Monday, January 11, 2010

திருப்பாவை - 30

நாள் முப்பது - பாடல் முப்பது

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறை கொண்டவாற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்டெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவரெம்பாவாய்.

இருபத்தொன்பதாம் பாடல் பாவை நோன்பை நிறைவு செய்யும் பாடலாக அமைந்துளது. இப்பாடல் திருப்பாவையை நிறைவு செய்யும் பாடல். இப்பாடல்களைப் பக்தியோடு பாடுவோர் அடையும் நலன்களைச் சொல்கிறது.

இப்பாடல்களைப் பாடும் அனைவருக்கும் திருவருள் கிடைக்கும் என்ற உறுதியோடு பாடல் நிறைவுறுகிறது.

வங்கக் கடல் கடைந்த மாதவன் என்று சொல்லிப் பாடல் ஆரம்பமாகிறது. இறைவனுக்குச் செய்யும் எந்த ஒரு வேண்டுகோளும் பிராட்டியாகிய இலக்குமி வழியாகச் செய்யும் போது நிச்சயம் நிறைவேறுகிறது என்பது வைணவர்கள் நம்பிக்கை. பாற்கடலை அமிர்தத்துக்காகக் கடைந்த போது தோன்றியவள் இலக்குமி. அதனாலேயே வங்கக் கடல் கடைந்த நிகழ்வு இப்பாடலில் சிறப்பிக்கப்படுகிறது.

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் எனும் போது திருந்திய வடிவமும் தீர்மானமான பக்தியும் கொண்டவர்கள் என்பதைக் குறித்தார்.

இருபத்தொன்பதாம் பாடலில் குறித்த எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்குமான பறையாக எங்கும் திருவருள் கிடைக்கும் என்று அறுதியிடுகிறது முப்பதாம் பாடல்.

நாச்சியார் தோன்றிய திருவில்லிபுத்தூர் அணிபுதுவை என்று விளக்கம் பெறுகிறது. பெரியாழ்வாரும் நாச்சியாரும் ஆபரணமாகத் தோன்றிய ஊர் என்பதாம்.

கோதை -

தமிழில் அழகிய பெண் என்று மட்டுமே பொருள்.
வடமொழியில் கோதையெனில் தெய்விகப் பாடல்களைப்
பாடியவள் என்று பொருள்.

இப் பாடலுடன் திருப்பாவை முப்பது பாடல்களுக்குமான விளக்கவுரை நிறைவு பெறுகிறது.







0 Comments: