Sunday, January 03, 2010

திருப்பாவை - 17

நாள் பதினேழு - பாடல் பதினேழு


அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெரு மான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரமூ டறுத்தோங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காதெழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோரெம்பாவாய்.


உடையும் நீரும் உணவும் அளிக்கும் எங்கள் கடவுளே! அறம்பல செய்யும் நந்தகோபாலா! எழுந்திரு.

இளந்தளிர் போன்ற பெண்களுக்கெல்லாம் கொழுந்தானவளே! குலவிளக்கே! எம்பெருமாட்டியே! யசோதா! நீயாவது எழுப்பேன்.

வாமன அவதாரமெடுத்து ஓங்கி வளர்ந்து வானை அறுத்து உலகினை அளந்த கடவுளே! உறங்காதே, எழுந்திரு.

செம்பொன் கழலினை அனிந்த கால்களையுடைய செல்வா! பலராமதேவா! நீயும் உன் தம்பியும் உறங்காதீர். விழித்திடுங்கள்.

பதினாறு பதினேழாவது பாடல்களுக்கிடையே பாவை நோன்பிருக்கும் கன்னியர் கோயிலுக்குள் அனுமதி பெற்றுப் போயிருக்க வேண்டும். பதினேழாவது முதல் இருபத்திரண்டாம் பாடல் வரை இறைவனைத் துயில் எழுப்பி அவன் கருணையை வேண்டுவதைப் போல அமைகின்றன.

வேதங்களின் கோட்பாடு பிரம்மாவைக் கடவுளாகக் கண்டது. என்றாலும் குறிப்பிட்ட சமயங்களில் வழிபாடு செய்யும்போது வெவ்வேறு கடவுளரை ஆவாகனம் செய்து வழிபடுவது வழக்கம். அப்படியான வாசுதேவர் ஒரு துணைக் கடவுளாகவும் பிரம்மா ஆதிக் கடவுளாகவும் வேதங்களில் வழிபடப்பட்டனர்.

பின்னாளைய கடவுட் கொள்கை இப்படியான எளிய விளக்கங்களுக்குள் அடங்கிவிடுவதில்லை. சைவர்களுக்கு சிவன் கடவுளாகிவிட வைணவர்களுக்கு நாராயணர் கடவுளாகிறார். அத்தகைய கடவுட் கொள்கை தத்தமக்கேயான கடவுளை ஒரு குறிப்பிட்ட வடிவில் கற்பித்து வணங்குவதாகக் கொள்ள வேண்டும்.

துவாரபாலகர்கள் அனுமதி பெற்று கோயில் பிரகாரங்களுக்குள் நுழைந்த பின் கன்னியர் நந்தகோபாலன், யசோதை பலராமன் போன்றவரைப் போற்றிப் பாடுகிறார்கள்.

நந்தகோபர் வீட்டில்தான் கிருஷ்ணன் வளர்ந்தான். அறம் என்ற வார்த்தை வழக்கமாகக் கொடை என்ற பெயரில் வழங்குகிறது. சரியாக இதைப் பார்க்க வேண்டுமானால் ஆயர்களின் தலைவனாக நந்தகோபர் தம் மக்களிடையே செல்வம் யாவும் சிறக்க அரசு செய்ததைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். ஆதலால் அம்பரமும் தண்ணீரும் சோறும் அறம் செய்வதாகச் சொன்னார் ஆண்டாள்.

இரண்டாவதாக கிருஷ்ணனை வளர்த்த யசோதையை நோக்கிப் பாடல் திரும்புகிறது. ஆயர்பாடியின் பெண்மக்களின் மென்மையைக் குறிக்க கொம்பனார் என்றார். அத்தகைய மெல்லியலாளர்களில் உயர்ந்தவர் யசோதை. மேலும் ஆயர்குலத்துக்குக் குலவிளக்கும் யசோதை என்கிறார். பெண் கடவுளருக்கு இந்து மதத்தில் சிறப்பான ஓரிடம் வழங்கியே வந்திருக்கிறார்கள். தேவியரே பக்தரிடம் அளப்பரிய அக்கறை வைத்திருப்பதாக நம்புகிறார்கள். பார்க்கப் போனால் இறைக் கருணை வேண்டிய பிரார்த்தனையே தேவியர் வழியாகத்தான். எனவே யசோதையை வேண்டுகிறார்கள்.

என்னதான் கடைசியில் இறை அருளையே வேண்டுகிறார்கள் என்றாலும் ஒரு பிரகாரத்தில் பாடுகிற பாடல் என்பதால் நாராயணனின் ஓர் அவதார மேன்மையைச் சிறப்பிக்கிறார்கள். ஈரடிகளில் உலகை அளந்த வாமனரை அடுத்த அடிகளில் சிறப்பிக்கிறார்கள். அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி என்ற தொடரைப் பார்த்தால் வானைப் பிளந்து வளரும் வாமனரின் பிரம்மாண்டம் தெரியும்.

கிருஷ்ணனின் சகோதரன் பலராமனையும் இந்தப் பாடல் கொண்டாடுகிறது. வீரம் பற்றிய குறிப்போடு பல(ராம)தேவனைச் செம்பொன்னால் செய்யப்பட்ட கழல் அணிந்த கால்கள் என வரூணிக்கிறது.

இந்தப் பாடலின் முதலடி பல விதமான விளக்கங்கள் பெறுகிறது. கடவுளே பக்தருக்கு உடுக்கும் உடையும் பருகும் நீரும் உண்ணும் உணவும் என்று வாழ்வுக்கும் கெளரவத்துக்கும் அடியாகிறார். கடவுளே தமக்கு எல்லாமும் என்றாகிப் போன பாவைக் கன்னியருக்கு இறைவனின் கருணையைக் கொடையாக வழங்குகிறவர் நந்தகோபன் என்பது சம்பிரதாயமான ஒரு விளக்கம்.

உண்ணும் சோறு, பருகும் நீர் தின்னும் வெற்றிலை யாவும் கண்ணனே என்ற ஆழ்வாரின் மொழியை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் கொழுந்து எனும் போது செடி வாடினால் முதலில் வாட்டம் தெரிவது தளிர் இலைகளில் என்பதால் குடும்பத்துக்கு ஒரு கேடு என்றால் அதை முதலில் தெரிந்து வாடுவது பெண்களே என்ற பொருளில் கொழுந்து என்றார்.










0 Comments: