நாள் இருபத்தெட்டு - பாடல் இருபத்தெட்டு
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவிப் பெருந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.
நாங்கள் ஆயர்கள். கன்று பசுக்களுடன் காட்டிற்கு சென்று அவைகளை மேய்த்து, அவைகள் உண்ணும்போது நாங்களும் உண்பவர்கள். அறிவற்றவர்கள். அப்படிப்பட்ட ஆயர் குலத்தில் எங்களுடன் நீ பிறந்திருப்பதனால் நாங்கள் பெரும் புண்ணியம் செய்திருக்கின்றோம்.
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்னுடன் உண்டான இந்த உறவு இனி ஒரு பொழுதும் மாறாது. அன்பு மேலீட்டால் உன்னை மற்ற சிறுவர்களை அழைப்பதைப் போல் உன்னையும் அழைப்பதனால் கோபம் கொள்ளாதே! எங்களை காத்து எப்போதும் உன் சேவகம் செய்யும் வரம் தருவாயாக.
குறையொன்றும் இல்லாத ஸ்ரீ கோவிந்தா:
மாடு மேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் ஆயர் குலத்தில் வளர்ந்தவன் கண்ணன் என்பதால் கோவிந்தன் என்றும் பெரிய பிராட்டியாரையே தன் வல மார்பில் கொண்டுள்ளதால் குறைவொன்றும் இல்லாத கோவிந்தன் என்றும் பாடுகின்றார் ஆண்டாள். ஆன்மா தன்னுடைய இறைத் தொடர்பை உணரத் தவறிய போதும் இறைவனுக்கு ஏதும் குறையில்லை என்று கொள்ள வேண்டும்.
இப்பாடலில் ஆன்மாவின் இயல்பு, ஆன்மாவுக்கு இறைவனோடான தொடர்பு, உடலெடுத்த ஆன்மா இறைவனை நோக்கிய வாழ்வில் கைக்கொள்ள வேண்டிய சரியான மனப்பாங்கு ஆகியவை பற்றி விளக்குகிறது.
உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது:
கடவுள் பரிபூரணம். ஆன்மாவுக்கு இறைவனோடான தொடர்பு முடிவில்லாதது என்று பொருள். இதையே அந்த உறவைப் புரிந்து கொள்ளும் வரை வாழ்வோடான பிணைப்பை அறுக்க முடியாது என்றும் பொருள் கொள்ளலாம். எனவே ஆன்ம இறைத் தொடர்பை ஆன்மா உணராமல் இருப்பதாலோ மறுத்துவிடுவதாலோ துணித்துவிடுவதாலோ அது இல்லாமல் போய்விடுவது இல்லையாகும்.
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து:
ஆயர்பாடிப் பெண்டிரின் வாழ்வு கறவையினத்தைச் சார்ந்தது. அன்றாடக் கடமைகளைக் கவனிப்பதால், இறைவனை அவர்கள் மறந்து விட்டிருக்கலாம். அல்லது இறைவனை உணரும் அளவுக்கு உணர்வு, அறிவுக் கூர்மையற்றவர்களாக இருக்கலாம். அவர்கள் மத்தியில் கண்ணன் தோன்றி வந்திருப்பது இறைவனின் கருணையே.
இப்படிப்பட்ட எங்கள்மேல் உன் கருணை மழையைப் பெய்விக்க வேண்டும் என்பதே வேண்டுதல்.
உடலெடுத்த வாழ்வே அறியாமைக்கு அடித்தளமாக அமைந்துவிடுகிறது. அவதாரங்களில் தன்னை மானுடச் சூழலில் வெளிப்படுத்துவது இறைவனின் மிகப் பெரிய கருணைக்கு அடையாளமாகிறது. அதனால்தான் அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்தில் இறைவனைப் பெற்றிருப்பதைச் சிறப்பிக்கின்றனர்.
இறைவனோடான ஆன்மாவின்தொடர்பு தவிர்க்கவியலாத ஒன்று. அதனால்தான் உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது என்கிறார்கள்.
ஆன்மா இவ்வுலக பந்தங்களால் அலைக்கழிக்கப்படுகிறது. என்றாலும் இறைவன் எப்போதும் ஆன்மாவுக்கு அருகிலேயே இருக்கிறான். ஆயினும் இறைவனை அறிந்து கொள்ளும் அளவுக்கு ஆற்றல் அற்றவனாகவே ஆன்மா இருக்கிறது. எனவே என்னதான் செய்து எப்படித்தான் இருந்தாலும் தன் ஈடேற்றத்தை ஆன்மா தன் காரியங்கள், பாவனைகள் மூலம் சாதித்துக் கொள்ள முடியாது. எனவே ஈடேற்றத்துக்கான ஒரே வழி தன் எல்லைகளை அறிந்து இறைவனிடம் முழுக்கச் சரணடைந்துவிடுவதே.
Monday, January 11, 2010
திருப்பாவை - 28
Posted by ஞானவெட்டியான் at 12:09 PM
Labels: திருப்பாவை, பக்தி, வைணவம்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment