போற்றுகின்றோம். பகைவர்களை அழிக்க உன் கையில் விளங்கும் உனது திவ்விய ஆயுதங்களை வணங்குகின்றோம். என்றென்றும் உனக்கு அடிமையாக இருந்து உன் சேவை புறப்பட்டு இன்று வந்தோம். எங்களுக்கு இரங்கி அருள் புரிவாயா?
அன்றிவ்வுலகமளந்தவன்: வாமன அவதாரத்தில் இவ்வுலதத்தை ஒரு அடியில் அளந்தவன்.
சென்றங்கு தென்னிலங்கை செற்றவன்: மேலும் நாங்கள் தேடி வந்த இந்த திருவடிகள் முன்பு சீதா தேவியார் பொருட்டு, தென்னிலங்கை சென்று இராவணனை அழித்தவை.
பொன்றச் சகடம் உதைத்தவன்: கம்சனால் ஏவப்பட்ட அரக்கி பூதனா கண்ணன் கையால் மாண்டதால் கோபம் கொண்ட அவன், கண்ணனைக் கொல்ல மற்றொரு அசுரனை அனுப்பினான் . அவனும் சகட(சக்கர) வடிவம் எடுத்து கண்ணனை ஏற்றிக் கொல்ல உருண்டு வந்தான். அதனை அறிந்த கண்ணன் தனது பிஞ்சுக் கால்களால் அவனை உதைத்து அவனை வதம் செய்தார்.
கன்று குணிலாய் எறிந்தவன்: கண்ணனாகிய குழந்தையைக் கொல்ல கம்சனால் ஏவப்பட்ட அசுரர்கள் ஒவ்வொருவராக மாண்டதால், பின் இரண்டிரண்டாக வரத் தலைப்பட்டனர். கபித்தாசுரன், வத்ராசுரன் என்னும் இரு அரக்கர்கள் இவ்வாறு திட்டம் போட்டு வந்தனர். கபித்தாசுரன் விளா மரமாக நிற்க, கன்றுக் குட்டி போல வத்ராசுரன் உருவெடுத்து சென்று கண்ணனை போக்குக் காட்டி விளா மரத்திற்கு அருகில் வரச் செய்து, வேரோடு கண்ணன் மேல் சாய்ந்து அவரைக் கொல்ல திட்டம் தீட்டி வந்தனர். எல்லாம் அறிந்த மாயக் கண்ணன், மரம் அருகில் வந்து, கோபாலர்கள் விளாம் பழத்தைக் குறி வைத்து அடிக்க சிறு தடியை உபயோகிப்பது போல, கன்று போல வந்த அசுரனை தடியாக மாற்றி விளா மரத்தின் மேல் எறிந்து இருவரையும் வதம் செய்தான்.
குன்று குடையாய் எடுத்தவன்: ஆயர்கள் இந்திர விழாவெடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அப்படித் தனக்கு வழக்கமாக விழாவெடுத்துக் கொண்டாடாமல் போன ஆயர்களைத் தண்டிக்க இந்திரன் வருணனைக் கொண்டு கோகுலத்தில் மிகுமழை பொய்விக்க எங்கும் வெள்ளக்காடாயிற்று. ஆயர்கள் கண்ணனிடம் சென்று சரணடைய கண்ணன் கோவர்த்தன மலையை எடுத்துக் குடையாய்ப் பிடிக்க ஆயர்கள் அனைவரும் அதற்கடியில் நின்று தப்பித்தனராம். இதைக் குறிக்கவே குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி என்கிறார்.
இப்பாடல் இறைவனது மேன்மை வெளிப்பட்ட அவதாரச் செயல்களைப் போற்றிக் கொண்டாடுகிறது.
முதலடியில் வாமன அவதாரம் குறிக்கப்படுகிறது. மகாபலி முவ்வுலகையும் தன் ஆட்சிக்குக் கீழ்க் கொண்டு வந்து ஆண்ட காலம் தேவர்கள் அவனுடைய கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனிடம் சென்று முறையிட்டார்கள். என்னதான் கொடூரமானவன் என்றாலும் இல்லையெனாது தரும் வள்ளல். குறளனாக ஒரு பிராம்மண வடிவத்தில் இறைவன் அவனை அணுகியபோது தானமாக என்ன வேண்டுமென்று கேட்க மூன்று அடிகளால் அளக்குமளவுக்கு மண் வேண்டும் என்று இவர் கேட்டார். தாரை வார்த்துத் தானமாக மூன்றடி மண்ணை அவன் வழங்கினான். இறைவன் விண்ணுக்கும் மண்ணுக்குமான வளர்ந்து மண்ணை ஓர் அடியாலும் விண்ணை ஓர் அடியாலும் அளந்துவிட்டு மூன்றாவது அடிவைக்க இடமில்லாமையால் அவன் தலைமீது வைத்து அவனை அழித்தது வாமன அவதாரக் கதையாகும்.
இங்கு அவதாரங்களைப் பற்றி ஒன்று சொல்லியாக வேண்டும். மொத்தம் பத்து அவதாரங்கள். அதில் பத்தாவது அவதாரமாகிய கல்கி அவதாரம் கலியுகத்தின் முடிவில் நிகழப் போவதாக நம்பிக்கை. முந்தைய ஒன்பது அவதாரங்களைப் பார்க்கும் போது பரிணாம தத்துவத்துக்கு ஒரு விளக்கம் கிடைப்பதைப் போல இருக்கிறது. முதல் மூன்று அவதாரங்கள் மிருக வடிவில் இருக்க அடுத்த அவதாரம் பாதி மிருகமும் பாதி மனிதனுமாக இருக்க அடுத்த ஐந்து அவதாரங்களும் மனித வடிவில் இருக்கிறது. பத்தாவது அவதாரம் பற்றிய நம்பிக்கையோ மனிதத்துவத்தைத் தாண்டிய கல்கி அவதாரம்.
முதல் அவதாரம் நீரில் இருக்கும் மச்ச அவதாரம்.
இரண்டாவது நீரிலும் நிலத்திலும் இருக்கும் கூர்ம அவதாரம்.
மூன்றாவது அவதாரம் நிலத்தில் இருக்கும் வராக அவதாரம்.
நான்காவது அவதாரம் நரசிம்மாவதாரம்.
அடுத்ததாக வாமனனாக குறள் வடிவில் மனித அவதாரம்.
இந்த ஐந்து அவதாரங்களும் ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக அவ்வப்போது தோன்றி வருவதாக அமைந்தவை.
ஆறாவதாகத் தோன்றிய பலராமர் உழவுத் தொழிலைக் குறிக்கும் கலப்பயைக் கைக்கொண்டிருக்க அடுத்து பரசுராமர் சத்திரியராக அமைகிறார்.
பிறகு ராமனாக மானுட லட்சியம் எதுவாக அமையும் எனக் காட்டினார். லட்சிய புருடனான ராமனிலிருந்து காரிய மேன்மை கொண்ட கிருட்டிணாவதாரம். பல விதங்களிலும் அதர்மத்தை அழிக்க வேண்டிய காரியபுருடராகவே கண்ணன் இருந்திருக்கிறார். கடைசியாகப் பாரதப் போரில் ஆயுதம் எதுவும் ஏந்தாமல் போரில் பங்கு கொண்ட விந்தையையும் காண்கிறோம். பாரதப் போரில் அவருக்கு ஒரு பங்குண்டு என்றாலும் எந்தப் பக்கமும் சாராதவர் அல்லவா?
இந்தப் பாடலில் நோன்புக்கான பரிசிலாக (பறை) இறை அருளைப் பெற வந்திருக்கிறோம் என்கிறார்கள்.
Sunday, January 10, 2010
திருப்பாவை - 24
Posted by ஞானவெட்டியான் at 10:58 AM
Labels: திருப்பாவை, பக்தி, வைணவம்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment