Sunday, January 03, 2010

திருப்பாவை - 19

நாள் பத்தொன்பது - பாடல் பத்தொன்பது

குத்து விளக்கெரியக் கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத்தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவமன்று தகவேலோரெம்பாவாய்.

குத்து விளக்கு எரிய, யானைத் தந்தத்தினால் செய்த கால்களையுடைய கட்டிலின் மேல், மெத்தென இருக்கும் பஞ்சு மெத்தையின் மேல் ஏறி, கொத்தாக பூவினை முடிந்த கூந்தலுடைய நப்பின்னையின் முலைகளின் மேல் கைகளை வைத்துப் படுத்திருக்கும் மலர் மார்பா, வாயை திறந்து பேசு. மையெழுதிய கண்களையுடையவளே, நீ உன் கணவனை எவ்வளவு நேரமாயினும் எழுப்ப மாட்டாய். சிறிதளவும் கூட அவனைப் பிரிந்திருக்க முடியாது உன்னால். நான் கூறுவது தத்துவமொன்றும் அல்ல, தகவல்தான்.

திருப்பாவையில் பத்தொன்பது மற்றும் இருபதாம் பாடல்களில் மட்டுமே மெய்யுணர்வாம் காமச் சுவை குறிப்பிடப்படுகிறது.

திருப்பாவையின் ஒன்பதாவது பாடலில் பள்ளியறை குறிக்கப்பட்டது. இன்னமும் நோன்பிருக்க வந்து சேர்ந்து கொள்ளாத கன்னியின் படுக்கை அறை அது. அந்தப் பள்ளியறை சுகமான சோம்பலுக்கானது. இந்தப் பாடலில் குறிப்பிட்டுள்ள பள்ளியறையோ கூடலின் பரவசத்தைக் குறிப்பது.

அங்கே தூமணி மாடத்தில் சுற்றும் விளக்கெரிந்தன. தூபம் கமழ்ந்தது. தூக்கத்தின் பிடி இழுத்துப் பிடித்தது. புகையில் மங்கிய விளக்கின் ஒளியும் துயிலணையும் தூக்க மயக்கத்தில் ஆழ்ந்திருந்ததைக் குறித்தன.

இப்பாடலில் குறித்த பள்ளியறையோ வேறு வகையானதாக இருக்கிறது.
புகையில்லை, நறுமணமோ இல்லையோ. எனவே விளக்கின் ஒளியை மங்கச் செய்ய ஏதுமில்லை. அழகு, குளிர்ச்சி, மென்மை, மணம், தூய்மை ஆகிய ஐந்து நற்பண்புகளும் இந்தப் படுக்கைக்கு உண்டு. போகமன்றி கூடலுக்குப் பின்னான பரவசத்தில் இறைவனும் இறைவியும் கட்டிப் பிடித்துப் படுத்திருப்பதை இங்கே காணலாம்.

இறைவியின் கூந்தல் உணர்வின் வெப்பமற்ற மலர்கள் மலர ஏதுவான குளிர்ச்சியாம்.

தன் மார்பின் மீது கிடப்பவரை எழ விடமாட்டாளாம். அந்த அளவுக்கு கூடலின் பரவசம். தன் நாயகன் பக்தருக்கு அருள் புரிகிறவன் என்பது தெரியும். தனக்கே தனக்கென்று அவனை இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்டிருப்பது அவளுக்குத் தகாதுதான். விடிந்து விட்ட நாள் ஆயர் சிறுமியரைக் கோயிலுக்குக் கொண்டு வந்து விட்டது என்பது அவளுக்கும் தெரியும்.

முந்தைய பாடலின் இறுதியில் நப்பின்னை கட்டிலை விட்டு நீங்கிக் கதவைத் திறக்கப் போகிறாள். கண்ணனோ தானே கதவைத் திறக்க வேண்டும் என நினைக்கிறார். எனவே நப்பின்னையை இழுத்துக் கட்டிலில் போட அவள் இவருடைய மார்புமீது விழ அவள் மார்பின் பரிசம் இவரை எழ விடாமல் செய்துவிட ஆயர் சிறுமியர் வெளியே காத்திருப்பதையும் மறந்து விடுகிறாராம்.

கடைசியில் கதவைத் திறக்காவிட்டாலும் சரி. எங்களுடைய வேண்டுகோளையாகிலும் கேளுங்கள் என்று அவர்கள் சொல்ல நப்பின்னை தனது அணைப்பை இறுக்குகிறாளாம். உள்ளே நடக்கும் உணர்வு
நாடகத்தை உணர்ந்தவர்கள் போலவே ஆயர் சிறுமியர் அவளிடம் தம் பிரார்த்தனைக்குச் செவி மடுக்கவாகிலும் அவரை விடுவிக்குமாறு கேட்கிறார்களாம்.

முதல் நான்கு அடிகளில் பொறாமை ஒலிப்பது தெரிகிறது. முட்களிடையே ஓடிக் கண்ணனோடு இருக்க மணற்பாங்கான இடம் தேடி அவர்கள் அலைய வேண்டியிருக்க நப்பின்னை கோட்டுக்கால் கட்டிலில் மெத்தென்ற பஞ்சணையில் துய்க்கிறாளே என்பதுதான் பொறாமை.

கண்ணனும் நப்பின்னையும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து உறங்குவதை இருவேறு கோணத்தில் காணலாம்.

முதல் வகை: மல்லாந்து படுத்திருக்கும் கண்ணன் நப்பின்னையை இழுத்துத் தன் மேல் போட்டுக் கொள்ள அவளுடைய மார்பகங்களின் பளுவை இவர் உணர்வதாகச் சொல்வது.

இரண்டாவதாக எழுவதற்கு முன்பே நப்பின்னையைப் படுக்கையில் தள்ளி அவள் மேல் இவர் படுப்பதாகச் சொல்லி தன் மார்பு அவள் மார்பை அழுத்தும் சுகத்தை அனுபவிப்பதாகச் சொல்வார்கள். முதல் விளக்கம் இரண்டாவது விளக்கத்தை விடக் கிளர்ச்சி கூடியதாக இருக்கிறது. என்றாலும் சம்பிரதாயமான விளக்கத்தில் பலரும் இரண்டாவது விளக்கத்தையே
ஏற்றுக் கொள்கின்றனர்.

ஆன்மாவுக்கு இறைவன் தேவை என்பது ஒன்று. இறைவனுக்கும் ஆன்மா தேவைப்படுகிறது. இந்தப் பாடலில் முவ்வகை நிலைகள் பேசப்படுகின்றன. கடவுள், தேவி, ஆன்மா. கர்ம வினை பாற்பட்டு இறைவனிடமிருந்து பிரிந்து உடலெடுத்து வாழ வந்தவை ஆன்மாக்கள். உடலோடு கூடிய இந்த வாழ்க்கை கர்ம வினைகளிள் பயன்களைக் கழிப்பதற்கு ஏதுவானது. அப்படிக் கழித்து விட்டு மீண்டும் இறைவனோடு சேர்வதுதான் வாழ்வின் பயன். அப்படி வாழ்வதென்பது எப்போதும் இறை உணர்வோடு இருப்பது. தேவி அத்தகைய வாழ்வுக்குத் துணையாக இருப்பதை விட்டுவிட்டுத் தடையாக இருக்கலாமா?
அதனால்தான் நப்பின்னையே!, "இது உனக்குத் தகுதியல்ல" என்கிறார்கள்.

இன்பங்களைத் துறக்காது, இன்பங்களுக்கு ஒரு நிலைமாற்றம் காண்பதுதான் வைணவத்தில் வாழும் வழி. இன்பத்தைத் துய்க்கும் போது அதை இறைவனுக்கு அர்ப்பணித்துத் துய்ப்பதுதான் அது.

பத்தொன்பது முதல் இருபத்திரண்டாம் பாடல் வரையில் இறைவனும் துயிலெழுந்து வரவேண்டும் என்பது கோரிக்கை.

இறைவனும் உறங்குகிறான் என்றால் பக்தரின் மேல் அக்கறையில்லாதவன் போலப் பாவனை செய்கிறானோ என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இறைவனுக்கு அக்கறை இல்லையென்றால் அது நாத்திகமல்லவா?
நாரணன் துயில்வது யோகநித்திரை.










0 Comments: