நாள் இருபத்தேழு - பாடல் இருபத்தேழு
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சன்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவாறக்
கூடியிருந்து குளிர்ந்தோலோர் எம்பாவாய்.
உன்னை கூடி மகிழாது ஒதுங்கியிருப்பவர்களையும் அன்பால் வெல்லும் சீரிய கோவிந்தா!
இந்த பாவை நோன்பை நோற்பதால் நாங்கள் பெறும் பரிசு மிகச்சிறந்தது. உன் கருணையினால் அகிலத்து மக்கள் போற்றும் பரிசுகள் அனைத்தும் பெற்றிடுவோம்.
நோன்பிற்காக வைத்துள்ள அலங்காரங்கள் அனைத்தும் மேற்கொள்வோம். தலையில் சூடாமணி சூடுவோம். தோள் வளையங்கள் அணிவோம். தோடணிவோம். கைகளில் வளையல்கள் அணிவோம். செவியில் செவிப்பூ அணிவோம். கால்களில் பாடகம் அணிவோம். இப்படி பல ஆபரணங்களை அணிவோம். மலர் சூடுவோம். புது பட்டணிவோம்.
அதன் பின், பால் சோறு பொங்கி அதில் பசு நெய் கலந்து முழங்கை வழிய வழிய உன்னுடன் கூடி உண்ணுவோம். அதன்பின்னாவது மனம் இரங்கி நீ எங்களுக்கு நாங்கள் கேட்பதைத் தா!
கோவிந்தன்:
மாடு மேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கோபாலர் சாதியிற் பிறந்தவன் கண்ணன்.
"கூடாரை வெல்லுஞ்சீர் கோவிந்தா":
பசுக்கள் ஆயர்களின் செல்வம். அவற்றைக் கவர்ந்து செல்ல வரும் பகைவர்களை எதிர்த்து நின்று அவர் தம் வலிமையை அழிக்கின்ற கோவிந்தன் எனலாம். உன்னை கூடி மகிழாது ஒதுங்கியிருப்பவர்களையும் அன்பால் வெல்லுகிறவன் என்றும் கொள்ளலாம்.
இப் பாடல் பாவை நோன்புக்கான கலங்களைப் பட்டியலிடுகிறது.
அருச்சுனனின் சாரதியாகக் கண்ணன் பயன்படுத்தியது பாஞ்ச சன்னியம். அதே சங்கைக் கொண்டுதான் ஆநிரைகளை ஒருங்கு சேர்த்தானாம் கண்ணன். கோயில் வழிபாடுகளில் பயன்படுவதும் இந்தச் சங்கே. அப்படியான சங்கை ஒவ்வொரு பாவைக் கன்னிக்கும் கண்ணன் அருள்கிறான்.
ஈரடிகளால் உலகளந்தபோது ஜாம்பவான் முழக்கியது பறை. அதே பறைதான் ராமன் ராவணனை வெற்றி கொண்டபோதும் முழங்கியது.
கொடி கருடக்கொடி.
விதானம் மதுரையிலிருந்து ஆய்ப்பாடிக்குக் கண்ணனைக் கொண்டு செல்லும் போது மழைக்குக் குடையாக வந்த ஆதிசேஷன்.
இப்படியாக வேண்டிய பறைகள் அனைத்தும் தந்தருளிவிட்ட பின்னும் இன்னும் சில பரிசுகள் கேட்கிறார்கள் பாவையர். ஆபரணங்களும் அணிமணியும் பூண்டு இறைவனோடு இருந்து போசனமும் செய்ய வேண்டுமாம்.
தன்னுடையது என்றிருந்த அனைத்தையும் ஏற்கெனவே துறந்துவிட்டவர்கள் பாவை நோன்பிருக்கும் கன்னியர். எனவே இனித் தமக்கென வேண்டுவது தமக்காவதாக இருக்கப் போவதல்ல.
இறைவனுடையதை இறைவனின் அருளாக அணிந்து கொள்ளப் போகிறார்கள். இறைவனின் அருளையே ஆடையாகவும்
அணிகலனாகவும் பூண்டு மூட நெய் பெய்த பாற்சோறாக உண்ணப் போகிறார்கள்.
உண்ணும் உணவும் பருகும் நீரும் நாரணனாகவே ஆகிப் போகின்றன. பசித்தவன் உண்பதையல்ல இவர்கள் பேசுவது. இறைவனோடு இருத்தலைக் கொண்டாடி கூடியிருந்து விருந்தாடலைக் குறிக்கிறார்கள்.
Monday, January 11, 2010
திருப்பாவை - 27
Posted by ஞானவெட்டியான் at 6:58 AM
Labels: திருப்பாவை, பக்தி, வைணவம்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment