நாள் பதினெட்டு - பாடல் பதினெட்டு
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
நிற்காது ஓடும் மதம் பிடித்த யானையை உடையவனும் எதிரிகளைக் கண்டு அஞ்சி ஓடாத தோள் வலிமைக் கொண்டவனுமாகிய நந்தகோபனின் மருமகளே, நப்பின்னாய் ! நறுமணம் கமழும் கூந்தலை உடையவளே, கோழிகள் கூவத்தொடங்கிவிட்டன; பந்தலின் மேல் குயில்களும் விடாது பலமுறை கூவுகின்றன. இதுகண்டும் விடிந்துவிட்டது தெரியாதோ? கண் திறந்து வந்து வாயில் திறப்பாய்.
பந்தாடுகிற விரல்களையுடையவளே! உன் கணவனின் பேர் சொல்லிப்
பாடுகின்றோம். செந்தாமரைப் போன்ற கைகளில் சீரான வளையல் ஒலிக்க வந்து கதவை திற. நாங்கள் மகிழ்வோம்.
பதினெட்டாம் பாடலின் நோக்கம் நப்பின்னையைத் துயிலெழுப்புவது.
கண்ணனின் தேவியை நந்தகோபாலன் மருமகளாகக் காட்டுகிறது இப்பாடல்.
மதம் கொண்ட யானையைப் போன்ற வலிமையானவன் நந்தகோபாலன். உந்து மதகளிற்றன் என்பதற்கு மூன்று வகையில் பொருள்கொள்ளலாம்.
முதலாவதாக மதம் கொண்ட யானை போன்ற வலிமை உள்ளவன்.
இரண்டாவதாக மதம் கொண்ட யானையை அடக்கும் வலிமை உள்ளவன்.
மூன்றாவதாக களிறுகளைத் தன் படையில் கொண்டவன்.
இதில் மூன்றாவதை விடுத்து முதலிரண்டில் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வதற்குத் தடையேதுமில்லை.
ஓடாத தோள்வலியன் என்று வருவதைக் கருத்தில் கொண்டால் இவ்விரு பொருளும் ஏற்புடையது என்பது தெளிவாகிறது. கம்சனின் கொடுங்கோன்மைக்கு முன் நந்தகோபாலன் மட்டுமே கெளரவத்தையும் பாதுகாப்பையும் காப்பாற்ற முடிகிறது. ஆக நந்தகோபானின் வீரமும் வலிமையும் கொண்டாடுப்படுவது சரியே.
பந்தார் விரலி என்பதைக் காணும்போது, பந்தாட்டத்தில் தேர்ந்த நப்பின்னை தான் வென்ற பந்துகளைக் கையில் வைத்துக் கொண்டே தூங்குகிறாளோ?
இறைவனின் கருணையை பக்தியில் முதிர்ந்தோரும் வலிந்து கேட்டுப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை இப்பாடல் வலியுறுத்துகிறது. அம்மையின் அனுமதியின்றி இறைக்கருணை கிட்டுமோ? நப்பின்னை அவர்கள் பக்தியை ஏற்றுக் கொண்ட பின்னரே இறைவனின் கருணை சித்திக்கும். இதையே கையில் வளை குலுங்க வந்து கதவைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை புலப்படுத்துகிறது.
SHIRDI SAIBABA | HOMOEOPATHY | PSYCHIC SCIENCES
HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB
சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
0 Comments:
Post a Comment