நாள் இருபத்தைந்து - பாடல் இருபத்தைந்து
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தருக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோரெம்பாவாய்.
வடமதுரையில் தேவகியின் மகனாகப் பிறந்து ஒரு இரவிற்குள்ளாகவே கோகுலத்தில் யசோதையின் மகனாக ஒளிந்து வளர்ந்தது, அகங்காரத்தினால் கேடு நினைத்த கம்சனுக்கு வயிற்றில் நெருப்புப் போல நின்று இருந்த பெருமாளே! நெடுமாலே! உன் அடிமைகளாகிய நாங்கள் உன்னை வேண்டி வந்துள்ளோம். எங்களுக்கு தேவயான இறைக் கருணையைப் பரிசிலாக அளிப்பாயாக. அவ்வாறு நீ எங்களை ஆட்கொண்டால் என்றென்றும் உன்புகழ் பாடி, உனக்கு சேவை செய்து வருத்தம் தீர்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.
தேவகி மைந்தன் யசோதையின் மகன் ஆனது:
கண்ணன் பிறப்பு, வளர்ப்பு, செயல்கள் அனைத்துமே இனியவை. அவன் தேவகியின் மகனாய் பிறந்தவன். இறைவனையே பிள்ளையாகப் பெற அவள் பெற்ற பேறு பெரியது, ஒப்பற்றது. சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்படவேண்டிய கண்ணனின் பிறப்பு சிறைக்குள் நிகழ்ந்தது. கண்ணனை ஓர் இரவு கூட மதுராவில் வைத்துக் கொள்ள இயலவில்லை. இரவோடு இரவாக வாசுதேவர் கண்ணனை கோகுலத்துக்கு எடுத்து சென்றார். விழித்திருந்த காவலர்கள் அனைவரும் மாயையால் உறங்கினர்; சிறைக் கதவுகள் தானாக திறந்து கொண்டன. வெள்ளம் கரை புரண்டு பாய்ந்த யமுனை நதி இரண்டாகப் பிளந்து வசுதேவருக்கு பாதை அமைத்தது. மழையிலிருந்து கண்ணனைக் காப்பாற்ற ஆதிசேடன் குடைப் பிடித்தான். பெண் குழந்தை பெற்ற யசோதை தன் உணர்வின்றி உறங்கிக் கொண்டிருந்தாள். கண்ணனை அங்கு விட்டு, வசு தேவர் அந்த பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு சிறைக்குத் திரும்பி வந்தார். சிறைக்கதவுகள் பூட்டிக் கொண்டன. மாயை விலகி காவலர்கள் விழித்துக் கொண்டனர். சிறைக்குள் இருந்த குழந்தை அழுதது. குழந்தை பிறந்த செய்தி மன்னனுக்குச் சென்றது. ஆசையுடன் வரவேண்டிய தாய் மாமன் ஆயுதத்துடன் வந்தான். ஈவு இரக்கமில்லாமல் பெண் குழந்தை என்றும் பாராமல் கொல்ல முற்பட்டான் . குழந்தை மாயாவாக மாறி உன்னைக் கொல்லப்பிறந்தவன் கோகுலத்தில் உள்ளான் என்னும் உண்மைதனை உணர்த்தி மறைந்தது. இத்தனையும் நடந்தது அந்த ஒப்பற்ற இரவில்.
கண்ணனை தன் கண்ணின் மணியாக வளர்த்தாள் யசோதை. நந்தகோபர் கண்ணனை ஒளித்து வளர்ப்ப அறிந்த கம்சன் அவனைக் கொல்ல கருதி, சகடம், கொக்கு, கன்று, குதிரை, விளாமரம், குருந்த மரம், பூதனை முதலிய பல அசுரர்களை அனுப்பினான் அனைவரும் கண்ணால் வதம் செய்யப்பட்டனர். வில் விழாவிற்கு கண்ணனையும், பலராமரையும் அழைத்து, மல்லர்களையும், குவலயாபீடத்தையும் ஏவிக் கொல்ல முயற்சி செய்தான். அதுவும் வீணானது. இவ்வளவு செயல்களும் கம்சனின் வயிற்றில் நெருப்பை வளர்த்தது; அந்நெருப்பு நின்றுகொண்டே இருந்ததாம். இவ்வாறு கம்சனின் அனைத்து செயல்களையும் முறியடித்து அவனையும் கண்ணன் வதம் செய்தான்.
இப்பாடலின் முதற்பகுதி மீண்டும் கண்ணனின் இளமைப் பருவத்தைப் பற்றியும் கண்ணனைக் கொல்லக் கம்சனின் பலனற்ற முயற்சிகள் பற்றியும் பேசுகிறது. கம்சனின் சகோதரியான தேவகியின் மகனாகச் சிறையில் பிறந்தவன் கண்ணன். இரவோடு இரவாக யசோதையின் மகனாக வளரக் கோகுலத்துக்குப் போய்ச் சேர்ந்தவன். ஓருத்திக்கோ பெற்ற தனிச் சிறப்பு; இன்னொருத்திக்கோ வளர்த்த தனிச் சிறப்பு.
இப் பாடலில் இறைவனோடு இடையீடற்ற தொடர்பு வேண்டிப்
பாடுவது தெளிவாகத் தெரிகிறது.
Sunday, January 10, 2010
திருப்பாவை - 25
Posted by ஞானவெட்டியான் at 11:59 AM
Labels: திருப்பாவை, பக்தி, வைணவம்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment