நாள் பதினாறு - பாடல் பதினாறு
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்போனே கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்போனே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய்.
குலத் தலைவனான நந்தகோபனின் கோயிலைக் காப்பவனே! கொடியுடன் கூடிய தோரணமுடைய வாயிலைக் காப்பவனே ! மணிக் கதவை திற. ஆயர் குலச் சிறுமியருக்கு அருள் தருவதாக நேற்றே அந்த மாயன் மணிவண்ணன் கூறினான். அவனை பாடி எழுப்ப உடலாலும், உள்ளத்தாலும் தூயவர்களாய் வந்துள்ளோம். காலையில் முதன் முதலில் முடியாது என கூறாதே. நீ இந்த நிலைக்கதவைத் திறப்பாயாக.
பதினைந்தாவது பாடலோடு பாவை நோன்பின் ஒரு கட்டம் முடிவடைகிறது.
பதினாறாவது பாடலிலிருந்து அடுத்த கட்டம் தொடங்குகிறது. இப்பாடல்களுக்கு இடையே கன்னியர் நீராடி
வைணவ அடையாளங்களை அணிந்து கொள்கிறார்கள். மனத்தளவிலும் தூயராகிறார்கள்.
அகத்தூய்மையும் புறத்தூய்மையும் அடைந்துவிட்ட காரணத்தால் கோயிலுக்குள் புகுவதற்குக் கோரிக்கை விடுக்க முடிகிறது.
இப் பாடலில் குறிப்பிட்டுள்ள தூய்மை என்பது என்ன?
நம்மாழ்வார், திருவாய்மொழியில்:
நாளும் நின்று அடு நம் பழமையாம் கொடு வினையுடனே
மாளுமோர் குறைவில்லை மனனகமலமறக் கழுவி
நாளும் திருவுடையடிகள்தம் நலம்கழல் வணங்கி
மாளும் ஓரிடத்திலும் வணக்கொடு வாழ்வது வளமே.
மனத்தில் இருக்கும் மலங்களைக் கழுவிவிட்டு இறைவன் அடிகளை வணங்கும்போது வினையின் கொடுமையான விளைவுகள் இல்லாமல் கழிந்து போகின்றன. அப்படி வாழ்வதே இந்த வாழ்வைச் சிறப்புற வாழ்வதாம்.
இந்தத் தூய்மையானது கடவுளின் கருணையை ஏற்றுக்கொள்ளப் பக்குவப்பட்ட மனத்தை உடையவராதல் என்று கொள்ள வேண்டும். கோயிலில் கடவுளுடனோடான இப்போதைய உறவு தரும் பரவசம் இனி ஈடேற்றம் நிச்சயம் என்ற நம்பிக்கையைத் தருவதாக அமைகிறது.
கடவுளின் கருணை அளப்பரியது. தகுநிலை எண்ணாது தரப்படுவது என்றாலும் அதைப் பெற்றுக் கொள்ள மனம் ஒரு நிலைக்கு வரவேண்டியிருக்கிறது. அந்நிலையில் மானுட வாழ்க்கை ஆன்ம வாழ்வை வாழ வருகிறது. தான் தனது என்ற மயக்கங்களில் இருந்தும் நுகர்வுகளின் பாற்பட்ட நாட்டத்திலிருந்தும் விடுபட்டுத் தூயதாகிறது.
மனிதனை உணர உடலும் ஆத்மாவும் ஒன்றுக்கொன்று போட்டி போட வேண்டும் என்பதில்லை. அவை தமக்குள் இயைந்து நிற்கும் போது மானுட வாழ்வின் முழுமையில் இறைவனின் வாழ்வை வாழ முடிகிறது. எனவே பாவை நோன்பிருக்கும் கன்னியர் இறைவன் மேல் வைத்த பக்தியைக் கொண்ட தாழ்ந்ததொரு வாழ்வின் பிடியிலிருந்து தாம் விடுபட்டுவிட்டதைக் கூறுகிறார்கள்.
சைவ சித்தாந்தத்திலும் இப்படியாக சாதித்த நிலை மேம்பாடு பேசப்படுகிறது. வாழ்க்கை என்பது பாசி படர்ந்த ஒரு குளம். பாசி மிக அடர்த்தியாகப் படர்ந்திருப்பதால் நீர் கண்ணுக்கே தெரிவதில்லை. குளத்துக்குள் ஒரு கல்லை வீசி எறிந்தால் பாசி விலக நீர் தெரிகிறது. என்றாலும் அந்தக் காட்சி ஒரு
கணத்துக்கே நிலைக்கிறது. பாசி மறுபடி மூடிக் கொள்ள நீர் மறைந்து போகிறது. குளத்துக்குள் எறிந்த கல்லே பக்தி. பாசி விலகத் தெரிந்த நீரே ஆன்மா.
கேரள மாநிலத்தில் ஏற்றமனூர் என்ற இடத்தில் சிவன்கோயில் ஒன்று இருக்கிறது. பக்தர்கள் அந்தக் கோயிலுக்குச் செல்லும் போது எந்தக் குறிப்பிட்ட வேண்டுதலும் இல்லாமல் போக வேண்டும் என்பார்கள். தான் தனது என்பதை முழுக்கக் கழித்துவிட வேண்டும் என்ற ஏகாக்கிரக சிந்தையோடு அங்கே போக வேண்டும். அத்தகைய மனநிலையே இறைவனின் இருப்பிடத்தைச் சென்று சேர ஒருவருடைய தகுநிலையாகிறது.
கோயில் வாசற் காப்பாளருக்குக் கன்னியர் பக்தியில் கனிந்தவர் என்பது தெரிந்துதான் இருக்கிறது. என்றாலும் குரு வழக்கமாகச் செய்வதைப் போல அவர்கள் கோயிலுக்குள் நுழைவதைத் தாமதப்படுத்துகிறார்கள்.
கம்சனின் கொடுமையான ஆட்சியின் கீழ் நாடு இருந்த போதே கிருஷ்ணன் வளர்ந்தான். அப்படியே கன்னியர் உடல்வாழ்வெனும் தளையின் பிணைப்பில் இருக்கிறார்கள். எனவே தாம் சூர்ப்பனகை அல்லது பூதனை போன்ற அரக்கியர் அல்லர் என்று வாயிற்காப்போருக்கு உறுதி செய்ய வேண்டியிருக்கிறது. தம்மை ஆயர்சிறுமியர் என்று அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். மேலும் பாவை நோன்பின் பயனாகத் தம் அருளை வழங்குவதாக இறைவன் வாக்களித்திருக்கிறான் என்பதையும் சொல்லி கோயிலுக்குள் நுழைய அனுமதி கேட்கிறார்கள். தம் பாடல்களைக் கொண்டு இறைவனைத் துயிலெழுப்ப வேண்டும் என்கிறார்கள்.
இவ்வாறு கோயிலுக்குள் நுழைய அனுமதி வேண்டிப் பாடிய பாடல் திருப்பாவையின் பதினாறாவது பாடல்.
SHIRDI SAIBABA | HOMOEOPATHY | PSYCHIC SCIENCES
HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB
சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
0 Comments:
Post a Comment