Monday, January 11, 2010

திருப்பாவை - 29

நாள் இருபத்தொன்பது - பாடல் இருபத்தொன்பது

சிற்றஞ்சிறு காலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே வோம் உமக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

இப்பாடலில் பாவை நோன்பின் குறிக்கோளை வெளிப்படையாக அறிவிக்கிறார்கள், பாவையர்.

விடியற்காலை வேளையில் வந்து உன்னை வணங்கி உன் பொற்பாதங்களை போற்றிப் பாடும் காரணத்தைக் கூறுகிறோம் கேட்டருள்வாய்.

பசுக்களை மேய்க்கும் இடையர்கள் குலத்தில் பிறந்த நீ உன்னைச் சரணடைந்த உன் அடியவர்களை அடிமைகளாக ஏற்றுக் கொள்ளாமலிருப்பது உனக்குத் தகுதியோ?

கோவிந்தா! இன்று(இப்பிறவி) மட்டுமல்ல. இன்னும் எத்தனை பிறவி எடுக்கினும் உன்னோடு கூடியிருப்போம், உனக்கே அடிமைகளாகி சேவை செய்வோம். மற்ற எந்த விருப்பங்களும் மனத்தில் எழாமல் ஆட்கொண்டு அருள்வாய்!

கோவிந்தன்:

ஆநிரைகள் ஆயர்களின் செல்வம். மாடு மேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கோபாலர் சாதியிற் பிறந்தவன் கண்ணன் என்பதை "பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ" என்னும் வரிகளில் உணர்த்துகின்றார் ஆண்டாள்.

இதுவரைக்கும் பறை கேட்டனர் ஆயர்பாடிப் பெண்கள். வழக்கமான விளக்கத்தின்படி அப்பறை அல்லது பரிசில் வளம் தரும் மழையாகவும் ஏற்ற கணவன்மார் அமைதலும் ஆகும். பார்க்கப் போனால் பாவை நோன்பின் வேண்டுதல் மழை என்று கருதுவதே காலந்தப்பிப் போன வேண்டுதலாக அமைந்துவிடும். கார்த்திகை முதலிலேயே பருவ மழைக் காலம் முடிந்துவிடுகிறது.

மார்கழி மாதம் குளிர்காலம். தைமாதம் அறுவடைக் காலம். பொங்கல் திருநாள் அறுவடைத் திருநாள். எனவே பாவை நோன்பை செழிப்பான அறுவடைக்கான பிரார்த்தனையாகக் கொள்வதே சரி.

சமூகம் செழிப்பை வேண்டத் தனிப்பட்ட முறையில் மணவாழ்வு வேண்டுவதாகப் பாவை நோன்பு அமைகிறது என்று கொள்வது
சரியானதாகத் தெரிகிறது. அறுவடையும் திருமணமும் வளத்தைக் குறிப்பிடுகின்றன.

திருப்பாவையின் திரு என்ற அடைமொழியைக் கருத்தில் கொண்டால் அறுவடையும் நல்வாழ்வும் தாண்டிப் புனிதமான ஒன்றைக் வேண்டுவதாக அமைய வேண்டும். மழை என்றவிடத்துக் கடவுளின் கருணை மழை என்று கொள்ளலாம். இறைவனோடு இணைந்துவிடுதல் மணம் என்று கொள்ளலாம்.







0 Comments: