Sunday, January 10, 2010

திருப்பாவை - 26

நாள் இருபத்தாறு - பாடல் இருபத்தாறு

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
போலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்களே போய்ப்பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.


ஊயர்ந்தவனே! மேன்மைமிகுந்தவனே! திருமாலே! நீல நிற மணியின் வண்ணத்தை ஒத்தவனே! மார்கழி நோன்பு நோற்று நீராட வந்த பாவையர்களுக்கு என்ன வேண்டுமென்று கேட்பாயாகில்......

முழங்கும்போது அகிலத்தை நடுங்கவைக்கும் பாஞ்சசன்னியத்தை போல் முழங்கும் சங்கம் வேண்டும். பெரும் முரசுகள் வேண்டும். உன்னைப் போற்றிப் பல்லாண்டு பாடும் கலைஞர்கள் வேண்டும். அழகிய மங்கள தீபங்கள் வேண்டும். ஆடிப்பறக்கும் கொடிகள் வேண்டும். எங்களைக் காக்க எங்கள் தலை மேல் கூரையும் வேண்டும். ஆலிலையில் பள்ளிகொண்டவனே! இவற்றை எங்களுக்கு நீ அருள்வாயாக.


இப் பாடல் பாவை நோன்புக்கானவற்றைக் கேட்பதாக அமைந்திருக்கிறது. சங்கு, பறை, கொடி, விதானம் ஆகியவற்றோடு இறைவனைப் பாடும் அடியார்களின் சங்கத்தையும் வேண்டிப் பாடுகிறார்கள்.

பாடலில் முதலடியில் இறைவனை “மாலே” என்று அழைக்கிறார் ஆண்டாள். உயர்ந்தவர், மேன்மையானவர் என்று பொருள் கூறலாம். என்றாலும் இறைவனின் உயர்வுக்கு என ஒரு சிறப்பு உண்டு.

மணிவண்ணன் என்பது இறைவனுக்குத் தரப்பட்டுள்ள மறுபெயர். நீலமணியைக் குறித்து எழுந்த பெயர். நாராயணர் நிறம் பற்றி மழை மேகத்தோடும் குவளை மலர்களோடும் நீலமணியோடும் பேசுவது வழக்கம்.

ஆன்மா தன் இயல்பான இருப்பில் இறைவனோடு இடையறாச்
சம்பந்தம் கொண்டது. பிறப்பெடுத்து வந்த போது அந்தச் சம்பந்தத்தை இழந்துவிட்டது. இழந்துவிட்ட இறைச் சம்பந்தம் நோக்கி ஏங்கி பாவை நோன்பில் சங்கு, பறை, கொடி, விளக்கு, விதானம், சாமரம், கண்ணாடி என்று அனைத்தையும் கொண்டு இறைவனோடு இருக்கும் உணர்வை அனுபவித்தலின் வெளிப்பாடாக அமைகிறது இப்பாடல்.







0 Comments: